தேசம்நெட் இல் இடம்பெற்ற உரையாடல்.
எஸ்.எல்.டி.எஃப் என்னும் அமைப்பு சர்வானந்தன் என்னும் பொருளாதார நிபுணரை வைத்து கருத்தரங்கொன்றை நடாத்தியது. அதற்கான எதிர்வினையை தேசம்நெட் த. ஜெயபாலன் அவர்கள் எழுதியிருந்தார். அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற விவாதத்தில் சிறீரங்கன் என்பவர் செத்துப்போன அமீபாவைப் பற்றிய குறிப்பையும் இட்டிருந்தார்.
அமீபாவைப் பற்றி எழுதிய ப.வி.ஸ்ரீரங்கன் எழுதிய கருத்திற்கான பதிலை அமீபாவின் ஆவி என்ற பெயரில் எழுதிய போது தேசம் அதனை அனுமதிக்கவில்லை. அதற்கான பின்னூட்டம் இங்கே பிரசுரமாகின்றது. சிறீரங்கனது பின்னூட்டத்தின் சில பகுதிகள் பின்னர் தேசம்நெட் ஆல் அழிக்கப்பட்டுவிட்டன.
அனுமதிக்கப்படாத பின்னூட்டம் கீழே பிரசுரமாகின்றது.
பேரன்புமிக்க அண்ணன் சிறீரங்கனுக்கு அமீபாவின் ஆவி எழுதும் கடிதம். அமீபாவை முன்வைத்து நீங்கள் நிகழ்த்திய உரையாடலுக்கான பதிலை அமீபாவால் எழுத முடியாத நிலையில் அமீபாவின் ஆவி உங்களுக்கு இப்பதிலை எழுத நினைக்கின்றது.
1.
அமீபா உடனான உங்களது உரையாடலின் ஆரம்பம் தொடர்பாக...
Absurdism தொடர்பாக parody மனநிலையில் பெயரிலியால் முன்வைக்கப்பட்ட கருத்துக்கள் தொடர்பாக நான் சில கருத்துக்களைக் கூறியிருந்தேன். நான் அங்கே கூறியது அறிவியல் மற்றும் தத்துவ வளர்ச்சிப் போக்கில் Absurdism இனது புள்ளி எத்தகையது என்பதாகவே அமைந்திருந்தது. மார்க்சியம் என்பது அனைத்திலும் தீர்க்கமற நிறைந்திருப்பதாக நீங்கள் விடும் கதையாடல்களுக்கு எதிராக நான் அதன் இன்னுமொரு பக்கத்தைக் கூறியிருந்தேன் தவிர எனது நிலைப்பாடு சார்ந்து அல்ல. நீங்கள் கருத்தாடி வரும் வட்டத்திற்குள் முற்போக்கான தத்துவம் என்பது எப்போது தன்னிலை அல்லது தனிநபர் கருத்துக்களை எதிரானதாக இருக்கும் என்ற கருத்துப் போக்கு நிலவியதால் அதனை உடைக்க வேண்டிய தேவை எனக்கிருந்தது. ஏனெனில் எனது கருத்துநிலை குழுXதனிநபர் என்பதைத்தாண்டி அவற்றிற்கு இடையான புள்ளிகளைத் தேடுவதாக அமைந்திருந்தது. ஆக மொத்தம் உங்களது கருத்தியலை உடைப்பதற்கு எனக்கு தனிநபர் வாதத்தின் 'வரலாறும்' அதன் நியாயப்பாடும் தேவைப்பட்டது. அந்நோக்கிலேயே என்னால் அங்கே நான் சொரென் கீர்கேகார்ட் ஐ முன்னிறுத்தி அவ்வுரையாடலைத் தொடங்க வேண்டியதாயிற்றே தவிர எனது கருத்துநிலையில் இருந்து அல்ல.
இங்கே பார்க்க. http://unidentifiedspace.blogspot.com/2007/11/2.html
மேலும் தமிழ்ச்சூழலில் எனது அறிவிற்கு உட்பட்ட வகையில் Absurdism இன் கூறுகள் காணப்பட்ட எழுத்துக்களையும் முன்வைக்க வேண்டியதாயிற்று. மேலும் பெயரிலின் parody யை மீறவேண்டிய தேவையும் அந்நேரத்தில் எனக்குத் தேவையாக இருந்தது. இன்றுவரைக்கும் ஈழத்துச்சூழலில் எழுத்துக்களில் Absurdism கூறுகளே முதன்மை வகிக்கின்றன. ஜனநாயகம் அற்ற சூழலும் எதுவித நம்பிக்கையும் அற்ற வாழ்வும் அவ்வஎழுத்துக்களை மட்டுமே சாத்தியப்படும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. இம்முறை நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர் லெ க்லேஸியோ வரை அபத்தலியத்தின் கூறுகள் எழுத்தில் இன்னும் பெருகப்போகின்றன எனக் கூறுகின்றனர்.
