உரையாடல் - 18 (நாகர்ஜுனன், ஜமாலன், அந்நியன், றஞ்சனி, ராஜன் குறை, வளர்மதி, ஹரி, ஜ்வோராம் சுந்தர், தமிழவன் )

நாகர்ஜுனனது வலைத்தளமான திணை, இசை, சமிக்ஞையில் இடம்பெற்ற உரையாடல். இதனைத் தொடர்ந்து சத்தியக்கடதாசியில் ராஜன் குறை 'ஓபாமா x ஓசாமா: தேசம், மதம், மானுடம்' என்ற தலைப்பில் ஒரு பதிவை எழுதினார்.

இலங்கைப்போரும் தமிழ்நாட்டின் ஆதிச்சடங்கும்.

கடந்த நான்கு ஆண்டுகளில் - ஆழிப்பேரலை பெரிதாய் அழித்தும் இலங்கையில் சமாதானத்துக்கான வாய்ப்பு நழுவிப்போனது, நடந்துவரும் போரில் மன்னார் மற்றும் வன்னிப்பகுதி மக்கள் சொல்லொணாத்துயரம் அனுபவிப்பது, இடைப்பட்ட காலத்தில் விடுதலைப்புலிகள் அமைப்பின் கிழக்குப்பகுதி அணியில் உட்சிதைவு (political implosion) ஏற்பட்டு அங்குள்ள் இருதரப்பும் இந்தக்கட்டத்தில் இலங்கை அரசுடன் கைகோர்த்திருப்பது, தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான இலங்கை ராணுவத்தின் தாக்குதல் நிற்காதது - இவையெல்லாம் தமிழ்நாட்டு மக்களைக் கடுமையாகத் தாக்கியிருக்கிறது...

ஒன்றில் இந்தச்செய்திகளையெல்லாம் அறிவார்த்தமாக விவாதிக்கலாம். அது ஒருபுறம். இன்று தமிழ்நாட்டிலிருந்து வரும் செய்திகளை வாசிக்கும்போது, இவை கொஞ்சம்கொஞ்சமாகச் சேர்ந்து அங்கு மனோவியல்-ரீதியான ஒருவிதக் கொந்தளிப்பு உருவாகியிருக்கிதோ என்று தோன்றுகிறது. குறிப்பாக, இலங்கை ராணுவத்துக்கு இந்திய அரசு ராணுவ ஒத்துழைப்பு வழங்கும் செயல் குறித்த பலத்த கோபம், நியாயமாகவே தமிழ்நாட்டில் கிளர்ந்திருக்கிறது. இந்த எதிர்ப்பு தென்னகத்தின் மற்றும் இந்தியாவின் அனைத்துப்பகுதிகளிலிருந்தும் நியாயமாகவே வந்திருக்க வேண்டும். அது நடக்கவில்லை. இப்போதும் அதைச் சாத்தியமாக்க முடியவில்லை என்றால் இதுகாறும் செய்யமுடியாமல் போனவை, செய்யாமல்விட்டவை, செய்ததாக எண்ணி ஏமாந்தவை என்ன என்று அறிவார்த்தமாக அலசலாம். அவற்றின் தொடர்ச்சிதான் இன்றைய அவல நிலை என்றால் கோட்டை விட்டிருப்பவர் யார்?

இந்த நிலையை தமிழ்நாட்டின் அனுபவம் கொண்ட முதல்வரால், தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களால், கரிசனை கொண்ட அரசியல்-கட்சிகளால், இவர்களின் கூட்டுவலிமையால் மாற்ற முடியவில்லையே, இலங்கை அரசிடம் போய் போரை நிறுத்து என்று இந்திய அரசைக் கூற வைக்க முடியவில்லையே என்று யோசிக்கிறேன். இலங்கை அதிபரை ஹிந்து ஆங்கில ஏட்டின் ஆசிரியர் என். ராம் பேட்டி கண்டு எழுதியிருக்கிறார். அதில் "கடந்த மாதம் வன்னியிலிருந்த ஐ.நா. மன்ற பன்னாட்டுப்பணியாளர்களை வெளியே போகச்சொன்னீர்களே ஏன், விடுதலைப்புலிகள்-அழிப்பு என்பதாகத் தொடங்கி இப்போது மூன்று லட்சம் பேரை நிர்க்கதியாக்கியிருக்கிறீர்களே ஏன், தமிழ்நாட்டு மீனவர்கள் இத்தனை பேரைச் சுட்டிருக்கிறீர்களே ஏன், அதற்காக மன்னிப்புக்கேட்பீர்களா, என்றெல்லாம் ராஜபட்சே அவர்களை நீங்கள் கேட்கவில்லையே, நீங்கள் அவரைப் பேட்டி கண்ட அதே வாரம் உங்களைப்போன்றவர்கள் வழக்கமாக வாசிக்கும் Economic Political Weekly இதழில் ஜெயதேவ உயங்கோட என்ற இலங்கை அறிஞர், இலங்கை அரசு கிரிமினல் முகத்துக்கு மாறிவிட்டது என்று எழுதுகிறாரே, அது்கூட நீங்கள் வாசிக்கவில்லையா" என்றெல்லாம் சுட்டிக்காடி ஹிந்து ஆசிரிய நிலைப்பாட்டைக் கண்டித்து எழுதும் தென்னக ஆங்கில ஏடு ஒன்றுகூட இன்றில்லையே... இருபதாண்டுகள் முன்பு அப்படி ஓர் ஆங்கில ஏடு தென்னகத்திலிருந்து வராமல் இருந்ததற்கு ஜாதியை வைத்து எளிமையான காரணம் ஒன்றைக் கூற முடிந்தது. ஆனால் இந்த இடைப்பட்ட காலத்தில் அரசியல்-பொருளாதார-ஊடக வலிமை பெற்றும் அதே காரணத்தைக் கூறுவது என்றால் இங்கே யாரோ கோட்டைவிட்டிருக்கிறார்கள் எனலாம். கிட்டத்தில் இருந்து கோட்டைவிட்டது யார்!

தமிழ்நாட்டில் உள்ள இந்தக்கொந்தளிப்பும் சரி, நிலைமைகளை மாற்ற ஒன்றும் செய்யமுடியவில்லையே என்ற ஆற்றாமையும் சரி, பலரையும் செயலுக்குத் தூண்டுகின்றன. இந்தச்செயலுக்கான விழைவை ஆற்றுப்படுத்துவதாக, பலப்பல வடிவங்களில் போராட்டங்கள், பங்கேற்புகள் நடப்பதாகவே நினைக்கிறேன். ஏதோ ஒன்றைப் பதிலி செய்பவை இவை. அந்த ஏதோ ஒன்று, ஏறத்தாழ எப்போதைக்குமாகத் தள்ளிப்போடப்பட்ட ஒன்று.

அரசியலார் இந்தக்கொந்தளிப்பைத் தத்தம் வழியில் வெளிப்படுத்தியிருப்பதைப் பார்க்கிறோம். இவர்களில் பெரும்பாலோர் தத்தம் சுயாதிக்க-வர்த்தக-குடும்ப நலன்களைப் பாதுகாப்பதில், விரிவாக்குவதில் மிகுந்த ஜாக்கிரதை-உணர்வு கொண்டவர்கள். இருந்தும் இது நடக்கிறது. அதேபோலத்தான் சினிமாத்துறையினர் சென்னையில் நடத்திய உண்ணாவிரதம். இலங்கை-இந்திய வரலாற்று நிலவரங்கள் குறித்த அறியாமையும் விளம்பர விழைவும் இயங்கிய அதேசமயம், இந்த நிகழ்வை நடத்துவதை இவர்கள் யாரும் தவிர்க்க முடியாமல் போயிருக்கிறது. குறிப்பாக, சினிமாத்துறையினர் ஏன் தவிர்க்கவே முடியாது என்பதை, இங்கே லண்டனில் புலம்பெயர்ந்த சமூகம் தமிழ்ச்சினிமாமீது கொண்டிருக்கும் ஈடுபாட்டை வைத்து உடன் சொல்லிவிடலாம். இந்த சமூகத்தினர் தமிழ் வர்த்தக சினிமா பார்த்துச் சீரழிகிறார்கள் என்ற வாதம் ஒருபுறம் சரியென்றாலும் தமிழ்நாட்டுடன் முதல்நிலைத்தொடர்பாக இவர்களுக்கு எஞ்சியிருப்பது சினிமாவே என்பது ஓர் எதார்த்தம்.

தமிழ்நாடு, இந்தியாவுக்குப் புறத்தே வசிப்பவர்கள் என்ற முறையில் ஜமாலனும் நானும் அண்மையில் பேசிக்கொண்டிருந்தோம். தமிழ்நாட்டுக்கு வெளியே - பெங்களூரில் - வசிக்கும் மூன்றாமவரான தமிழவன் இதுபற்றி உயிரோசை இணைய இதழில் எழுதிவரும் சில கட்டுரைகள் பற்றித்தான். இந்தக் கட்டுரைகளை, முதற்கட்டமாக, குறியியல் களக்குறிப்புகள் (semiotic field notes) எனக் கொள்ளலாம் என்று எனக்குப்படுகிறது என்றேன். இவற்றை முன்வைத்து, தமிழவன் ஒரு புள்ளிக்கு வந்துசேர்ந்திருக்கிறார். அதாவது, தமிழ்நாட்டில் நடக்கும் கலக்கமான நிகழ்வுகள் மூலமாக உலகெங்கும் வசிக்கும் தமிழ்பேசும் மக்களிடையே ஒரு primordial sentiment - மூலப்படிம உணர்வு - கிளர்ந்தெழுகி்றது என்கிறார்.

இதுபற்றி யோசிக்கும்போது, மின்னல்போல வெட்டும் விஷயங்கள் பல. இலங்கைத்தீவில் தமிழ்பேசும் மக்கள் அனுபவித்துவரும் கொடூரங்களை சர்வதேச அமைப்புகள் கண்டும் காணாமல் இருபப்து ஏன், இந்தப்போரில் எதிரி யார், நண்பன் யார் என்பது அடிக்கடி கிறுகிறுப்பாக மாறுவதேன், விடுதலைப்புலிகள் அமைப்பு உள்ளிட்ட போராளிகள் எல்லோரும் மாறிமாறி ஏதோ ஒரு கட்டத்தில் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து மற்ற போராளிகளை அழித்திருப்பது ஏன், பேச்சுவார்த்தைகள் தோல்வியடையந்தாலும் உடன் போர் மூளும் படலம் தொடங்குவது ஏன் எனப் பல மின்னல்கள். இவை எல்லாமே தமிழ்நாட்டவர்களை மேலும் தாக்கியிருக்கின்றன என்று படுகிறது எனக்கு. இதெல்லாம் எகிறி இலங்கைத்தமிழ் பேசும் மக்கள் அழிவின் விளிம்பை எட்டும்போதெல்லாம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள், தத்தம் வாழ்க்கையின் ஆதாரம் ஏதோ அசைக்கப்படுவதாக உணர்ந்திருக்கிறார்கள்...

முன்பு 1983-ஆம் ஆண்டு இலங்கையில் நடந்த இனப்படுகொலை நாட்களை அடுத்தும் சரி, 1987-ஆம் ஆண்டு இலங்கைக்குச் சென்ற இந்திய அமைதிப்படை விடுதலைப்புலிகள் அமைப்புடன் சண்டையிட்டு அதில் அனைத்துத்தரப்பும் அழிந்தபோதும் சரி, பொதுவாக இப்படித்தான் உணர்ந்தார்கள். இப்படி உணர்ந்தவர்களில் நானும் ஒருவன். 1987-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்தப்போர் மூள்வதற்கு முன்பாக செப்டம்பர் மாதம் குற்றாலத்தில் நடந்த பதிவுகள் அமர்வின் போது மறைந்த சுந்தர ராமசாமியும் நானும் இதுபற்றிப் பேசிக்கொண்டிருந்தது நினைவுக்கு வருகிறது. திலீபன் உண்ணாவிரதம் சாகும்வரை சென்ற சமயம். இலங்கை சென்றுவிட்டுத் திரும்பியிருந்த நான் ஒருவிதப் பித்த நிலையில் இருந்த நேரம். "இந்தப்பிரச்னையில் அதீத ஈடுபாடு காட்டுகிறீர்களே" என்றார் சுந்த்ர ராமசாமி.

இருந்தும் 1983, 1987 என அந்த இரண்டு முறை வந்த உணர்விலும் ஒரு மாற்றமும் உண்டு. 1983-ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் வந்த எழுச்சியைப் புரிவதில் பிரச்னை இல்லை. ஆனால் 1987-1989 காலகட்டத்தில் வந்த சீற்றத்தை இந்தியாவின் மற்றப்பகுதி அரசியல்-தலைவர்களுக்கு எடுத்துச்செல்ல மிகக்கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. அந்தப்பணியில் ஞாநி, எஸ்.வி. ராஜதுரை, ஏ.எஸ். பன்னீர்செல்வன் மற்றும் என்னைப்போன்றவர்கள் ஈடுபட்டு எங்களால் ஆனதைச் செய்தோம்.

ஒரு பித்தநிலையில் வெளிப்படும் இந்த உணர்வை தமிழ் என்கிற மொழிவழிச்சடங்காக எப்படி்ப பொருள்கொள்ளலாம் என்று யோசிக்கிறேன். அப்போது புதுக்கவிதைக்குத்தான் போக வேண்டும். எண்பதுகளின் தொடக்கத்தில் இப்படிப் பல சிற்றிதழ்கள் வந்தன - ழ, கவனம், 2083 கவிதைக்கான ஓர் அகால ஏடு போன்றவை. இவற்றில் வந்த கவிதைகள் முக்கியமானவை. ஏற்கனவே சி. மணி, தி. சோ. வேணுகோபாலன், வைத்தீஸ்வரன் வழிவந்த புதுக்கவிதைப்போக்கு, ஞானக்கூத்தன், ஆத்மாநாம், பிரம்ம்ராஜன் கவிதைகள்வழி ஒருவித அபத்த மனோநிலையாக நகர்நததை இத்துடன் தொடர்புகொண்டு பார்க்கலாம்... ஆனால் இலங்கை திருகோணமலையிலிருந்து தமிழகம் வந்த பிரமிள் இந்தப்போக்கில் நீடிக்கவில்லை! இதை அப்போதே தமிழவனும் நானும் விவாதித்திருக்கிறோம். எங்கள் விவாதத்தை அடுத்து நவீன தமிழ்க்கவிதை, நானின் அழிவு, வார்த்தை என்ற கட்டுரையைத் தமிழவன் படிகள் இறுதி இதழில் எழுதினார். ஆண்டு 1985.

1987-89, 1991-92 ஆண்டுகளில் சென்னையில் நெருக்கடிமிக்க அரசியல்-கட்டத்தில், நான் அறியாமலேயே மீண்டும் எனக்கே இது நடந்திருக்கிறது... அப்போது பித்தநிலை-உரைநடை கொண்ட கதைகளை எழுதினேன். தமிழில் நான் அப்போது தீவிரமாக வாசித்தவை நகுலன், மௌனி, எஸ். சம்பத் ஆகியோரின் ஆக்கங்கள்தாம். வாசிக்க முடியாமல் போனவை, சுந்தர ராமசாமியின் ஆக்கங்கள். இதற்கு இவர் எனக்குப் பிடிக்காத எழுத்தாளர் என்று பொருளல்ல! மாறாக இவர் எழுத்தை மிகவும் மதிப்பவன் நான். இந்தப் பித்த மனோநிலைக்கு உகந்த, மருந்தான எழுத்து என்பதை நாடும்போது பொதுவாக இவரை வாசிக்க முடியாமல் போனது, அவ்வளவுதான். அதேபோல ஆங்கிலத்தில் அதிகமாக வில்லியம் பர்ரோஸ் என்ற எழுத்தாளரின் The Naked Lunch, Cities of the Red Night, தாமஸ் பிஞ்ச்சனின் Gravity's Rainbow ஆகிய நாவல்களை அதிகம் வாசித்தேன். இந்த வாசிப்பு-எழுத்து என் அகமாக இருக்க, புறத்தில் ஈழத்தமிழர்கள் பிரச்னை சிக்கலாகி அதில் ஒன்றும் செய்யமுடியவில்லையே என்ற ஆற்றாமை நாடகீயமாக வெளிப்பட்டது என நினைக்கிறேன்.

அப்படியே இன்னும் கொஞ்சம் முன்னே போய்ப்பார்க்கலாம்: இது அறிவார்த்த அலசல். கவிதை வரலாற்றில் தமிழ் என்பதன் அர்த்ததளம் என்ன என்பது முக்கியக்கேள்வி. இந்தக் கேள்விக்கான பதிலை எங்கேயிருந்து எடுக்கிறோம் என்பதும் முக்கியம்...

மிழ் என்பது, செந்தமிழ்-கொடுந்தமிழ் என இரட்டைநிலை-மொழி (diglossic). இது மொழியின் நிலை மாத்திரமல்ல, தென்னாசியாவில் இயங்குகிற பிரக்ஞையின், உள்ளுமையின் உள்-வடிவம் என்பேன். இன்னும் ஒருபடி மேலே போய் பலநிலை-மொழி (heteroglossia), பல்-இயற்கை-வடிவம் (multi-natural-formalism) எனவும் விரிக்கலாம்... ஆக, குறைந்த பட்சம் இரட்டைநிலை அல்லது ஒருவித இருமை-எதிர்வு (binary opposition). செவ்வியல்-நாட்டுப்புறம் என்று கலைவடிவங்கள் அனைத்திலும் இந்த எதிர்வுநிலைகள் இருப்பதைக் காணலாம். இந்த எதிர்வுநிலைகள், தமிழ் என்ற மொழியில் வெளிப்படும்போது இவற்றின் இடைவெளி தீவிரமாகிறது. இருதுருவ நிலையில் இவை சுழல்கின்றன எனலாம். ஆக, எதிரும் புதிருமான துருவநிலைகளில் இணையாக இயங்கும் மொழி, தமிழ். தன்னை எதிர்வாகவும் தனக்கான எதிர்வையும் பல்-இயற்கை-வடிவங்களாகத் தோற்றுவித்துக்கொண்டே இருக்கும் எனலாம். சரி, இதைப் பிறகு விரிவாகப் பார்க்கலாம்.

தமிழின் பொருளைப் பாரதியிடமிருந்தும் பாரதிதாசனிடமிருந்தும் எடுப்போமானால், அது பிரபஞ்சத்துடன் தோன்றிய அமுதம், செந்தமிழ், அகம், கனவு, லட்சிய-லட்சண நிலை என இதை விரிக்கலாம். மாறாக, ஞானக்கூத்தனிடமிருந்து எடுத்தால் அந்தப்பொருள் பிறர்மேல் விடாத உயிர்மூச்சு, புறம், கொடுந்தமிழ், pragmatic politics என்பதாக விரியும். எனவே தமிழென்பது, செந்தமிழ் மாத்திரமல்ல, கொடுந்தமிழ் மாத்திரமல்ல, இரண்டும்தான். பலதும்தான்.

சரி, இப்போது இலங்கைப்போரை வைத்துத் தமிழ்நாட்டில் நடப்பதைப் பார்க்கலாம். தமிழுக்கு அமுது x உயிர்மூச்சு என்பனவாக இருந்த அர்த்ததளம், இப்போது உயிர்மூச்சு x திணறல் என்ற நிலைக்கு மாறியிருக்கிறது. அமுது அழியாது என்ற நிலையை வழக்கமாகச் சொல்வதற்குப் பதிலாக அந்த அர்த்தத்தை இடைநிறுத்திக்கொள்ளலாம் (Let us suspend it midway). அதை அப்புறம் பார்க்கலாம். இந்த இரண்டாவதான கொடுந்தமிழ்-நிலை மூச்சுத்திணறுவதால்தான் இந்தத்தவிப்பு என்கிறேன். தினசரி-வாழ்வு மூச்சுத்திணறல் நிலைக்கு வந்திருக்கிறது.. ஆக, இது இப்படி நாடகீயமாக வெளிப்படுவதை, அரசியல்-நாடகமாக, கேலிக்கூத்தாக மாத்திரம் பார்க்க முடியாது - அப்படி ஒரு பரிமாணமும் பயன்பாடும் வந்தாலும்கூட.

இந்தத் தவிப்பான நாடகீயத்தை, பித்தநிலையில் நடக்கும் ஓர் ஆதிச்சடங்கு. இலங்கையில் தமிழ்மக்கள்மீது புறமும் அகமுமாய் நடக்கும் நரவேட்டையைக் கண்டு பொறாத ஆற்றாமை வெளிப்படும் ஆதிச்சடங்கு. இனி இது பூடகமான மொழியான கவிதையின் அடுத்த கட்டமாக, இலக்கியத்தின் அடுத்த கட்டமாக வெளிப்படும் எனலாம்.

இதுபோல ஆற்றாமையை நாடகீயப்படுத்துகிற, ஆற்றுப்படுத்துகிற வகையில் புற உலகில் பொதுக்களத்துக்கு வந்து நிற்பதன் ஒருவடிவம், மனிதச்சங்கிலி. இயக்குநர்கள் ராமேஸ்வரம் சென்று ஓரிருவர் கோபமாகப் பேசி சிறைசென்று ஒருவாரத்தில் மீள்வது இரண்டாவது வடிவம்... ஆடம்பரமான நடிக, நடிகையர் கறுப்புக்கண்ணாடி, கறுப்புச்சட்டை சகிதம் ஆறுமணி நேரம் உண்ணாவிரதமிருப்பது இன்னொரு வடிவம். இவர்களில் பலருக்கும் என்ன நடந்திருக்கிறது.. இது, தத்தம் செழுமையான பிம்பமும் உருவமும் துயரமும் கூடுகிற அபத்தம், அவலம், hyper-real நாடகீயம்.

இதெல்லாம் முன்பு 1983-ஆம் ஆண்டிலும் அதற்குப்பிறகு 1987-88 காலகட்டத்திலும் நடந்தவைதாம். அமிர்தலிங்கத்துக்கு சென்னை சோழா ஷெராட்டன் ஹோட்டலில் கறுப்பு 'நாப்கின்'னுடன் முதல்வர் எம்ஜியார் இரவு-விருந்து அளித்தது, அப்போது காதி அமைச்சர் விஜயலட்சுமி பழனிச்சாமி திருமணத்தில் மணமக்கள் கறுப்பு உடைக்கு மாறியது, நெடுமாறன் ராமேஸ்வரத்தில் படகில் போக முற்பட்டபோது குமரி அனந்தன் வந்து அழுது தடுத்தது, கலைஞர்-அன்பழகன் சட்டமன்ற உறுப்பினர் பதவியைத் துறந்து முன்னவர் மேலவை உறுப்பினரானது எல்லாம் ஏற்கனவே நடந்தவைதாம். ஆனால் மறந்தவையாக மீண்டும் நடப்பதே ஆதிச்சடங்கின் வடிவம் என்பதற்கான அத்தாட்சி.

ஆதிச்சடங்குகள் புதியவை அல்ல, புதியவை போல நடப்பவை. அதேவேளை நாமறியாமல் மீண்டும் நடந்து நாம் பங்கேற்கிற இவற்றில் புதிதாக வந்திருக்கும் மாற்றம் யாது? அதையும் தொடர்ந்து யோசிப்போம்.

தமிழவனின் உயிரோசை மற்றும் பிற கட்டுரைகள்

தமிழ் மக்களின் மூலப்படிம உணர்வு
தமிழ் உணர்வுக்கு என்ன பொருள்?
ஹிந்து நாளிதழின் சர்ச்சைக்குரிய கட்டுரை - ஒரு குறியியல் அணுகல்

வேறொரு பார்வைக்கு

திரும்பவும் எரியும் ஈழம் - அ. ராமசாமி
தமிழகத்தில் மனிதச்சங்கிலி - அன்றும் இன்றும் - ஞாநி
ஈழம் தொடர்பாக தமிழகத்தில் நடக்கும் கேலிக்கூத்து - பத்ரி

இவ்வுரையாடலைத் தொடர்ந்து இதுபற்றி தமிழவன் மேலும் எழுதிச் செல்கின்றார்.

கர்நாடக புத்திஜீவிகளும் தமிழக உணர்ச்சிப் பெருக்கும்
தமிழ் உணர்ச்சி பாசிச உணர்ச்சியா?
இருபதாம் நூற்றாண்டு இலக்கியவரலாற்றில் தமிழ்த்தன்மை

இதுபற்றி பாஸ்கர் எழுதியதையும் பார்க்கலாம்.

இலங்கை தமிழர்களின் அவல நிலை


இது தொடர்பான பெயரிலியின் பதிவு.

என் சூப்பின மாங்காய்த்தலையின் இன்றைய எரிச்சல்களும் இயலாமைகளும்.

பெயரிலிக்கு பதிலளிக்குமுகமாக சிறீரங்கனும் இவ்விடயம் பற்றித் தொட்டுச் செல்கின்றார்.

கிளிநொச்சியிலிருந்து மூட்டைகட்டும் புலிகளும்,
பட்டுக்கோட்டைப்பாணிபாட்டுத் தத்துவத் தட்டைப்போடும் நாமும்.

ஜமாலனது பின்னூட்டம்.

உண்மையில் இந்தக்கட்டுரை மிகவும் உணர்ச்சி ஊட்டக்கூடியதாக உள்ளது. காரணம் புரியவில்லை. ஒருவேளை இந்த ஆதிச்சடங்கில் நம்முடைய தன்னுணர்வை மீறி “தமிழன்“ என்கிற நம்முடைய மூலப்படிமம் பங்குகொள்கிறதோ? தெரியவில்லை. 1983-இல் இதே ஈழப்போராட்டம்தான் நம்மைத் தெருவிற்கு இழுத்து வந்து அரசியலில் பங்குகொள்ள வைத்தது. அன்று ஒரு தீர்விற்கான நம்பிக்கை இருந்தது. இன்று கேள்விகள் மட்டுமே மிஞ்சியுள்ளன. பித்துநிலை மட்டும் அதன்அளவில் அன்றைவிடக்கூடுதலாக உள்ளது. வெளிப்பாட்டில் அன்றைவிட அது குறைவாகவே உள்ளது.

உங்களுடைய இந்த ஆய்வுமுறையில் ஒரு புதிய பார்வையைக் காணமுடிகிறது. இலக்கியம் அல்லது பிரதிகளின் செயல்பாடு அல்லது சமூகச்செயல்பாடு என்ன? என்பதை இந்தக்கட்டுரை வேறொரு கோட்பாட்டுக்கோணத்தில் விளக்குகிறது.

நானும தமிழவன் கட்டுரையை மீள்பதிவு செய்தேன். அதனை மறுவிளக்கமாக உங்கள் கட்டுரை விரித்துச்சொல்கிறது.

இன்றைய தேவை தமிழ் வரலாற்றை குறிப்பாக இலக்கிய வரலாற்றை யாராவது எழுதத்தான் வேண்டும். அப்பொழுதுதான் இந்த உள்ளார்ந்து கிளரும் உணர்வை அறிவார்ந்த தளத்தில் புரிந்துகொள்ளமுடியும்.

இன்னும் எழுதும் ஆர்வம் உள்ளது.. வார்த்தைகள் தடுமாறும் ஒரு உணர்ச்சி மேலீட்டில் எழுத இயலவில்லை. ஈழத்தமிழர்களின் இன்னலுக்காக உட்கார்ந்து இன்று நம்மால் அழத்தான் முடியும் என்பது ஏற்படுத்தும் குற்ற உணர்ச்சி எல்லாவற்றையுமவிட வலி நிறைந்ததாக உள்ளது.


அந்நியனது பின்னூட்டம்.

எனக்கு ஈழத்தமிழர்கள் பற்றி நாகார்ஜுனன், ஜமாலன் ஆகிய இருவர் எழுத்துக்களையும் கேட்கும் போது வியப்பு ஏற்படுகிறது... ஈழத்தமிழர்கள் பிரச்னையில் உங்களுக்கு இருக்கும் ஈடுபாடென்பது என்னை மிகவும் மகிழ்ச்சியடைய வைக்கின்ற அதே நேரம் புரிந்துகொள்ள கடினமாகவும் இருக்கின்றது. தீவிரமாக வாசிக்கத் தொடங்கிய நேரம் நான் எதிர்கொண்ட மாற்றுக்கருத்துச்சூழல்தான் இதற்கு காரணமாக இருக்க முடியும்.

1.
இன்றைய அரசியல்-சூழல் மற்றும் எழுத்துதளம் தொடர்பாக..
ஈழத்தமிழர் பெருமளவு அழிவை எதிர்கொண்டுள்ள இந்நேரத்தில் மாற்றுக்கருத்து என்ற தளத்தில் இயங்கிய பலர் மனதளவில் சஞ்சலம் கொண்டு ஒட்டுமொத்த அக்கிரமத்திற்கு எதிராகக் குரல் கொடுக்கும் அதே நேரம், 'மாற்றுக்கருத்து' தளத்தில் இன்னும் புலிகளினதும் தமிழ்மக்களினதும் அழிவை மனதளவில் வரவேற்றவாறு 'இன்றெமக்கு வேண்டியது சமாதானமே' என்று ஈனக்குரலில் கூறுவதை காண்கின்றோம். இன்றைய இக்கட்டான சூழ்நிலை நமக்கு மாற்றுக்கருத்து என்ற தளத்தை இருபிளவாக்கி உதவியுள்ளது. பேரினவாத அரச இயந்திரத்துடன் இணைந்து அழிவை விரும்புபவர்கள் யாரென்பதைக் காட்டியும் கொடுத்துள்ளது. அதுமட்டுமல்லாது, தமிழ்நாட்டில் தன்னால் முடிந்த அளவு மனிதச்சங்கியில் பங்கு கொள்பவனை புலிகளைக் கொண்டும், அரசியல்வாதிகளின் சந்தர்ப்பவாதம் கொண்டும் அவர்களால் கீழ்த்தரமாக விமர்சிக்க முடிகிறது. கண்ணீருக்கிடையிலும் இச்சூழலுக்கு நாம் நன்றி கூறவேண்டியுள்ளது.

இக்கட்டான சூழ்நிலையில் மாற்றுக்கருத்துச்சூழல் இரண்டாகப் (மக்கள் நலனுக்காக புலிகளை விமர்சித்தவர்கள் ஒருபுறம் மற்றும் அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்குபவர்கள் மறுபுறம்) பிளவுற்றதோடு, தமிழவன் சொல்வது போல், ஒடுக்குமுறையாளர்களின் கைப்பொம்மையான கிழக்கு ஆட்சியில் பங்கெடுத்தவர்களும் ஆதரித்தவர்களும் மௌனமாக அடுத்துவரும் சூழ்நிலைகளை எதிர்பார்த்துக் காத்திருக்கவேண்டிய நிலைமையை ஏற்படுத்தியிருக்கி்றது. புலிகளின் தவறுகள் காரணமாக ஈழத்தமிழ் 'அறிவுஜீவிகள்' ஒடுக்குமுறையாளனுடன் சேர்ந்து இயங்கினார்கள். உலக போராட்டங்களிலேயே அரச உளவாளிகளும் ஒடுக்கப்பட்ட வர்க்கத்தைச் சேர்ந்த 'அறிவுஜீவிகளும்' சேர்ந்து இயங்கிய சந்தர்ப்பம் ஈழச்சூழலாக மட்டுமே இருக்கும் என நினைக்கின்றேன். 'செல்வாக்கு' இல்லாத தமிழர்கள் இலங்கையில் எங்கும் வாழமுடியாத சூழ்நிலையிலும் அரச-சார்பு நிலைப்பாட்டை எடுப்பவர்கள் 'அறிவுஜீவிகள்' எனக் கூறப்படுவது ஈழம்சார்சூழலில் மட்டுமே..

2.
இன்றைய ஈழத்து இளையோர் மற்றும் நாகார்ஜுனன், ஜமாலன்.
உங்கள் இருவரது ஈடுபாட்டையும் காணும் போது எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. எனது நண்பர்கள் 100 பேரிடம் சிறீ சபாரத்தினம் யார் என்று கேட்டால் அதில் 5 பேர் கூட சரியான விடை சொல்லுவார்களா என்பது சந்தேகமே. இது உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தக்கூடும். ஆனால் இதுதான் யதார்த்தம். எமது தலைமுறைக்கு தெரிந்தது புலிகள் மற்றும் இராணுவம் மட்டுமே. அவர்களை கூட்டுமனநிலை ஒன்று இயக்குகின்றது எனக்கூற முடியும். அவை பெரும்பாலும் நடுநிலமை அற்ற கருத்துக்களால் ஆன கருத்தியல்-எந்திரம் ஒன்றாகவே இருக்கின்றது. விடுதலை என்பதற்கு அது மட்டும் போதாது. இந்நிலமைக்கு இருவகையான காரணத்தைக் கூற முடியும். புலிகளின் monopoly தன்மையும் அதன் நடைமுறையும் முக்கியமான காரணம் எனக்கூற முடியும். அதைவிட மாற்றுக்கருத்தாளர்களின் புலி வெறுப்பும் அரச ஆதரவுக் கருத்துக்களும். இளையோரின் அரசியலறிவு மற்றும் அரசியல்-நீக்கம் செய்யப்பட்டு எப்போதும் ஒருபக்கக்கதைகளைப் பேசும் தன்மையையும் காணும் போதும் எனக்குத் தோன்றுகின்ற விடயம் வேறெந்த சமூகத்திற்கும் தோன்றிவிடக்கூடாது.

ஈழத்தமிழ்சூழலில் அரசியல் ரீதியான அறிவுஜீவிகளுக்கான இடம் என்பது வெற்றிடமானது. நான் இக்கருத்திற்கு வந்தடைவதற்கு முன் மிகவும் யோசிக்க வேண்டியிருந்தது. ஆயினும் வேறுவழியில்லாமல் வந்தடைய வேண்டியுள்ளது. சில புள்ளிகளை இனங்கண்டு அதில் இருந்து தொடங்குவதற்கு எமக்கு ஆரம்பப்புள்ளிகள் இல்லை என்பது தான் மிகப்பெரிய சோகம். சரி, பிழைகளுக்கு அப்பால் தமிழ்நாட்டு தமிழர்களின் எழுச்சி, நான் வந்தடைந்த இடம் சரியென எனக்கு உணர்த்தி நிற்கின்றது. மாற்றுக்கருத்தாளர்கள் புலியை எதிர்த்ததை தவிர வேறெதையும் செய்யவில்லை. துவித-எதிர் நிலையைக் (binary opposition) கட்டமைத்தது மாத்திரமல்லாது அதன் துருவங்களில் நின்றும் கொண்டார்கள்.

3.
பயங்கரவாதம், கிரிமினல் முகம் மற்றும் ஜோர்ஜ் புஷ். உலகத்தில் காலத்துக்குக் காலம் பலவிதமான கருத்துக்கள் முக்கியமாக மாறி பெருமளவிலான உரையாடலைத் தோற்றுவிக்கும். அவ்வகையில் புஷ் ஆல் 'பயங்கரவாதம்' என்ற சொல் உலகத்தின் முதன்மைச்சொல் ஆகியது. அது கட்டமைத்த விடயங்கள் பலவிதமானவை. அச்சொல் உலகத்தின் அனைத்து பகுதியில் இருக்கும் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான வன்முறைப்போக்கு கொண்ட அனைவருக்கும் ஆப்பாக அமைந்துவிட்டது. அரச இயந்திரங்களை எதிர்க்கும் அனைத்துவகையான போராட்டங்களும் 'பயங்கரவாதம்' என்னும் சொல் கொண்டு அழைக்கப்பட வேண்டியதாயிற்று. அதற்காக உயர்ந்துநின்ற இரட்டைக்கோபுரத்தின் உடைந்த படிமத்தை புஷ் பயன்படுத்தினார். ஊடகங்களால் அனைவரது மனத்திலும் விதைக்கப்பட்ட உடைந்த இரட்டைக்கோபரத்தின் படிமம், அரச இயந்திரத்தின் அனைத்துவகையான அடக்குமுறைகளையும் நியாயப்படுத்தப் பயன்பட்டது. ழான் போத்ரியார், இந்நிகழ்வை, அதிகாரத்தை வெறுக்கும் பலரது கன்வாகக் கூறினார். அதுமட்டுமல்லாது அதன் பின்னர் அந்நிகழ்வு ஏற்படுத்தப்போகும் தாக்கம் பற்றியும் அவரால் எப்பவோ கூற முடிந்தது. அவர் இந்நிகழ்வை பயங்கரவாதத்தின் அருளால் கிடைக்கப்பெற்ற எட்டாவது அதிசயம் எனக்கூறினார். உண்மைதான், தாராளவாத அரசு ஏற்கனவேயான குறியீட்டையும் சிதைந்த குறியீட்டையும் ஒப்பீடு படிமம் ஆக்கி எட்டாவது அதிசயம் ஆக்கியது. அதன் மூலம் அனைத்து வகையான எதிர்ப்புக்களையும் நசுக்குவதற்கு அப்படிமமே பயன்பட்டது. இந்நிகழ்வு, இந்நிகழ்வு ஏற்படுத்திய குறியீடு அனைத்துவகையான போராட்டங்களினதும் தேக்கத்திற்கு வழிகோலியது என்றே கூற முடிகின்றது. அதே வல்லாதிக்கம் இக்குறியீட்டை அனைவரது மனதிலும் விதைத்ததன் மூலம் அரச எந்திரங்களுக்கு வரைமுறையற்ற அதிகாரம் வழங்கப்படுவதை ஊக்கப்படுத்திவிட்டது.

எதிர்-அரசியலால் வளர்ச்சியுற்ற உலகத்தை தேக்கத்திற்குள்ளாக்கியது இந்நிகழ்வென்று உறுதியாகக் கூறமுடியும். அமெரிக்கா தனது குறியீட்டின் மீது நிகழ்ந்த சிதைவை மறைக்க எத்தனிக்கவில்லை. மாறாக இன்னுமொரு குறியீட்டை உற்பத்தி செய்தது. அதன் மீது 'பயங்கரவாதம்' என்ற சொல்லை எழுதிவைத்தது. இப்புதிய குறியீட்டுருவாக்கத்தின் முக்கிய பங்காளியான ஜோர்ஜ் புஷ் பின் அதற்குச் சமாந்தரமான படிமங்களால் அதே குறியீட்டிற்கு பலியாக வெண்டியதாயிற்று. தமது நாட்டின் மீது கவியும் 'கெட்ட பெயரை' அமெரிக்க இளைஞர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என்பது மக்கைனின் தோல்விக்குக் காரணம் எனவும் பொருள்கொண்டு சொல்லப்படுகி்றது. தனியே பொருளாதாரப் பின்னடைவுகள் இம்மாற்றத்தை ஏற்படுத்தின எனக் கூறமுடியாது. ஹிலாரி கிளின்டன் ஒருவருடத்திற்கு முன்னரே விடுதலைப்போராட்டங்களையும் பயங்கரவாதத்தையும் வேறுபிரிதறிய அமெரிக்கா தவறியது எனக் கூறினார். அதன் போது புஷ் உருவாக்கிய குறியீடு புஷ்சை காவுகொள்ளத் தொடங்கிவிட்டது. ஏனெனில் அதன் ஒற்றைத்தன்மை 'பயங்கரவாதத்தை' 'வழிநடத்த'த் தவறிவிடும். அனைத்துப் பயங்கரவாத நிகழ்வுகளும் 'உச்சகட்டத்தில்' நடைபெறும். அதன் வகைப்பிரிப்பு அவற்றின் ஆரோக்கியமான தன்மைக்கு வழ்வகுக்கும் என்பது முக்கியமானது.

தமிழ்நாட்டுத் தமிழர்களிடையே எழும்பியுள்ள எழுச்சியானது இலங்கை அரசாங்கத்திற்கு 'கிரிமினல் முகத்தை' உலகளவில் வழங்கப்போவதாக உயங்கொட கூறியது மிகச்சரியானது. ஆயினும் இலங்கை அரசாங்கம் தனக்கு ஏற்படப்போகும் கிரிமினல் முகத்தை எப்போதோ உணர்ந்துவிட்டது. ஈரான் உடனான பகிரங்கக்கூட்டு என்பது இலங்கை அரசாங்கம் தான் செல்லப்போகும் வழியை எப்போதோ குறிப்பால் உணர்த்திவிட்டது மட்டுமல்லாது அதுபற்றிய அதன் கவலையின்மையையும் தெளிவுபடுத்துகி்றது. இவ்வகையான நகர்வை தனக்கு ஏற்படுத்தியுள்ள இலங்கை அரசாங்கத்தை இந்திய அரசாங்கம் ஒருபோதும் யுத்தத்தை நிறுத்து என்று கேட்கப்போவதில்லை. ஏனெனில் இந்திய அரசாங்கத்தின் அழுத்தம் இலங்கையை ஈரானது கோட்டிற்குள் தெளிவாகப் பொருத்திவிடும். அந்நிலை, பிரணாப் முகர்ஜி சொன்னது போல இலங்கை பல தரப்பட்ட ஆதிக்க சக்தியினது விளையாட்டு மைதானமாக மாற வழிவகுத்துவிடும். இங்கே, வெற்றியாளன் யாரெனில் முரண்களை ஏற்றுக்கொண்டு அதற்குள் இயங்க எத்தனிப்பவன். தன்னை எவ்விடத்திலும் சரியாகப் பொருத்திக் கொள்ளாதவன். 1990-களுக்கு முற்பட்ட நிலைபோன்ற கறாரான உறவுகள் தொடர்பான பார்வைகள் குறைவாக உள்ளவர்களே தம்மை முன்னேற்றிக்கொள்ள முடியும் என்ற வாதம் பலப்பட்டுவிட்டது. இந்நிலையில் நாம் "இந்தியாவே இந்தியாவே! இலங்கை உனது எதிரி, புலிகளே உனது நண்பன்" என்று என்னதான் கூப்பாடுபோட்டாலும் அதை இந்தியா காதில் வாங்காது. இலங்கை எப்போது இந்தியாவை முழுமையாக மறுதலித்து இந்தியாவின் எதிரிகளுடன் தன்னைக் கைகோர்த்துக்கொள்ளும்போது தமிழீழப்போராட்டம் நிறைவு பெற்று தலித்தியப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும், இந்திய ஆளும் வர்க்கம் தலித்தியப் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும். இலங்கையில் குழப்பத்தை உண்டுபண்ணும். இது தான் யதார்த்தம்.

இனிவரும் காலத்தில் என்னதான் யுனிசென்ட்ரிக் அரசியல் போய் பழையமாதிரி அமெரிக்க-ரஷ்ய இருதுருவ அரசியல் வந்தாலோ அல்லது அதுவும் போய் அமெரிக்க-ரஷ்ய-சீன ட்ரியாங்குலர் அரசியல் வந்தாலும் அரசியல்-உறவுகள் முன்னைப் போல கறாராக இருக்காது என்று என்னால் நிச்சயமாகக் கூற முடியும். எமது நண்பனும் எதிரியும் கட்டிப்புடித்து புரண்டு விளையாடுவதை நாம் பார்த்தே ஆகவேண்டும். ஏனெனில் நாம் ஃபூக்கோ, தெரிதா, லக்கான் போன்றோரைக் கடந்து வந்துவிட்டோம். நமது ஈழத்து அறிவுஜீவிகளைத் தவிர அனைவரும் துவித-எதிர்வுகளையும் முரண்களையும் கடந்து கொண்டிருக்கிறார்கள்.

ஆயினும், எதனாலும் பலன் இல்லை என்று கூறவும் முடியாது. எதிர்கால அரசியல்-போராட்டங்களின் நகர்வுகளில் நாம் சடுதியான மாற்றங்களைக் எதிர்பார்க்க முடியாது. அதற்கான ஒழுங்குக்கு உலகம் ஆட்பட்டுக்கொண்டிருக்கிறதோ என்ற உணர்வு தவிர்க்க முடியாமல் வருகின்றது. சிறிய மாற்றத்திற்கும் பரவலான உரையாடல்களையும் படிம உருவாக்கப் போர்களையும் நிகழ்த்த வேண்டியிருக்கும்.

தமிழவனின் மூலப்படிம உணர்வு என்னும் கருதுகோள் முக்கியமானது. அதற்கு முன்னர் நமக்கு முன் காணப்படுகிற சூழல் எவ்வாறானது என்பதைக் கூற நினைத்து பின்னூட்டம் நீண்டுவிட்டது. ஏனெனில் இம்மூலப்படிம உணர்வை நாம் எவ்வாறு பயன்படுத்தப் போகின்றோம் என்பதற்கு எமது சூழல் மிக அவசியமானது என்பது எனது கருத்து. அதுபற்றி நாளை எனது கருத்தைப் பகிர முடியும் என நினைக்கிறேன்.


நாகர்ஜுனனது பின்னூட்டம்.

அந்நியன் - உங்கள் நீண்ட மறுமொழியைப் போட்டிருக்கிறேன்.

அதிலுள்ள விஷயங்களை முழுமையாக விவாதிப்பதற்கான தருணம் வரும் என நினைக்கிறேன். இப்போதைக்கு ஒரு அவதானம் மட்டும் - தமிழ்- மற்றும் உலக-இலக்கிய வரலாற்றின் ஒளியில்தான் இந்த இடத்துக்குத் தமிழவனும் நானும் வந்திருக்கிறோம் (எங்கள் கண்ணோட்டங்களில் சில variations இருக்கலாம்). ஜமாலன் இதைச் சட்டென பிடித்திருக்கிறார் - அதாவது, இலக்கியத்தின் சமூகச்செயல்பாடு பூடகமானது என்பதைப் பிடித்திருக்கிறார். அதைக் கவனிக்கப்பாருங்கள்.. உங்கள் உலகில் நடப்பவை பிடிபடலாம். அரசியல் என்ற வரையறுப்பை மாத்திரம் வைத்து இந்தப்புள்ளிக்கு வர முடியாது.

இன்னொரு விஷயம் - மற்றவர்களை விமர்சிப்பதற்கெல்லாம் முன்னால் - ஃபூக்கோ, லக்கான், தெர்ரிதாவைக் கடந்துவந்திருப்பதாகக் கூறுகிறீர்கள்! அப்படி நாங்கள் யாரையும் கடக்க முடியாது. போத்ரியாரின் இடத்தையும் அப்படித்தான் பார்க்க வேண்டும். கடப்பதாக எந்த நோக்கமுமில்லை!

அடுத்து ஒரு சிறு வேண்டுகோள் - எழுதும்போது வாக்கிய நீளத்தைக் குறைக்கப் பாருங்கள். உடைத்து எழுதப் பாருங்கள். சிக்கலான கருதுகோள்களைச் சிறிய வாக்கியங்களிலேயே எழுதிவிடலாம் - கணி்தத் தேற்றம் மாதிரி. வாசிக்கும் கண்கள் அவற்றை இணைத்துக்கொள்ளும்.

இறுதியாக, எல்லோருக்கும் - உணர்வெழுச்சி, குற்ற உணர்விலேயே நிற்க வேண்டியதில்லை - யாவற்றையும் ஏற்று ஒரு sensitive அறிவுப்புலமாக மாற்ற வேண்டிய தேவை முக்கியம்.

இந்த நோக்கில் சரியாகப் பதினெட்டு ஆண்டுகள் முன்பு நான் இலங்கைப்போர் குறித்து எழுதிய ஆங்கிலக்கட்டுரையைப் படிப்படியாக, தமிழில் செய்ய இருக்கிறேன். இந்த முறை டில்லி சென்ற போது அதை அங்குள்ள ஒரு நூலகத்தில் தேடி எடுத்தாகிவிட்டது. அதைத் தமிழில் கொணர்வதற்கான நேரம் வந்துவிட்டதாகவே நினைக்கிறேன். அதில் முக்கியமாக ஆராய்கிற ஆந்ரே தார்க்காவ்ஸ்கியின் படம் Stalker. அதையும் சென்ற வாரம் லண்டனில் வாங்கிவிட்டேன்... பார்க்கலாம்.


றஞ்சனியினது பின்னூட்டம்.

ஜமாலன் கூறியிருப்பதுபோல

//நானும தமிழவன் கட்டுரையை மீள்பதிவு செய்தேன். அதனை மறுவிளக்கமாக உங்கள் கட்டுரை விரித்துச்சொல்கிறது //

எனக்கும் அப்படித்தான் உங்கள் பதிவு தோன்றுகிறது..

//தமிழ்நாட்டில் கிளர்ந்திருக்கிற இந்த எதிர்ப்பு தென்னகத்தின் மற்றும் இந்தியாவின் அனைத்துப்பகுதிகளிலிருந்தும் நியாயமாகவே வந்திருக்க வேண்டும். அது நடக்கவில்லை. இப்போதும் அதைச் சாத்தியமாக்க முடியவில்லை என்றால் இதுகாறும் செய்யமுடியாமல் போனவை, செய்யாமல்விட்டவை, செய்ததாக எண்ணி ஏமாந்தவை என்ன என்று அறிவார்த்தமாக அலசலாம். அவற்றின் தொடர்ச்சிதான் இன்றைய அவல நிலை என்றால் கோட்டை விட்டிருப்பவர் யார்?

//ஹிந்து ஆசிரிய நிலைப்பாட்டைக் கண்டித்து எழுதும் தென்னக ஆங்கில ஏடு ஒன்றுகூட இன்றில்லையே... இருபதாண்டுகள் முன்பு அப்படி ஓர் ஆங்கில ஏடு தென்னகத்திலிருந்து வராமல் இருந்ததற்கு ஜாதியை வைத்து எளிமையான காரணம் ஒன்றைக் கூற முடிந்தது. ஆனால் இந்த இடைப்பட்ட காலத்தில் அரசியல்-பொருளாதார-ஊடக வலிமை பெற்றும் அதே காரணத்தைக் கூறுவது என்றால் இங்கே யாரோ கோட்டைவிட்டிருக்கிறார்கள் எனலாம். கிட்டத்தில் இருந்து கோட்டைவிட்டது யார்!//

இங்கு ஜெர்மனியர் பற்றி ஒரு ஜோக் இருக்கிறது புரட்சி என்று வந்தாலும் ஜெர்மனியர் ரயில் ரிக்கற் எடுத்துக்கொண்டுதான் போவார்கள் என்று. அப்படியொரு ஒழுங்கு கட்டுப்பாட்டுக்கு கட்டுப்பட்டவர்கள் என்பதுபோல நக்கலடிப்பார்கள்..
இதுதான் இவர்களின் நிலையாக இருக்குமா, இருந்ததா...

கேள்விகள் நிறைய ..

ஈழத்தில் நடப்பதுக்கு எதுவுமே செய்ய முடியாதிருப்பதென்பதுதான் எல்லாவற்றுக்கும் மேலான கொடுமையாக உள்ளது..அந்நியனது பின்னூட்டம்.