"சார்த்தர் காலத்தில் நாவல் உலகை மாற்றும் என்ற நம்பிக்கை இருந்தது. நமக்கு அத்தகைய அசட்டுத்தைரியம் ஏதுமில்லை. இன்றைய எழுத்தாளர்களால், தங்கள் அரசியல்-விரக்தியைத்தான் எழுத முடிகிறது. சார்த்தர், காம்யு, ஸ்டைன்பெக், டாஸ் பாஸ்ஸோஸ் ஆகிய எழுத்தாளர்களை வாசிக்கும்போது அந்தப் பெரும் எழுத்தாளர்கள் சமுதாய ஈடுபாடு கொண்டிருந்தார்கள், மனித இனத்தின் எதிர்காலம் பற்றி எல்லையற்ற நம்பிக்கை கொண்டிருந்தார்கள், எழுத்தின் சக்தி மீது நம்பிக்கை கொண்டிருந்தார்கள். எனக்குப் பதினெட்டு வயதில் சார்த்தர், காம்யு, ஃப்ரான்ஸ்வா மோரியக் ஆகியோர் லெ’க்ஸ்பிரஸ் இதழில் எழுதிய தலையங்கங்களை வாசித்தது நினைவிருக்கிறது... இன்று யாராவது இப்படி ஓர் இதழில் வரும் தலையங்க எழுத்தால் நம்மை அழித்துக்கொண்டிருக்கும் பிரச்னைகளைத் தீர்க்க முடியும் என்று நம்ப முடியுமா? ஆக, தற்கால இலக்கியம் என்பது விரக்தியின் இலக்கியம், அவ்வளவே." என அவர் கூறுகின்றார்.
இங்கே பார்க்க. http://nagarjunan.blogspot.com/2008/10/blog-post_13.html
ஆக அவற்றின் ஆரம்பத்தையும் வளர்ச்சிப் போக்கையும் கூறவேண்டியிருந்தது. மிகவும் சுருக்கமாக. எனது கருத்தைப் பலப்படுத்தும் நோக்கில் டார்வினின் An Abstract of an essay on the origin of species & varieties, பொப்பரின் The logic of scientific discovery என்ற கட்டுரைகளையும் வாசித்துப் பார்க்கவும் என்று கூறியிருந்தேனே தவிர நான் கார்ல்பொப்பரின் விசுவாசி என்று குறவே இல்லை.
2.
அமீபா உங்களுக்கு ஒன்றுமே தெரியாது என்ற தோரணையில் கருத்துக்களை முன்வைத்தர் என்பது தொடர்பாக...
இவ்விடத்தில் நீங்களே முதன்முதலாக 'அமீபாவிற்கு அரிப்பெடுக்கத் தொடங்கியது' என்றும் "எவருக்கு, இலகுவாகவும் தெளிவாகவும் எடுத்துச் சொல்லும் தெளிவில்லையோ அவர் மௌனித்தபடி தொடர்ந்து கற்றுத் தெளிவாக உரைக்கும் வரை மௌனித்திருப்பது உத்தமம்" என்றும் கூறினீர்கள். இவ்விடத்திலேயே கார்ல் பொப்பர் தொடர்பான உரையாடலின் ஆரம்பம் எனலாம். சிறீரங்கள் அவர்கள் அமீபாவிற்கு ஒன்றும் தெரியாது வெட்டுத்துண்டுகளை அள்ளிப் போடுகின்றார் என்று என்றைக்கு கூறினாரோ அன்றைக்கே அமீபா சிறீரங்கனை விளாசத் தொடங்கியதே தவிர வேறெதற்காகவும் அல்ல.
நிரந்தரமின்மைகள் மற்றும் 'ஏற்கனவேயான அறிவு' தொடர்பாக கார்ல் பொப்பர் கூறியவைகளைத்தாம் இன்று தெல்யூஸ்-கட்டாரியில், லக்கான் போன்றோர் வேறு வகையாகவும் சொல்லிச் செல்கின்றனர். நிரந்தரமின்மைகளை அல்லது சில இயங்கியற்புள்ளிகளை நாம் எப்போது தெரிவு செய்யவேண்டும் என்ற கருத்தியலுக்கு அவரது கருத்துக்கள் உதவியிருக்கக் கூடும். இன்றும் தன்னிலைகள் இறுக்கமுறுவதையும் அவற்றின் காரணமான வன்முறைகளையும் நாம் பார்க்கின்றோம். தேசியமோ தலித்தியமோ தன்னைத் தகர்த்தவாறு முன்னேறவேண்டும் என்பதன் தேவையை பிரபாகரனும் சுகனும் நமக்கு உணர்த்தி நிற்கின்றனர். அவற்றின் இறுக்கம் எத்தைய ஆபத்து என்பதை யாராவது பிரபாகரனுக்கோ சுகனுக்கோ விளங்கப்படுத்த முடியுமா. பிரபாகரனாவது நடைமுறை இயக்கம் சார்ந்து அதை மறுதலித்தாலும் சுகன் எதைச் சொல்லியும் அதனை மறுக்கவே முடியாது. மற்றவர்களின் மூளை சில நூற்றாண்டுகளுக்கு முன்பு செத்துப் போனதெனக் கூறும் சுகன் இதனை எவ்வறு பார்க்கின்றார்?