நாகார்ஜுனன்,
ஃபூக்கோ, லக்கான், தெர்ரிதாவைக் கடந்தது என நான் குறிப்பிட்டது அவர்களின் காலத்தை. காலத்தை என்னும் போது அவர்களால் முக்கியத்துவப்படுத்தப்பட்ட விடயங்களையும் அதனை உள்வாங்கிய உலக நடைமுறையையுமே கூறினேன். ஈழத்துச் சூழல் அவற்றைக் கவனித்ததாகவோ தன்னை பரிசீலனை செய்துகொண்டதாகவோ நான் அறியேன். நாம் இம்மூவரையும் விசேடமாகக் குறிப்பிட்டது, முரண்களுக்கிடையிலான நகர்வை முன்வைத்து. முரண்களின் பலமான நிரந்தர (முரண்கள் மாறுபடும். முரண்களின் இருப்பு நிரந்தரமாகும்.) இருப்புக்களுக்கிடையிலான நகர்வை முன்வைத்து அதைக் கூற எத்தனித்திருந்தேன் தவிர அந்நியன் என்ற நபர் அவற்றைக் கடந்ததாக அல்ல. உண்மையில் நாம் முரண்களுக்கிடையில் சிக்கிச் சுழல்கின்றோம் என்ற வேதனை எனக்களித்த வாக்கியமே அது. முரண்கள் மற்றும் நிச்சயமின்மை தொடர்பான அவர்களின் உரையாடலின் காலத்தை நாம் தவறவிட்டுக்கொண்டிருக்கிறோம் என்பதான வாக்கியப்போக்கே அதுவாகும்.

அறிவுப்புலமாக மாற்றும் உங்களது செயற்பாட்டுக்கான காலம் வந்துவிட்டது என்பதே எனதும் நிலைப்பாடு.


அந்நியனது பின்னூட்டம்.

தமிழவனின் மூலப்படிம உணர்வு என்பதனை வாசித்த போதும் அதற்குப் பின்னர் நாகார்ஜுனன் மற்றும் ஜமாலன் போன்றோரின் ஈழம் தொடர்பான எழுத்துக்களையும் வாசித்தபோது ஏற்பட்ட உணர்வின் வழியில் இப்பின்னூட்டத்தை எழுதத்தோன்றியது. மூலப்படிம உணர்வின் தோற்றத்திற்கான 'மொழி' அடிப்படையிலான தன்மையும் அதனை சாதகமகப் பயன்படுத்தவேண்டும் என்ற கருத்தாடல்களுக்கு முன்னர் இன்றைய சூழல் தொடர்பாக சொல்லவேண்டியிருந்தது. அதனை 3 விதமாக வகைப்படுத்திக் கூறியிருந்தேன்.

1.
இன்றைய ஈழத்து அரசியல்-சூழல் மற்றும் எழுத்துதளம் தொடர்பாகக் கூறியிருந்தேன். இக்கட்டம் அறிவுஜீவிகளை அம்பலப்படுத்த உதவியது. அறிவுஜீவி என அறியப்பட்டவர்கள் இக்கட்டத்தை எதிர்கொள்ள முடியாமல் திணறுவதன் மூலம் தமது மக்கள் எதிர் நிலைப்பாட்டை பகிரங்கப்படுத்தியிருக்கிறார்கள்.

2.
ஈழத்து இளையோர் தொடர்பான சில விடயங்களைக் கூறியிருந்தேன். எவ்வாறு துவித-எதிர் நிலைகளுக்குள் பொருத்தப்பட்டார்கள் என்றும் எவ்வாறு அரசியல்-நீக்கம் செய்யப்பட்ட குழுவாத நிலைக்கு ஆட்பட்டார்கள் என்பதையும் கூறியிருந்தேன். அந்நிலைக்கு புலிகளின் பங்கு பெரும்பாலாக இருக்கும் அதேவேளை, ஈழத்து அறிவுஜீவிகள் எவ்விதம் பங்காற்றியுள்ளார்கள் என்பதையும் கூற முற்பட்டேன்

3.
செப்டம்பர் தாக்குதலின் பின் ஜோர்ஜ் புஷ் அவர்களால் முதல்நிலைக்கு கொண்டுவரப்பட்ட 'பயங்கரவாதம்' என்னும் சொல்லும் உலக மக்களின் ஆழ்மனங்களில் பதியச்செய்யப்பட 'உடைந்த இரட்டைக் கோபுரத்தின்' குறியீடும் எவ்வாறு ஒடுக்குமுறைக்கெதிரான அனைத்து செயற்பாடுகளையும் முடக்கப் பயன்பட்டது என்பதையும் கூற எத்தனித்தேன். 'பயங்கரவாதம்' ஒற்றைத்தன்மைக்குள் 'அடக்கப்பட்ட'தனால் வன்முறைசார் விடுதலைப் போர்கள் ஒத்திவைக்கப்பட வேண்டிய நிலைக்கு உள்ளாகின என்பதையும் கூற வேண்டி இருந்தது. அதன் தொடர்ச்சியில் தேசங்களுக்கிடையிலான அரசியல்-உறவுகளில் ஏற்பட்ட மாற்றங்களையும் கூறினேன். ஒபாமா, ஹிலாரி போன்றோர் பயங்கரவாதத்தை வகைப்படுத்த எத்தனித்தமை முதன்மைப்படுத்தப்பட 'பயங்கரவாதம்' என்னும் சொல் தனது இடத்தில் இருந்து உதிரத்தொடங்கிவிட்டது எனக்கூற முடியும். ஒபாமாவின் ஈராக் மீதான மென்பார்வையும் ஆப்கானிஸ்தான் மீதான வன்பார்வையும் மதங்களைக் தாண்டி பயங்கரவாதம் வகைப்படுத்தப்படப் போகின்றது என நிச்சயமாகக் கூற முடியும். எதிர்வரும் காலங்களில் சிலவேளை ஒடுக்கப்பட்ட குரல்கள் மீண்டும் ஒலிக்கக்கூடும் எனக்கூற முடியும். ஆயினும் கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட மாற்றங்களுக்கு பின்னர் அவை புதிய வடிவில் ஒலிக்கும் போது மட்டுமே மாற்றங்களை எதிர்பார்க்க முடியும். உலகத்தை அடுத்து பிரதானமாக ஆழப்போகும் படிமம் எது என்பது அனைவருக்குமுள்ள மிகப்பெரிய கேள்வி. புலிகள் எதிர்பார்த்திருப்பதைப் போல அரசியல் உறவுகளின் மாற்றத்தில் போராட்டத்தை முன்னெடுக்க முடியாது. ஏனெனில் அரசியல் உறவுகள் முரண்களை ஏற்றுக்கொண்ட தேனிலவுகளாக மாறிவிட்டன. நண்பன்-பகைவன் எதிர்முரண்களைத் தாண்டி பயணிக்கத் தொடங்கிவிட்டன என நினைக்கிறேன்.

இம்மூன்று விடயங்களையும் முன்னைய பின்னூட்டத்தில் கூறியிருந்தேன். இதில் இருந்து விலகி தமிழவன் கூறிய மூலப்படிம உணர்வு எத்தகையது அது எவ்வாறான விளைவை இக்காலத்தில் ஏற்படுத்த முடியும் எனப்பார்க்கவேண்டும். மூலப்படிம உணர்வு நிலை என்பதன் சாதகங்கள் குறித்து மட்டுமல்லாது அதன் பாதகங்கள் குறித்து, பாதகம் ஆகக் கூடிய சந்தர்ப்பங்கள் குறித்து ஆராய வேண்டியது எமக்கு முன்னுள்ள மிக முக்கிய பணி என்பேன். மூலப்படிம உணர்வுகள் குறித்தோ அல்லது தொன்மங்கள் பற்றியோ உணர்வுகளை மீளுருவாக்கம் செய்யும் போது அதன் பாதக அம்சங்களையும் ஏற்கனவேயான 'மற்றமைகளையும்' கருத்தில் கொள்ளுதல் மிகவும் அவசியமானது.

இங்கு மொழி சார்ந்த மூலப்படிம உணர்வு நிலையென்பது பேசப்படுவதால், அதுசாரப்பட்ட விடயங்களை முதன்மைப்படுத்தல் நல்லது என நினைக்கிறேன். மொழி என்பதன் வெளிப்பாடாக பேசும் மொழி விளங்குகின்றது. பேசும் மொழியென்பது தொடர்பாடல் எல்லைகளைக் கொண்டதே. அதன் பின்னால் மனத்தில் கட்டமைக்கப்பட்ட பிம்பம் பல்பரிமாணம் மிக்கது. ஒவொருவருக்கும் மாறுபடக்கூடியது. ஒரே மொழிகளுக்குள்ளேயே மாறுபடும் பிம்பங்களாக மனவெளியில் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. ஒரே மொழிக்குள் பிம்பங்களின் இடைவெட்டுக்கள் ஏற்படுத்தும் குறியீடுகள் செல்வாக்குச் செலுத்துகின்றன. அவற்றிற்கு இலக்கியம், புனைவுகள், தொன்மங்கள் தொடர்பான கதைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவற்றினூடே அவை பலமாகக் கட்டமைக்கப்படுகின்றன. அதன்வழி தனிநபர் தன்னிலை வேறுபாடுகளுடன் கூடிய படிமங்கள் மொழி ஒன்றிணைப்பில் இறுக்க முறுகின்றன. அவற்றிற்கு மொழிவழியான கதையாடல்களும் புனைவுகளும் இதிகாசங்களும் உதவி புரிகின்றன. இங்கே, லக்கானது அகநிலை நனவிலிசார் கருத்துக்கள் எமக்கு உதவி புரியக்கூடும்.

நான் இவ்விடத்தில், உளவியல் பகுப்பாய்வு முறையூடாக விளக்கத்தக்க மூலப்படிவு உணர்வுநிலைக்கு முன்னதாக, முற்றாக அவ்வகை மாதிரியில் பொருத்திக்கொள்ளாத கருத்தியலூடாக சொல்ல விளைகின்றேன். ரோலான் பார்த்துடைய மாறுபடும் வாசிப்பு-இன்பத்திற்குப் பின்னே மொழியின் முக்கியத்துவம் பலத்த தாக்கம் செலுத்துகின்றன. மொழி கட்டமைத்த மனவெளி உருவாக்கும் வாசிப்பு-இன்பம் தொடர்பாக மொழி அடையாளம் சார்ந்து அவை மாறுபட்ட வாசிப்பைத் தரக்கூடும். மேலும், மொழியின் வளர்ச்சிப்போக்கென்பது கட்டமைத்த பிம்பங்கள் காரணமாக ஒரே மொழியைச் சேர்ந்தவர்களது வாசிப்பு அனுபவங்கள் அன்னளவாக ஒரே அலைவரிசையில் காணப்படக்கூடும் என்பதை நாம் மறுத்துவிட முடியாது. பார்த்-தின் கருத்துக்கள் மட்டுமல்ல, டெல்யூஸ்-கற்றாரியுடைய மொழி 'ஏற்கனவே' கட்டமைத்துவைத்திருக்கும் பிம்பங்கள் தொடர்பாகவும் இன்னும் தெர்ரிதாவினது "தகர்க்கப்பட வேண்டிய மையவாதங்கள் மொழியூடாகக் கட்டமைகப்படிருப்பது" என்பதும் ஃபூக்கோவின் 'மொழியை மீறிய உரையாடல்' என்பதும் சசூரின் அமைப்பியல் தொடர்பான மொழிக்கருத்தியலும் அதனைத் தொடர்ந்து நிறுவ எத்தனித்த லெவி-ஸ்ட்ராசும் எமக்கு உணர்த்தி நிற்கும் விடயங்கள் பல. மொழி தொடர்பான மூலப்படிம உணர்வு கடத்தப்படும் விதமும் அவை மீறப்பட வேண்டிய சந்தர்ப்பங்களும் என்பதாக அமைகின்றது. மொழி மூலப்படிம உணர்வு மீளுருவாக்கம் கொள்ளும் அதேநேரம் அதனுடன் இணைந்த பிற்போக்கான அம்சங்களும் மீளுருவாகம் பெற எத்தனிக்கும் என்பதும் அதை எதிர்கொள்ள நாம் எவ்வகையான வழிமுறைகளை வைத்துள்ளோம் என்பதும் எமது உரையாடலுக்கு முக்கியமானது. நான் இங்கே உரையாட எத்தனித்த காரணமும் எனலாம்.

நிற்க........

உளவியல்-பகுப்பாய்வு மூலப்படிம உணர்வு பற்றிக் கூறும் இடங்கள் மனிதகுல வளர்ச்சியில் மிக முக்கியமான கருத்தாக்கங்கள். மனித வளர்ச்சிப் போக்கின் அடிநாதமாக முதுகெலும்பாக எவ்வாறு அம்மூலப்படிம உணர்வு அமைந்தது என்பதை யூங்கும் லக்கானும் கூறியதை நாம் இவ்விடத்தில் ஞாபகப்படுதிக்கொள்ள முடியும். இங்கே, உளவியல்-பகுப்பாய்வு என்பது மனிதகுல வள்ர்ச்சிப் போக்கை விவரிக்கும் அதே நேரம் அதற்கொரு விஞ்ஞான அந்தஸ்தையும் தருகின்றது.

யூங் நேரடியகவே இனக்கோட்டில் இறுக்கமடைந்த நனவிலி-மனதின் அல்லது இன-நனவிலி என்பதன்பால் சமூகத்திற்கு எல்லைக்கோடு கீறுகின்றார். குழந்தை பிறந்த தருணத்திலிருந்து மொழியடிப்படையான சமூகத்துடன் தொடர்புற முயற்சிக்கிறது. அச்சமூகத்தின் தொன்மங்கள் அதன் தொன்மங்களாக சுமத்தப்படுகின்றன. அவற்றிலிருந்து தனது யதார்த்த வாழவைக் கட்டமைக்க முயற்சிக்கிறது. தொன்மம் தொடர்பான கதை ஒன்றை அறிந்து கொள்ளும் பால்யப்பருவத்தில் - அக்கதை மாற்றத்திற்கு உட்பட்டு அச்சமூகத்தில் தேங்கிய இறுதிவடிவம் என்பது வெறுமனே எதேச்சதிகாரமானது அல்ல. பலவிதமான காரணங்களுடன் தொடர்புபட்டது. அனைத்திற்கு ஆதாரமானது மொழியடிப்படையே என்பது இவரது கருத்து. பிராய்டில் இருந்து வேறுபட்டு கூட்டு-நனவிலி என்ற வகைப்பரப்பை யூங் உருவாக்கியதென்பது தொன்மங்களினதும் இனவடையாளக் கதைப்பரப்புகளது முக்கியத்துவம் கருதியே. நனவிலி-மனத்தின் 'கறுப்புப்பக்கம்' என்ன்னும் கருத்தியலை பெரும்பாலும் தொன்மங்களுடன் இணைத்தே இவரால் கட்டமைக்க முடிந்தது. (ஹொலிவூட்டில் இக்கருத்தை சாராம்சமாக கொண்டு பல திகில் திரைப்படங்கள் வந்தவாறிருக்கின்றன.)

லக்கானின் கருத்தியலும் மூலப்படிம உணர்வு தொடர்பாக பெருமளவு மாற்றமடையவில்லை என்றே கூறுவேன். ஆயினும் அவர் குறிப்பான்களுடன் அதனைத் தொடர்புபடுத்தினார். கூட்டு-நனவிலியை ஆளும் குறிப்பான்கள், நமது மனவெளியெங்கும் நிறைந்திருப்பதை நாம் மறுக்க முடியாது. மனிதரை ஒருங்கிணைப்பதில் மொழி-அடையாளம் என்பதே முக்கியப்பாத்திரம் வகிக்கின்றது. அது தொடர்பாக லக்கான் கூறிச்செல்பவற்றில் யூங்கில் இருந்து சிறிய விலகல் காணப்படுகின்றதெனக் கூற முடியும். அதாவது யூங் மொழிக்கோட்டில் அழுத்தியது போன்றோ எல்லைக்கோட்டை வரைந்தது போன்றோ லக்கான் தீர்க்கமாக வரைய முற்படவில்லை. அவர் அடையாளங்கள் அதற்கப்பாலும் பிளவுற்ற தன்மை கொண்டவை என்பதையும் சடங்குகள் சிறிய சமூகக்குழுக்களிடையே பெறும் முக்கியத்துவம் தொடர்பாகவும் அதிகம் பேசினார். ஆயினும், அவர் முலப்படிம உணர்வை குறிப்பான்களுடன் தொடர்புபடுத்தியேனும் மனிதகுல வளர்ச்சியில் அவற்றின் செல்வாக்கை மறுக்கவில்லை.

தொடர்கின்றேன்.............

இவ்விடத்தில் எனது பின்னூட்டத்தை நிறுத்தி பின்தொடர வேண்டிய நிலமை எனக்கு ஏற்பட்டதற்கான காரணங்களே என்னை எழுதத்தூண்டிய காரணங்கள் எனலாம். ஆழமான உளப்பகுப்பாய்வு பின்னையது எனவும் சமூகவியலுடன் நெருக்கமானது முன்னையது, முன்னையவர்களின் கருத்துக்கள் எனவும் கூற முடியும். உளவியல்-பகுப்பாய்வு அதன் 'உண்மை'த் தன்மையை வலியுறுத்தி நிற்க, சமூகவியல் அதன் மாற்றங்களையும் மாற்றங்களுக்கான தேவையையும் சில இடங்களில் வலியுறுத்துகின்றது. உளவியல்-பகுப்பாய்வின் 'உண்மை'கள் எமக்கு எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு, இன்னும் அதற்கு மேலதிகமாக, பார்த், தெரிதா, ஃபூக்கோ, டெல்யூஸ்-கற்றாரி, சசூர், லெவி-ஸ்ட்ராஸ் போன்றோரின் சமூகவியல் பெறுமானங்கள் கொண்ட கருத்தியல்கள் எமக்கு முக்கியமானவை. ஏனெனில் அவை மனித குலத்தில் பிற்போக்கான விடயங்களைக் களைந்து புதிய 'உண்மை'களைக் கட்டமைக்க எத்தனிப்பவை. ஃபூக்கோ வலியுறுத்திய 'மொழியை மீறிய உரையாடல்' என்பதும் தெர்ரிதாவிண் 'மொழியால் கட்டமைக்கப்பட்ட மையவாதங்களை எதிர்ப்பதுட என்பதும் ஒருவகையில் மூலப்படிம உணர்வு என்பதை, அல்லது அவற்றின் சில directions-ஐ மாற்றத்திற்கு உட்படுத்த வேண்டிய தேவையை எமக்கு வலியுறுத்துபவை.

--இறுதி பந்திக்கு முதல் பந்தி--

எனக்கு இக்கட்டம் கேள்விகளால் நிரம்பியது. மூலப்படிம உணர்வு என்பதன் உண்மை என்பது ஒருபக்கம் இருக்க, அதன் தேவை என்பதும் எவ்வகையான களைவுகளுடன் அதன் மீளுருவாக்கம் செய்யப்படவேண்டும் என்பதும் எனக்கு முன் உள்ள முக்கியமான விடயங்கள்.

1.
மூலப்படிம உணர்வு மீளுருவாக்கம் என்பது ஒரு மொழிக்கு உட்பட்ட அனைத்து சமூகப்பரப்பாலும் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்ளப்படுமா என்பது முக்கியமானது. தனக்குள் தாழ்த்தப்பட்ட ஏற்றத்தாழ்வுகள் கொண்ட சமூகப்பரப்பை அது எவ்வாறு எதிர்கொள்ளப்போகின்றது என்பதும் அதன் மீள்வாசிப்பும் மீளுருவாக்கமும் அவ்வகையில் தமது கவனத்தை குவியப்படுத்த வேண்டிய இடங்கள் என்பது முதலாவது.

2.
தொன்மங்களின் மீளுருவாக்கம் 'கண்மூடித்தனமாக' ஏற்றுக்கொள்ளப்படும் நேரத்தில் குரல் மறுக்கப்பட்ட சமூகப்பரப்பை தமக்குள் மீண்டும் மீண்டும் வரைய முற்படும் போது, அது தொடர்பாக கவனத்தைக் குவியப்படுத்த வேண்டிய இடங்கள் என்பதும் அவற்றிற்கான அங்கீகாரம் மீளுருவாகப்பிரதியில் தென்படுகின்றதா என்பது இரண்டாவதாகும்.

இவ்விடத்திலேயே நான் யூங்கினதும் லக்கானினதும் 'உண்மைக'ளுக்கு முன்னால் ஃபூக்கோவையும் தெரிதாவையும் முன்னிறுத்த விரும்புகின்றேன். ஏனெனில் அவர்களுடைய 'கருவிகள்' 'புதிய உண்மை' உருவாக்கத்துடன் நெருங்கிய தொடர்புள்ளவை.

---இறுதிப்பந்தி---

* சார்ல்ஸ் டார்வின் 'தக்கன பிழைக்கும்' என்ற 'உண்மையை' அடைந்ததன் பின்னால், அக்கருத்து சர்வாதிகார சக்திகளை நியாயப்படுத்தப் பயன்பட்டதற்காக நாம் அவருடைய 'கள ஆய்வை' நிராகரிக்க முடியுமா?

அல்லது,

* தனது கருத்து எதிர்காலத்தில் இப்படியான போக்குகளுக்கு பயன்படப்போகின்றது என்பதற்காக அவர் தனது 'கள ஆய்வை' வெளியிடாமல் இருக்க முடியுமா?

இவ்விடத்தில்தான் நான் மூலப்படிம உணர்வு என்பதை மீண்டும் ஞாபகப்படுத்திக் கொள்கின்றேன். இதில் இருந்தே நாம் இது தொடர்பான உரையாடலையும் தொடங்கமுடியும் என நினைக்கின்றேன்.

-அந்நியன்.


ராஜன் குறை இனது பின்னூட்டம்.
அன்புள்ள நாகார்ஜுனன்,

உங்கள் தளம் விவாதத்திற்கான ஒரு களம் என்ற நம்பிக்கையில் எழுதுகிறேன். தமிழவன் Primordial Sentiment என்ற கருத்தாக்கத்தை எடுத்தாள்வதும், அதை மூலப்படிம உணர்வு என்று மொழிபெயர்ப்பதும், தமிழுணர்வு அப்படிப்பட்டது என்று கூறுவதும் அதை நீங்கள் வழிமொழிந்து எழுதுவதும் எனக்கு ஆச்சர்யமாகவும் அதிர்ச்சியாகவும் இருக்கிறது.

நீங்கள் இருவரும் தொன்னூறுகளின் தொடக்கத்தில் “வித்யாசம்” என்ற பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் இருந்தீர்கள். Post structuralism என்ற அமைப்பியலுக்கு பிந்தைய சிந்தனைப்போக்கை உத்தர நவீனத்துவம் என்று அந்த பத்திரிகை அழைத்து முன்னிலைப்படுத்தியது. அதற்கு முன்னாலும் கூட நீங்கள் Deconstruction என்ற சிந்தனையை முன்மொழிந்தவர். இப்படி தத்துவவாதி தெரிதாவுடன் வாசகர்களுக்கு பரிச்சயமேற்படுத்திய நீங்களிருவரும் Primordial Sentiment போன்ற தோற்றுவாய் உருவகங்களை முக்கிய கருத்தாக்கம்போல சொல்வது தமிழ் சிந்தனைக்கு கடும் பின்னடைவு. வித்யாசத்திலிருந்து அடையாளத்துக்கு தாவி, அடையாளத்துக்கு மூலப்படிமம் போன்ற மூடிய கருத்தாக்கங்களை அடிப்படையாக்குவதால் எப்படி எந்தப்பிரச்சினைக்கும் தீர்வு காண முடியும்?

உதாரணமாக இலங்கையிலிருந்து தமிழகம் வரும் தமிழ் அகதிகள் எப்படி நடத்தப்படுகிறார்கள்? ஈவிரக்கமின்றி அவர்களை நடத்தும் அதிகாரிகளிடம் மூலப்படிமம் செயல்படவில்லையா? அல்லது சுரண்டுவதும், கொடுமைப்படுத்துவதும் மூலப்படிமத்தின் திருவாளையாடல்களில் ஒன்று என்பீர்களா? இந்த மூலம், ஆதி போன்ற சொற்களை நீங்கள் பயன்படுத்துவதே வியப்பாக இருக்கிறது. எமில் தர்க்கைம் நினைவுக்கு வருகிறார். ஒரே நேரத்தில் லதூரின் செயல் வலைப்பின்னல் என்ற உருவகத்தையும், மூலப்படிமம் ஆதிச்சடங்கு போன்ற உருவகங்களையும் யாராவது பயன்படுத்த முடியுமா? ஏதாவது ஒரு சிந்தனைமுறையை தேர்வு செய்துகொண்டு அதில் பயணிப்பது என்பதுதான் ஒரு மொழியில் சிந்தனையை வளர்க்க உதவும். மூலப்படிமம் போன்ற கற்பிதங்கள் சிந்தனையை தேக்கும். Clifford Geertz போன்ற பனிப்போர் கால மானுடவியலாளர்களை கடுமையாக விமர்சிப்பதன் மூலமே இன்றைய மானுடவியல் லதூரை வந்தடைகிறது. மீண்டும் தமிழில் செயல்படத்துவங்கியுள்ள நீங்கள் தெளிவான இலக்குகளுடனும், வேலைத்திட்டத்துடனும் செயல்படுவதே வாசகர்களுக்கு உதவும் என்பது என் தாழ்மையான கருத்து.

அன்புடன்
ராஜன் குறை.


நாகர்ஜுனனது பின்னூட்டம்.

ராஜன் குறை,

நிச்சயம் என் தளம் விவாதத்திற்கான ஒருகளம்தான். உங்கள் நம்பிக்கை வீண்போகாது. தமிழவன் மற்றும் நான் எழுதியிருப்பவனவற்றைப் பரிசோதனைமுறையில் வைத்துப் பார்க்க வேண்டும் என்கிறேன்.

உங்கள் விமர்சனமும் எச்சரிக்கையும் எங்கிருந்து வருகின்றன என்று எனக்குப் புரிகிறது. அதே சமயம், தோற்றுவாய்கள் உருவாகும்போதே அவற்றை ஆராய்வதில் ஒரு சவாலும் ஒரு குறிப்பிட்ட நோக்கமும் இருப்பதாக நினைக்கிறேன். எனவே அவற்றை அப்படியே வழிமொழிந்துவிடுவதாக மாத்திரம் எடுத்துக்கொள்வதில் சிக்கலுண்டு - அந்த அபாயத்தில் நீங்கள் சிக்காமலும் உங்களைச் சிக்கவைக்காமலும் எழுதுவதில் எனக்கும உங்களுக்கும் என இருவருக்கும் கூட்டுப்பொறுப்பு உண்டு என்பதைக் கூறவிரும்புகிறேன். இதனால்தான் நவீன இலக்கிய வரலாற்றின் ஒளியில் இதை எழுத முயன்றிருக்கிறேன். தமிழுணர்வு என்ற வழக்கமான மரபில் இருப்போர்க்கு நவீன இலக்கிய வரலாற்றின் பூடகம் அந்நியமானது. (பாரதி)-பாரதிதாசன் கொண்டுவந்த தோற்றுவாயை ஞானக்கூத்தன் எதிர்கொண்ட மாதிரி இதைப் பார்க்கவேண்டும். நமக்கு இரண்டும் வேண்டும் என்ற நிலையில் இரண்டையும் ஆராய முற்பட்டு எழுதியிருக்கிறேன் என்பதை நீங்கள் காணலாம்.

இலங்கைப்போர் குறித்து பதினெட்டு ஆண்டுகள் முன்பு நான் எழுதிய என் ஆங்கிலக்கட்டுரையைத் தமிழில் கொண்டுவருகிறேன். அன்று அதை நான் வாசித்த கருத்தரங்கில் சேரன் உள்ளிட்ட பலர் நிதானமாகக் கேட்டார்கள். இன்றைய நோக்கில் அதை மீண்டும் வாசிக்கும்போது சில மாறுபாடுகள் வரும். விவாதம் நிச்சயம் சூடுபிடிக்கும் என நினைக்கிறேன்.

தெர்ரிதாவைப் பொறுத்தவரை, ஜியோமிதி, குரல் (மதம்) ஆகியவையான தோற்றுவாய்களை ஆராய்ந்தவர். அப்படி தொர்ரிதா. ஹூஸ்ஸர்லின் L’Origine de la géométrie புத்தகத்துக்கு எழுதிய முன்னுரை, 'Genèse et structure' et la phénoménologie என்ற கட்டுரை என இரண்டிலும் பிரமாதமாக விளக்குகிறார் - தோற்றுவாய் என்றாக வருவதை மறுவாசிப்பு செய்வதை. அப்படி ஆராய்ந்தே margins, intertextuality, interculturality ஆகியவற்றை முன்வைக்கிறார் என்பதை மறுக்க மாட்டீர்கள் என்று நினைக்கிறேன். இந்த முறையில் தெர்ரிதா, பண்டைய கிரேக்கத்தில் சாக்ரட்டீஸூக்கும் ஸோஃபிஸ்ட்களுக்கும் நடந்த முக்கிய விவாதத்தில் நிலைகொள்கிறார், உரைமரபு என்ற நிலையில் தம்மை வைத்து இயங்குகிறார். அதேபோல, மிஷெல் ஸெர், இயல்பியலின் தோற்றுவாயை லுக்ரீஷியஸின் புத்தகத்தை வைத்து மறுவாசிப்பு செய்கிறார். லத்தூர், நவீன யுகத்தின் உருவாக்க அடிப்படையின் சட்டகத்தையே மறுவாசிப்பு செய்கிறார் – அப்படித்தான் வலைப்பின்னல் என்ற உரையை எழுதிப் புதிய உண்மை-உருவாக்கத்தை இயக்கிக் காண்பி்க்கிறார்.

தோற்றுவாய் உருவாவது, நாம் விருப்புவெறுப்புகளுக்கு அப்பாற்பட்டது. அப்படி நடக்கும்போது அதை ஆராய முற்படுவது ஒரு சவால். அதை வெளியிலிருந்து சுட்டிவிட்டுச்சென்றுவிடுவது எளிது. ஆனால் உள்ளிருந்து இயக்கிக்காட்டுவது, இன்றுள்ள சவால்.

நிச்சயமாக இலங்கையிலிருந்து வரும் அகதிகளை மோசமாக நடத்தும் தமிழக அதிகாரிகள், காவல்துறையினரிடம் நீங்களோ நானோ விரும்பும் புரிதல் இருக்காதுதான். ஏன் இல்லை என்பது கேள்வி. அதேவேளே அகதிகள் நிலை பற்றிய தகவல்களைச் சேகரித்து முதல்வரிடம் அளித்த நண்பர் ரவிக்குமாரிடம் இது உண்டு என்று நினைக்கிறேன்.

தொடர்ந்து எழுதுகிறேன். விவாதிக்கலாம்.

அன்புடன்
நாகார்ஜுனன்.


அந்நியனது பின்னூட்டம்.

நாகர்ஜுனன், ராஜன் குறை..
நீங்கள் ராஜன் குறைக்கு என்ன பதில் கூறப்போகின்றீர்களோ என்ற எதிர்பார்ப்பு என்னைப்போல எனது நண்பர்கள் பலருக்கும் இருந்தது. தற்போது நீங்கள் கூறிய பதிலால் திருப்தியடைய முடிகின்றது. உங்களது உரையாடல் தொடர வேண்டும் என விரும்புகின்றேன். அதன் இறுதியில் நீங்கள் எடுக்க இருக்கும் முடிவுகள் அல்லது உரையாடலின் சாராம்சம் என்பது எதிர்காலத்தில் தமிழ் அறிவுஜீவித்தளத்தில் ஏற்படப்போகும் மாற்றத்திற்கான ஆரம்பப் புள்ளியாக இருக்க வேண்டும் என்பது எனது எண்ணம்.

இவ்வுரையாடல் தொடர்பாக நான் எனது நண்பர் ஒருவருக்கு எழுதிய மடலை கீழே இணைக்கிறேன்.

-----------------------------------------------------------------------------------------------

1.
மொழித்தேசியம் (இங்கே மூலப்படிம உணர்வுடன் சாமாந்தரப்படுத்துகின்றேன்.) என்பதை தாண்டிய சிந்தனைக் கூறுகள் வந்துவிட்டன. மொழித்தேசியம் பிற்போக்கான அம்சம் என நிராகரிக்கப்பட்டாயிற்க்கு. ஆக, நாம் இனிமேலும் அக்கட்டத்திற்கு நகரமுடியாது. அதற்குப் பின்னான கருதுக்களைப் பற்றி நாம் மேலும் உரையாடுவது அறிவுஜீவித்தளத்திற்கு உகந்தது. என்ற கருதுகோளுக்கு ராஜன் குறை அவர்களுடைய பின்னூட்டத்தில் இருந்து வரமுடிகின்றது.

இன்றைய தமிழ் அறிவுஜீவித்தளத்தில் மொழித்தேசியம் பற்றிப் பேசுவதென்பதே 'குற்றம்' என்பதாகக் கட்டமைக்கப்பட்டுவிட்டது. தேசியத்தைக் கடந்த கருத்தியல்கள் என்பது அதை 'முற்றாக' நிராகரிக்கும் நிலைப்பாட்டை எடுத்துவிட்டன. ராஜன் குறை அவர்களது பின்னூட்டம் இதுசாரப்பட்ட சமன்பாட்டின் வழியே நகர்ந்ததாகவே எண்ணத் தோன்றுகின்றது. ஆயினும் நடைமுறை என்பது அதை பிரதிபலிப்பதில்லை. இக்கருத்தியலில் இருந்து விலகியே உள்ளது. இங்கே தான் நாம் நடைமுறையை தள்ளிவைத்துவிட்டு அறிவுஜீவிக் கதையாடல்களுக்கு உதவப் போகின்றோமா அல்லது நடைமுறை பிரச்சனைகளினூடே எமது உரையாடலை நகர்த்திச் செல்லப் போகின்றோமா என்ற கேள்வி எழுகின்றது. மேற்கினது கருத்தியல் உரையாடல்கள் பெரும்பாலும் அக்காலகட்ட நடைமுறை அனுபவங்கள் மற்றும் பிரச்சனை சார்ந்தே தம்மை வடிவமைத்துக் கொண்டன என்பதை நாம் மறந்துவிட முடியாது. 'பின்னையது', 'முன்னையதைச்' சிதறித்திருக்கும் என்பது பொய்யானது. 'பின்னையது' 'முன்னையதை' மேவி தற்போது முன்னிலை பெற்றது என்பதே எனது நிலைப்பாடு. இரண்டினது இருப்பையும் நிராகரித்துவிட முடியாது.


2.
நாகர்ஜுனன் அவர்கள் இக்கட்டத்தில் இவ்விடயங்களைத் தாண்டி நிற்கின்றார். தத்துவ வளர்ச்சிப் போக்கை உள்வாங்கிய அவரது 'அறிவு' அதன் போக்கை நேர்கோட்டுத்தளத்தில் பின்பற்றவில்லை. நடைமுறை சார்ந்து அதன் கருத்தோட்டம் சார்ந்து அதன் இன்றைய நிலையை அவதானித்து தனது கருத்தைச் சொல்ல விளைகின்றார். அதாவது 'போக்கின் தொடர்ச்சியில்' தன்னைப் புதைதுக்கொள்ளாமல் அதனின்றும் விலகி அதனை ஆராய முற்படுகின்றார். பலவித அறிவுச் சேகரிப்புகளையும் பேணியவாறு பிரச்சனைப்பாடுகள் சார்ந்து அறிவுப்புலத்தை செம்மைப்படுத்த எத்தனிக்கின்றார். மேற்கிலிருந்து அப்பாலான சமூகப்பரப்புகளுக்கு நாகர்ஜுனனது இப்போக்கு மிக அவசியமானது. ஏனெனில் மேற்கைத் தொடர்வதல்ல எமது நோக்கம். அதனை 'உள்வாங்கியவாறு' நகர்வதென்பதே எமக்கான சிறந்த தெரிவாக இருக்க முடியும்.


3.
மேற்கூறிய இருவிடயங்களிலுமே ராஜன் குறையும் நாகர்ஜுனனும் மாறுபடுகின்றார்கள். அறிவுப்புலம் தவிர்த்து நடைமுறை சார்ந்து implementation பரப்பில் இருவரது வேறுபாடும் நிகழ்கின்றதென்பதை நாம் கவனிக்க வேண்டும். இவ்விடத்தில் அவர்கள் இருவரும் வர இருக்கும் உடன்பாட்டுப்புள்ளி தமிழ் அறிவுப்புலதிற்கு முக்கியமாகக் இருக்கும் என நினைக்கிறேன்.

நான் மானுடவியல் இயல்பு சார்ந்து அதனை இரண்டாக பிரித்து ஆராய்ந்தது நடைமுறைப்படுத்தலின் வசதி கருதியே. யூங் மற்றும் லக்கானை ஒரு பரப்பிலும் ஃபூக்கோ மற்றும் தெரிதவை மறுபரப்பிலும் வைத்து இதனைக் கூறவேண்டி வந்ததும் அதுசாரப்பட்டதே. யூங் மற்றும் லக்கான் நடைமுறை அல்லது மனித-உளப்பகுபாய்வு சார்ந்து அதனை ஏற்றுக் கொண்டவர்கள். தெரிதா மற்றும் ஃபூக்கோ அதன் பிற்போக்கான அம்சங்களை விமர்சித்தவாறு அதை விமர்சனம் செய்தவர்கள். (விமர்சனம் என்பதை முற்றுமுழுதான நிராகரிப்பாக நாம் எடுத்துக்கொள்வதை நாம் கைவிட்டே ஆகவேண்டும். அப்போது மட்டுமே ஆரோக்கியமான புள்ளிகளை நோக்கி நகரமுடியும்.)

ஆயினும், நடைமுறையில் தமிழ்நாட்டினரது எழுச்சி உணர்வைக் காண்கின்றோம். அரசியல்வாதிகள் தான் தமது அரசியலுக்காகச் செய்கின்றார்கள் என்று கூறினாலும் சாதாரண மக்களது உணர்வுகளும் பிரதிபலிக்கப்படுவதைக் காண்கின்றோம். இதனை 'பிற்போக்கான' அம்சம் எனக்கூறியவாறு அதனை நாம் ஒரேயடியாக நிராகரிக்க முடியாது. தெரிதாவினதும் ஃபூக்கோவினதும் கருத்துக்களை உள்வாங்கியவாறு அதனை செம்மைப்படுத்த எத்தனிக்க வேண்டும். அதுமட்டுமின்றி தற்காலத்திய மொழித்தேசியத்திற்குள் குரல்மறுக்கப்பட்ட விடயங்களையும் தலித்திய கண்ணோட்டங்களையும் உள்வாங்கியவாறு அவ்வெழுச்சியைப் பார்க்க வேண்டும்.

இது எதிர்கால அறிவுஜீவிகளது முறையாக இருக்கப்போகின்றது. ஃப்ராங்பேர்ட் பள்ளியைச் சேர்ந்தவர்கள் பின்னவீனக்கருத்தியலை உள்வாங்கியவாறு எவ்வாறு மார்க்கியத்தின் உயிர்த்தன்மையை பேணுகின்றார்கள் என்பதை இவ்விடத்தில் யோசிக்க வேண்டும். பாரதியாரை இன்று முற்றாக மறுதலிக்கும் போக்கு நிலவிவருகின்றது. அவர்மீதான விமர்சனங்களை நாம் அவ்விடத்தில் வைக்க வேண்டும் தான் இல்லையென்றில்லை. அதற்காக அக்காலத்தில பிரச்சனைகளதும் கருத்தியல் போக்குகளையும் கவனத்தில் கொள்ளாமல் 'பாரதி ஒரு தலித்விரோதி' என்று சுட்டுவிரலால் ஒதுக்கிவிடமுடியாது. நாம் நடைமுறை சார்ந்து அறிவுப்புலத்தை செழுமைபடுத்தவேண்டுமே தவிர அறிவுப்புலத்தை சுற்றி கோடு கீறி வைத்துவிட்டோ அல்லது மேற்கின் அறிவுச்சூழலை பின்பற்றியோ அல்ல.

---------------------------------------------------------------------------------------------

இவ்விடத்தில் நாகர்ஜுனன் அவர்களது கருத்துக்கள் எமக்கு உவப்பாக இருக்கின்றன. அதனாலேயே தமிழவன் அவர்கள் தமிழ்நாட்டு மக்களின் எழுச்சியை மூலப்படிம உணர்வென்பது என்பதுடன் தொடர்புபடுத்திய போது, அதன் மீளுருவாக்கம் என்பது தற்காலத்தில கருத்தியல்களின் வளர்ச்சியையும் தேவையையும் உள்வாங்கிய வடிவமாக இருக்க வேண்டும் எனக்கூறியிருந்தேன்.

-அந்நியன்


நாகர்ஜுனனது பின்னூட்டம்.

அந்நியன்

என்னைப்பாராட்டுவதை நிறுத்தலாம். இதைச் சொல்லவேண்டும் என்பதற்காகவே உங்கள் மறுமொழியின் அந்தப்பகுதியை நீக்காமல் அப்ப்டியே இட்டிருக்கிறேன்.

மொழிவழித்தேசியம் என்பதை மூலப்படிம உணர்வு என்பதுடன் சமாந்தரப்படுத்த முடியுமா என்பதைக் கொஞ்சம் பிரச்னைப்படுத்த வேண்டும் என நினைக்கிறேன்.

தமிழவனும் தொடர்ந்து எழுத இருக்கிறார் என அறிகிறேன். கொஞ்சம் பொறுத்திருப்போம்.

நாகார்ஜுனன்


அந்நியனின் பின்னூட்டம்.

நாகார்ஜுனன்,

உங்களைப் பாராட்டுவதாக எண்ண வேண்டாம். உங்களது 'போக்கை'யே பராட்டுகின்றேன். ஏனெனில் சில தவறான 'போக்குகள்' பலருடைய உயிரைப் போக்கியிருக்கின்றன. போக்கிக்கொண்டிருக்கின்றன.

நெடுநாள் பழகிய நண்பர்கள் சுடப்படும் போதும் நான்காம் மாடியில் (அரசாங்கத்தின் அனுசரணையுடன் இயங்கும் சித்திரவதைக் கூடம்) துன்புறுத்தப்படும் போதும் எவன் அடிதாங்காமல் நம்மை என்னவிதமாக மாட்டிவிடப்போகின்றானோ என்ற பதைபதைப்பில் இருக்கும் எனக்கு 'தவறான' போக்குகள் கேவலமாகவும் 'சரியான' போக்குகள் 'தெய்வீகமாகவும்' தெரிவதை உங்களால் விளங்கிக்கொள்ள முடியாமல் இருக்ககூடும். எமக்கு அது வாசிப்பின்பம் மட்டுமல்ல. பலத்த ஆசுவாசமானதும் கூட.. இம்மனநிலையில் இருந்தே அறிவுஜீவிகள் தொடர்பான என் விமர்சனமும் வெளிவருகின்றது. இம்மனநிலையில் இருந்து நான் கூறுவது உங்களுக்குப் பாராட்டு போலத் தோன்றினால் மன்னிக்க வேண்டும்.

அந்நியன்

ஜமாலனது பின்னூட்டம்.

தமிழின் மிக முக்கிய உரையாடலில் ஒன்றாக அமையப்போகும் இந்த உரையாடலைக் கவனித்துவரும் வாசகர்களில் ஒருவனாக இதை எழுதுகிறேன்.

மீ்ண்டும் பழைய கேள்வி்தான். அடையாள அரசியலின் பேசுபொருளாக உள்ள மூலப்படிம உணர்வுடன் இந்த உரையாடலை அடையாள-அரசியலுக்கும் விரிவுபடுத்தி விவாதிப்பது அவசியம். இங்கு பேசப்படும் மூலப்படிம உணர்வு என்பதை மொழி, பிரதேசம், மரபு, மதம், சாதி, இனம் (ethnicity) மற்றும் மரபினம் (race) என்கிற ஏழு வகைமைக்குள்ளும் உள்ளடக்கி விரிவுபடுத்துவது மேலதிகப்புரிதலுக்கு வழிவகுக்கும் என நினைக்கிறேன்.

அதாவது இலங்கைத்தமிழ் பிரச்னையில் ஒட்டுமொத்த தமிழர்களும் ஒரேவகை மூலப்படிம உணர்விற்கு ஆட்படாததை மேற்கண்ட ஏழு வகைமைக்குள் வைத்து புரிய முயலாம். அதாவது மூலப்படிம உணர்வு என்பதையே பனமுகத்தன்மை வாய்ந்ததாகக் கவனத்தில் கொள்ளலாம். இங்குதான் எழுச்சிகள் ஒரு ஆதிச்சடங்காக மாறும் கூட்டுணர்வு-நிலை என்பதை, புறநிலையிலான அமைப்புகள் மூலப்படிம உணர்வுடன் கொள்ளும் தன்-அடையாள உறவு நிலையில் நிகழ்வதாகக் கொள்ளலாம்.

இங்கு விவாதிக்கும் நண்பர்கள் அளவிற்கு எனக்கு இதில் ஆழ்ந்த வாசிப்பு இல்லாததால் மேலதிகமாக இதனை விவரிக்க இயலவில்லை. ஆனால் ஒரு புதிய கோணத்தில் அணுகுவதற்கான முன்முயற்சியாக உள்ளது இது என்பதை மட்டும் சொல்லிக்கொள்கிறேன்.

நண்பர் ராஜன் குறை முன்வைக்கும் கருத்தும் கவனத்திற்குரியது. "மூலப்படிம-உணர்வு" என்பதை நாம் ஏற்கிறோமா? என்பதையும் அதுதான் பிரச்னைகளுக்கெல்லாம் மூலாதாரமான ஒன்று என்று அதை மட்டுமே மையப்படுத்துகிறோமா? என்பதையும் பொறுத்தே அமைகிறது. உண்மையில் இன்று தமிழகத்தில் உருவாகிவரும் எழுச்சியை எப்படிப் புரிந்துகொள்வது? பண்பாட்டுடன் ஒரு தனிமனிதன் கொள்ளும் உறவில், அல்லது அவனை சமூகவயப்படுத்துவதில், இந்த உணர்வுக்கான உறவு என்ன? என்கிற கேளவியிலிருந்து இது வருகிறது. அதே சமயம் இதற்குள் இருக்கும் ஆபத்தான அடையாள அரசியலுக்குள் விழுந்துவிடாத எச்சரிக்கையும் தேவைப்படுகிறது.

ராஜன் குறை கவனப்படுத்தும் சாராம்ச வாதத்திற்குள் விழுந்துவிடாமல், நாகார்ஜுனன் முன்வைக்கும் வெளியிலிருந்து (புறத்திலிருந்து) தோற்ற மூலங்களை ஆய்வதும் அவசியமான ஒன்றே. அந்நியன் கூறுவதுபோல நிச்சயமாக தமிழ் அறிவுப்புலத்தின் மாற்றத்தினை வேண்டும் ஒரு உரையாடலாக இது அமையும் என்ற நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்..


ஹரியின் பின்னூட்டம்.

என்னைப் பொறுத்தவரை, தமிழவனுடைய அக்கட்டுரை மிகவும் மேலோட்டமாக மூலப்படிவ நனவிலிக் கருத்தாக்கத்தை சிக்கல்படுத்தாமல் taken for granted-ஆக எடுத்துக்கொண்ட ஒன்று. எல்லா collectivist கருத்தாக்கங்களும் கேள்விக்குட்படுத்தப்பட்டதைப் போலவே இதுவும் கிழித்தெறியப்பட்ட ஒன்று என்பதை அவர் நிச்சயம் அறிவார் என்றே நம்புகிறேன்.
உதாரணமாக சில கேள்விகள்.

1. கூட்டுச்சமூக மூலப்படிவங்கள் தம்மளவில் சிதறுண்டிருப்பவை மற்றும் வேறுபாடானவை (fragmented). உதாரணங்கள் வேண்டுமென்றால் பெருவெளியையோ (முஸ்லிம்கள்) அல்லது தலித் மூலப்படிவங்களின் வித்தியாசங்களையோ காட்டலாம். ’தமிழ்’ என்பதன் மூலப்படிவ நனவிலி இந்து/சைவ/வேளாளா/ஆண் உள்ளீடுகளால் ஆதிக்கப்படுத்தப்பட்டிருப்பதால் ’கூட்டு நனவிலி’ எவ்வளவு தூரம் செல்லுபடியாகும் என்று தெரியவில்லை. இந்த so-called நனவிலியுடன் மோசமாக முரண்படும் நனவிலிகளைக் காவித்திரிகிற சனங்களுக்கு இந்த வகையறா உணர்வெழுச்சிகள் வந்து தொலைக்குமா என்றும் தெரியவில்லை.

2. இது அதிகாரத்தில் யார் இருக்கிறார்களோ அவர்களால் ’வலிந்து’ கட்டமைக்கப்படக்கூடிய மற்றும் தூண்டிவிடப்படக்கூடிய ஒரு விடயம். உதாரணமாக சிங்களவர்களின் மூலப்படிவ நனவிலியைத் தூண்டுவதற்கும் கட்டமைப்பதற்கும் ’அபா’ மாதிரியான படங்கள். பிறகு தமிழர்களுக்கு ’ஆழக்கடலெங்கும் சோழ மகராஜன் ஆட்சி புரிந்தானே அன்று’ என்பதான பாடல்கள். இது பற்றி சேர’னே’ ஒரு நேர்காணலின் போது கூறி இருக்கிறார்.
இந்ந்தியாவில் இது எப்படியெல்லாம் கட்டமைக்கப்படுகிறது, தூண்டப்படுகிறது என்பதை விரிவாகச் சொல்லிக்கொண்டிருக்க முடியும்.

அமீபா, உங்களுடைய நிலைப்பாடு குறித்து நான் ஆச்சரியப்படவில்லை. அது வழமையானதுதான், தேசியவாதத்தைக் காப்பாற்ற இன்னும் எதையெல்லாம் தேட வேண்டியிருக்கும் என்று யோசிக்கிறேன். இது யுங்-இன் கருத்தாக்கம். ரொம்ப ஒல்ட் திங்.
அப்புறம் தமிழவனின் கட்டுரையில் பயன்படுத்தப் பட்ட பதப்பிரயோகம் தொடர்பில் என்னளவில் சில தெளிவின்மைகள் உண்டு. மூலப்படிவங்கள் பற்றி உரையாடுகையில் தமிழவன் Primordial sentiment என்பதைப் பிரயோகிக்கிறார். நான் archetypal unconscious (மூலப்படிவ நனவிலி) என்பதையே அவர் கருதியிருக்கக் கூடும் என்று நினைக்கிறேன்.