இங்கே பார்க்க. http://www.satiyakadatasi.com/2008/09/29/%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE/
இவற்றை விளக்க கார்ல் பொப்பரது கருத்துக்களும் தேவையானவையே. கார்ல் பொப்பருக்கு மார்க்சியத்தைப் பிடிக்கவில்லை என்பதற்காக நாம் எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட முடியாது. எல்லாவற்றையும் விமர்சனம் என்ற போர்வையில் தூக்கி எறிந்து நாசமாக்கிய பெருமை உங்களது தலைமுறையுடன் போகட்டும். எமக்கு வேண்டாம். கருத்தியலில் கறாராக இருந்து எதையும் சாதிக்க முடியாமல் மக்களின் அழிவை மட்டுமே சாத்தியமாக்கியவர்கள் தனியே புலிகள் அல்ல. மாற்றுக் கருத்தாளர்களும் தான். புலிகள் திருந்தாமைக்கு உங்களைப் போன்றவர்களும் காரணமென்ற உண்மையை நீங்கள் மறுக்கலாம். ஆனால் அதுதான் உண்மை. இவ்வகையான வெறுப்பு மனநிலையில் இருந்தே எனது எழுத்து அவ்வாறு அமைந்தது.
இதனாலேயே உங்களுக்கு 'உங்களை போல ஒரெயடியாக சில விடயங்களை மறுத்து நிப்பவர்களை காணும் போது அந்த வேதனை அதிகரிக்கின்றது.' என்றும் கூறியிருந்தேன். அது மட்டுமல்ல இறுதியாக உங்களது அறிவை ஆய்வு முயற்சிகளுக்குப் பயன்படுத்துங்கள் என்றும் 'ஆய்வுகள் எவ்வளவோ காலத்திற்கு உதவக் கூடியவை. நீங்கள் வெறும் தகவலுடன் உங்களை விட்டு போனல் உங்களது அனுபவங்கள், அறிவு எல்லாமே வீணாய் போய்விடும். உங்களுக்கு அடுத்து வாறவனை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி விட்டு செல்ல வேண்டும். அவனையும் முதல்ல இருந்து வா எண்டிற நினலையை வைக்க கூடாது.' என்றும் கூறியிருக்கிறேன் தவிர உங்களுக்கு ஒன்றும் தெரியாது என எனது மனத்தில் இருந்து கூறவில்லை.
இங்கே பார்க்க. http://unidentifiedspace.blogspot.com/2008/09/15.html
3.
உங்களது தளத்தில் புடுங்குவது தொடர்பாக...
உங்களது தளத்தில் காணப்படும் கருத்துக்களை மறுப்பதோ அதனை எதிர்த்து விவாதம் செய்வதோ ஒன்றும் பெரிய வேலை அல்ல. அதனால் யாருக்கு என்ன பலன்? வன்னியில் சாகக் கிடப்பவர்கள் எல்லோரும் எழும்பி வரப்போகின்றார்களா என்ன? மேலும் நீங்களும் ரயாகரன் அண்ணையும் என்ன எழுதியிருக்கிறீர்கள் என் முதலாவது பந்தியை வாசித்தாலே புரிந்துவிடுகிறது. இன்னும் உங்களுடன் விவாதிக்கும் போது 'புலியெதிர்ப்பு' மாத்திரையை நீங்கள் உட்கொண்டுவிட்டு பேசுவீர்கள். அதற்கு மேல் பேச என்ன இருக்கிறது. எங்கே நிரகரிப்பு உசமாக இருக்கிறதோ அங்கே ஜனநாயம் இல்லை. மாற்றுக்கருத்தாளர்களை முற்றாக நிராகரிக்கும் புலிகளோ புலிகளை முற்றாக நிராகரிக்கும் மாற்றுக்கருத்தாளர்களோ மக்களிடம் போய் ஒண்டும் புடுக்க முடியாது என்பது எனது கருத்து. இரண்டுவகைப் பாசிசத்தையும் எதிர்க்கிறோம் பேர்வழி என்று போட்டு நிராகரிப்பால் கடப்பட்ட உங்களது மூன்றாவது தளத்தால் எதுவும் செய்துவிடவும் முடியாது. வெறும் கருத்துக்கள் ஆவேசமாகப் பறப்பதில் பிரயோசனம் இல்லை எனக் கருதுகின்றேன். இதனாலேயே தேசத்தில் ஒரு விடயத்தைக் கூறியிருந்தேன்.
'சிங்கள மக்களது ஊடாட்டம் இன்றி தமிழர்களுக்கு எவ்வாறு உரிமைகள் கிடைத்துவிடாதோ அவ்வாறே புலி ஆதரவாளர்கள் இல்லாமல் மாற்றுக் கருத்து வெற்றிபெற்றுவிடாது. புலி ஆதரவாளர்களை புலி எதிர்ப்பளர்களும், புலி எதிர்ப்பாளர்களை புலி ஆதரவாளர்களும் தீண்டத்தகாதவர்களாகக் கருதும் மனநிலையை கைவிட வேண்டும். அப்போது மட்டுமே சில வகையான மாற்றங்களை எதிர்பார்க்க முடியும். அறிவார்த்த ரீதியில் கட்டமைக்கப்பட்டிருக்கும் புதிய ‘சாதியம்’ ஒழிக்கப்பட வேண்டும்.'
இங்கெ பார்க்க. http://thesamnet.co.uk/?p=2803
என்றும்,
'என்றைக்கு பதமநாபாவிற்கும், உமாமகேஸ்வரனுக்கும், மகேஸ்வரி வேலாயுதத்திற்கும், சபாரத்தினத்திற்கும், திலீபனுக்கும், தமிழ்ச்செல்வனுக்கும் ஒரே குழுவால் நினைவு நிகழ்வு ஒரே மேடையில் நடாத்தப்படுகின்றதோ அன்றைக்குத்தான் தமிழ் மக்களது உரிமைக்கான அரசியல் போராட்டத்தின் தொடக்க நாளாகும்.'
இங்கே பார்க்க. http://thesamnet.co.uk/?p=2757
ஆக நாம் எங்கேயும் போய் 'புடுங்கி' ஆகப்போவது ஒன்றுமே இல்லை. நீங்கள் இவ்வளவு காலமும் புடுங்கின புடுங்கலிலும் சேர்த்துத் தான் மக்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை மீண்டும் ஞாபகப்படுத்துகின்றேன்.
மேலும், அப்பா வயசுடையவர்களுடன் சண்டை பிடிக்க விருப்பம் இல்லையெனவும் கூறியிருக்கிறேன். உங்களுடன் விவாதித்து ஏதாவது நல்லது நடக்க்ப் போகின்றதென்றால் அதற்கு நான் இன்றைக்கும் தயார். 'அப்பா வயசு ஆக்களைப் புண்படுத்துவது கஸ்டமாகவும் இருக்கிறது.' என்றும் ஏற்கனவே கூறியிருக்கிறேன்.
இங்கே பார்க்க. http://padamkadal.blogspot.com/2008/03/blog-post_17.html
4.
இன்றைய எனது மனநிலை தொடர்பாக...
இன்று யாரையும் விமர்சிக்கும் மனநிலையில் நான் இல்லை. நீங்கள் எல்லோரும் விமர்சித்து விமர்சித்தே காலம் தள்ளுகின்றீர்கள் என்பதை என்னும் போது வரும் கவலை மிகபெரியது. இவ்வகையான நச்சுசூழலுக்குள் என்னை பொருத்திக் கொள்ள விருப்பம் இல்லாமல் இருக்கின்றது. உங்களை நான் புண்படுத்தியிருந்தாலோ அல்லது மனக்கஸ்டத்திற்கு ஆளாக்கியிருந்தாலோ மன்னிக்கவும். இங்கே நான் தன்னிலைகளை அங்கீகரிப்பவன் அல்ல என்ற தோரணையில் நீங்கள் உரையாடியதனால் தான் இங்கே வரவேண்டியிருந்தது. மற்றபடி புலியை எதிர்த்து நீங்கள் எல்லோரும் கோரசாகப் பாடினால் என்ன தனிப்பாட்டு பாடினால் என்ன அதுபற்றி வருத்தம் மட்டுமே எஞ்சும். ஏனெனில் நீங்கள் பாடும் பாடலை உலகமெல்லாம் ஒலிபரப்பும் ராஜபக்சே தமிழ்மக்களை கொல்கின்றார். சிறையில் வாடுபவர்கள் எத்தனை பேர் என்பதை நீங்கள் அறியமாட்டீர்கள். கொழும்பில் அதிரடிப்படையைக் கண்டு ஓடி அழிப்பது சாதாரண இளைஞர்கள் மட்டுமல்ல ஈ.பி.டி.பி யும் தான். :(
ஆனந்த விகடனில் வருவது போன்று புலிக்கும் மாற்றுக்கருத்தாளர்களுக்கும் 6 வித்தியாசங்களைக் கண்டுபிடியுங்கள் என்று கேட்டால் எமது தலைமுறை நிச்சயமாகத் திணறப் போகின்றது. உங்களுக்கிடையில் பெரிய வித்தியாசம் இல்லை.
நாகர்ஜுனன் கூறியது போன்று,
"உங்கள் பிரச்னையில் எவ்வித அரசியல் தீர்வு வந்தாலும் சரி. உங்கள் சமுதாயமும் இலங்கையின் மற்ற சமுதாயங்களும் அனுபவித்த ரணங்கள், கசப்புணர்வு எல்லாம் ஆறுவதற்கு தனித்த காலம் தேவைப்படும்ன்னு நினைக்கறேன். இதற்குக்காரணம் உங்களுக்கெல்லாம் ஏற்பட்டிருக்கும் இழப்புகள் ரொம்ப அதிகம், தவிர இழப்புகளுக்கு நீதி கிட்டாத சூழ்நிலை, இந்த அநீதி தொடர்கிற சூழ்நிலை, அது உண்டாக்கியிருக்கற கோபம், வன்மம், எதிர்வன்மம்.. இதெல்லாம் போக ரொம்பக்காலம் ஆகலாம். ஆனா இதெல்லாம் போனால்தான் சமாதானம் நிலைக்கும்னு அடித்துச்சொல்ல முடியும்."
அதற்கான முயற்சிகளை எடுப்பவர்களுடன் மட்டுமே என்னால் உரையாட முடியும். வன்மங்களையும் கோபங்களையும் வளர்த்துச் செல்பவர்களுடன் எனக்கு உரையாடும் விருப்பமே இல்லாமல் போய்விட்டது. 'தமிழ்ச்செல்வனின் இரத்தத்தில் இருந்து ஈக்களே தோன்றும்' என்று செத்த அன்று எழுதும் ஒருவருடன் உரையாடுவது எனது தலைமுறைக்கு கடினமானது அண்ணா.
5.
எனது சந்தேகங்கள் தொடர்பாக...
நீங்கள் அகதி என்ற வலைப்பதிவை வைத்திருக்கிறீர்கள். அதில் சின்ன பொடியன் குளிக்கும் படம் போடப்பட்டிருக்கின்றது. உங்களது கருத்துக்களை நாம் அறிந்து கொள்ள முடியும்.