யுங்-கின் நூல் பற்றி பேச்சுவருவதால் ’அதுதான் இது’ என்று ஊகித்து எழுதுகிறேன். குழம்பினால் மன்னியுங்கள் :)


ஜமாலனது பின்னூட்டம்.

தமிழவனின் கட்டுரையை முதலில் படித்தபோது எனக்கும் இந்த குழப்பம் இருந்தது. தமிழவன் குறிப்பது யுங்கின் கருத்தாக்கமா என்று. ஏற்கனவே தமிழில் அதனை மூலப்படிமம் என்கிற சொல்லால்தான் குறிப்பிடுகிறார்கள். ஆனால் தமிழவன் இந்த குழப்ப நிலை வராமல் Primordial sentiment என்பதை முதல் வாக்கியத்தில் அடைப்புக் குறியுடன் பயன்படுத்தி அதன் பின் தமிழில் அச்சொல்லைப் பிரயோகிக்கிறார். அதனால் இது archetypal unconscious ஐ குறிப்பதாக கொள்ள வேண்டியதில்லை.

இக்கருத்தாக்கம் Primordialism என்பதிலிருந்து எடுத்தாளப்படுகிறதாகவே எனது புரிதல்.


வளர்மதியின் பின்னூட்டம்.

அன்பிற்குரிய நாகார்ஜுனன் அவர்களுக்கு,

தொடர்ந்து தங்களுடைய பதிவுகளை வாசித்து வந்தபோதும், பல சந்தர்ப்பங்களில் மிகுந்த உடன்பாடு தோன்றியபோதும், இன்னும் பலவற்றில் மாறுபாடு கொண்டதாக உணர்ந்தபோதும், இதுவே எனது முதல் அன்புப் பங்கேற்பு.

காரணம் ... இதன் தத்துவார்த்த - நடைமுறை முக்கியத்துவம்.

தங்களுடைய மற்றும் தமிழவனுடைய கட்டுரைகள் குறித்து விரிவாக எழுதவும் யோசித்திருக்கிறேன்.

அதற்கும் முன்பாக, இங்கு நடைபெறும் உரையாடல்களின் மிகுந்த முக்கியத்துவம் கருதி இந்தப் பகிர்வு. விரிவாக இல்லையெனினும்.

ஒரு முக்கியமான உரையாடலை - ஜமாலனுடன் இதில் உடன்படுகிறேன் ... ராஜன்குறை இதை ‘விவாதம்' என்பதில் மாறுபடுகிறேன் ... இதை “உரையாடல்” என்பேன் :) - துவக்கி வைத்திருக்கிறீர்கள் என்பதில் மிகுந்த மகிழ்ச்சி.

எனினும், ராஜன்குறை குறிப்பிட்டுள்ளவை மிக முக்கியமான புள்ளிகள். அந்நியன் ஈழச்சூழலைக் கருத்தில் கொண்டு பகிர்ந்தவையும் மிக முக்கியமானவை. கடைசியாக ஹரி எழுப்பியவையும். பின்பு ஜமாலன் குறித்துள்ளவையும்.

“மூலப்படிம உணர்வு” என்ற கருத்தாக்கம் குறித்த அடிப்படையான கேள்விகள் முக்கியமானவை.

முதலில் ராஜன்குறை அதுகுறித்த மிகச்சரியான கேள்வியை எழுப்புள்ளதாகக் கருதுகிறேன். Primordial sentiment என்று 1963 - வாக்கில் Clifford Geertz முன்மொழிந்த கருத்தாக்கத்தை விளக்கமாகச் சொல்லவில்லையெனினும் ராஜன்குறை அதை tangential ஆக குறிப்பிட்டிருக்கிறார்.

அந்நியனும், ஹரியும் இன்னமும் அதை உளவியல் ரீதியான கருத்தாக்கமாகவே அணுகுகின்றனர் என்பது வியப்பாக உள்ளது. ஹரி தமிழவனின் கட்டுரை மேலோட்டமாக இருக்கிறது என்ற சரியான விமர்சனத்தை வைத்திருந்தபோதிலும்கூட.

Clifford Geertz - ன் primordial sentiment என்ற கருத்தாக்கம் எந்தக் கட்டுரையில் வைக்கப்பட்டது, ஆய்வுலகில் அது செலுத்திய செல்வாக்கு என்ன, அது - ராஜன்குறை குறிப்பிட்டுள்ளது போன்று எங்ஙனம் வித்தியாசம் என்பதற்குப் பதிலாக அடையாளம் என்பதை முன்னிறுத்துகிறது என்பதை - எழுத உத்தேசித்திருக்கிற எனது கட்டுரையில் விரிவாக விளக்க முயற்சிக்கிறேன்.

அதற்கு முன்பாக, தங்களுடைய இக்கட்டுரையில் இடர்படும் சில பிரச்சினைகளை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்:

1) தாங்கள் அக்கருத்தாக்கத்தை விமர்சனமின்றி முன்மொழிவது. (ஆக்கப்பூர்வமாக நீங்கள் இன்னொரு தளத்திற்கு முன்னகர விரும்புகிறீர்கள் என்பதை உணர்ந்தே இதைக் குறிப்பிடுகிறேன்.)

2) அடுத்து அதை நீங்கள் ”ஆதிச் சடங்காக” உருமாற்றுவது.

3) பின் தமிழ்நாட்டில் தற்போது பெரும் கொந்தளிப்பு நிகழ்ந்திருப்பதாக நீங்கள் கருதுவது. அதிலும், 1983, 1987 காலகட்டங்களுக்கு இணையான ஒரு 'எழுச்சியாக'க் கருதுவது.

4) இறுதியாக, உங்களுடைய கட்டுரையின் மிக முக்கியமான முன்மொழிதல். அரசியல் புலத்தில் ஆற்றாமையாக வெளிப்படும் உணர்வுகள் எங்ஙனம் இலக்கியத்தில் வெளிப்படுகிறது என்பதை ஆயவேண்டும் என்ற மொழிதல்.

இதை வழிமொழிகிறேன்.

ஆயினும் இதற்கு முன்னுதாரணங்களாக நீங்கள் குறித்துள்ளவற்றில் எனக்கு மிகக் கடுமையான மறுப்புகள்.

பாரதியும் பாரதிதாசனும் “மிழ்” - ஐ செந்தமிழாக - அமிழ்தாக மொழிந்தார்கள் என்பதில் பெரிய பிரச்சினைகள் இல்லை. ஆனால், அதன் எதிர்வாக ஞானக்கூத்தனிடமிருந்து ”பிறர்மேல் விடாத உயிர்மூச்சு” என்பதாக விரிப்பது எந்த வகையில் சரியாக இருக்கும்?

தொடர்ந்து இவ்வெதிர்வை அகம் x புறம் என்ற சங்கத்தமிழ் புலத்தின் நீட்சியாக நீட்டிப்பதில் எனக்கு பலத்த கேள்விகள்.

அதைவிடவும் ஞானக்கூத்தனி்ன் மொழிதலை pragmatic politics என்று மொழிவது. இதை +வ் sense - ல் சொல்கிறீர்களா அல்லது -ve சொல்கிறீர்களா என்பதை நீங்கள்தான் விளக்கவேண்டும். +ve sense - சொல்வதாக எனக்குப் படுகிறது. அவ்வாறாக முன்மொழிந்தீர்களானால், அதுமிகுந்த பிரச்சினைக்குரியது.

அதுவும் William James முன்மொழிந்த அர்த்தத்தில் மொழிகிறீர்களா அல்லது ஜெர்மானிய பாஸிஸ்டுகளின் அர்த்தங்களை அறியாமல் மொழிந்துவிட்டீர்களா என்பது கேள்வி. குறைந்தது இக்கேள்விக்கான இடைவெளியை கட்டுரையில் அனுமதித்துவிட்டீர்கள் என்பது எனது விமர்சனம்.

அடுத்து “செந்தமிழ்” - க்கு எதிர்வாக “கொடுந்தமிழ்” என்பதை முன்வைப்பதும் பிரச்சினை. தொல்காப்பியத்திலிருந்தே, தமிழில் செந்தமிழ், கொடுந்தமிழ், வடசொல், திசைச்சொல் என்பவற்றுக்கும் உரிய இடங்கள் இருந்திருக்கின்றன என்பதைத் தாங்களும் அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

இருந்தும் தாங்களும் இந்த எதிர்வுக்குள் முடங்கிவிடுவது என்பது கேள்வி.

இதன் தொடர்ச்சியாக, எந்த ஒரு தற்கால 'மொழிரீதியாக' அமைக்கப்பட்ட 'தேசத்திற்குள்ளும்' மூன்று வகையான மொழிச் செயல்பாடுகள் தொழிற்படுகின்றன என்று தெல்யூஸ் தமது காஃப்கா குறித்த நூலில் விரித்திருப்பதை அறிவீர்கள் என்று நம்புகிறேன்.

அது குறித்த தங்களது பார்வை என்ன என்று அறியவும் விரும்புகிறேன்.

இன்னும் மேலதிகமான கேள்விகள் உண்டு.

அவற்றை எனது பக்கத்தில் விரைவில் விரித்து எழுத விருப்பம். இங்கு தொடர இன்னமும் மகிழ்ச்சி.

அன்புடன்
வளர் ...


ஜ்யோவ்ராம் சுந்தர் இனது பின்னூட்டம்.

எனக்கும் தமிழ்தான் மூச்சு
ஆனால் அதைப்
பிறர் மேல் விடமாட்டேன்

என்பதை பிறர்மேல் விடாத ‘உயிர்' மூச்சு என்பதாக எல்லாம் சொல்லிச் செல்ல முடியுமா என்ன?? pragmatic politics... ??

இன்னொன்று, இப்போது தமிழ்நாட்டில் ஒன்றும் ‘கொந்தளிப்பு' நடப்பதாக இங்கிருக்கும் எனக்குத் தெரியவில்லை :(


நாகர்ஜுனனது பின்னூட்டம்.

வளர்மதி, சுந்தர்

உரையாடல் என்பதை ஏற்கிறேன். நாம் சேருகிற, விலகுகிற புள்ளிகள் முக்கியம். அதே நேரம் வரலாறு நம்மையெல்லாம் surprise செய்யக்கூடியது என்பதையும் கவனிக்க வேண்டும்.

இன்னொரு விஷயம் - என்னைப் பொறுத்தவரை யாவற்றையும் திறந்து தைர்யமாக எழுதிவருகிறேன். சொந்த வாழ்க்கை, பத்திரிகைப்பணி என்று எதையும் மறைக்காமல் எழுதிவருவதைக் கவனித்திருப்பீர்கள். ஆக, என்னை அடிக்க நானே பல ஆயுதங்களை உங்களுக்கு அளித்திருக்கலாம்!

1. கொந்தளிப்பு - எனக்குத் தெரிந்து தமிழ்நாடு முழுவதும் புற அளவில் மிகக்கொந்தளிப்பான சூழல் இருந்தது 1965 காலகட்டத்தில்தான். அப்போது எனக்கு ஆறு-ஏழு வயது, இருந்தும் நினைவுகள் அழியவில்லை. போராட்டத்தின் இதயப்பகுதியான தஞ்சாவூரில் வாழ்ந்தோம். என் தந்தையார் பல இடங்களுக்குப் போகும் அரசு மருத்துவர், அடிபட்ட பலருக்கு சிரமத்துடன்தான் சிகிச்சை தர முடிந்தது. அவருடைய மாணவர்கள் பலர் தலைமறைவாக இருந்தார்கள். "தமிழ் எங்கள் உயிர், ஹிந்தி எங்கள் *#யிர்" என்ற வாசகத்தை சாக்பீஸ் கொடுத்துத் தெருவில் எங்கள் பகுதி இளைஞர்கள் எழுதச்சொன்னார்கள். உற்சாகத்துடன் எழுதினேன். எங்கள் பகுதியில் ஆசிரியர்கள் நிறையப்பேர். பலர் சிறை சென்றார்கள்... (இவ்வாண்டு துணைவியாருடன் தஞ்சாவூர் சென்றபோது அவர்களில் சிலரைச் சந்தித்தேன். சிலர் மறைந்துவிட்டார்கள்). 1967-ஆம் ஆண்டு திமுக சார்பில் வெற்றிபெற்ற நடராசன், பிராமணர்களாகிய எங்கள் குடும்பத்தார் வீட்டுக்கு வந்து நன்றி தெரிவித்துச்சென்றதும் நினைவிருக்கிறது. அதேபோல கருணாநிதி விடுதலையான பின்பு ஜி. சாமிநாதனுடன் (பிறகு அதிஅதிமுக) - என் தந்தையார் கிளினிக் இருந்த கீழ ராஜ வீதியில் - நடந்துசென்றார். அப்போது கையசைத்ததும் நினைவிருக்கிறது. கருணாநிதி என் கன்னத்தில் கிள்ளி ’உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு’ என்று சொல்லிச்சென்றதும் மறக்கவில்லை. தமிழுணர்வு என்றதும் என் சொந்த நினைவில் மிகமிக சிறுபிராயத்தில் புறமாக இருப்பவை இவை. அகத்தில், வீட்டில் சொல்லிக்கொடுத்த வள்ளலார், ஆண்டாள், திருமூலர், சிவவாக்கியர் பாடல்கள் இருந்தன (பிறகு இன்னொரு காலகட்டத்தில் இதையெல்லாம் கடந்து வாழும்போதுதான் தமிழில் நவீன இலக்கியப் பரிச்சயம் வருகிறது).

ஆக, இந்தக் கொந்தளிப்புடன் ஒப்பிடும்போது 1983, 1987-89 காலகட்டங்கள் பெரிதாக இல்லை என்பது எனக்குத் தெரியும். 1983 காலகட்டத்தில் நான் தமிழ்நாட்டில் இல்லை. 1987-89 காலகட்டத்திலோ அரசியலின் மையச்சுழலில் இருந்தேன். அதுபற்றி எழுதியிருக்கிறேன்.

இப்போது அது ஒருசில சமிக்ஞைகள் தவிர ஒன்றுமில்லாமல் இருப்பது உண்மைதான். இதுபற்றி நீங்கள் எல்லோரும்தாம் கூற முடியும். நானோ கடந்த ஒன்பதாண்டுகளாக, ஆண்டுக்கு ஓரிருமுறைதான் இந்தியா, தமிழகம் வருபவன். இலங்கைக்கும் செல்லவில்லை.. எல்லாம் கேள்விஞானம் தான்.

2. ஆனால் நான் இங்கே குறிப்பிடுவது கொந்தளிப்பான அக-மனோநிலை. அதன் புற-வெளிப்பாடு என்னவாகும், எப்போதுவரும் என்பதை யாரும் சொல்ல முடியாது. அக நெருக்கடி அதீதமாக மாற ஒருபுறக்காரணமாக இது அமையும் என்று மாத்திரம் இப்போது கூறலாம்.

என் கட்டுரையில் 1983, 1987-89 காலகட்டங்களில் குறிப்பிடுவது, இலக்கியத்தின் திசை-நகர்வை. அதாவது அமைப்பியல்வாதம் தமிழில் அறிமுகமான காலகட்டத்தை இந்தப்போக்கில் revisit செய்ய முயன்றிருக்கிறேன் எனலாம்.

3. க்ளிஃபோர்ட் கீர்ட்ஸ் எழுதியது குறிப்பாக தாய்லாந்து குறித்தது. முக்கியமாக Integrative Revolution என்ற புத்தகத்தில் வருகிறது. இந்தப்புத்தகத்தை எண்பதுகளின் தொடக்கத்தில் தத்துவவியல் பயின்றபோது வாசித்திருக்கிறேன். தாயகம் என்பதைக் குறிக்க புவி-உடல் ஒன்றை வரையும் போக்கைச் சுட்டுகிறார், கீர்ட்ஸ். அந்தப் புவி-உடலை வரையும் போக்கு மொழிவழிச்சடங்காக இருப்பது தமிழின் விசேட அம்சம் என்பதால்தான் ஆதிச்சடங்கு என்ற கருத்தாக்கத்தைப் பயன்படுத்தினேன். ஏன் ஆதி என்ற சொல்? இந்த சமுதாயம், ஒருகட்டத்தில் தன் மொழியைக் காலத்துக்கு அப்பாலான தொன்மமாக வைப்பதால். நவீனத்துவம் இந்தத் தொன்மத்தை எப்படி எதிர்கொள்கிறது என்றால், ஒருவிதத்தில் பிறர் மேல் விடாத உயிர்மூச்சாக எனலாம். இன்னொருவிதத்தில் கபாடபுரம் என்ற புதுமைப்பித்தனின் கதையாக எனலாம். நமக்கு இந்த இரண்டும் வேண்டும் என்பதை ஏற்கனவே சுட்டியிருக்கிறேன்.

அதே சமயம், ஆதிச்சடங்கு-ஆதிச்சடங்குக்கு பதிலி என்ற இருபோக்குகளும் இன்று நடப்பதில் உண்டு என்றும் எழுதியிருக்கிறேன். இதில் பிறகான-நவீனத்துவப் போக்கு இருப்பதாகக் கூறலாம்.

3. ஞானக்கூத்தன் கவிதையைக் குறிப்பிட்டுக் கேட்கிறீர்கள். இலக்கியம் என்பது பூடகமான மொழி. இங்கே தமிழ் என்பதற்கு empirical மொழி மாத்திரம் அர்த்தமில்லை. கவிதை என்பது மொழிவழிச்சடங்கு என்ற பட்சத்தில், தமிழ் என்பதற்கு என்ன அர்த்தம் என்பது கேள்வி. மேலே சிறுவனான நான் அன்று எழுதிய வாசகத்தையும் ஞானக்கூத்தன் கவிதையையும் வைத்து நோக்க வேண்டும். இவற்றைப் பிரதிநிதித்துவ நோக்கில் இன்று வாசிக்க முடியாது. மொழிக்களத்தில் அவை எதிரெதிராக அன்றி இணையாக இயங்குபவை. இந்த எதிரெதிர் இயக்கத்தை ஒரே நேர்க்கோட்டில் வைத்து வாசித்தால், வளர்மதி கூறுவதுபோல இதை பாஸிட்டிவ், நெகட்டிவ் என்று பிரிக்க முடியுமா என்றால், அப்படிப்பிரித்தால், தமிழின் நவீனத்துவத்தை விடவேண்டி வரும். அப்போது (பாரதி)-பாரதிதாசன் மரபில் கவிதையாக வரும் பெருஞ்சித்திரனாரின் கனிச்சாறு ஒருவேளை இக்காலகட்டமாக எஞ்சலாம், வானம்பாடிகளில் சிலரும் இன்குலாபும் எஞ்சுவர். ஆனால் நவீன தமிழ்க்கவிதையும் நமக்கு வேண்டும் திராவிட இயக்கம் ஆட்சிக்கு வந்து அதில் நாட்டம் கொண்ட கலாப்ரியா தலைமுறையினர் சந்தக்கவிதை எழுதாமல் புதுக்கவிதைக்கு வந்த வழியைக் கவனிக்க வேண்டும். இது எழுபதுகளில் வந்த தலைமுறை என்பதைக் கவனிக்க வேண்டும்.

4. முன்நிறுத்துவது, முன்நிலைப்படுத்துவது (privileging) என்பதை ஒரு static தன்மையில் பாவிக்கிறீர்களோ என்ற ஐயம் வருகிறது. அதாவது சிந்தனையின் இயக்கத்தை விட்டுவிட்டு - அதாவது கருத்தாக்கங்களின் இயக்கத்தைக் கவனிக்காமல் - அவற்றை ஒருவித checklist தன்மையில் பார்க்கிறீர்களோ என்ற ஐயம் வருகிறது. எடுத்துக்காட்டாக, அடையாளம் என ஒன்று உருவாகும் பட்சத்தில் அது dynamic வகையினது, விரிவடையக்கூடியது. சுருங்கவும் கூடியது. ஆனால், வித்தியாசங்களை முற்றிலும் அழித்தோ, களைந்தோ உருவாவது அடையாளம் என்பதைவிட, வித்தியாசங்களை நட்பாகவோ, பகையாகவோ அணுகுவதன் மூலம் உருவாவது என்பதே நுணுக்கமான கோட்பாடு. எடுத்துக்காட்டாக, "அண்ணன்-தம்பிகள் நாம், ஒரே தாய்க்கே பிறக்க வயிற்றில் இடமில்லை, அவ்வளவுதான்" என்று மொழிவழி-பிறப்புச்சடங்கு மூலம் ஜாதி உட்பிரிவு-வித்தியாசங்களை எளிதில் நட்பாக அணுகிவிட்டார் அண்ணாதுரை என்பதைக் கவனிக்க வேண்டும். இந்த நுணுக்கத்தை ஏற்றால், எதையோ முன்னிலைப்படுத்துவதாகப் புகார் கூறத் தேவையிருக்காது.

ஆக, நான் கூறாத விஷயங்களுக்காக என்னை விமர்சிப்பதில் பயனில்லை!


நாகர்ஜுனனது பின்னூட்டம்.

வளர்மதி,

நீங்கள் கேட்டிருக்கும் இரண்டு விஷயங்கள் -

செந்தமிழ்-கொடுந்தமிழ் என்று ஏற்கனவே உள்ள இரட்டைவழக்குநிலையை விரித்து, பலதள-வழக்குநிலையாகப் பாவித்திருக்கிறேன் - அதாவது, Heteroglossia என்ற பிரக்ஞையின் (consciousness), உள்ளுமையின் (Being) performative நிலையில். இது தமிழ்ப்பரப்புக்குள்ளான ஒன்று மாத்திரமல்ல என்பதையும் நீங்கள் கவனித்திருக்க வேண்டும்.

தெல்யூஸ்-கத்தாரி எழுதிய Qu’est-ce qu’une littérature mineure? [What is a Minor Literature] புத்தகத்தைக் குறிப்பிடுகிறீர்கள் என்று கருதுகிறேன். அதில் மூன்றல்ல, நான்கு முக மொழிவழிச் சடங்கு பற்றி உள்ளது.

1. vernacular language - இதை ஓரளவு நம்முடைய வட்டார வழக்கு, வட்டார இலக்கியத்துடன் ஒப்பிடலாம். இதன் பணி territorialization.

2. vehicular language - இதை அரசுத்தமிழ், வர்த்தகத்தமிழ், கல்வித்தமிழுடன் இணைத்துக் குறிப்பிடலாம். இதில் deterritorialization நடப்பதாக தெல்யூஸ்-கட்டாரி கூறுகின்றனர்.

3. referential language - புலன்களின், கலாச்சாரத்தின் மொழி. செய்யுள் மொழி, செந்தமிழ், உரை மரபு இப்படி உருவானது. இலக்கியம்-கலாச்சாரம்-ஊடகம் எல்லாம் இப்படி உருவானவை. இதில் reterritorialization நடப்பதாகக் கொள்ளலாம்.

4. தொன்மத்தின் மொழி - செந்தமிழ் இலக்கியம்-தொன்மம் கொடுந்தமிழ் (நாட்டுப்புற இலக்கியம்-தொன்மம்), ஆன்மிகம், தத்துவம் வரும் மொழி. இதிலும் reterritorialization நடப்பதாகக் கொள்ளலாம்.

இதைவிட, தமிழின் சிறப்பம்சம் என்னவென்றால், தமிழ்நாட்டின் ஒவ்வொரு ஜாதி, வட்டாரச் சமுதாயமும் தனக்கான கொடுந்தமிழையும் இலக்கியத்தையும் வைத்திருக்கிறது, பொதுவான செந்தமிழையும் அறிந்திருக்கிறது. தவிர, அந்தந்த நாட்டுப்புற இலக்கியமும் உலக இலக்கியத்தோடு கலந்து deterritorialized நிலைக்கு வருகிறது. இதை தெல்யூஸ்-கட்டாரியின் விளக்கத்தோடு சேர்க்கும்பட்சத்தில்தான் விளக்கம் முழுமை பெறும்!


ஹரியின் பின்னூட்டம்.

அந்நியன், space for discourse எனும் பெயரில் எழுதியிருப்பது நீங்கள் தான் என்பதை கவனிக்காமல் பின்னூட்டம் எழுதி விட்டேன். மன்னிக்கவும். அப் பின்னூட்டம் ஓரளவுக்கு எனக்கு உவப்பானதாய் இருந்தும் கூட அதை எழுதியவரை யாரென்று கவனிக்காமல் போனது என் தவறு தான் :(


அந்நியனின் பின்னூட்டம்.

ஜமாலன்,
அடையாள அரசியலின் பாதகமான அம்சங்கள் களையப்பட்டே மூலப்படிம உணர்வென்பதை மீளுருவாக்கம் செய்ய முடியும். அதற்காகவே மொழி அடிப்படையான ஃபூக்கோவினதும் தெரிதாவினதும் கருத்துக்களைக் கூறியிருந்தேன். ஏற்கனவே மூலப்படிம உணர்வு பற்றிய உரையாடல்கள் எக்காரணிகளால் அடுத்தக்கட்டத்திற்கு நகர்ந்தன என்னும் விடயத்தை நாம் கட்டாயம் கவனத்தில் எடுத்தே ஆகவேண்டும். இலங்கையில் ஒட்டுமொத்தப்படும் தமிழ் உணர்வுகளின் கீழ் மீண்டும் யாழ்மாலாதிக்கம் தன்னை நிலைநிறுத்திக்கொள்வதை அனுமதிக்கவே கூடாது என்பதில் மிகுந்த கவனம் தேவை. இவ்வடையாளப்பரப்பிற்குள் வரும் விளிம்பாகக் கருதப்படும் மலையகத் தமிழர், முஸ்லிம்கள், தலித்துக்கள், பெண்கள், கிழக்குமக்களின் அபிலாசைகளைத் புறந்தள்ளியவாறு எதையும் பேசிவிட முடியாது. இவ்விடத்தில் இப்படியான மூலப்படிம உணர்வை பேச வேண்டிய தேவை ஏன் வந்தது என்ற கேள்வி எழலாம். ஏனெனில் இன்று 'தமிழ்' என்ற அடையாளமே ஒடுக்குமுறைக்குள்ளாகிறது. அவ்விடத்தில் அவ்வுணர்வு வலிதாக்கம் பெறுவதை நாம் நிராகரித்துவிட முடியாது.