இங்கே பார்க்க. http://srisagajan.blogspot.com/
அவ்வாறே ஜனநாயம் என்ற வலைப்பதிவையும் வைத்துள்ளீர்கள். அனநாயம் என்ற பெயரில் இருந்த அத்தளம் அண்மையிலேயே சிறிரங்கள் என்ற பெயரைத் தனதாக்கிக் கொண்டது.
இங்கே பார்க்க. http://www.jananayagam.blogspot.com/
அவ்வாறே கருணாநந்தன் பரமுவேலன் என்ற பெயரில் நீங்களே எழுதுவதாக வரும் சந்தேகங்களை நீங்கள் தீர்த்து வைக்க வேண்டும். ஏனெனில் அது 'புலியெதிர்ப்பு உற்சாக மாத்திரை' பாவிக்கும் ஒருவரால் நடாத்தப்படுகின்றது. அது மட்டுமல்லாமல் அந்நபர் சிவசேகரத்தை ஆதரிக்கும் 'மார்க்சிய' மாத்திரையும் பாவிக்கிறார் என நினைக்கிறேன். மெலும் அவர் தனது பெயருக்கு முன்னால் பல பட்டங்களைப் போட்டிருக்கின்றார். அது ஏன் போட்டுள்ளார் என்பதில் இங்கே நடக்கும் விவாதங்களுக்கு முக்கியமானவை அதிலே யாழ்ப்பாணிய படித்த வர்க்கம் சொனால் எல்லாரும் கேட்பாங்கள் என்கிற தொனி உள்ளது. அவருக்கு டொச்சும் தெரியும்.
இங்கே பார்க்க. http://thoondil.blogspot.com/
இதைவிட தேசம்நெட்டில் வாஞ்சிநாதன், ஆமை, ராஜகீரி, பேய்க்குஞ்சு என்ற பெயர்களில் எழுதுகிறீர்களோ என்ற ஐயப்பாடு எனக்குள்ளது. ராஞகீரி என்பவர் தேசம்நெட்டில் சொன்ன விடயங்கள் முக்கியமானவை.
/'யமுனாவை மட்டுமல்ல உங்களையும் தான் தோலுரிக்கப் போகிறேன். இதில் அற்புதன் என்ற அடியும் நுனியுமறியா பேதமைதெரிய விவாதிக்கும் சிறு கபிஷையும் தோலுரிப்பேன். சும்மா மேற்குலக மனநோயாளிகளின் பெயர்களை யமுனா அடுக்கிவிட்ட தெம்பில் உட்காருவாரென - விவாதத்தைக் கணித்தால் அது நடவாது. நீட்சேயையும் வரலாற்றையும் தப்பாகப் புரியும் ஒரு சூழலில் காலம் பூராகத் தன் ஊனத்தால் பெண்களையும் நிலுவும் மனித நகர்வையும் குறித்து அதீத மனிதன் குறித்துப் பார்த்த நீட்சே முதல் யுர்கன் கபமார்ஸ் போன்றோரையும் மேற் புல் மேய்ச்சலாக வாந்தியெடுப்பதை யமுனா இனிமேல் தொடராதிருப்பதற்காக நான் அவரது இரண்டாவது பாகத்தை எதிர்பார்த்தே இருக்கிறேன்.
சும்மா படங்காட்டுவதற்கும் ஒரு அளவு இருக்கு!
இத்தகைய படங்காட்டுவதை டி.ஜே. தமிழனின் பதிவில் ஆரம்பித்திருக்கும் அமீபா போன்ற விடலைகளையும் போட்டுடைப்பதற்குத் தயாராகியுள்ள எனது புரிதல் இத்தகைய மனிதர்களை அம்பலப்படுத்துவே என அறிவு வற்புறுத்துகிறது.
நாம் முதலில் யமுனாவின் சுய தெரிவிலிருந்து ஆரம்பிப்பதற்கானவொரு இடைவெளியை அவருக்கு வழங்கியுள்ளோம். அவர் அதை மேலும் தனது கட்டுரையில் கோடிகாட்டும் சந்தர்ப்பத்தில் நிலவுகின்ற அமைப்பின் விருத்தியாகும் பொருள்வயப்பட்ட மிகச் சுரண்டல் பொறிமுறையிலிருந்து இத்தகைய மேற்குலகச் சிந்தனை மரபு என்னத்தை முழுமொத்த மனித குலத்துக்கும் வழங்கியுள்ளதெனக் கட்டுடைத்துப் பார்ப்போம்.
வெட்டியொட்டும் அற்புதன்; அவர்-இவரென பெயர்களைப் பட்டியலிடும் யமுனா-அ.மார்க்சைக் கொப்பியடிக்கும் சுகன்-ஷோபா சக்திகள் முதல் இன்றைய என்.ஜீ.ஓ.களின் தோமஸ் றொத்கைமர் வரை நாம் விவாதிப்போம்./
என ராஜகீரி கூறியிருக்கிறார். அவர் ஏன் அதனைச் செய்யவில்லை. என்று நாம் உங்களிடம் தான் கேட்க வேண்டும் இல்லையா சிறீ அண்ணை..!? :)
இங்கே பார்க்க. http://thesamnet.co.uk/?p=707
இதற்காக நீங்கள் 'சார்வாகர் பிரகஸ்பதி' என்ற பெயரில் புதிய வலைப்பதிவு ஒன்றைத் தொடங்கியதாகவும் நான் நினைக்கிறேன். அங்கே 'நான்' என்ற தலைப்பில் அமீபாவிற்கு கவிதை வேறு பாடியிருக்கிறீர்கள் என்ற சந்தேகமும் எனக்கு உண்டு. அதனையும் தெளிவுபடுத்த வேண்டும் நீங்கள். ஏனெனில் நீங்கள் இன்று யமுனா ராஜேந்திரனுக்குக் கூறும் விடயங்களுக்கு அவை முக்கியமானவை எனக் கருதுகின்றேன்.