அரசாங்க தமிழ் அமைச்சர் ஒருவரது நெருங்கிய சகா ஒருவருடன் உரையாடும் வாய்ப்பு சற்று நேரத்திற்கு முன் கிடைத்தது. அவர் கூறும் கருத்துக்கள் என்னை இவ்வுரையாடலின் தேவை நாம் நினைப்பதைவிட அதிகமானது என நினைக்கத் தோன்றுகின்றது. அரச அதிகார இயந்திரத்தின் பகுதியாக அவர் இயங்கினாலும் அவர் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை பற்றி கூறியபோது வியப்பே மிஞ்சியது. தமிழர்களுக்கான புறக்கணிப்பும் தமிழர்களை இனிமேலும் விட்டுவைப்பதில்லை என்ற உணர்வும் ஆளும்வர்க்கத்திடம் ஓங்கிவருவதென்பதே யதார்த்தமானது.


ஹரி,
நான் கோரியது தற்போதைய சூழலையும் தமிழவனின் கட்டுரையையும் முன்வைத்தான உரையாடலையே.. collectivist கருத்தாக்கங்கள் கிழித்தெறியப்படுவதால் எப்போதும் நன்மைதான் விளையும் என்றால் நான் உங்களது கருத்துடன் ஒன்றுபடத் தயார். கருத்தாக்கம் என்னும் இவ்விடத்தில் நடைமுறைப்படுத்தல் என்னும் விடய்த்தையும் சேர்த்தே என்னால் பேச முடிகின்றது. கருத்தியல் தளத்தில் ஏற்கனவே கட்டமைக்கப்பட்ட கருத்தியல்கள் தமக்குள் கேள்விக்கு உட்படுவது தவிர்க்க முடியாது என்பதை நான் மறுக்கவில்லை. இவ்விடத்தில் நான் மீண்டும் உங்களுக்கு ஏற்கனவே நிறையத் தடவை கூறிய Federal System என்பதுடன் இணைத்துக் கூற விரும்புகின்றேன். ஒற்றையாட்சித்தன்மையான கூறுகள் Federal System என்னும் கருத்தாக்கத்தால் Decentralize செய்யப்பட்டாலும் அவை சில அடையாளங்களுக்குள் தம்மை மட்டுப்படுத்தியே காணப்படுகின்றன. பிரதேச ரீதியாகவோ, மொழி ரீதியாகவோ அல்லது 'ஜனநாயஇயல்பு' சார்ந்து தமது இயக்கத்திற்கு அவற்றிற்கு சில கட்டமைப்புக்களை வரைவது தவிர்க்க முடியாதது. நீங்கள் அவற்றைத் தவிர்த்து எந்த நாட்டிலும் வாழ்ந்துவிடவும் முடியாது.

ஜனநாயக இயல்பை நெகிழ்ச்சிக்கு உட்படுத்த நாம் அதன் விளிம்பாக்கப்பட்ட புள்ளிகளைத் தெரிவு செய்து மாற்றங்களைக் கோர முற்படலாம். எவ்வாறுதான் நாம் கருத்தாங்களை பிளவுறுத்தினாலும் அரச நடைமுறைகளில் அவை ஒருவிதமான Collective ஆன இடத்தில் தம்மை கோடுகீறியே ஆகவேண்டிய தேவை உள்ளது. கிழக்கின் சுயநிர்ணயம் என்பதும் முஸ்லிம்மக்களின் சுயநிர்ணயம் என்பதும் ஆரோக்கியமான விடயங்கள். அவற்றை மறுதலிப்பது என்பது ஜனநாயகவிரோதமான செயலாகும். ஆயினும் தற்போது 'ஏற்படுத்தப்பட்டிருக்கும்' அல்லது 'பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும்' கிழக்கின் சுயநிர்ணயக்குரல் என்பது எவ்வகையில் பயன்படுத்தப்படப்போகின்றது என்பதையும் யோசிக்க வேண்டும். இவ்விடத்தில் கருத்தியல்களையும் நடைமுறையையும் வேறுபடுத்தி யோசிக்க வேண்டும். அப்போதுமட்டுமே ஆக்கபூர்வமான புள்ளிகளை நோக்கி நகரமுடியும்.

யூங் கினது கருதாக்கத்தை நான் பயன்படுத்தவேண்டி வந்தது மொழி தொடர்பான அதன் கருத்துகளில் இருந்தும் மொழி சார்ந்து இறுக்கமுறும் தன்மைகள் பற்றியும் சொல்வது மட்டுமல்லாது அதற்குப்பின் லக்கானினது அதன் மறுதலிப்பும் ஏற்பும் எவ்வகையில் நிக்ழந்தது என்பதையும் கூறுவதற்கே.. அது மட்டுமல்லாது மனித இயல்புகளுடன் நெருங்கிய மானிடவியல்/உளவியல் ஆய்வுகளுடன் கூடிய அவர்களது கருத்தாக்கமானது எவ்வாறு ஃபூக்கோ, தெரிதா போன்றோரால் எதிர்கொள்ளப்பட்டது என்பதையும் கூறுவதற்கே தவிர அதனை முற்றாக ஏற்றுக்கொள்ளும் நோக்கில் அல்ல. அது மட்டுமன்றி தமிழவனது மூலப்படிவு உணர்வு என்பது இந்நிலையில் மீளுருவாக்கம் செய்யப்பட்டால் தெரிதாவினது கருத்தியலை உள்வாங்கியவாறு அதனை செயற்படுத்தவேண்டும் என ராஜன் குறைக்கு முன்னரே நான் கூறியிருக்கிறேன். டார்வினது கருத்தியல் எவ்வாறு ஆதிக்கத்திற்கு உதவியது என்பதும் அதற்காக நாம் அதனை முற்றுமுழுதாக நிராகரித்துவிட முடியாது என்பதையும் நான் கூற எத்தனித்ததும் தேசிய வாதத்தை காப்பாற்றி வாழ வைக்கும் நோக்கில் அல்ல.

மற்றையது, 'இதெல்லாம் பழசு' என்ற உங்களது எள்ளலுக்கு நான் அளிக்க இருக்கும் பதில் உரையாடலைக் குழப்பிவிடக் கூடாது என்பதற்காக அதற்கு பதில் அளிக்க முற்படவில்லை. :) அமீபாவின் மரணம் அறிவிக்கப்பட்டுவிட்டது. இப்போது நீங்கள் உரையாடுவது அந்நியனுடன் என்பதை ஞாபகம் வைத்திருங்கள். :)


வளர்மதி,
ராஜன் குறை எழுப்பிய கேள்வி பிழை என்பதல்ல. 'தத்துவ வளர்ச்சிப்போக்குகளை' முன்வைத்து நாம் உரையாடுகின்றோமா அல்லது அவற்றின் உள்வாங்கல்களுடன் அவற்றை சூழலுக்கேற்றவாறு எதிர்கொள்கின்றோமா என்பதே முக்கிய பிரச்சனையாகியுள்ளது. ராஜன் குறை கூறும் விடயங்களை நான் ஏற்றுக்கொள்கின்றேன். அதேநேரத்தில் 'தத்துவ வளர்ச்சிப் போக்கை' முடிந்த முடிபாக ஏற்றுகொண்டுவிட முடியாது என்பதிலும் மீளுருவாக்கம் என்பது நிராகரிக்கப்படக் காரணமான கருத்துக்களையும் கவனித்தில் எடுத்தவாறே ஏற்படுத்தப்பட முடியும் என்பதில் தெளிவாக இருக்கின்றேன். அவற்றை எனது பின்னூட்டங்களில் குறிப்பிட்டும் உள்ளேன். முரண்கள் என்பது அடுத்த கட்டத்திற்கு நகரமுடியாத வகையில் Dead Lock நிலையை அடைந்துவிடக்கூடாது என்பதே எனது எதிர்பார்ப்பு. அதன்வழிதான் எனது உரையாடலைக் கட்டமைக்க நினைக்கிறேன். போராட்டகாலத்தில் பிறந்த எமது தலைமுறை இன்னும் அதன் உக்கிரத்தை அனுபவிப்பதற்கு முரண்கள் Dead Lock நிலையை அடைந்ததே காரணம் என நம்புகின்றேன். ஆக, இவ்வழியைத்தவிர்த்து வேறுவழியால நகரமுடியுமா என்பதை நாம் பரீட்சித்துப்பார்த்தே ஆகவேண்டும்.

-அந்நியன்.


ராஜன் குறையினது பின்னூட்டம்.

உரையாடல் தொடர்வது மகிழ்ச்சியாக இருக்கிறது. சமகால நிகழ்வுகள் ஒருபுறம், சிந்தனைப்போக்கின் வளர்ச்சி மறுபுறம் என்று பிரித்து இரண்டாவதை மட்டும் கவனிக்கவேண்டும் என்று நான் சொல்ல சாத்தியமேயில்லை. செயல் வலைப்பின்னல் என்ற லதூர் உருவகத்தை வலியுறுத்துவதே இத்தகைய இருமை எதிர்வு பலவீனத்தை, பித்தத்தை களைவதற்கே. தமிழுணர்வு என்பதை Primordial Sentiment ஆக பார்ப்பது மீள்-கருத்துருவாக்கம் என்ற அளவில்கூட பொருளற்றது, ஆபத்தானது என்பதே என் வாதம். காரணம் அதைவிட பயனுள்ள ஆய்வுமுறை சட்டகங்கள் உள்ளன என்பதுதான். (உதாரணம்: எம்.எஸ்.எஸ்.பாண்டியனின் Brahmin, Non-Brahmin: Genealogies of Tamil Political Present) காலத்தில் எந்த சிந்தனை Latest என்பது என்னுடைய அக்கறை அல்லவே அல்ல. என்னைப் பொருத்தவரை ஆகச்சிறந்த தத்துவவாதி Sextus Empiricus என்ற கிரேக்க பைரோனிய ஐயவாதிதான்.

Primordial Sentiment என்ற கருத்தாக்கம் ஐரோப்பிய மைய வாதத்தின் விளைவு. மேற்குலக புத்தொளி மரபு மமதையின் விளைபொருள். நவீன தேசங்களின் அடிப்படை அறிவார்ந்த சமூக ஒப்பந்தம்; மூன்றாமுலக இனவுணர்வு தேசங்களின் அடிப்படை அறிதலுக்கு முந்தைய Primordial Sentiment என்ற இருமை எதிர்வை கட்டமைத்தது பனிப்போர் கால சமூக அறிவியல். இந்தோனிஷாயாவின் அரசியல் வன்முறைக்கு கோழிச்சண்டை என்று கேளிக்கை வடிவம் காரணமோ (மூலப்படிம குறியியல்) என்று யோசித்த மேதை கிளிஃபோர்ட் கீர்ட்ஸ். வாழ்க மானுடவியல்! சமகால மானுடவியலின் ஒரே சிறப்பம்சம் அதன் தற்கொலைக்கொப்பான சுய விமர்சனம்தான்.

நாகார்ஜுனன் வலைத்தளத்தில் கட்டுரையாக எழுத வாய்ப்பில்லாததால், இதையொட்டிய சில சிந்தனைகளை "சத்தியக் கடதாசி" வலைத்தளத்தில் எழுதவுள்ளேன். - ராஜன் குறை


நாகர்ஜுனனது பின்னூட்டம்.

ராஜன் குறை,

சிந்தனைக்கட்டங்களின் நேர்க்கோட்டில் சிந்திக்கவில்லை என்பதற்கு மகிழ்ச்சி.

ஆதிச்சடங்கு என்பதைச் செயல்வடிவிலேதான் கூறியிருக்கிறேன். ஆதிச்சடங்கின் பதிலி என்றும் கூறியிருக்கிறேன். அதைக் கவனித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

நவீன தேசங்களின் அடிப்படையும் சரி, மூன்றாமுலக தேசங்களின் அடிப்படையும் சரி அறிவும் உணர்வும் கலந்தே அமைந்தவை. இவற்றில் எது எந்தவிகிதத்தில் ஏன் என்பதுதான் பிரச்னை. தமிழின் சிறப்பம்சம் மொழிவழிச்சடங்கின் மீது கட்டியமைக்கப்பட்டது என்பது. அதை விளக்க எந்தக் கருத்தாக்கம் கிடைத்தாலும் பயன்படுத்தலாம்...

நண்பர் எம் எஸ் எஸ் பாண்டியனின் புத்தகம் பற்றிக் கூறியிருக்கிறீர்கள். அதை இன்னும் வாசிக்கவில்லை. வாசிக்க முயல்கிறேன். நவீன இலக்கியம் என்ற மொழிவழிச் சடங்கை இந்தப் புத்தகம் அணுகுகிறதா என்பதையும் கூறி அலசினால் நன்றாக இருக்கும்.

சத்தியக்கடதாசியில் எழுதுவது தவிர, என்னுடைய தளத்திலேயே எழுதலாம். பிரச்னையில்லை.

தனிப்பதிவாக இடுகிறேன்.

நண்பர் வளர்மதிக்கும் மற்ற அனைவர்க்கும்கூட - நீங்கள் விரிவான அலசல் எழுதினால் தனிப்பதிவாக இடுகிறேன். உரையாடல் தொடரட்டும்.

அன்புடன்
நாகார்ஜுனன்


றஞ்சினியினது பின்னூட்டம்.

விவாதம் இவ்வளவு தூரம் போவது மகிழ்ச்சி.. ஒரு பெண்ணும் இதற்குள் வருவதில்லை என்ற ஆதங்கத்துடன் (பெண், ஆண் என்ற அடையாளம் தெவையில்லை என்று அப்படியொரு காலம் வரும்போது பேசலாம் இப்போது அடையாளங்களிலிருந்து விடுபடுமளவுக்கு எதுவும் நடந்துவிடவில்லை - நாம் கொஞ்சப்பேர் எழுத்திலும் பேச்சிலும் விரும்பினாலும்) அனைவரினதையும் மேலோட்டமாகப் படித்துவிட்டு எனக்கு புரிந்ததுடன் நான்... ராஜன் கூறை குறியது எனக்கு உடன்பாடும் அத்துடன் கேள்விகளும் ..

அந்நியன் நீங்கள் சொல்ல வரும் கருத்துக்கள் உங்கள் நீண்ட பின்னோட்டத்தால் என்னைப்போன்ற பொறுமையில்லாத......... படிக்க கஷ்டமாக இருக்கிறது..கொஞ்சம் சுருக்கி எழுத முயன்றீர்களானால் மகிழ்வேன். எனது தாழ்மையான அல்லது சுயநலமான வேண்டுகோள் ...

அந்நியன் கூறுவதுபோல மற்றும் ஹரி..

//இலங்கையில் ஒட்டுமொத்தப்படும் தமிழ் உணர்வுகளின் கீழ் மீண்டும் யாழ்மோலாதிக்கம் தன்னை நிலைநிறுத்திக்கொள்வதை அனுமதிக்கவே கூடாது என்பதில் மிகுந்த கவனம் தேவை. இவ்வடையாளப்பரப்பிற்குள் வரும் விளிம்பாகக் கருதப்படும் மலையகத் தமிழர், முஸ்லிம்கள், தலித்துக்கள், பெண்கள், கிழக்குமக்களின் அபிலாஷைகளைப் புறந்தள்ளியவாறு எதையும் பேசிவிட முடியாது//

உங்கள் கருத்துடன் உடன்படுவதோடு... தமிழர்களுக்கு இலங்கையில் பிரச்னை இருந்திருக்காவிடின் மேலே நீங்கள் கூறியிருக்கும் பிரச்னைகளுக்காக மட்டும்தான் நாம் குரல் கொடுக்க வேண்டியிருக்கும்.

தமிழர்களே தமிழர்களை... இங்குதான் இந்த மூலப்படிமம் என்பது கேள்வியாகிறது எனக்கு.
ஈழத்து அகதிகள்மீது அரச அதிகாரிகளின் கொடுமைகள், பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களால் அவஸ்தைப்படுவது, மூன்று-நான்கு ருபாவுக்கும் விபச்சாரத்தில் ஈடுபடுத்துவது இப்படியான கொடுமைகள் செய்யும் அதிகாரிகளுக்கு தமிழ் என்ற உணர்வு வருவதில்லை,இது மனிதர்களின் அதிகாரம் கொண்டு அடக்குபவர்கள்-அடக்கப்படுபவர்கள் என்ற வழக்கமான செயலில் ... அல்லது
திகாரத்தில் இருப்பவர்கள் பெண்களை ஒரு கொலேஜ் அட்மிஷனுக்கோ அல்லது தம்மிடம் வேலைசெய்யும் தலித்துக்களை பாலியல் மற்றும் துஷ்பிரயோகம் செய்யும்போது இந்த தமிழ் என்ற உணர்வு முன்நிற்பதும் இல்லை. இங்கும் ஆதிக்க-சாதி வெறிதான் மேலோங்கி நிற்கிறது..

இலங்கை ராணுவம் தமிழ்நாட்டு மீனவர்களைக் கொல்வதைத் தடுத்து நிறுத்த இந்திய அரசு ஏன் முன்வரவில்லை, ரவிக்குமார் இலங்கை அகதிகள் பற்றி நேரில்போய் செய்த ஆய்வினை ஒருநாள் படித்து அழுதுவிட்டுபோனதுடன் போய்விட்டதுபோல்.. யாரும் இதுவரை அதற்கான நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை .. இப்படி
இதை வேறுஒரு மட்டத்தில் சொல்லிக்கொண்டே போகலாம் ...

இங்கு இப்போ தமிழ் என்ற ஒட்டுமொத்த அடையாளத்துக்கே ஆபத்தாக இருப்பதால் பலரையும் இந்த மூலப்படிமம் என்று நீங்கள் சொல்லும் என்னவோ ஒன்று சேர்த்திருக்கிறது என்றுதான் தோன்றுகிறது.. நாகார்ஜுனன் ஜமாலன் கூறியதுபோல அன்று 1983 கலவரத்தில் ஈழத்தமிழர்களுக்கான உணர்வுமிக்க போராட்டங்களுக்குபின் இப்போ மீண்டும் ஒரு வித்தியாசமான உணர்ச்சிமிக்க போராட்டங்கள் மாணவர்களிடையே, மக்களிடையே சென்னையில் மட்டுமல்ல தமிழ்நாட்டில் வேறு இடங்களிலும் ஏற்பட்டிருக்கிறதென்பதைப் பார்க்க முடிகிறது. இதை அவர்களின் சுய உணர்வாக மதிக்க வேண்டுமென்றுதான் நினைக்கிறேன். அதே நேரம் அரசியல், தொழில் லாபம் தேடுபவர்களின் தூண்டுதலால் ஏற்படும் திடீர்த் தமிழ்உணர்வு, உணர்ச்சித்தூண்டுதல்கள் உண்மையாக ஈழத்திலும் சரி, வேறு எங்கும் சரி, அந்த மக்களுக்கு எந்த விடிவையும் ஏற்படுத்தப்போவதில்லை.


தமிழவனின் பின்னூட்டம்.

நண்பர்களுக்கு

இங்கு நடக்கும் உரையாடலை வாசித்தேன்.

'மூலப்படிம் உணர்வு' என்பதை ஒரேயடியாக Primordial sentiment அல்லது archetype என்று கூறிவிட முடியாது - என்றாலும் அது முன்னதற்கு நெருக்கமானது என்பதால்தான் அதை, என்னுடைய "உயிரோசை" இதழ் கட்டுரையில், அடைப்புக்குறிகளில் இட்டேன்; இங்கும் இட்டிருக்கிறேன். இங்கே உரையாடலில் பங்கேற்கிற, கோட்பாட்டை எழுதுகிற, நாம் அனைவரும் இருமொழியாளர்கள் என்பதால் வேடிக்கையான சூழல் நிலவுகிறது - தமிழில் சில சொற்களைப் பார்த்தவுடனாகவே, ஏன் ஆங்கிலத்தில் இயங்கும் ஒரு கருத்தாக்கத்தை அப்படியே நாம் கற்பனை செய்துகொள்ள வேண்டும்? தமிழ் மாத்திரம் வாசிக்கத் தெரிந்த ஒருவர் - க்ளிஃப்போர்ட கீர்ட்ஸ்ஸோ, யுங்கோ தெரியாத ஒருவர் - இதைப் புரிந்துகொள்வது எப்படி? இதற்காக - அதாவது காலனியத்தாக்கம் உள்ள, ஆங்கிலத்தில் உள்ள ஒரு கருத்தாக்கத்தை நமக்கேற்ப மாற்றிக்கொள்ளும் ஒர் உத்தியாக பொதுப்புத்தி மொழியை இங்கு பயன்படுத்தலாமா என்று யோசிக்கிறேன். இதிலும் பிரச்னைகள் வரலாம்.

இதுபற்றி நண்பர்கள் எழுதுவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்.

தமிழவன்


வளமதியின் பின்னூட்டம்.

நன்றி நாகார்ஜுனன். ஓரிரு நாட்களில் எழுதி அனுப்புகிறேன்.

சாத்தியமெனில் மாலை சில குறிப்புகளை இங்கு இடவும் முயற்சிக்கிறேன்.

இங்கு நடைபெற்று வரும் பகிர்தல்களைக் கூர்ந்து கவனித்து வருபவர்களுக்காக; க்ளிஃபோர்ட் கீர்ட்ஸ் “மூலப்படிம உணர்வு” என்ற கருத்தாக்கத்தை முதன்முதலாகக் எடுத்தாண்ட கட்டுரையை இங்கு வாசிக்கலாம்: http://www.iwp.uni-linz.ac.at/lxe/sektktf/gg/GeertzTexts/Integrative_Revolution.htm

நன்றிகள்
வளர் ...


நாகர்ஜுனனின் பின்னூட்டம்.

ஆதிச்சடங்கு பற்றி எழுத விரும்பும் ராஜன் குறை, வளர்மதி மற்றும் பிறர், காஃப்காவின் நிழலில் தமிழ் என்ற மொழிவழிச்சடங்கு - 1, 2 என்ற என் அடுத்த பதிவுகளை வாசிக்கலாம்...

நாகார்ஜுனன்.


ராஜன் குறை இனது பின்னூட்டம்.

நான் சத்தியக்கடதாசியில் எழுதுவதாகக் குறிப்பிட்டது இந்த விவாதங்களுக்கு தொடர்பான சில பின்புலங்களை பற்றியே. அந்தக் கட்டுரை உங்கள் கட்டுரையை நேரடியாக முன்வைத்து எழுதப்படவில்லை. இவ்வாறு சொல்வதன் பொருள் உங்கள் கட்டுரையின் முக்கியத்துவத்தை உணராததல்ல. நம் அணுகுமுறைகள், ஆய்வுமுறைச் சட்டகங்கள் வித்தியாசமானவை என நினைக்கிறேன். அப்படியிருப்பதே தமிழில் ஆரோக்கியமான விவாதக்களத்தை கட்டமைக்க உதவும்.


வளர்மதியின் பின்னூட்டம்.

அன்பிற்குரிய நாகார்ஜுனன் மற்றும் உரையாடலில் கலந்துள்ள, தொடர்ந்து கவனித்து வரும் நண்பர்களுக்கு,

விரிவான கட்டுரைக்கு முன்னதாக சில குறிப்புகளைத் தரும் விருப்பத்தை முந்தைய பின்னூட்டத்தில் தெரிவித்திருந்தேன்.
பல விஷயங்களைத் தெளிவுபடுத்திக் கொள்வதற்கு உதவியாக இருக்கும் பொருட்டு கீர்ட்ஸின் கருத்தாக்கம் முன்மொழியப்பட்டுள்ள அவரது கட்டுரையை வாசிக்க சுட்டியும் தந்திருந்தேன்.

தொடர்ச்சியாக அனைவரின் பரிசீலனைக்கும் இக்குறிப்புகள்:

கீர்ட்சின் கட்டுரை, 1962-ஆம் ஆண்டு வாக்கில் எழுதப்பட்டதை அவரது அடிக்குறிப்பு 10-லிருந்து உணரலாம். இந்த அடிக்குறிப்பு டாக்டர். அம்பேத்கரின் நூலிலிருந்து காட்டிய மேற்கோளுக்கான ஒரு சிறு இடையீடாக இருப்பதும் அந்த மேற்கோளின் கருத்தை ஆசிரியர் வழிமொழிவதும் குறித்துக் கொள்ளப்படவேண்டியவை.

அதன்பின் இக்கட்டுரை 1963-ஆம் ஆண்டில் ஒரு தொகுப்பிலும் மீண்டும் 1973-ஆம் ஆண்டில் மற்றொரு தொகுப்பிலும் இடம்பெற்றதையும் (மற்றொரு தொகுப்பிலும் இடம் பெற்றதாக நினைவு) அறியலாம்.