இங்கே பார்க்க. http://oolam.blogspot.com/2008_04_01_archive.html
6.
தூயவனது தலையீடு தொடர்பாக..
ப்ரியாவின் தூயவன் ஏன் இதுக்குள்ளை தலையைப் போட்டார் என்பது விளங்குகின்றது. தூயவனுக்கு சர்வானந்தனை நியாயப்படுத்துவது மட்டுமல்லாது ஜெயபாலனைக் கிண்டுவதும் தேவையாயிருக்கக் கூடும். அதற்காகவே அவர் ஆங்கிலத்தில் எழுதியிருக்கக் கூடும். ஜெயபலனிடம் இருந்து சர்வானந்தனைக் காப்பாற்ற தூயவன் வந்தது போன்று அன்று யமுனாவிடன் சோபாசக்தியைக் காப்பாற்ற ப்ரியா வந்தார். தூயவனும் ப்ரியாவும் 'தமது ஆக்களைக்' காப்பாற்றுகிறார்கள். இங்கே தூயவனுக்கு எதிராக ஜெயபாலனும் சேனனும் நாவலனும் நிக்கிறார்கள். யமுனாவும் வாறார்.
அசுரரும் தேவரும் வாசுகி என்னும் பாம்பை வைத்து பாற்கடலைக் கடைந்தார்கள். இங்கே பொருளாதரத்தையும் ஆங்கிலத்தையும் கயிறாகக் கொண்டு 'நச்சுக்கடலை' கடையுறாங்கள். ஒருபக்கம் ஜெயபாலன், சேனன், நாவலன், யமுனா. மற்றப் பக்கம் தூயவன், ப்ரியா, சோபாசக்தி.
இங்கே வடக்கு கிழக்கு மக்களோ அல்லது வடக்கு கிழக்கு பொருளாதாரமோ வாசுகி பாம்பு மாதிரியே தவிர வேறொன்றும் இல்லை என்பதே எனது கருத்து. இங்கே யார் கூட இழுக்கிறார்கள் யார் நேர்மையாக இழுக்கிறார்கள் என்பதை உய்த்துணர எனக்கு விருப்பம் இல்லை. ஏனெனில் எதற்காகக் கடைகிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. தமிழ்-முஸ்லிம்-மலைய மக்களின் சுபீட்சத்தை மனதில் கொண்டு கடைந்தால் மட்டுமே யார் நேர்மையாக இழுக்கிறார்கள் என்று பார்த்து அவர்கள் பக்கம் போய் நின்று இழுக்க வேண்டிய தேவை எனக்கு வரும். இங்கே எனக்கென்னமோ பாற்கடலை நினைத்து இழுக்காமல் நச்சுக்கடலை மனதில் வைத்து இழுக்கிறார்கள் என்றே தோன்றுகின்றது. பாம்பும் நஞ்சைக் கக்கும். கடைசியில் வருவதும் நஞ்சாக இருக்கும். பாதிகப்படப்போவது இருதரப்பார் மட்டுமல்ல பாம்பாக இங்கே இருக்கும் தமிழ்மக்களின் பொருளாதாரமும் தான். இதில் எனக்கு உடன்பாடு இல்லை. இதைத்தான் வருடக்கணக்காக எம்முன்னோர்கள் செய்தார்கள்.
நம்ம சிறீரங்கன் அண்ணை இதுவிளங்காம ரெண்டுபக்கமும் கயிறு எடுத்துக் குடுக்கிறார். அதுக்கை தான் செத்துப் போனதா அறிவிச்ச அமீபாவையும் இழுக்கிறார். :(
இங்கே பார்க்க. http://unidentifiedspace.blogspot.com/2008/04/11.html
-அமீபாவின் ஆவி
ப.வி.சிறீரங்கன் அவர்கள் தனது இன்னுமொரு தளமான 'உடைப்பு' வில் அமீபாவின் ஆவிக்கு எழுதிய பதில் பதிவு இங்கே காட்சிப்படுத்தப்படுகின்றது.
அமீபாவின் ஆவிக்கு...
அமீபாவின் ஆவிக்கு வணக்கம்.தங்கள் முற்பிறப்பின் வினை முடிவதற்குள்ளேயே அகாலமரணத்தைத் தழுவியதன் தொடரில் இப்படி ஆவியாக அலைகிறீர்கள்!அலைவதுமின்றி எவரெப்போது-எந்தச் சந்தில் கோலி விளையாடினார்கள் என்பதையும் ஆயும்-அறியும் உணர்வும் உங்கள் முன்னைய பிறப்பின் தோஷமாக விரிகிறது.இன்று, ஆவியாக அலையும் இந்த நிலையிலும் புலிகள்-மாற்றுக் குழுக்கள்,மற்றும் பொருளாதாரம் குறித்தும்,மக்கள்"நலன்"குறித்தும் சிந்திக்கும் ஒரு ஆவியைக் குறித்து,எத்தகைய சுட்டலைச் செய்யலாம்?
"நீ-நீங்கள்,அது-அவை" குறித்து எனக்கு"அதுவா அல்லது இதுவா" என்ற ஒரே குழப்பம்.அவ்வண்ணமே அமீபாவின் ஆவிக்கும்:பேய்க்குஞ்சுமுதல் ராஜகீரிவரையான வரலாற்றுச் சுவடி தேவையாகவும் இருக்கிறது.இதுவும் கடந்து ஒவ்வொரு அடையாளத்தையும் தேடும் அடையாளமற்ற வெளியுள் நான் தேடுவதும் இல்லை-எதையுங் காணுவதுமில்லை.இருந்தும் எனது கருத்துக்களுக்கான எதிர்வினையைச் செய்யும் ஒரு ஆவியுடைய விருப்பைப் பின் தள்ளுவதில் என் மனதுக்கு விருப்புக்குரியதாகவுமில்லை. ஏனெனில்,வர்க்கப் போராட்டமென்பதும் ஒவ்வொரு வர்க்கமும் தனது வர்க்கத் தளத்திலிருந்தபடி அதைச் சிதையவிடாது பாதுகாக்கும் சிந்தனை-கருத்துக்களை விதைப்பதில் ஆர்வமாகவும்-பாதுகாப்பு வியூகத்திலும் முழுநாளையுஞ் செலவு செய்தே வருகிறது.அங்கே,எழுந்த அனைத்துவகைக் கருத்துக்களையுஞ் சொல்வதோ அன்றி அது நோக்கி நகருவதோ சாத்தியமில்லை.எனினும்,குறிப்பட்ட வட்டத்தில் அமீபாவின் ஆவி சுற்றித்திரியும்போது,அவற்றை நோக்கி நானுஞ் செல்வது சாத்தியமே.
"பிணமுண்ணும் வாசிப்பு" என்பது என்னிடத்தில் கிடையவே கிடையாது.அதனால் நான் இப்படியுரைப்பேன்:எழுத்தினால் புத்திசார் அல்லது பித்தலாட்டக் கருத்துக்களைச் செய்து முடிக்கலாம்.இந்த நோக்கத்தைக் குறித்தான புரிதலை உள்வாங்கிக்கொண்டால்-அடுத்த நிலைமையைச் சுதாகரிக்கலாம்.அநேகமாக மேற்சொன்ன இரண்டும் ஒரே தளத்தில் நிலவுந் தருணமே தேசியவாதத்துக்குள் நிலவுகிறது.இதன் பெறுபேறுகளின் தொடர்;சியில் இலட்சம் மக்களினது இருப்பை அசைத்த நாம்,மீளவும்,இதே பாணியிலானவொரு எழுத்தைக் கோரிக்கொள்ள முடியாது."ஆற்றில் போட்டத்தைக் கடலினுள் தேட முடியாது"எனினும்,அமீபாவின் ஆவிக்கு இது சாத்தியம்.ஏனெனில்,அவர் சொரன் கீர்கேகோர்ட் முதல் இன்றைய யுகர்கன் காபர் மாஸ் தாண்டிப்பலரையும் எடுத்துவருகிறார்.இது,எனக்கும் சாத்தியமானதென்பதால் நான் செல்லும் பாதையினூடாகக் கடப்பதில் பல சாத்தியங்களும்,அசாத்தியங்களுமுண்டு.
"உள்ளது-அல்லாதது"எனும் புள்ளியில் நிலவும் பூச்சியத்துள் அகம் அல்லது புறம் விருத்தியாகும் ஒரு துருவத்தில் நான் உங்களோடு(மீளவும்,எதை முன்னிலைப்படுத்தி?)எப்படி உரையாடுவதென்னும் சமாந்திரமான ஒரு ஏக்கத்தோடு சொல்லித்தக்க எதையும் தெரிவுக்குட்படுத்தமுடியாதவொரு சிக்கல் உருவாகிறது. இதுதாம், ஒன்றைத் "தேர்வு செய்வதில்"அதுவா-அன்றி இதுவா"என்ற சிக்கலை "எல்லோருக்கும்"அன்றும், இன்றுஞ் செய்கிறது. இதன் தொடர்ச்சியாகப் பற்பல கேள்விகளை (எனதென்ற ரூபங்களென: தூண்டில், துரும்பு, ஜனநாயகம், பேய்க்குஞ்சு, ஆமை, ராஜகீரி இத்ஜாதி...) அமீபாவின் ஆவியானது கேட்குமிடத்து எதையுரைத்து அந்த ஆவிக்கு நான் வேள்வி செய்ய?
தேர்வே இல்லாது,ஒவ்வொருவரும் எடுத்துப்போடுவதிலுள்ள "மேற்கோள்கள்"அவர்களுக்கேற்பட்ட அநுபவம்"விடுதலை"என்ற ஒன்றின் முதுகினிலிருந்தே சவாரிவிடுவதால் அது,கால் போர்ப்பராக இருந்தாலென்ன அல்லது அடையாளமற்ற எந்தவெளிகளாக இருந்தாலென்ன,அந்தந்தக் கருத்துக்களுக்குப் புலப்பட்ட தன்னிலைகள்-தெரிவுகள் குறித்து நிலவுகின்ற பொருளாதாரக் கட்டமைவின் இன்றைய சிதைவிலிருந்து மீண்டுவரும் எல்லா வதைகளையும் குறித்தும் இப்போதைக்கு அமீபாவின் ஆவியின் நிமித்தும் பேசிக் கொள்வோம்.