"மூலப்படிம உணர்வு" என்பதற்கு ஆசிரியர் தரும் விளக்கம்: By a primordial attachment is meant one that stems from the "givens" - or, more precisely, as culture is inevitably involved in such matters, the assumed "givens" - of social existence: immediate contiguity and kin connection mainly, but beyond them the givenness that stems from being born into a particular religious community, speaking a particular language, or even a dialect of a language, and following particular social practices. (கட்டுரையின் இரண்டாம் பகுதியின் ஆரம்பத்தில் - தற்சமயம் மொழியாக்கம் செய்ய இயலாமைக்கு வருந்துகிறேன்.)

"assumed givens" என்று ஒரு சிறு எச்சரிக்கை இருப்பது கவனத்திற்கு உரியது. எனினும், கட்டுரையில் இந்த "assumed", "givens" ஆகவே மாறிப்போவதும்.

இன்று இந்த "கையளிக்கப்பட்டவை" எங்ஙனம் காலனிய ஆட்சிக்காலப் பகுதியில் "உருமாற்றி - கட்டமைக்கப்பட்டு - மீண்டும் கையளிக்கப்பட்டன" என்பது குறித்த சீரிய வரலாற்று ஆய்வுகள் அளவுக்கு முன்னகர்ந்திருப்பதோடு இதை இணைத்துப் பார்க்க வேண்டும்.

மேலே "attachment" என்று குறிப்பிட்டிருந்தாலும் கட்டுரையின் நோக்கு, மூன்றாம் உலக நாடுகளில் "civil sentiment" என்பதை பின்னுக்குத் தள்ளிவிட்டு "primordial sentiment" என்ற ஒன்று ஏன் மேலோங்குகிறது என்பதை விளங்கிக்கொள்ளும் முயற்சியாகக் காணலாம்.

இதற்கு, காலனிய ஆட்சி பொறுப்பல்ல, நவீனத்துவத்திற்குள் இந்நாடுகள் அடியெடுத்து வைத்து அத்திசையில் முன்னேற முனையும்போது உருவாகும் தவிர்க்க இயலாத விளைவு என்று உள்ளார்ந்த ஒரு தர்க்கத்தைக் கட்டமைப்பதை சற்று கூர்ந்து வாசித்தால் உணரலாம். இங்கு இத்தகைய "political ethnography" ஆய்வுப்புலத்தின் முக்கிய அரசியல் பிரச்சினை, அவ்வாய்வுப்புலம் நவகாலனிய-நீட்சி என்பதும், அதன் விளைவாகவே இப்பிரச்சினையில் காலனிய ஆட்சியின் 'பொறுப்பு' கைகழுவிவிடப்படுகிறது என்பதும் உணரக் கடினமல்ல.

இந்தக்கட்டுரை இந்தியா உட்பட, "மலேசியா, சிங்கப்பூர், சிலோன், இந்தோனீசியா ... மொராக்கோ, நைஜீரியா" என்று பல்வேறு மூன்றாம் உலக நாடுகளும் இத்தகைய பிரச்சினையில் உழல்வதையும் ஆய்வது தெளிவு. முக்கியமாக, "திராவிட நாடு பிரிவினை", ஈழப்பிரச்சினை குறித்தும் பேசுவதும் அவை குறித்து வைக்கும் அபிப்பிராயங்களும் கவனத்தில் கொண்டு வாசிக்கப்பட வேண்டியவை.

கீர்ட்சின் கட்டுரை குறித்த இக்குறிப்புகளைத் தொடக்கமாகக் கொண்டு இவற்றை மறுக்கலாம், உடன்படலாம், வளர்க்கலாம் அல்லது புதிய நோக்கில் விரிக்கவும் செய்யலாம். முற்றிலும் வேறுநோக்கு முன்மொழியப்பட்டாலும் வரவேற்கத்தக்கதே.

இவை தொடர்பான கேள்விகள்:

1) ராஜன் குறை, கீர்ட்சின் மானுடவியல் நோக்கை "பனிப்போர் கால சமூக அறிவியல்" என்று குறிப்பிடுவது எனக்கு விளங்காத புள்ளி. விளக்குவாரானால் அனைவருக்கும் பயன்.

2) தமிழவன் தனது கட்டுரையின் தொடக்கத்திலேயே, "இந்த மூலப்படிம உணர்வை நடுநிலையான எல்லா மானுடவியலாளர்களும், வரலாற்றாளர்களும் புரிந்து அங்கீகரித்துள்ளனர். யுஜின் இர்ஷிக், க்ளிபோர்ட் கீட்ஸ், பெர்டன்ஸ்டைன், போன்றோர் இவர்களில் முக்கியமானவர்கள்" என்று குறித்துவிட்டு மேல்விளக்கங்களுக்குச் செல்கிறார்.

தற்போது இங்கு நடைபெற்றுக்கொண்டிருக்கும் பகிர்தல்களில் அவரும் பங்குபெற்றுள்ளது மகிழ்ச்சிக்குரியது.

மேற்குறித்த கீர்ட்சின் கட்டுரையில் வரும் கருத்தாக்கத்தை அவர் எங்ஙனம் தமிழ்ச்சூழலுக்கு ஏற்ப உருமாற்றிப் பயன்படுத்த விழைகிறார் என்பதை மேற்கொண்டு விளக்கினால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

தமிழ் மட்டுமே அறிந்த வாசகர்கள் இக்கருத்தாடல்களில் பங்குபெறுவது குறித்த அவரது கரிசனமும், டிசே வழிமொழிவது போல முக்கியமான ஒன்று.

ஒரு கருத்தாக்கத்தை முன்மொழிந்தவுடனேயே அதற்கிணைவான ஆங்கிலக்கருத்தாக்கத்தோடு ஒப்பிட்டு யோசிக்கத்தொடங்கும் இருமொழியாளர்களின் predicament பற்றி அவர் குறிப்பிடுவதும் முக்கியமானதென்றே படுகிறது. இது குறித்து சில தெறிப்புகள் தோன்றின. விரிவஞ்சி இங்கு தவிர்க்கிறேன்.

இனி நாகார்ஜுனனின் கட்டுரை குறித்து.

எனக்கு மிகுந்த உடன்பாடான புள்ளி, அவர் புறத்தேயான நிகழ்வுகளை (அரசியல் நிகழ்வுகளை - குறிப்பாக, ஈழப்போராட்டத்தையும் தற்சமயம் தமிழகத்தில் நடைபெற்று வரும் போராட்ட நிகழ்வுகளையும்) அகத்தேயான நெருக்கடிகளோடு உறவுபடுத்திப் பார்க்க விழைவது. அதிலும் குறிப்பாக, அகத்தேயான நிகழ்வாக, மொழிக்குள் - மொழிகுறித்த பார்வைகளுக்குள் நிகழும் மாற்றங்களை, இது இலக்கியத்திற்குள் - குறிப்பாக, கவிதைக்குள் எங்ஙனம் வெளிப்பாடு காண்கிறது என்று தேட - ஆய்வு செய்ய விழைவது.

இது மிகுந்த முக்கியத்துவம் நிறைந்தது என்பதில் மறுப்பேதும் இல்லை. அவரே மிக நன்றாக விளக்க முனைந்துள்ளது போல, புறத்தேயான நெருக்கடிகள் சரியான வழிகளில் வெளிப்பாடுகொள்ள இயலாத சந்தர்ப்ப சூழல்களில் அவை கொள்ளநேரும் வடிவங்கள், பித்த நிலையில் நடக்கும் ஆதிச்சடங்காக உருமாறும்போது, அத்தகைய வடிவங்கள் அகத்தேயான நெருக்கடிகள் சரியான வழிகளில் செல்ல இயலாததன் வெளிப்பாடகவும் இருக்கின்றன.

இது தவிர்க்க இயலாமல் மொழிக்குள்ளும் - இலக்கியம்/கவிதை வெளிப்பாடு கொள்கிறது. மொழிக்குள்ளான செயல்பாடு மொழிச்செயல்பாடாகவே வெளிப்பாடு கொள்ளும் என்பதால் புற வெளிப்பாடும் மொழிச்சடங்காகவே அரங்கேறுகிறது.

(இது தாங்கள் இக்கட்டுரையில் முன்வைக்க முயலும் முக்கியமான முன்மொழிதல் என்பதாக புரிந்திருக்கிறேன் நாகார்ஜுனன். தவறாக இருப்பின் திருத்தவும்.)

மாறுபடும் புள்ளிகளில், "மூலப்படிம உணர்வு" என்ற கருத்தாக்கம் விமர்சனமின்றி முன்மொழிப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டிருந்தேன். இப்புள்ளியை, அந்நியன், ஹரி, ஜமாலன், றஞ்சனி ஆகியோரும் செறிவுபடுத்தியிருந்தனர்.

அடுத்து எனது மிக முக்கியமான மாறுபடும் புள்ளி, ஞானக்கூத்தன் கவிதையை முன்மொழியும்போது எழுகிறது.

ஞானக்கூத்தன் கவிதையில் "உயிர்மூச்சு" என்ற ஆளுகையே இல்லை என்பதை சுந்தரும் குறிப்பிட முனைந்தார்.

உங்கள் விளக்கத்திலும் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் "உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு" என்ற வாசகம், "தமிழ் எங்கள் உயிர்"என்ற வாசகம் திராவிட இயக்கச்செயல்பாட்டின் அங்கமாக – மொழிச்செயல்பாடாக, மொழிச்சடங்காக – இருந்ததைக் குறிப்பிட்டிருக்கிறீர்கள்.

தொடர்ந்து, "மேலே சிறுவனான நான் அன்று எழுதிய வாசகத்தையும் ஞானக்கூத்தன் கவிதையையும் வைத்து நோக்க வேண்டும்" என்றும் குறித்திருக்கிறீர்கள்.

ஞானக்கூத்தனின் கவிதையில் "எனக்கும்தமிழ்தான் மூச்சு" என்று “மூச்சு” மட்டுமே இருந்தாலும், அதை “உயிர்மூச்சு” என்றே கொண்டாலும் தமிழை அமிழ்தாகக் காண்பதிலிருந்து விலகி உயிர்மூச்சாகக் காண்பது எங்ஙனம் ஒரு முரணாக இருக்கும் என்பதில்தான் எனது மாறுபாட்டின் முக்கிய புள்ளி.

முதலாவதாக, நீங்களே குறிப்பிடுவதைப் போன்று தமிழை - பாரதி தவிர்த்து - அமிழ்தாகக் கண்டதும் திராவிட இயக்கம் சார்ந்தவர்கள் (இவ்வியக்கத்துள் பல போக்குகள் உண்டு என்பதை பல சந்தர்ப்பங்களில் குறிப்பிட்டிருக்கிறேன்), பின்னர், அதை உயிர்மூச்சாக வரித்தவர்களும் அவ்வியக்கம் சார்ந்தவர்கள், இப்போது அதை மூச்சுத்திணறச் செய்திருப்பவர்களும் அவ்வியக்கம் சார்ந்தவர்கள் என்பதில் எனக்கும் உடன்பாடே.

ஆனால், அதை ஞானக்கூத்தனின், அடுத்து வரும் வரிகளான, "ஆனால் பிறர்மேல் அதைவிட மாட்டேன்" என்பதோடு இணைத்து அவருடைய அறியப்பட்ட திராவிட இயக்க எதிர்ப்பையும் இணைத்து ஒரு முரணாக முன்வைப்பதில்தான் சிக்கல் எழுவதாகத் தொன்றுகிறது.

கூறியது கூறல் எனினும், தமிழை அமிழ்தாகக் காண்பதும், பின் உயிர்மூச்சாகக் காண்பதற்கும் இடையில் என்ன முரண் இருக்கிறது என்பதே முதல் கேள்வி. தொடர்ந்து இதை முரணாக உருவாக்க ஞானக்கூத்தனின் அடுத்த வரிகளையும் அக்கவிதையின் மொத்தப்பொருளையும் சூழலையும் அவருடைய அறியப்பட்ட திராவிட எதிர்ப்பு இயக்க உணர்வையும் இணைத்துவிடுகிறீர்களோ என்பது இதன் தொடர்ச்சியாக எழும் கேள்வி.

எனது இக்கேள்விகள் தவறெனின் விளக்க வேண்டுகிறேன்.

தமிழை பாரதி தேமதுரமாகவும் பாரதிதாசன் அமிழ்தாகவும் தொடர்ந்து இன்றைய முதல்வர் (அன்றே) உயிராகவும் காண்பதில் முரண் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. ஒரு தேய்வு இருப்பதாகத் தோன்றுகிறது. அத்தேய்வு தற்சமயம் நீங்கள் குறிப்பிடுவது போன்று "மூச்சுத்திணறல்" என்ற அளவிற்கு நலிந்திருக்கிறது என்று பார்க்கலாமா?

இந்நோக்கில் கண்டால், இதன் நீட்சியாக நீங்கள் முனையும் ஒரு deconstructive strategy அமிழ்து x உயிர்மூச்சு என்பது உயிர்மூச்சு x மூச்சுத்திணறல் என்பதாக உருமாற்றம் காண்பதற்கு அடிப்படைகள் இல்லை என்பதாகிவிடும்.

இதோடு, "மூலப்படிம உணர்வு" என்ற கருத்தாக்கத்தை விமர்சனமின்றி அதன் சாராம்சவாத, காலனிய அதிகாரச் சாயலோடு கைக்கொண்டால் சிக்கல்கள் எழும். தமிழ் ஆதிச்சடங்கு என்பதை வரலாற்று (நேர்க்கோட்டிலல்லாத வரலாற்று நோக்கிலேயே) வாசிப்பிற்குட்படுத்தினால் இன்னும்.

இவற்றை மனங்கொண்டால், நீங்கள் முன்மொழிய முனைந்த அடிப்படையான மொழிதலை, வேறுவகையில் செறிவோடு நோக்க வழியிருக்குமா? அதன் நடைமுறை சார்ந்த பயன்கள் என்னவாக இருக்கும் என்பதே எனது தேடல்.

தங்களதும் மற்றவர்களுடையதும் பார்வைகளையும் அறியக்காத்திருக்கிறேன்.

தொடர்ந்து உரையாட ... சாத்தியமெனின் மேலும் குறிப்பாக, சிலவற்றை இணைத்து கட்டுரையாக எழுத முயற்சி செய்கிறேன்.

நன்றிகள்.

வளர்..


நாகர்ஜுனனினது பின்னூட்டம்.

வளர்மதி,

"புற-நிகழ்வுகள் சரியான வழிகளில் வெளிப்பாடு கொள்ளாதபோது" என்று எழுதியிருக்கிறீர்கள். சரி. அதேவேளை, புற-நெருக்கடிகள் எகிறும்போது அக-நெருக்கடிகளின் செல்நெறியானது பித்தநிலை அல்லது தேவையான மயக்கம் என்பதாக எய்தி, சரி X தவறு என்பதை இடைநிறுத்தி (suspension) மொழிவழி மாத்திரம் இயங்கும்.

பத்தொன்பதாம் நூற்றாண்டை எடுத்துக்கொண்டால், ஹெகலின் தர்க்கவியலைத் தாண்ட விரும்பிய நீட்ஷ, ஷோப்பன்ஹீரை வாசித்துவிட்டு ஒரு மாற்றத்தை நாடுகிறார், இப்படித்தான் aphorism என்ற கவித்துவமான கிரேக்க உரைநடையைத் தேர்ந்துகொள்கிறார். இருபதாம் நூற்றாண்டை எடுத்துக்கொண்டால், கலை-இலக்கியத்தில் நவீனத்துவம் என்பது இப்படித்தான் சாத்தியமாகிறது. அதாவது புற-நெருக்கடிகள் தாக்க, அக-நவீனத்துவம் என்பது அதை ஒட்டி நிகழாமல் மாறாக ஒரு phase shift-இல் இயங்குகிறது. கணிதம், விஞ்ஞானத்தில் இதை எளிதாக விளக்குவார்கள்.

இந்த phase shift வருவதைத்தான் வாழ்வின் அபத்தம் என்கிறோம். எடுத்துக்காட்டாக, காம்யூவின் அந்நியன் நாவல் தொடங்குவதான, அம்மா இறந்துவிட்டாள், அது நேற்றாகவோ அதற்கு முன்தினமாகவோ இருக்கலாம் என்கிற சொற்களில் புதிய உரைநடைக்கான அடித்தளத்தை இடுகிறார். அம்மாவின் மரணத்துக்கான உணர்வு suspend ஆகிறது. சொல்லப்போனால் நாவல் நெடுகிலும் இப்படியே suspend ஆகிறது. அராபியனைக் கொன்ற குற்ற-உணர்வும் suspend ஆகிறது. அதே சமயம் அராபியனைக் கொல்லும்போது இடம், சூழல், நேரம் எல்லாம் கடற்கரைப்பரப்பும் மணலும் ஒளியும் கத்தியும் என அழகாக வருகின்றன.. நன்மை/தீதை இடைநிறுத்திய அழகியல்நிலை இது. இந்த அபத்தம், நவீன மனிதனின் அறுதி-நிலை (ultimate condition) என மேற்குலகின் கலை-இலக்கியம் கூறுகிறது. இதை ஓர் உச்சக்கட்டத்துக்குக் கொண்டுசென்றவர் காம்யூ. இதன் ஊடாகச் செல்வது என்பதைத்தான் நீட்ஷ முதல் ஹைடெக்கர் வரை பேசுகிறார்கள்.

தமிழைப்போன்ற சமுதாயத்தில் இதைக் கவிதையின் வரலாற்றில் காணலாம். நம்முடைய தமிழ்ச்சமுதாயத்தில் இசையின், நாட்டியத்தின் வரலாறு கொண்டு அதன் நிகழ்கலைத்தீவிரத்தை உணர முடியும். ஒருபுறம் மொழிக்கும் இசைக்குமான உறவு பிறழ்வதில்தான் நவீனத்துவம் தொடங்குகிறது. பாரதியின் வசன கவிதையை இதன் ஆரம்பமாகக் கூறுகிறோம். மறுபுறம் நவீன தமிழ்ச்சமுதாயத்தில் அபத்தம் என்பது, தன்னை யாரும் கடப்பதற்கு முன்பாகவே, தன் இணைநிகழ்வாக, தனக்குப் பிறகாக என, புறத்தில் கூட்டாக வெளிப்டுகிறது என்கிறேன். இங்கே உள்ள காலச்சமன்பாட்டைக் கவனிக்க வேண்டும். இந்தக் குழப்பமான process-ஐத்தான் ஆதிச்சடங்கு (அல்லது ஆதிச்சடங்கின் பதிலி) என்கிறேன். ஆக, இங்கும் phase-shift உண்டு, அதாவது, இதே போக்கை ஒட்டி, சூட்சும மொழியிலும், கவிதையாக, இலக்கியமாக, ஏதோ ஒன்று பதிவாகிறது. அது எது என்று பார்க்கலாம்..

எடுத்துக்காட்டாக - அண்ணாதுரை இறக்கும் நிலையில் பெரும் அக-புற நெருக்கடியை தமிழ்ச்சமுதாயம் எதிர்கொள்கிறது. ரயில்விபத்து போன்ற அசம்பாவிதம் நடக்கிறது. இதற்கிடையில் கருணாநிதி சிரத்தையுடன் அடுக்குமொழிக்கவிதை எழுதியிருக்கிறார். மூன்றெழுத்துக்கவிதை. அதை வானொலியில் வாசிப்பதைக் கேட்டு கலாப்ரியா உள்ளிட்ட தலைமுறையினர் - சிறுவனான நானும் எல்லோரும் சேர்ந்து அழுகிறோம். கருணாநிதி என்பவர் இங்கே ஆதிச்சடங்கை - அல்லது அதன் பதிலியை - நிகழ்த்தும் shaman எனலாம். அதற்கு நவீன தொழில்நுட்பம் வானொலியாக உதவுவதைக் கவனிக்க வேண்டும். கலாப்ரியா, தாம் சென்னை வந்ததை அண்மையில் விபரமாகவே எழுதியிருக்கிறார். நவீன தமிழ்க்கவிதை எழுதும் அழகியசிங்கர், தாம் கவிஞர் என்ற முறையில் முதல்வருக்கு எழுதும் கடிதத்தில், வானொலியில் இந்தக்கவிதையைக் கேட்டதை நினைவுகொள்கிறார். இம்மாதிரி shamanism அல்லது அதன் பதிலியான செயல்களால்தான் இவருக்குக் கலைஞர் பட்டம் நிலைக்கிறது.

இங்கே சடங்கு என்பதைப் பார்த்தவர்களில், பங்கேற்றவர்களில் கலாப்ரியா நாளாவட்டத்தில் அக-புற-நெருக்கடியின் மூலம் சரி X தவறு என்பதை இடைநிறுத்தி வேறோரு மொழிக்குச் செல்கிறார். திராவிட இயக்கத்தைக் கண்டேகொள்ளாத பிராமண மரபில் வந்தவர்கள் ந. பிச்சமூர்த்தி, சி. சு. செல்லப்பா வழிவந்த எழுத்து கவிதைமரபுக்குச் செல்கிறார் (க. நா. சு.-வும் பாரதிதாசனும் சந்தித்துக்கொள்வது ஓரிரு முறை. ஆனால் ந. பிச்சமூர்த்தியும் பாரதிதாசனும் ஒரே காலகட்டத்தில் வாழ்ந்தவர்கள் என்றாலும் மறைமுகச்சந்திப்பும் கூட இருக்கவில்லை). சந்தக்கவிதை எழுதுவதைக் கைவிடுகிறார். இவர் மட்டுமல்லர், ஒரு தலைமுறையே இதற்குச் செல்கிறது! ஏற்கனவே வைணவ மரபின் தாக்கம் பெற்றிருக்கும், தமிழரசுக்கட்சியின் தாக்கம் பெற்றிருக்கும் ஞானக்கூத்தன் இதே வழியில் பயணித்திருக்கிறார்.

பாரதியின், திராவிட இயக்கத்தின் தாக்கம்பெற்று கவிதை மூலம் பிரபஞ்சத்தைத் தோற்றுவிக்கிற பாரதிதாசன் நவீனத்துவம் பக்கம் தலைவைக்கவேயில்லை (ரைம்போ கவிதைகளைத் தமிழாக்கும்போது எனக்கு இதே கேள்வி வந்தது. பாரதி, காற்று முதலான வசன கவிதைகள் ரைம்போவில் Illuminations கவிதையின் அமைப்பை ஒத்திருப்பதைக் கண்டு வியந்தேன். வால்ட் விட்மனை நேரடியாகவே குறிப்பிடும் பாரதி, புதுச்சேரியில் வாழ்ந்த காலத்தில் ஃப்ரெஞ்சுமொழிப் பரிச்சயம் பெறுகிறார். ஒருவேளை அவர் போதலேர், ரைம்போவை வாசித்திருக்கலாம் என்கிறார் மறைந்த காரை சிபி. தவிர பாரதிதாசன் இவற்றை வாசிக்காதது, தமிழுக்கு நஷ்டம் என்ற தொனியில் இவர் எழுதுவது மிகுந்த சுவாரசியமான விஷயம்). இதே மரபில் வரும் கருணாநிதியும் நவீன கவிதையின் பக்கமே வரப்போவதில்லை. ஆனால் கலாப்ரியா வருகிறார், நிறையப்பேர் வருகிறார்கள். கவிதையில் ஆண்கள் தவிர, மாலதி மைத்ரி, கனிமொழி, இன்று தமிழச்சிவரை வந்துகொண்டேயிருக்கிறார்கள்.. இன்னும் வருவார்கள்.

திராவிட இயக்கத்தின் தாக்கம் பெற்றவர்கள் புதுக்கவிதை எழுத வருகிறார்கள் என்ற முக்கிய விஷயத்தை தமிழவன் எழுபதுகளின்போதே எழுதியிருக்கிறார். அதாவது இவர்கள் அக-புற நெருக்கடிகளின் மூலம் தங்களுக்கான புதிய பூடக மொழிக்கு நகர்கிறார்கள், இந்தப்பாதையில் இந்தச்சடங்கு வடிவத்தை (அல்லது இதன் பதிலியை) நனவிலிரீதியாக மொழியில் தாண்டுகிறார்கள். தத்தம் வழியில் இது சாத்தியமாகிறது. கலாப்ரியா இவர்களில் மிக முக்கியமானவர். என்னைப்போன்று தமிழ்-வடமொழி இருமரபுகளின் தாக்கமும் குடும்பத்திலிருந்து பெற்ற ஒருவனும் கணிதம், விஞ்ஞானம் கற்று அடுத்த சில ஆண்டுகளில் விமர்சனம் - அதாவது உரை - எழுதுகிறேன், இப்படி மொழியில் தாண்டுகிறேன். அதேநேரம் கலைஞருக்கு மனிதச்சங்கிலி என்ற போராட்ட வடிவத்தை ஆலோசனையாகச் சொல்லும் குழுவிலும் இருக்கிறேன். (மனிதச்சங்கிலிப் பங்கேற்பை அடுத்த சில மாதங்களில்தான் பிரம்மராஜனின் அதிநவீன ஞாபகச்சிற்பம் தொகுப்புக்கு முன்னுரை எழுதினேன்). ஆக, மொழியில் தாண்டும் போக்கு ஒருபுறமிருக்க, அடுத்த சடங்குக்கான தயாரிப்பு, பங்களிப்பு நானறியாமலே நடந்திருக்கிறது. அடுத்த சில ஆண்டுகளில், கலைஞர் முதல் கலாப்ரியா வரை எனப் பேட்டிப்புத்தகம் போடுகிறார், இளையபாரதி... பிறகு கருணாநிதியும் கலாப்ரியாவும் ஒரே மேடையில்... ஞானக்கூத்தனும் கருணாநிதியும் ஒரே மேடையில் என்று வரலாறு செல்கிறது. கனிமொழி் தம்மைப்போலக் கவிதை எழுதுவதில்லையே என்கிறார் கருணாநிதி (இதை என் தீராநதி பேட்டியில் குறிப்பிடுகிறேன்).

இவற்றில் ஏதுமே திட்டமிட்டு நடக்கவில்லை, இருந்தபோதும் சடங்குகளின் (திட்டமிடாக்) கண்ணி ஒன்றை இங்கே பார்க்கலாம் என்கிறேன். இதில் மேடைப்பேச்சு, சினிமா வசனம், பொதுக்களத்தில் அழுவது, வானொலி, பேட்டி எடுப்பது, மனிதச்சங்கிலியில் நிற்பது, கருணாநிதி வந்து கைகுலுக்குவது எல்லாம் வருகின்றன. "மூலப்படிம-உணர்வு" என்பது இருக்கும்பட்சத்தில் அண்ணனுக்காக எனத் தொடங்கி ஈழ உறவுகளுக்காக வரை வெளிப்படையாக அழுவதாக, ஒப்பாரி வைப்பதாக, பொதுக்களத்தில் வந்து நிற்பதாக, சடங்காக்கம் நிகழ்கிறது. இந்தச்சடங்கு குடும்ப அளவிலன்றித் திரும்பத்திரும்பப் பொதுக்களத்தில் நிகழ்கிறது (கழகமே ஒரு குடும்பம் எனக் கருணாநிதி அடிக்கடி கூறுவதை நினைக்க வேண்டும். அதைப்பலர் கழகம் என்பது ஆட்சியாளர்களின் குடும்பங்கள்தாம் என்று விமர்சிப்பதும் சரிதான்). இதில் இந்தச்சடங்கு ஒருபுறம் பதிலியாகிறது, மறுபுறம் இந்த ஒரு சடங்கு மாத்திரமன்றி, சமூகத்தின் பாலுறுவு, வன்முறைச்சடங்கு எல்லாம் நிஜமாகவே கலாப்ரியாவில் கவிதையாக எஞ்சிவிடுகின்றன... அதாவது கலாப்ரியாவின் பல கவிதைகளில் சடங்காக்கம் என்பதே பொதுவாக எப்படி உக்கிரமாக நடக்கிறது என்பது நிகழ்த்திக்காட்டப்பெறுகிறது... நவ-கவிதையில் shamanism..

இப்போதைக்கு இது போதும். தொடர்ந்து எழுதுகிறேன்.


அந்நியனின் பின்னூட்டம்.

எனது பின்னூட்டங்கள் தெரிவுசெயப்பட்ட புள்ளிகளுடன் நிற்காமல் அதற்கருகில் உள்ள வெளிகளையும் கவனத்தில் எடுப்பது தொடர்பாக சில விடயங்களைக் கூற வேண்டியுள்ளது.

தெரிவுசெய்யப்பட்ட விடயம் மட்டும் சார்ந்து நாம் உரையாடும்போது எம்மால் அதே விதத்தில் உரையாடலைத் தொடரமுடியாமல் போகும் என நம்புகின்றேன்.

எல்லாவகையான உரையாடல்களும் முரண்கள் என்னும் கட்டத்துடன் சேர்ந்தே நிகழ்வதால் நாம் சில முனைகளைப் பற்றியவாறு உரையாடல்களைத் தொடரும்போது முரண்கள் ஒருகட்டத்தில் இறுக்கமுற்று உரையாடல்கள் தேங்கிப்போகும் அபாயமும் இருக்கிறது. வைமைபெற்ற முரண்கள் உரையாடலைத் தேக்கி அடுத்தகட்டத்துக்கு நகரமுடியாமல் செய்துவிடும்.

இங்கே, யுங்கை நான் இழுத்ததும் அதுசாரப்பட்டதே. யுங்கின் நீட்சியாக லக்கானை இதனுடன் இணைப்பதும் அதன் எதிர்த்தளத்தில் ஃபூக்கோவையும் தெர்ரிதாவையும் முன்வைத்து உரையாடலைத் தொடர வேண்டும் என்ற எண்ணம் எனக்கிருந்தது. இவ்விடத்தில் டார்வினை இழுத்ததும் அவரையும் அதே 'விஞ்ஞான'த் தளத்தில் வைக்க முற்பட்டதும் சமூகவியல் மற்றும் மானுடவியல்களை விஞ்ஞானத்திற்கு மேல் கொண்டு போய் வைக்கும் முயற்சியே.

இதற்கு இன்னுமொரு உதாரணத்தையும் என்னால் கூற முடியும். மருத்துவத்துறையும் விஞ்ஞானமும் பெண்கள் தொடர்பாகக் கூறும் விடயங்கள் பல, ஆணாதிக்கத்திற்கும் நிலவிக்கொண்டிருக்கும் சமூகக்கட்டமைப்பிற்கும் சாதகமாக அமைந்துவிடுவதுண்டு. ஆயினும் ஜூடித் பட்லர் போன்றோர் 'பெண்' இயல்பென்பதே கட்டமைக்கப்பட்டது என்று கூறும்போதும் அதனை சமூகவியல்மூலம் எதிர்கொள்ளும் போதும் விஞ்ஞானமும் மருத்துவத்துறையும் தம்மை மாற்றிக்கொள்ளும் எனக்கூற முடியும். இங்கே, ஆங்கில மருத்துவத்தில் இருந்து ஹோமியோபதி போன்ற மருத்துவமுறைகள் வேறுபடுவதையும் இணைத்துப்பார்க்கமுடியும். ஆங்கில மருத்துவத்தில் 'நோய்' அல்லது 'அறிகுறி' என்பதே மையப்புள்ளியாகி நிற்கும் அதேவேளை, ஹோமியோபதி போன்ற மருத்துவத்துறைகளில் 'கவனப்படுத்தப்படும் உடல்' என்பது மையப்புள்ளியாவதும் இதுசாரப்பட்டது.

மேலும் 'மூலப்படிம-உணர்வை' தமிழ்வழிப்பட்ட-'மொழிச்சடங்கு'டன் தொடர்புறுத்தும் நாகார்ஜுனன் அதற்குப் 'பதிலி' என்னும் சொல்லையும் பயன்படுத்துகிறார். இது, உரையாடல் முரண்களில் தேக்கமுறாமல் தொடர்ந்து ஆரோக்கியமான புள்ளியை நோக்கி நகரப்போகிறது என்பதைத் தெளிவுபடுத்துகிறது. பதிலி என்பதுடன் நிகழ்வென்பது நிகழ்கிறது. அதன் நிகழ்ச்சியை நாம் காண்கிறோம். தமக்கிடையான முரண்களுக்கிடையிலும் அந்நிகழ்ச்சி நடைபெறுவதைக் காணமுடிகிறது. அந்நிகழ்ச்சியினூடாக முரண்களின் இருப்பை நேச-முரணாக்கி மீளுருவாக்கம் பற்றி சிந்திப்பதற்கான கருத்தியலை வடிவமைப்பது அதற்கு வலுச்சேர்க்கும் என நினைக்கிறேன். முரண்களின் இருப்பிற்கிடையிலும் நிகழும் நிகழ்ச்சியில், நாம் முரண்களை அவதானிக்காமல் அவற்றின் உணர்வுநிலையைப் பற்றி மட்டும் கவனத்தில் எடுத்தோமேயானால் அதன் விளைவை எதிர்காலத்தில் நகரமுடியாத முரணியக்கத்தினூடாக அனுபவிப்போம் என நினைக்கின்றேன். திட்டமிடாக்கண்ணியின் மூலம் நிகழ்வதென்பது உண்மை. உண்மையில் இருந்து நாம் நகரப்போகும் பரப்பு தொடர்பாக இவ்வுரையாடலைத் தொடரவேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு. ஏனெனில், அதுதான், மீண்டுமொருமுறை இப்பதிலி நிகழ்த்தப்படும் போது இவ்வுரையாடல், நிகழ்வென்பது உண்மை/பொய், சரி/பிழை என்ற எல்லைகள் கடந்த நிலையில் நடத்தப்படும் என்பதே எனது கருத்து.

நாகார்ஜுனன்-வளர்மதி உரையாடலின் மூலம் புதியவிடயங்களை இளையோர் தெரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கின்றது. தளத்தை மேலும் விரிவாக்கித் இவ்விடயத்தைத் தொடரவேண்டும் என்பது எனது அவா.

அந்நியன்


ராஜன் குறை இனது பின்னூட்டம்.

வளர்மதியின் குறிப்புகள் மிகுந்த மகிழ்ச்சியளிக்கின்றன. அவருடன் பழகிய காலத்தில் கோட்பாடுகளில் தெளிவைத்தேடி வேகமாகப் பயணப்பட்டுக்கொண்டிருந்தார். நான் மிக நிதானமாகத்தான் நகர்வேன் என்பதால் அவரது நட்பு எனக்கு மிகுந்த பயனளித்தது. அவர் நிறைய எழுதவேண்டும்; விரிவான கட்டுரைகளாக, நூல்களாக.

கீர்ட்ஸ் விஷயம் பேச சுவாரசியமாக இல்லை. ஆர்வமிருப்பவர்கள் கூகிளில் தேடி இன்னும் அதிகம் கண்டடையலாம். மூன்றாமுலக நாடுகளின் புதிய தேசிய அரசுகளை மேற்குலகம் "புரிந்துகொள்ள வேண்டும்" என்ற சட்டகத்தில் இயங்கியவர் என்று தோன்றுகிறது. நமது தேவையோ ஐரோப்பிய, அமெரிக்க அரசுகள் எப்படி இயங்குகின்றன எனப் புரிந்துகொள்வது. சன் டிவியோ, ஹிண்டுவோ பிரான்சில் குடியுரிமையின், மக்களாட்சியின் பொருள் என்பது பற்றி ஆய்வுசெய்ய தமிழ் மாணவர்களுக்கு நிதியளித்தால் பயனுள்ள ஆய்வு பிறக்கும்.

ஜமாலனின் பின்னூட்டம்.

நண்பர் வளர்மதியின் குறிப்புகள் பல முக்கியமான புள்ளிகளைத் தொடுகின்றன.

1. கீர்ட்சின் மூலப்படிம-உணர்வு என்கிற கருத்தாக்கம் "மூலப்படிமவியல்" (primordialism என்பதை இப்படிக் கூறலாமா?) என்கிற கருத்தாக்கத்திலிருந்தே வருகிறது. இக்கருத்தாக்கத்தில், வழக்கமான காலனியத்தின் அடிப்படையான கீழைத்தேயர்கள் குறித்த ஓரியண்டலிஸப் பார்வைகள் உள்ளன என்பதை கவனத்தில் கொள்ளவேண்டி உள்ளது. குறிப்பாக, இக்கருத்தாக்கங்களில் உள்ள காலனிய அனுமானங்கள் மற்றும் சாரம்சவாதப் பின்னணிகள் கவனமாகப் பிரித்தறியப்பட வேண்டியவை. பொதுவாக மானுடவியல் எனகிற அறிவுத்துறை உருவாக்க விரும்பிய ஓரியண்டலிஸ உலகுடன் (கீழைத்தேயம் X மேலைத்தேயம்) இவை உறவு கொண்டவையாக உள்ளது என்பதையும் கவனத்தில் கொள்வது நல்லது.

2. அதே நேரத்தில் இந்த உணர்வு என்பது சமூக யதார்த்தமாக ஆகி உள்ளதா? இல்லையா? என்பதை ஒட்டி இந்த உரையாடலைக் கொண்டு செல்வது அவசியம். தமிழவனின் கட்டுரையை அந்த கோணத்தில்தான் நான் புரிந்துகொள்கிறேன். கட்டுரை ஆசிரியரின் உடன்பாட்டு நிலையில் இல்லை என்றாலும், சில இடங்களில் தமிழவனும் இந்த மூலப்படிம உணர்விற்கு ஆட்படுவதை அக்கட்டுரை கொண்டுள்ளது ஒரு விவாதத்திற்குரிய புள்ளிதான்.

அதாவது, மூலப்படிம உணர்வு என்பது தாய்நாடு, தாய்நிலம், தாய்மொழி போன்ற கருத்தாக்கங்களின் அடிப்படையிலிருந்து வருவதாகவே எனது புரிதல். அவ்வகையில் இவை எல்லாமே காலனியக் கட்டுமானத்துடன் உருவாகி வந்த கருத்தாக்கங்களே. பிறகான-காலனிய சமூகங்களில் இந்த உணர்வுகள் இயக்க சக்தியாக உள்ளனவா, இல்லையா என்பதே கேள்வி. இல்லையெனில் இன்றைய உணர்வெழுச்சிகளை இனப்போராட்டங்களை, மொழிப்போராட்டங்களை எப்படிப் புரிந்துகொள்வது என்கிற கேள்வி வருகிறது. இக்கேள்விகள் எல்லாமே இவற்றைப் புரிந்துகொள்ளும் அறிவுஜீவிதச் செயல்பாடு மட்டுமல்ல.. "மாற்று அரசியலுக்கான" தேடலுடன் உறவு கொண்டவை என்பது மனங்கொள்ளத்தக்கது.

மூலப்படிம-உணர்வு என்கிற சொல், அதன் சொல்லாக்க அர்த்தத்தில், ஆதிச்சமூகங்களிலிருந்து வந்ததாக கருதவேண்டியதில்லை என்பதே எனது நிலைப்பாடு. உண்மையில், மூலப்படிமம் சார்ந்த தாய்நாடு, தாய்மொழி, தாய்நிலம் என்பவை, நவீனத்துவத்தின் தேச-அரசுகளின் செயல்திட்டத்துடன் உருவாகி வந்த கருத்தாக்கங்கள். அவ்வகையில் இன்றைய மக்கள்திரள் கட்டமைப்பில் இந்த உணர்வுகளின் செயல் என்பது வலிமையடைந்து வருகிறது என்பதாகவே தமிழவன் கட்டுரையைப் புரிந்துகொள்கிறேன். அதேவேளையில் தமிழவனின் கட்டுரைக்குள் உள்ள ஆதங்கக்குரல் முக்கியமானது. தமிழ் அறிவுஜீவிகளின் தளம் என்பது இன்றைய பொது அரசியல்களத்தில் என்னவாக உள்ளது, ஏன் இன்றுவரை தமிழில் ஒரு தனித்தீவாக அறிவுஜீவிகள் உள்ளனர் என்கிற கேள்விகள் முக்கியமானவை. இதை அவர் தனது கருநாடக அறிவுஜீவிகள் பற்றிய கட்டுரையில் நீட்டிக்கிறார். அதேநேரத்தில் தமிழ் மற்றும் தமிழன் என்கிற சொல்லாடல்கள், தமிழ் மக்களின் இடைநிலைச்சாதிகளின் பிரதிநிதித்துவமாக மாறியிருப்பதையும் அதனால் அது சில பிரிவினரை வெளியே தள்ளுவதையும் கவனத்தில் கொள்ளவேண்டிய அவசியமும் உள்ளது. இந்த வெளித்தள்ளும் "உள்ளே-வெளியே" விளையாட்டில் நாம் இன்று கவனமாக இருப்பதும் அவசியம். தமிழவன் கட்டுரையில் இந்த விளையாட்டுக்குள் விழும் ஆபத்தும் உள்ளது என்பதையும் இங்கு குறித்துவைத்துக்கொள்வது நல்லது.

அடுத்துப் பிரச்னைப்படுத்தப்பட்டிருக்கும் நாகார்ஜுனன் முன்வைத்த "ஆதிச்சடங்கு" என்கிற நிகழ்வு பற்றியது. இங்கு சடங்கு என்பது மூலப்படிம-உணர்வுடன் இணைவதையே ஆதிச்சடங்கு என்கிற சொல்வழி நான் புரிந்து கொள்கிறேன். மூலப்படிம-உணர்வு என்பது ஒரு சடங்குத்தன்மையுடன் தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறது எனப் பார்க்கும்போது, சடங்குகளின் சமூகப்பயனான மனித உடலை பித்துநிலைக்கு கொண்டுசெல்வதன்வழி உணர்ச்சிகரமான அல்லது அப்பாலையான ஓர் உலகில் (அப்படி ஓர் உலகு உண்டா என்பதும் அதற்கான ஆன்மீகக்கட்டுமானம் பற்றிய விவாதங்களும் மற்றொரு தளத்திலானவை) சஞ்சரிக்கச்செய்வது என்பதான ஒரு செயலை இத்தகைய எழுச்சிகளில் காணலாம்.

ஆதி என்பதுபோன்ற சொற்களை நாம் வரலாறு மற்றும் காலத்துடன் உறவுகொண்டு புரிந்துகொள்வதில் உள்ள சிக்கலில் இருந்தே இவை வருகின்றன. மூலப்படிமம் என்பதை ஒரு வரலாற்றுக்காலத்துடன் பிணைக்காமல் காலனியக்கட்டுமானத்துடன் இணைத்துப் புரிந்துகொள்ளும்போது இன்றைய தேசிய உணர்வு அல்லது மொழி-உணர்வு எழுச்சிகளை நவீனத்துவத்தின் ஓர் அரசியல்-வெளிப்பாடாகவே கொள்ளவேண்டி உள்ளது. இங்கு பிறகான-நவினத்துவ அரசியல் இதனை எப்படி எதிர்கொள்வது அல்லது முகங்கொள்வது என்கிற சிக்கல் மேலெழும்புகிறது.

உண்மையில் இன்று நாம் பேசும் அறிவு எல்லாமே நவீனத்துவம் முன்வைத்த அறிவுடனும் அது உருவாக்கிய வரலாற்றுவாதத்துடனும் உறவு கொண்டே சாத்தியம் என்பதால் ஆதி என்கிற சொல்லை பண்டைய என்கிற பொருளில் கொள்ளாமல் நவீன சடங்குத்தன்மையின் ஒரு பதிலியானச் சொல்லாடலாகக் கொள்வதே பொருத்தம். இதன் பொருள், "shamanism" மற்றும் சடங்கின் உணர்வெழுச்சிகள் போன்றவை நவீன சமூகத்தில் என்னவிதமாக செயலாற்றுகின்றன என்பதைப் புரிந்துகொள்ள முயல்வதே.

நண்பர்கள் முன்வைக்கும் லத்தூரின் செயல்வலைப்பின்னல் கோட்பாட்டுக்குள் இந்தப்பிரச்னையை இணைத்து எழுதினால் இங்கு பிரச்னைக்குள்ளாகி உள்ள இவற்றை புதிய தளத்தில் புரிந்துகொள்ள ஏதுவாகும்.

சடங்கு என்பதும் ஒருவித வலைப்பின்னல் அமைப்புக்குள் நிறுத்தப்படும் மனித உடலின் செயல்பாடு என்பதாகவே நான் புரிந்துகொள்கிறேன். எச்சரிக்கையாக ஒன்று கூறிவிடுகிறேன் - லத்தூரை நான் வாசித்ததில்லை என்பதால் எனது புரிதல் லத்தூரின் கோட்பாட்டு அடிப்படையில் சொல்லப்ட்டதல்ல. இது தவறாகக்கூட இருக்கலாம்.

மற்றைய நண்பர்கள் கருத்தறிய ஆர்வமுடன்,

நன்றி்

ஜமாலன்

ராஜன் குறையின் பின்னூட்டம்.

ஜமாலனின் கேள்வி, இன்றைய உணர்வெழுச்சியை எப்படி புரிந்துகொள்வது என்பது தவிர்க்கவியலாதது. நான் எம்.எஸ்.ஏஸ்.பாண்டியனின் நூலை ஒரு சாத்தியமாக சுட்டியிருந்தேன். நாகார்ஜுனன் அதை விளக்குமாறு கேட்டதற்கு பதிலாக ஒரு பின்னூட்டத்தை இட்டேன். ஏதோ தொழில் நுட்ப காரணங்களால் அது நாகார்ஜுனன் பார்வைக்கு வரவில்லை என்று தோன்றுகிறது.

பாண்டியனின் நூலில் நான் முக்கியமாகக் கருதும் கருத்தாக்கம் 'இடம் பெயர் வகைப்பாடுகள்' (Transitive Categories) என்பது. ஆரியன்- பார்ப்பனர்-சமஸ்கிருதம்-வடநாடு-ஹிந்தி என்பவையெல்லாம் இடம்பெயர் வகைப்பாடுகள் ஆகின்றன. அதோபோல் திராவிடன் - தமிழ் - தென்னாடு - பார்ப்பனரல்லாதோர் என்பதெல்லாம் மற்றொரு இடம்பெயர் வகைப்பாட்டு சங்கிலியாகின்றன. இதில் மொழி என்பது மற்ற சமூக முரண்களுடன் தொடர்புடையதாவது கருதத் தக்கது. என்னைப்பொறுத்தவரை இலங்கையிலும், தமிழ்நாட்டிலும் வேறு வேறு இடம்பெயர் வகைபாட்டுச் சங்கிலிகளில் தமிழ் இடம்பெறுவதாகத் தோன்றுகிறது. இது தொடர்ந்து விவாதிக்கப் படவேண்டியது.


எஸ்.சண்முகத்தின் பின்னூட்டம்.

நாகார்ஜுனன்,

தமிழவனின் மூலப்படிம-உணர்வு குறித்த கட்டுரை மற்றும் உங்கள் மேற்கண்ட பதிவுக்கு ஏகப்பட்ட மறுமொழிகள் வந்திருப்பதைக் காண்கிறேன். இது குறித்து சுருக்கமாக ஒரு விஷயம்.

தமிழவன் கூறும் மூலப்படிம-உணர்வு மற்றும் அது குறித்த விளக்கம் (gloss) இங்கே நண்பர்கள் பல திசைகளில் உரையாடியிருப்பதைப் வாசித்தேன். இந்தக் கருத்தாக்கத்தை அவிழ்த்து (undress) இது அசலானதா, நியாயமானதா (is it authentic?) என்று தத்தம் கோட்பாட்டு-அடிப்படைகளுக்கேற்ப உறுதிப்படுத்திப் பார்க்க முயன்றிருக்கிறார்கள். ஆக, இந்தப் பிரச்னையைச் சமாளிக்க முயல, தமிழ்ச்சிற்றிதழ் மரபு கைக்கொள்ளும் வழக்கமான நடைமுறையில்தான் (pragmatics) இவர்கள் இன்னும் தொடர்கிறார்கள்.

இந்தக் கட்டுரையை வாசித்தவுடன் சுமார் பத்தாண்டு முன்பு நாம் நடத்திய நீண்ட உரையாடல் நினைவுக்கு வருகிறது - அப்பாலைத் தமிழ்க்குறி (the transcendental Tamil sign) மற்றும் அதன் வெளிப்பாடுகள் பற்றிய அந்த உரையாடல் உங்களுக்கு நினைவிருக்கும் என நம்புகிறேன்.

இன்றைய உரையாடலில் பாதுகாப்பான விளக்கவுரை-உத்தி ஒன்று அவசியமாகிறது. சங்க இலக்கியமும் அதன் செய்யுள்-உரைமரபும் (prosody) இதுபற்றிய தெளிவான பார்வையை வழங்க முடியும் என்று என்னைப் பொறுத்தவரை கருதுகிறேன். அதாவது, சங்க இலக்கியத்தின் இந்தப் படிமம், மூலப்படிமத்தை முழுமை-தவிர்த்த ஒன்றாக்குகிறது (detotalizes). அதன் தமிழ்-அடையாளம், பாசிச அலகுகளினஅ அனைத்து வடிவங்களையும் எதிர்ப்பது. ஆதி-நிலை என்பதைக் கூட்டாகத் தக்கவைப்பதும் இதுதான். ஆக, கறாரான மேற்குலக தத்துவக் கோட்பாட்டுப் பின்புலமோ, பயிற்சியோ இல்லாத ஒருவரும் மூலப்படிமத்தை அணுக முடியும்.

எப்படியோ, தமிழவனும் நீங்களும் என் நீண்ட மௌனத்தைக் கலைத்திருக்கிறீர்கள்... உங்கள் மறுமொழி கண்டு மேலே எழுதுகிறேன்.

எஸ். சண்முகம்


நாகர்ஜுனனின் பின்னூட்டம்.

நண்பர்களுக்கு

வளர்மதிக்கு மேலும் பதில், ராஜன் குறையின் சத்தியக்கடதாசி பதிவு பற்றி, எஸ். சண்முகத்தின் மறுமொழி பற்றி எல்லாம் விரிவாக எழுதுகிறேன்.

பணி சற்றுக் கடுமையாக இருக்கும் நிலை. இங்கே கடுங்குளிரில் உடல்நிலை சற்றே சரியில்லை. எனவே எழுதக் கொஞ்சம் தாமதமாகலாம். தினம் புதிய பதிவை எப்படி எழுதுகிறாய் என்று கேட்காதீர்கள்! ஏற்கனவே எழுதிவைத்திருப்பவை அவை..

நாகார்ஜுனன்

3 comments:

said...

வணக்கம்.
நீண்ட நாட்களின் பின் உங்கள் எழுத்துக்களைப் படிக்க முடிகிறது.சந்தோசம்.
வலைத்தளம் எல்லோரையும் இணைக்கிறது அல்லவா.
மற்றொரு சந்தர்பத்தில் பேசுவோம்.
றியாஸ் குரானா.www.maatrupirathi.blogspot.com

said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in