புத்திஜீவித ஆய்வு நிலையை எடுத்துக்கொண்டு, "Postmans Studie"
(Postman reported a study)யாகப் பொதுத் தளத்தை எங்கேயும் உருவாக்கிவிடுதெனுங்கூத்து என்னிடத்தில் இல்லை. அது நிலைபெறுகின்ற எந்தவொரு சூழலிலும் பன்முகத்தன்மையிலான வகைப்பட்ட ஒவ்வொரு நிகழ்வுறூக்கத்திலும் நான் என்பது விலத்திப்போவதை உணர்வதில் உங்களுக்கு எப்படியானவொரு சுதந்திரமிருக்கோ அதையே நானும் உள்வாங்கலாம்-வாங்காது போகலாம்.
Pierre Bourdieus நினது ஆய்வுகளுக்குள் உட்பட்டவொரு "இத்தகையது"என்ற நுண்ணிய வித்தியாசத்தை உய்துணரத்தக்க மனதுடைய எனது"அறிதலில்"தமிழ்ப்பண்பாட்டு சமூகத்தன்மையின் விருத்தியானது எந்தெந்தத் திசைகளில் மனிதவாழ்வைச் சிக்கலிட்டுள்ளதென்பதைக் குறித்தான சிந்தனை வெளியில் அமீபாவின் ஆவியோடானவொரு உரையாடல் மதிப்புமிக்கதானவொரு விடையமாகலாம்.சிந்தனை மதிலொன்றை உடைப்பதற்கான எல்லாவகைக் கனவுகளிலும் மார்க்சியம் குறித்த வர்க்கப்போராட்ட நெறியாண்மை கேள்விக்குட்படுத்தப்பட்டு வருவதில் கடந்த நூற்றாண்டு ஐரோப்பியச் சிந்தானமுறைமையில் அகப்பட்ட அனைவரையும் முன்தள்ளிப்பார்த்த இன்றைய"திறந்த சமூகத்தில்"ஒரு பக்கம் அமீபாவினஆவி;,மறுபக்கம்,ஸ்ரீரங்கன்.இரண்டும் ஒரு புள்ளியில் சந்திக்கின்ற இடம்"விமோசனம்-மகத்துவம்"மனிதர்களுக்கானதென்றபோதும் அனைத்துக்குமானதென்ற பொதுத் தளத்தில் இலங்கைப் பிரச்சனையுள் புலிகளின் பாத்திரம்,அதன் வழி நிகழ்வுறும்"பொதுமைப்படுத்தும்"குற்றவியல் குறுக்கல்களையும் விடுவிப்பதில் நான் முழுமையாக எழுதுவதே தவிர,இலங்கையில் சோசலிசச் சமுதாயத்தைப்படைப்பெதென்ற அந்த மேலான கண்ணோட்டத்திலல்ல.அதற்கு நான் அருகதையற்றதால் இத்தகைய நிலமையில் விவாதத்தில் ஈபடுவதுதாம் மிச்சம்.இதுவும் ஒரு கட்டத்தில் அவசியமாகிறது.விவாதமென்பதைச் செய்வதென்றபோதும் இதைத் தொடராகவே எழுதுகிறேன்.வேலை வெட்டியுடைவன் என்பதால் அக்கடமைகளின்பின்னே அமீபாவின் ஆவியோடு தொடர்ந்து உரையாடுவேன்.
"தன்னிலை-தனிநபர்வாதம்-கருத்து"இவைகளுக்கிடையிலான பொருளாதாரச் சமூகக்கூறுகளை நோக்குவதும் கூடவே பண்பாட்டுச் சமூகத்தன்மையில் தனி நபர்களின் கருத்தியல் மனதும்,மற்றும் சமூக வாழ்நிலையும் அதன் மீதான சமூகவுணர்வு,எங்ஙனம்"தனித்துவம்"என்ற சுய உருவாக்கத்தில் தன்னிலைகளாக-தெரிவுகளாக மாறும்போது,வாழ்நிலையின் தன்மை சார்ந்த புறநிலையின் தன்மையோடு, "அடையாளம்" நிகழ அதுவே"தனித் தன்மை"என்பது சாத்தியம் என்பதை அமீபா குறித்துரைப்பதிலிருந்து எங்கே முதலாளியத்துக்கான இருப்புப் பலமாக்கப்படுவதென்பதை மேலும் பார்க்கலாம்.சந்தைப் பொருளாதாரமானது இன்று சமூகச் சந்தைப் பொருளாதாரமெனும் முகமூடியோடு மக்களின் வரிப்பணத்தில் தனது இருப்பைத் தக்கவைக்கும் காலம் இது.இந்தச் சமுதயத்தின் இருப்பில்தாம் "சுயம்" மற்றும் தனித்தன்மை உருவாக்கப்படுகிறது.இது குறித்து மேலும் தொடருகிறேன்.
தொடரும்.
ப.வி.ஸ்ரீரங்கன்
20.10.2008
உரையாடல் - 17 (த. ஜெயபாலன், தூயவன், சேனன், Constantine, puthiyavan, நாவலன், ப.வி.ஸ்ரீரங்கன்.)
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment