உரையாடல் - 16 (நாகர்ஜுனன், அந்நியன், ஜமாலன், றஞ்சனி)

நாகர்ஜுனன் அவர்களது திணை, இசை, சமிக்ஞை தளத்தில் இடம்பெற்ற உரையாடல்.

சாரு நிவேதிதாவும் நானும் - 1 - நாகார்ஜுனன்.

என் பத்தாண்டுக்காலத் தனிமைவாசத்துக்குப் பிறகு சாரு நிவேதிதாவின் ஸீரோ டிகிரி நாவலை நேற்றிரவு நெடுகிலும் ஒரே மூச்சில் வாசித்துமுடித்தேன். உறக்கமற்ற வாசிப்பு என்பதன் ஊடேயும் கண்ட கனவு கலையாமல் எஞ்சிய கிறுகிறுப்பு இன்னமும் போகவில்லை. சரியாகப் பத்தாண்டுகளுக்கு முன்பு வெளியான இந்த நாவலை இவ்வளவு காலம் தீண்டவில்லையே என்கிற தாபம் ஒருவழியாகத் தணியும் என்று பார்த்தால் தணியவுமில்லை! இந்தக் கரட்டு-எழுத்தின் வெப்பமும் காமமும், சீற்றமும் மென்மையும், இசைவும் மாறும், நட்பும் பகையும் என்னை ஒராயிரம் முறை தலைகீழாகத் தொங்கவிட்டன...

இந்த நாவலுக்கு விமர்சனம் என ஒன்றை எழுதுமுன் என்னைத் தயார்ப்படுத்திக்கொள்ள வேண்டுமோ என்று தோன்றியது. நாவலை வாசித்த பிரமிப்பும் கோபமும் குதூகலமும் சோகமும் என்னை அமேஸான் வெப்பமண்டலக்காட்டிலிருந்து பனிப்பாலை வரை கைப்பிடித்துக் கூட்டிச்சென்றன. என்னிலிருந்து ஒருவர் கிளம்பி எங்கோ பயணம் செய்துவிட்டுத் திரும்பிவந்து அருகே சிரித்து அமர்ந்துகொண்டார். நான் வாசித்த விளாடிமிர் மாயகோவ்ஸ்கியின், பிரமிளின் கவிதைகள், பல ஆங்கில, ஃப்ரெஞ்சு எழுத்துக்கள், சாருவுடைய முதல் நாவலும் சிறுகதைகளுமாக என்னில் கிளம்பிக் கெக்கலித்தன. தவிர, இந்தப் பயணத்தில் குதூகலமும் அயர்வும் என்னில் ஒருங்கே தோன்றின. அவருக்கும் எனக்கும் இன்றுள்ள தொலைவு ஒருபக்கமிருக்க, இந்த நாவல், மொழியாகவே என் தொண்டையை அடைத்துவிட்டது....

எண்பதுகள் முதல் தொண்ணூறுகளின் தொடக்கம் வரை சாருவுடன் நண்பனாக, வாசகனாக நான் கடந்த இலக்கியத்தூரம் அசாத்தியமானது... வாசிப்பில் கடுமையான உழைப்பாளி. நம்மையும் வாசிக்கத் தூண்டிவிடுவார். அதையெல்லம் வரிகளில் எழுத முடியாது...

அதே சமயம் தினமலர், இணைய தளத்துக்குப் பத்து லட்சம் ஹிட்ஸ், பிரபலங்களுடன் நட்பு, அவர்கள் அங்கீகாரம் என்பதற்காக அவர் செய்யும் கிசுகிசு எழுத்துப்பிரதாபங்கள், ஊடாட்டங்கள், சாகசங்களை, தூர நின்று கூட பார்க்க முடியவில்லை! இதுதான் என் பார்வை என நன்கறிவார் அவர். இதை மீண்டும் வலியுறுத்துவற்காக, என்மீது அவருக்கு எவ்வளவோ கோபமிருக்கலாம். ஆனால் என்னைப்பற்றி அவர் வேறு என்ன கருதினாலும் சரி, எனக்குக் கோபம் வர முடியாமல் செய்துவிட்டது இந்த நாவல். எனக்கு அவர் மீதான ஒரே கோபம், வருத்தம் - அவருடைய எழுத்து அவராலேயே நீர்த்துப்போய்விடுமோ, அவருக்குக் கிடைத்திருக்கிற, கிடைக்கிற, கிடைக்கப்போகிற அங்கீகாரத்தால் அது நடக்குமோ என்பதுதான்.

இந்த சமயத்தில், இருபதாண்டுகள் முன்பு வந்த சாரு நிவேதிதாவின் முதல் நாவலுக்கு அப்போது நான் எழுதி, பிரம்மராஜன் ஆசிரியராக இருந்த மீட்சி 34 (1990) இதழில் வெளியான விமர்சனம், நினைவுக்கு வருகிறது. ஒருவிதத்தில் அந்த விமர்சனத்தை அடிப்படையாக வைத்தே இந்த நாவலுக்கும் விமர்சனம் எழுதத்தொடங்கலாம் என்று நினைக்கிறேன்...

அந்த விமர்சனத்தைப் பகுதிபகுதியாக இங்கே வாசிக்கலாம்:

நாவல்-எழுத்து = விலக்கப்பட்டவற்றால் கட்டமைக்கப்படுகிற எச்சம்

சாருநிவேதிதா, எக்ஸிஸ்டென்ஷியலிசமும் ஃபான்ஸி பனியனும் (கிரணம் வெளியீடு, 1989).

நாவலை விமர்சிப்பதற்கு முன்பு முதல் பாரா:

இந்த நாவல், எவர்ஸில்வர் பாத்திரங்களாகவோ தமிழ்ச்சூழல் என்று அறியப்பட்டுக் கொண்டிருக்கிற பிரபஞ்ச-விகாசக் காயலான்கடையில் ஹீரோக்களாக வேஷம் தரித்துக்கொண்டவர்களின் வாழ்க்கையில் நடந்தேறிய வியாபாரங்களாகவோ பார்க்கப்படுவது தெரிந்ததே.

அப்படிப் பார்ப்பவர்கள், சாவைத் தத்தம் வாழ்க்கையிலிருந்து வெளியேற்றியதாக இருந்துகொள்பவர்கள்: உண்மையில் இவர்கள் ஓராயிரம் முறை நரகத்தில் தலைகீழாய்த் தொங்கியவ்ர்கள். இதற்குக் காரணம், சாவை வெளியேற்றுவதன்மூலம் புகழ்-வாழ்க்கை என்கிற நரகத்தில் இவர்களின் பெயர்கள் சிக்கிவிடுவதுதான். இவர்களுக்கு இந்த விமர்சனத்தின் கடைசிப்பாரா சமர்ப்பணம். அங்கே போய் வாங்கிக்கொள்ளலாம்: விலை ரூ. 3-25; அளவு 325 எம்-எல்; அரைக்காலனித்துவ-அரைநிலப்பிரபுத்துவ உள்பேட்டை வரிகள் தனி.

இனி நவீனத்துவ நாவல் எழுகின்ற சமுதாயம் பற்றிக் கொஞ்சம் பார்க்கலாம்: இது உடல்களின் திசைநோக்கிய அரைவு (directed grinding of bodies) என்பதாக இயங்குகிறது. இந்த நவீன சமுதாயத்தில் அங்கீகாரம் என்பது எப்படிப்பட்டதாக இருக்கிறது என்பதைக் கொஞ்சம் புரிந்துகொள்ள வேண்டிய தேவை வருகிறது.

இந்த நாவலைப் புரிந்துகொள்ள அரசியல்பற்றிய வேறுபட்ட பார்வை தேவை. அதாவது அரசியல் என்பது ஒடுக்கும் வர்க்கத்துக்கும் ஒடுக்கப்படும் வர்க்கத்துக்கும் இடையிலான போராட்டமாகக் கருதப்பட்டுக் கொள்ளலாம், கண்டபடி கலைத்தப் போடப்பட்ட அதிகாரத்தவ உறவுகளின் வலைப்பின்னலாக இருக்கிறது. இந்த வலைப்பின்னலை மேலாதிக்க நுண்-உத்திகள் (microstrategies of domination) என்றும் அழைக்கலாம்.

அதிகாரமும் அறிவுஜீவியும்

அதாவது, இங்கே பிரச்னைப்பாடாக இருப்பது அதிகாரம், அல்லது அதிகாரம் பற்றிய நுண்-பௌதிகம் (microphysics of power). சொல்லப்போனால் அதிகாரம் என்பதே நுண்-அளவில் இயங்குகிற உறவுகளின் கட்டமைப்புத்தான் எனலாம்.

ஒரே சமயத்தில் அதிகாரம் என்பது மேலாதிக்க வன்முறையாகவும் அதற்கான எதிர்வினையாகவும் (response/resistance) சாத்தியப்பட்டுக்கொள்வதற்கான கூறுகள் எப்படிப்பட்டவை என்பது தான் பிரச்னை. அதிலும் இங்கே தனது அறிவுத்திறனை முன்வைத்து இயங்குபவனின் பங்களிப்பானது எந்தெந்த வகைப்பட்டதாக இருக்கிறது என்பது இது தொடர்பான இன்னொரு பிரச்னை. இன்னும் குறிப்பிட்டுச் சொன்னால், அறிவுஜீவி-தான் என்கிற தன்னிலையின் செயல்பாட்டுத்தளம் குறித்த பிரச்னை இது.

இதற்கான பதிலைப் பின்வருமாறு தொடங்கலாம்: அறிவுஜீவி என்ற நபரின் தற்காலத்திய செயல்பாட்டைக் கொஞ்சம் ஆராயலாம். இந்த நபர் உலகுதழுவிய, மனிதார்த்த (universal, humanist) மதிப்பீடுகளை நிலைநிறுத்தப் பாடுபட வேண்டும், ஈடுபாடு காட்ட வேண்டும் என விதிக்கப்பட்டள்ளது. இதுவரை, ஆனால் இதுவல்ல இனியான விஷயம் இனி. அறிவுஜீவி என்பவர், இனியும் உலகுதழுவிய, மனிதார்த்த மதிப்பீடுகளைக் கட்டிக்காத்து வெளிப்படுத்துவதைத் தனது கடமையாக எண்ணிக்கொள்ள முடியாது; இந்த நபர், இனியும் மக்களின் சிந்தனாமுறைகளைத் திருத்திக்கொடுப்பதையோ அப்படிச்செய்யும்போது தனதான தத்துவ நிலைப்பாடுகளை சோதித்து நிறுவிக்கொள்கிற விமர்சனத்தில் ஈடுபடுவதையோ கடமைகளாகக் கருதிக்கொள்ள முடியாது.

இப்படிப்பார்க்கும்போது, இனியும் அறிவுஜீவி என்கிற இந்த நபர் மனிதகுல முழுமை என்பதன் சார்பிலோ, அனைத்து ஒடுக்கப்பட்டவர்களின் சார்பிலோ பேசிக்கொள்கிற உரிமையைத் தனதாக எடுத்துக்கொண்டுவிட முடியாது என்றும் கூறுமுடியும்.

இது ஏன் என்று பார்த்தால் ழான்-ப்ரான்ஸ்வா லையோதார் (Jean-Francois Lyotard) என்பவரின் விளக்கத்தில் பதிலைக் காணலாம். பிற்கால-நவீனத்துவவாதியான இவர் கூறுவது: (1) தத்துவவாதி எனப்படுபவன் வார்த்தைக் கூட்டங்களால் வர்ணம் பூசும் தொழிலாளி. ஆவ்வளவுதான், ஆதாவது, வார்த்தைகளில், வார்த்தைகளைக் கொண்டு, விளையாடுபவன். ஆவற்றுக்கான இடைவெளிகளை மீறுபவன். இந்த விளையாட்டின் ஊடே அவன் செய்துகாட்டுவது (demonstrate) சொல்லாடல்களங்களில் உறைந்திருக்கும் அதிகார இயக்கத்தைப் பிரித்துப் போடுவதைத்தான்.

எந்த ஒரு களத்திலும் அதிகாரத்துவ நுண்-உறவுகள் பற்றியதான பன்முகரீதியான அலசலுக்கான கருவிகளைத் தயார்செய்து, வருபவர்களிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்துவிடுவதுதான் அறிவுஜீவி என்கிற நபரின் இனியான செயல்பாடு. இந்த அளவில் புதிய உண்மைகளாக சில வெளிப்பட்டுவிடுகின்றன: சமுதாயத்தில் விரவியிருக்கிற அதிகாரம் அல்லது உயிராற்றல், எல்லையற்றதுமல்ல; பூஜ்யமாக ஆகப்போவதுமல்ல. It is neither infinite nor brought to an absolute zero. அதிகாரம் எல்லையற்றே இருக்கிறது என நினைக்கும்போது, அதிகாரம் என்பது வெறும் ஓடுக்குமுறையாகக் (repression) கணிக்கப்படுகிறது: மாறாக, என்றோ ஒருநாள் அதிகாரம் பூஜ்யமாகிவிடும் என்கிற நம்பிக்கை ஓர் கனவுலகைச் (utopia) சாத்தியப்படுத்தவதாக இருந்தாலும் அந்த நம்பிக்கை எதிர்காலம் தொடர்பானதாக இருப்பதில்லை: காரணம், அதிகாரத்தைப் பூஜ்யமாக்க விழைவதாக, கனவுலகைச் சாத்தியப்படுத்தவதாக, கூறிக்கொள்ளும் செயல்பாடுகள், உயிராற்றலைக் குறைத்து விடுகின்றன. எனவேதான எதிர்காலம் பற்றிய கனவுலகைக் கைவிட்டுவிட்டு எதிர்-கனவு உலகங்கள் (dystopias, heterotopias) பற்றிக் கவனம் செலுத்தவேண்டிய சமயம் வந்துவிட்டது. இதுபற்றி வேறு இடத்தில் கவனிக்கலாம்.

அதிகாரம் அல்லது உயிராற்றல் பற்றிய மேற்கண்ட சிந்தனை சாத்தியப்படுவதற்கு, மொழி மற்றும் உடல் பற்றிய பொருண்மையான புரிதல் தேவைப்படுகிறது. இந்தப்புரிதலை நாவலுக்கு முன்பாக எழுதப்பட்டுள்ளதில் (பக்கம் 5-9) காண முடிகிறது: இங்கே மொழி வெறும் தொடர்புசாதனமாகக் காணப்படாமல் பெயரிடுதலைச் சாத்தியமாக்குகிற ஒரு தொழில்நுட்பமாக (technology), அறிவாக, அலசப்படுகிறது.

"மொழி என்பது மனிதன் தன் இருத்தலை நிலைப்படுத்துவதற்கான தொழில்நுட்பங்களில் ஒன்றாகவே அமைந்துவந்திருக்கிறது. பெயரற்ற ஒருபொருளை எதிர்கொள்வது என்பது மனித இருப்பை அச்சுறுத்துவதாகவும் ஒருவகையில் அவனது இருப்பைக் குலைக்கக் கூடியதுமாகவே அமையும். அதனால் மனிதன் எதிர்கொண்ட ஒவ்வொரு பொருளுக்கும் பெயரிடுதல் என்பது அப்பொருளைத் தன்னுடைய இருத்தலின் சூழலுக்குக் கொண்டுவருவதற்கான ஒரு வினையாகவே அமைந்திருக்கிறது. இந்நிலையில் மொழி என்பதன் மூலமாக மனிதன் தனது சூழலின்மீதான முதல்வினையைத் தொடங்குகிறான். எனவே மொழி என்பதே அறிவாகவும் அறிவு என்பதே பொருளின் மீதான ஆதிக்கமாகவும் செயல்படுகின்றன" என்கிறார் நாவலின் முதலில் பிரேம்.

வெவ்வேறு சூழல்களில் வாழ்கிற இனங்களாகிய மனிதத்தொகுதிகளுக்கு வெவ்வேறு பெயரிடல்கள் சாத்தியப்படுகின்றன. அவை ஒன்றோடொன்று உராயும் போது நிகழ்வதென்ன என்பதையும் பிரேம் விளக்குகிறார்: "மொழியின் மூலமாக அமைக்கப்பாக்கப்பட்ட அறிவும் அறிவின் மூலமாகக் கட்டப்பட்ட ஆதிக்கமும் சீரற்ற பரவலை நிகழ்த்தும்போது அமைப்புக்குள்ளான ஓர் ஆதிக்கச்சமச்சீரின்மை உருவாகிறது. இதுவே இன்றைய சுரண்டலை அடிப்படையாகக் கொண்ட அதிகார அமைப்புக்கு மூலமாக அமைந்திருக்கிறது. இருவேறு நிலவியல்-சூழல்களில் (geographical environment) வளர்ந்த இரு மனிதக்குழுக்கள் தத்தமது சூழலியல் சார்ந்து ஒரு தொழில்நுட்பத்தை, அதாவது அறிவை (மொழியை) வளர்த்துக்கொண்டிருக்கும். இங்கு தனிப்பட்ட மனிதக்குழுக்களுக்குள்ளான மொழி என்பது பொருளுக்கும் பொருளை அறிதல் என்பதற்கும் இடையிலான முரண்பாட்டைக் கொண்டதாகவும் அமைந்திருக்கும். இந்த இருவேறு மனிதக்குழுக்களின் சமூககாலம் என்பதில் நேரும் வேறுபாடு அவை வளர்த்தெடுத்துக்கொண்டிருக்கும் தொழில்நுட்பம் சார்ந்த அறிவு என்பதிலும் ஒரு வேறுபாட்டைக் கொண்டதாக அமையும். இங்கு இரு மனிதக்குழுக்களும் தமக்கேயான அடையாளங்களோடு கூடிய இனங்களாக வடிவமைந்திருக்கும். இரு இனக்குழுக்களும் ஒன்றையொன்று எதிர்ப்படும்போது அவற்றுக்கிடையிலான சமச்சீரற்ற தொழில்நுட்ப அறிவால் ஓர் ஆதிக்க மோதலைச் சந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன. இந்த இடத்தில் எந்த இனக்குழு தனது தொழில்நுட்ப அறிவால் மேலோங்கியிருக்கிறதோ அந்த இனக்குழு மற்றொரு இனக்குழுவை மேலாதிக்கம் கொள்ளும் ஒரு செயலைச் சாதித்துவிடுகிறது."

ஆக, வெவ்வேறு நிலவியல்-பரப்புகளில் (topography) வாழ்கின்ற இனங்களாகிய மனிதத்தொகுதிகள் மூலமாக, இத்தொழில்நட்ப வித்தியாசம், வெவ்வேறான வடிவங்களில் மோதிக்கொள்கின்றன. இந்த மோதல் பற்பல குறியீடுகளைச் சுற்றி நடைபெறுவதால், இதில் வெற்றி-தோல்வி என்று எதுவுமே அறுதியானதாக இருப்பதில்லை. இத்தகைய மோதலில் ஈடுபடுத்தப்படுகிற நபரான, மனிதத்தொகுதி, உடல்ரீதியாகத் தன்னைப் பொருண்மைப்படுத்திப் பார்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.

இங்கே உடல் என்பதை உழைப்பில் ஈடுபடுத்தப்படும் அங்கங்கள் (organs) என்றோ பாலுறுப்புகள்-வழி இன்பந்துய்ப்பில் (orgasms) ஈடுபடுத்தப்படும் "காயம்" என்றோ கருதிவிடக்கூடாது. மாறாக, உடல் என்பதை நரம்பியல்-சாத்தியப்பாடுகள் தம்மை மீறல்களாகப் (excesses, transgressions) பல்வேறுவழிகளில் வெளிப்படுத்தித்கொள்ளும் கட்டமைப்பு (bundle) என்று கொள்ளலாம்.

இந்த நரம்பியல்-சாத்தியப்பாடுகள் ஒருமுகப்படுத்தப்பட்டு விடும்போது (homogenous) உடல்கள் ஒன்றிணைக்கப்பட்டு அரைவு ஏற்படுகிறது. உற்பத்தி என்பதும் (production) உபரியும் (surplus) உபரியைத் தக்கவைத்துக்கொள்கிற, ஒருமுகமாகச் செலவழிக்கிற கலாச்சாரமும் (culture) என்கிறதும் வருகின்றன. மாறாக, இவை பன்முகப்படுத்தப்பட்டு விடும்போது இந்தப்போக்கு சிதைக்கப்படுகிறது: உற்பத்தி ஒய்கிறது; கலாச்சாரம் எனத் தேர்ந்தெடுக்கப்படுகிற ஒன்று உருவாகும் போக்கு சிதைக்கப்பட்டு, பன்முகமாகி மீறல்கள் சாத்தியமாகின்றன: அழகியல் மதிப்பீடுகள் அழிகின்றன: கனவுலகம் சிதைந்துபோகிறது; சாவைப்பற்றிய பயமானது போய், சாவுக்கான இடைவெளியானது இங்கே பொருண்மையாகச் செயலாற்ற விழைகிறது. இப்படிச் செயல் சாத்தியமாகும்போதுதான் மாற்றமும் சாத்தியம் என்கலாம்.

அடிக்குறிப்புகள்:

1. Jean-Francois Lyotard, Discours, figure, p. 53 cited in Parasthetics, David Carrol (Metheun, 1987) p. 33.

அந்நியனினது பின்னூட்டம்.

நாகார்ஜுனன்,

உங்கள் மொழி-> அறிவு-> அதிகாரம் வழிப்பட்ட சிந்தனைகளை இன்னும் விரிவாக ஆராயலாம். இதன்வழி நாம் பின்னோக்கிச்சென்றால், அதிகாரம்-> அறிவு-> மொழி-> குறியீடு-> சூழல் என்னும் இடத்தில் வந்து நிற்கவேண்டியிருக்கும். இவ்வகையான சிந்தனைமுறைகள் இவ்வழி இடம்பெறுவதே கூடுதலான பலனைத் தரக்கூடும் என்பது என் கருத்து.

அதிகாரம் பற்றிய உரையாடலை மொழியில் இருந்து தொடங்கும் போது 'மனித குலம்' என்கின்ற பொதுவெளியை அதன் தளமாகக் கொள்ள வேண்டிவரலாம். அது பல வகைகளில் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும். மற்றைய உயிரினங்களுக்கும் சூழலில் இருந்து 'கட்டமைக்கப்படும்' விடயங்கள் சார்ந்த குறியீடுகளும் அதன் வழியான அனுபவங்களும் இருக்கின்றன. இங்கே, மொழிப்பயன்பாடு என்பது மனித வெளியில் இருந்து ஆரம்பிப்பதே எமது உரையாடலை இங்கே தொடங்குவதற்கான காரணமாகப் புரிந்துகொள்கிறேன். ஆயினும் சில புரிதல்களுக்காக நாம் தொடங்க வேண்டிய புள்ளி 'மொழிக்கு' முந்தைய நிலைவரை செல்ல வேண்டும் என்பதே என் கருத்து.

ஏனெனில் மொழிக்கு முந்தைய நிலைகள் குறியீடுகளும் அனுபவங்களும் (அவை கூட ஒரு வகையான மொழியாக இருக்கும் போதிலும்) வாசகர்களுக்கு விளங்காமலே போகக் கூடும். ஆக, அதிகாரத்தின் தோற்றுவாய், மொழிக்கும் முற்பட்ட நிலையாகக் கருதப்பட வேண்டும். ஏனெனில் அதிகாரம் 'மொழிக்கு' முந்தைய நிலையிலேயே கட்டமைக்கப்பட முடியும். (இங்கே மொழி என்பது 'பேசும் மொழி' எனக் கருத்துருவாக்கப்படதாக நான் நினைக்கிறேன். ஆயினும் நான் மொழி என்பதை குறியீடு மற்றும் அசைவுமொழிகள் என்பனவற்றையும் சேர்த்து கூற முயற்சிக்கிறேன்).

'மனிதன்' அல்லாத இடங்களிலும் இவ்வாறாக கட்டமைக்கப்பட்ட சூழலை காண்கிறோம். இவ்விடத்தில் பிரேம் கூற நினைக்கும் 'மொழி' தொடர்பான விடயங்கள் ஒருவித homogenous தன்மையுடையதைப் போலப் படுகின்றது. அது தொடர்பாகப் பலவிதமான கேள்விகளும் வருகின்றன.

இங்கே நான் கூறும் சூழல்-> குறியீடு-> மொழி-> அறிவு-> அதிகாரம் என்பதை, இன்னும் விளக்கமாக உரையாடும் போதே சில தெளிவுநிலைகளுக்கு வரமுடியும் என நினைக்கிறேன். அதிகாரம் சுழலில் செல்வாக்கு செலுத்துகின்றது. அதிகாரத்திற்கு இசைவான சூழல் கட்டமைக்கப்படுகின்றது. சூழல் மொழியைக் கட்டுப்படுத்துகின்றது. இங்கே, இவை மாறிமாறி ஒன்றையொன்று வெவ்வேறு சதவீதங்களில் இருப்பைப் பலப்படுத்தும் நோக்கில் அதிகாரத்தினூடே கட்டுப்படுத்தப்படுகின்றன. 'பெண்' என்னும் பாத்திரம் கட்டமைக்கப்பட்டது தொடர்பாகவும் அதற்கு மொழி எவ்வாறெல்லாம் ஒத்தாசை புரிந்தது, 'பெண் உடல்' மொழியூடாகக் கட்டுப்படுத்துவது - இவை தொடர்பாக எமக்கு புதிய சாட்சிகள் தேவையுமல்ல.

இங்கே, தர்க்கவியல் மற்றும் பரிசோதனைகள் ஊடாகவும் க்ட்டமைக்கப்பட்ட அறிவியல் என்பதுகூட, ஏற்கனவே கட்டமைக்கப்பட்ட சூழல் சார்பானதே. அவற்றின் தளத்திலும் சாட்சியாகவுமே அவற்றின் நகர்வுகள் இடம்பெறுகின்றன.

உதாரணமாக பெண்-மருத்துவம் தொடர்பான கல்விப்பரப்பு, கட்டமைக்கப்பட்ட பெண் தொடர்பானதே. அங்கே, அக்கல்விமுறை கட்டமைக்கப்பட்ட பெண் உடல் சார்ந்து மீறலை விரும்புவதில்லை. அவற்றைப் பேணவே எத்தனிக்கிறது. உயிரியல்ரீதியான பால்வேறுபாடு தவிர்த்து ஏனையவை அனைத்துமே கட்டமைக்கப்படுவதாகவே ஜூடித் பட்லர் வாதிடுவார்.

இங்கே, நான் உங்களுடன் உடன்பாடான விடயங்களைக் கூறினேன். இனி கூற எத்தனிப்பது உடன்பாடின்மைகள் அல்ல. உங்களது விடயக்குவிப்பிற்கு சற்று வெளியே இருப்பவை. ஆயினும் அவசியமானவை.

நான் ஏற்கனவே கூறியபடி சூழல், குறியீடு, மொழி, அறிவு, அதிகாரம் போன்றவற்றை ஒருமுகத்தன்மையில் கூற முடியாதவை. பரந்த சமூகத்தைப் பொறுத்தவரை அது மொழியால் ஒருங்கிணைக்க்ப்படுகிறது. அவ்விடத்தில் மொழி முக்கியத்துவம் பெற்றுவிட்டது எனவே கூற முடியும். ஒரு குடும்பத்தை எடுத்துக்கொண்டால் அங்கே தனியே மொழி மாத்திரம் அல்ல, வேறுவகையான காரணிகள் 'பலமான' செல்வாக்குச் செலுத்துகின்றன. ஆயினும், பெரிய அளவில் மொழியில் நிகழும் பன்முகமாதல் மூலம் கட்டமைக்கப்பட்ட 'கலாச்சாரம்' ஆட்டம் காணுகின்றது. அங்கே, மொழி முதன்மை பெறுகின்றதாகவே கூறப்பட வேண்டுமே தவிர அதன்மூலமாகத்தான் என்றல்ல.

அடுத்து, இருவேறு நிலவியல்-சூழல்களில் தம்மை வளர்த்துக்கொண்ட மனிதக்குழுக்கள் தொடர்பான விடயம் சார்ந்து நீங்கள் கூறிய கருத்துக்கள் தொடர்பாகவும் சில விடயங்களை மேலதிகமாகச் சொல்லலாம் என நினைக்கிறேன். இங்கே, தொழில்நுட்பம் சார்ந்த அறிவிலும் பலவகையான வேறுபாடுகள் காணப்பட்ட போதிலும் அவை மாத்திரம் காரணியாகிவிட முடியாது என்பதே எனது கருத்து. மேற்குலகம் வளர்த்த மருத்துவ அறிவின்முன்பு கிழக்கு வளர்த்த அறிவு தேக்கம் கண்டு காணாமல் போகப்போவதை அறிவோம். அது மட்டுமல்லாமல் தர்க்கவியல் மற்றும் பரிசோதனைமுறைகளின் அடிப்படையில் வளர்த்தெடுக்க்பட்ட அறிவியல், ஐன்ஸ்டீனுக்குப் பிற்பாடு முட்டி மோதியதை நாம் அறிவோம். குவாண்டம் இயற்பியலைக் கடக்க வளர்த்தெடுக்கப்பட்ட பாதைகளை மறுக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டது. 'இரண்டுமாகி இருத்தல்' என்பது வளர்த்தெடுக்கப்பட்ட அறிவியலின் அடிப்படைக்கே முரணாகி நின்றது.

காலனித்துவத்தின்போதும் சரி, பின் காலனியத்தின் போதும் சரி அதனை ஐரோப்பா தக்கவைத்துக் கொண்டது தனியே 'அறிவு' சார்ந்து அல்ல. அறிவு முக்கியப் பங்காற்றியது என்பதை நான் மறுக்கவில்லை. இயற்கையை வெல்ல வேண்டிய சூழலில் வளர்ந்த ஐரோப்பிய சமூகம் சில வகையான அடக்குமுறைகளை உபயோகிக்கக்கூடிய அறிவைத் தன்வசம் வைத்திருந்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. அது மட்டுமல்ல, தன் வளர்ச்சிக்கு அது 'எதிர்கொண்ட சவால்கள்' முக்கிய பங்காற்றின. (இன்றைய அமெரிக்க பொருளாதாரத்தின் வீழ்ச்சிக்கான காரணிகளில் ஒன்றென - அமெரிக்கர்கள் சவால்களைச் சந்திக்க தயார் இல்லாத நிலையை அடைந்ததும் சொல்லப்படுகிறது.
இப்போக்கு கீழைத்தேய நாடுகளில் அவர்கள் எப்போதும் தங்கியிருக்கப் போவதையே எமக்கு உணர்த்தி நிற்கின்றது). இயற்கையுடன் ஒன்றிணைந்த வாழ்வென்பது தென் அமெரிக்க, ஆப்பிரிக்க, ஆசிய மக்களின் வாழ்வியல் நடைமுறையாக ஓரளவுக்காவது இருந்திருக்கிறது. பின்-காலனித்துவ ஆய்வுகள் என்பது இது சாரப்படவும் செய்யப்பட வேண்டியமை அவசியம் எனவே கருதுகின்றேன்.

நீங்கள் குறிப்பிடும் பன்முகப்படுத்தப்படுத்தல் நிகழும் போது சிதைவுடையும் கலாச்சாரத்துடன் உடல்கள், தன்னிலைகள் என அனைத்தும் மாற்றமுறுகின்றன. சிதைந்து போகின்றன. அந்நிகழ்வு முக்கியமானதே...

இனி, இவை தவிர்த்து 'அறிவுஜீவிகள்' தொடர்பாக எட்வார்ட் சையத் கூறிய கருத்துக்கள் மிக முக்கியமானவை. எட்வார்ட் சைத் இனது The Public Role of Writers and Intellectuals என்ற கட்டுரையும் அவர் தம் Orientalism புத்தகத்தில் கூறும் பார்வைக்கோணமும் முக்கியமானவை. அங்கே கட்டமைக்கப்பட்ட 'அறிவை' முன்வைத்துக் கூறும் கருத்துக்களை மொழி அடிப்படையிலேயே நாம் பார்க்க வேண்டியுள்ளது.

இவை தொடர்பாக மேலதிகமாக உரையாட விருப்பமே. உங்களது மின்னஞ்சல் முகவரியை தரமுடிந்தால் சில மின்-நூல்களை அனுப்பி வைக்க முடியும்.

மேலும் ஒரு கேள்வி. C-THEORY இல் எவற்றையும் பதிவிறக்கம் செய்ய முடியவில்லை.

சில மேலதிக வாசிப்புகள்.

http://www.thenation.com/doc/20010917/essay

http://www.thenation.com/doc/20011022/said

நன்றி

அந்நியன்.

நாகர்ஜுனனினது பின்னூட்டம்.

1. சுமார் இரு தசாப்தங்களுக்கு முன்பு பிரேம், நான் எழுதியவற்றை முன்வைத்துக் கேட்கிறீர்கள்...

2. முதலில் வந்தது எது என்ற பிரச்னையும் தேடலும் in search of origins என்கிற தேடலுக்குள் நம்மைத் தள்ளிவிடும். மனித குலம், மனிதமற்றது இரண்டுக்கும் நடுவிலான ஊடாட்டங்களில் ஒன்று மொழி. அதை குறியீட்டுப்பரப்புகளில் ஒன்றாகக் கொண்டு சிந்தனையைத் தொடரலாம். எது முன்னது எனகிற கேள்விக்கு எளிதான விடையில்லை. அவற்றை இணைநிகழ்வாகக் கொண்டுவிட வேண்டியதுதான்.

3. நிலப்பரப்பு, தொழில்நுட்ப வித்தியாசங்களில் மோதல் வரும்போது என்ன ஆகிறது.. இங்கே வழக்கமான வெற்றி-தோல்வி என்பது திசைமாறும் நிலைக்கான சாத்தியம் எப்போதும் உண்டு. எடுத்துக்காட்டாக,
மற்றவர்ளை, இயற்கையை வென்ற மேற்குலகும் பிறகு அதைப் பின்தொடர்ந்த பிற சமுதாயங்களும், அந்த வெல்லும் உணர்வை வெல்ல முடியாமல் (Mastery of mastery of nature) திணறுகின்றன... இன்று 'இயற்கை' என எஞ்சியிருக்கும் ஒன்றே இந்த 'மனித குலத்தின்' தயவில் இருப்பதுதான். தற்பாதுகாப்பு கருதி 'மனித குலம்' விட்டுவைத்திருப்பதே 'இயற்கை'.
ஓரளவு மிஷெல் ஸெர், ப்ரூனோ லத்தூர் எழுத்துக்களை, விவாதங்களை வாசித்தால் இது புரியும்.

4. முதலீட்டிய அரசியலின் எல்லைகள் மட்டுமின்றி தன்-அடையாள அரசியலின் எல்லைகளும் 'மனித குலத்தை', 'இயற்கையை' நெருக்குகினறன. எட்வர்ட் சையத் போன்றவர்கள் இதைக் கவனிக்கவில்லை எனலாம்.

5. c-Theory இணையதளத்தில் உள்ள கட்டுரைகளை copy and paste செய்ய வேண்டியதுதானே!

நாகார்ஜுனன்.


ஜமாலனது பின்னூட்டம்.

அடையாள அரசியல் பற்றிய இந்த உரையாடல் பல திறப்புகளைக் கொண்டது. ”அடையாளமற்ற வெளி“ அவர்களின் கீழ்கண்ட கருத்துதான் எனது புரிதலுக்கு சிக்கலானதாக உள்ளது.

//மொழிக்கு முந்தைய நிலைகள் குறியீடுகளும் அனுபவங்களும் (அவை கூட ஒரு வகையான மொழியாக இருக்கும் போதிலும்) வாசகர்களுக்கு விளங்காமலே போகக் கூடும். ஆக, அதிகாரத்தின் தோற்றுவாய், மொழிக்கும் முற்பட்ட நிலையாகக் கருதப்பட வேண்டும். ஏனெனில் அதிகாரம் 'மொழிக்கு' முந்தைய நிலையிலேயே கட்டமைக்கப்பட முடியும். (இங்கே மொழி என்பது 'பேசும் மொழி' எனக் கருத்துருவாக்கப்படதாக நான் நினைக்கிறேன். ஆயினும் நான் மொழி என்பதை குறியீடு மற்றும் அசைவுமொழிகள் என்பனவற்றையும் சேர்த்து கூற முயற்சிக்கிறேன்).//

மொழியை ஒரு விரிந்த புலத்தில் அதன் குறியில், பாவனைகள் மற்றும் சைகைகள் என பேச்சுநிலை மற்றும் பேச்சற்ற பாவனை நிலை இரண்டிலும் விரிக்கும்போது, மனித நடவடிக்கை அல்லது செயல்கள் துவங்கியபோதே மொழிச்செயல் துவங்கிவிடுகிறது எனக்கொள்ள வேண்டியுள்ளது. அப்படியிருக்கையில் அதிகாரம் எப்படி மொழிக்கு முந்தையதாக இருக்க முடியும்? அதிகாரம் என்பதும் ஆதிக்கம் என்பதும் ஒன்றல்ல? (ஆதிக்கம் என்பதை மனிதப்பண்பாகவும் அதிகாரம் என்பதை அரசியல் சொல்லாடலாகவும் புரிந்துகொண்டுள்ளேன்.) ஆதிக்கம் என்கிற நிலைதான் அதிகாரத்திற்கான தோற்றமூலம் என்பதாக புரிந்துகொண்டால் இயற்கையாக ஒன்றின்மீது ஆதிக்கம் செலுத்த வேண்டிய நிலை எங்கு? எப்பொழுது? எதனிடம்? எதற்காக? ஏற்படுகிறது என்கிற கேள்விகள் வருகின்றன. ஆண் பெண் என்கிற மூலமுதல் அடையாளத்திலிருந்து இந்த ஆதிக்கமும் அதனால் கட்டமைக்கப்பட்ட அதிகாரமும் துவங்குகிறது எனக்கொள்ளலாமா? ஆக, அடையாளம் என்பது அடிப்படையில் ஆதிக்கத்திற்கான ஒரு சொல்லாடலாக புரிந்து கொள்ளப்படக் கூடியதுதானா? என்கிற கேள்வி அடுத்து வருகிறது? அடையாள அரசியலை எப்படி நாம் கையாள்வது? அடையாளமற்ற வெளியோ? இருத்தலோ சாத்தியமா? என்கிற கேள்விகளும் இத்துடன் இணைந்து வருபவையே. இவை நீண்ட அவசியமான உரையாடலுக்கானவை. நமக்குமுன் எழும் சிக்கல் நிராகரிக்கப்பட வேண்டிய அடையாள அரசியலை இன்று நிராகரிக்க முடியுமா? என்பதுதான்.

அன்புடன்
ஜமாலன்.


நாகர்ஜுனன் பின்னூட்டம்.

ஜமாலன்,

1. மனித குலம்-மனிதமற்றது இரண்டுக்குமான ஊடாட்டங்களில் ஒன்று மொழி. எது முதலில் வந்தது என்ற பிரச்னை, நம்மை மூலமுதல் தேடும் (in search of origins) போக்குக்குள் தள்ளிவிடும். ஒருங்கே என்று பார்க்கும்போது இந்தத்தேடலை மட்டுப்படுத்தலாம், தவிர்க்கலாம்.

2. மனிதப்பண்பு என ஏதாவது உண்டா என சாம்ஸ்கியுடன் நடத்திய விவாதத்தில் ஃபூக்கோ கேட்கிறார். படைத்தல் (creativity) என்ற முனையிலிருந்து பேசும் சாம்ஸ்கிக்கு அவர் முன்வைத்த கேள்வி அது. தவிர, ஆதிக்கம் என்பது மனிதப்பண்புகளில் ஒன்றாக வேண்டுமானால் இருக்கலாமே தவிர அதுவே மனிதப்பண்பல்ல.

3. அதிகாரம் என்பது மனிதம்-மனிதமற்றதன் இடையிலான உறவுநிலை எனப்புரிந்துகொண்டால், சொல்லாடல் என்பது மொழியின் அடித்தளம் என ஏற்கலாம். இங்கே, தமிழில் பலர் எழுதும்போது சொல்லாடலைப்பேசும்போது, அரசியல்-சமுதாயக்களத்தை மட்டும் முன்நிறுத்திக்கொள்கிறார்கள். இப்படிப்பிரிப்பது சாத்தியமில்லை. சொல்லாடலை ஃபூக்கோ இப்படி விவரிக்கவுமில்லை. இது தொடர்பாக, ஃபூக்கோவின் The Order of Things, Archaeology of Knowledge புத்தகங்களில் நிறைய இருக்கிறது. Culture Studies செய்வோர் இதுபற்றிக் கவலைப்படுவதில்லை. அவர்களுக்குத் தன்-அடையாள அரசியல், விளிம்புநிலை அரசியல் போதுமென்றாகிவிட்டது.

4. தன்-அடையாள அரசியல் என்பது சிந்தனாரீதியாக ஒருவழியாக முட்டுச்சந்தை அடைந்திருக்கிறது. செயல்ரீதியாகக் கூட்டக்கொலை-தற்கொலை ஆகியவை அதன் தீவிர முனைகள். இவற்றைத் தாண்டி இருந்துவந்த சாத்தியங்கள் வேகமாகக் காலியாகிவருகின்றன. அடையாளத்துக்குப் பிரபஞ்ச இருப்பு
இனியும் தேவையில்லை. ஆக, அடையாளம் என்பது வெறும் அரசியல்-சமுதாயக்களத்துடையதாகச் சுருங்கிவிட்டது. அதற்குமேல் அது விரியவில்லை. தென்னாசியப்பரப்பில் நிலைமைகள் பல இப்படித்தான் இருக்கின்றன.

4. ஆக, அடையாளமற்ற வெளி என்பது பிரபஞ்சம்தான் என்ற விஷயத்தில் - அதில் சமுதாயம் என்பது இல்லை என்பதால் - ஒருபுறம் மகிழ்ச்சியும் இன்னொருபுறம் கவலையும் கொள்ளலாம்.

நாகார்ஜுனன்


ஜமாலனது பின்னூட்டம்.

//1. மனித குலம்-மனிதமற்றது இரண்டுக்குமான ஊடாட்டங்களில் ஒன்று மொழி. எது முதலில் வந்தது என்ற பிரச்னை, நம்மை மூலமுதல் தேடும் (in search of origins) போக்குக்குள் தள்ளிவிடும். ஒருங்கே என்று பார்க்கும்போது இந்தத்தேடலை மட்டுப்படுத்தலாம், தவிர்க்கலாம்.//

உண்மைதான். அந்த பார்வை மூலமுதல் தேடுதலை மட்டுப்படுத்தவதற்கு “ஒருங்கே“ என்று பார்ப்பதே சரி. காரணம் முதலில் எது? என்பதே இரண்டாவது வந்தபிறகுதான் சாத்தியம். அதனால் இரண்டுதான் முதலுக்குமான தோற்றம் என்பதாக இதனைப் புரிந்து கொள்வது நல்லது என நினைக்கிறேன். இந்த முதல் இரண்டு என்கிற வரிசையே ஆதிக்கம் சார்ந்ததுதானே. அதனால் ஒருங்கே தோன்றியது என்பதுவே சரியான பார்வையாக இருக்கும்.

//2. மனிதப்பண்பு என ஏதாவது என சாம்ஸ்கியுடன் நடத்திய விவாதத்தில் ஃபூக்கோ கேட்கிறார். படைத்தல் (creativity) என்ற முனையிலிருந்து பேசும் சாம்ஸ்கிக்கு அவர் முன்வைத்த கேள்வி அது. தவிர, ஆதிக்கம் என்பது மனிதப்பண்புகளில் ஒன்றாக வேண்டுமானால் இருக்கலாமே தவிர அதுவே மனிதப்பண்பல்ல. //

ஆதிக்கம் என்பது மனிதப் பண்புகளில் ஒன்று என்பதுதான் சரி. ஒருவேளை நான் எழுதும்போது மனிதப்பண்பு அதுவே என்பதுபோல் எழுதி விட்டோனோ? அந்த அர்த்தம் தவறானதே. ஆதிக்கம் அதிகாரம் வேறுபாட்டை சொல்லவே அதனை சொன்னேன். மனிதப்பண்பு என்கிற ஒன்று இருக்கிறதா? என்பதுகூட தீவிரமான கேள்விதான்.

//3. அதிகாரம் என்பது மனிதம்-மனிதமற்றதன் இடையிலான உறவுநிலை எனப்புரிந்துகொண்டால், சொல்லாடல் என்பது மொழியின் அடித்தளம் என ஏற்கலாம். இங்கே, தமிழில் பலர் எழுதும்போது சொல்லாடலை, அரசியல்-சமுதாயக்களத்தை மட்டும் முன்நிறுத்திக்கொள்கிறார்கள். இப்படிப்பிரிப்பது சாத்தியமில்லை. சொல்லாடலை ஃபூக்கோ இப்படி விவரிக்கவுமில்லை. இது தொடர்பாக, ஃபூக்கோவின் The Order of Things, Archaeology of Knowledge புத்தகங்களில் நிறைய இருக்கிறது. Culture Studies செய்வோர் இதுபற்றிக் கவலைப்படுவதில்லை. அவர்களுக்குத் தன்-அடையாள அரசியல், விளிம்புநிலை அரசியல் போதுமென்றாகிவிட்டது.//

இதனை முழுமையாக ஏற்கிறேன். சொல்லாடல் என்பது, discourse என்பதற்கு, தாங்களால் தமிழுக்குத் தரப்பட்ட ஒரு அற்புதமான சொல். அது இன்று சராசரி டீக்கடை பெஞ்ச் அரசியலுக்கும் பயன்படும் ஒன்றாக மாறிவிட்டது. அது அர்த்தமற்ற நிலையில் புழங்கப்படும் ஒன்றாகிவிட்டது. போகட்டும். உண்மையில் நமது பிரச்சனை இதுதான். அடையாள அரசியல் குறித்து அச்சமூட்டும் நிலையே உருவாகிக் கொண்டு உள்ளது. இங்கு எழும் கேள்வி.. ஒடுக்கப்பட்ட, விளிம்புநிலை, சிறுபான்மையினர் மற்றும் உள்ளடக்கப்பட்ட தேசிய அடையாளங்களின் அரசியல் பாத்திரத்தை எப்படி பார்ப்பது என்பதுதான்?

தெல்யுஸின் becoming minority என்பது குறித்து நீங்களோ அல்லது வேறு யாராவதோ அறிமுகம் செய்தால் பயனுள்ளதாக இருக்கும். இது எனது தனிப்பட்ட வேண்டுகோள்.

//4. தன்-அடையாள அரசியல் என்பது சிந்தனாரீதியாக ஒருவழியாக முட்டுச்சந்தை அடைந்திருக்கிறது. செயல்ரீதியாகக் கூட்டக்கொலை-தற்கொலை ஆகியவை அதன் தீவிர முனைகள். இவற்றைத் தாண்டி இருந்துவந்த சாத்தியங்கள் வேகமாகக் காலியாகிவருகின்றன. அடையாளத்துக்குப் பிரபஞ்ச இருப்பு
இனியும் தேவையில்லை. ஆக, அடையாளம் என்பது வெறும் அரசியல்-சமுதாயக்களத்துடையதாகச் சுருங்கிவிட்டது. அதற்குமேல் அது விரியவில்லை. தென்னாசியப்பரப்பில் நிலைமைகள் பல இப்படித்தான் இருக்கின்றன. //

இதுதான் கவலைக் கொள்ளும் விஷயமாக உள்ளது.

//4. ஆக, அடையாளமற்ற வெளி என்பது பிரபஞ்சம்தான் என்ற விஷயத்தில் - அதில் சமுதாயம் என்பது இல்லை என்பதால் - ஒருபுறம் மகிழ்ச்சியும் இன்னொருபுறம் கவலையும் கொள்ளலாம். //

:) (:

5. c-Theory இணையதளத்தில் உள்ள கட்டுரைகளை copy and paste செய்ய வேண்டியதுதானே!

- எந்த ஒரு வலைப்பக்கத்தையும் அல்லது வலை தளக் கட்டுரைகளையும் பதிவிறக்கம் செய்வதற்கு அதனை பிரின்ட் போட்டு PDF Printer -ல் PDF File ஆக மாற்றி செகரித்துக் கொள்ளலாம். அதற்கான PDF Convert Software இங்கு இலவசமாக பதிவிறக்கம் செய்த உங்கள் கணிப்பொறியில் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம். சுட்டி இங்கு..

http://www.primopdf.com/

http://www.download.com/PrimoPDF/3000-10743_4-10264577.html?part=dl-10264577&subj=dl&tag=button

நன்றி உங்களது விரிவான விளக்கத்திற்கு.

அன்புடன்

ஜமாலன்.


அந்நியனது பின்னூட்டம்.

ஜமாலன்,
நான் மொழி எனக் கருதியது 'பேசும் மொழிக்கு' முந்தைய நிலையை என்ற போதிலும், இங்கே நாகர்ஜுனன் குறிப்பிட்டதைப் போன்று 'பேச்சு மொழியை' கருதியே அக்கருத்தைக் கூறியிருந்தேன். சூழல் மீதான எதிர்வினை என்னும் போதே அதிகாரம் தோன்றிவிட்டது என்பதையே கூற எத்தனித்தேன். மொழி, அறிவு, அதிகாரம் என்னும் விடயப்பரப்பு எம்மை சமூகவியல் பரப்பினுள் மாத்திரம் அடக்கிவிடக் கூடும் என்ற அபாயம் கருதியே எனது கருத்து அதற்கு முந்தைய நிலைகளை பேச எத்தனித்தது. ஏனெனில் அதன்வழி மானுடவியல் மற்றும் உயிரியல் துறைகளை இணைந்த உரையாடல் தொடங்கப்பட வேணும் என்பது எனது விருப்பாக இருந்தது.

இங்கே, 'அதிகாரம்' என்பதன் மூலங்களில் ஒன்றாக 'அறிவு' இடம்பறுகின்றது. அறிவின் தோற்றுவாய்களில் ஒன்றாக மொழி இடம்பறும் தருணத்தில், மூலத்தோற்றுவாய் மொழி என்ற கருத்தடிப்படையில் எமது உரையாடல் தேங்கிப் போகின்றது. 'அனுமதிகப்பட்ட சொற்களும்' 'தேங்கிப் போன கருத்தாடல்களும்' எமக்கு உருவாக்கும் அறிவே அதிகாரத்தின் தோற்றுவாயாக உள்ளது. மீள் அனுமதிப்பிற்கு உள்ளாகும் சொற்கள் காலப்போக்கில் சில வெளியொதுக்கல்களை நிகழ்த்தும். அதன் வழி உருவாகும் அறிவு அதிகாரமாக உருப்பெறும். அங்கே முன்னர் மீள் அனுமதிப்பிற்கு உள்ளாகாத சொற்களின் அரசியல் மீது ஒடுக்குமுறையாகக் கவியும். இங்கே தான் மொழி தேங்கிப் போகாமல் இருப்பதற்காக பிரேம் கூறுவதைப் போன்று ஒழுங்குகளைக் கலைக்க வேண்டியுள்ளது. அதன் தேவை அவசியம் என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை. இது சமூகவியல் தளத்துடன் நெருங்கிய தொடர்புள்ளது.

ஆனால், நான் இங்கே அதற்கு மேலதிகமாக சில விடயங்களைச் சொல்ல விழைந்தேன். சமூகவியல் தளத்துடன் இணைந்த உயிரியல் நடத்தை தொடர்பான கிளைப்பாதையே நான் தேர்ந்தெடுத்த பகுதியாகும். பேசும் மொழிக்கு முந்தைய 'மொழி' மற்றும் 'நடத்தைச்' செயற்பாடுகள் கட்டமைக்கும் அதிகாரமும் மேற்கூறிய சமூகவியல் கிளைக்குச் சமாந்தரமாக வரும் இன்னுமொரு கிளைப்பாதை எனலாம். இங்கே நடத்தைச் செயற்பாடுகள் என்னும் போது சூழல் மீதான எதிர்வினை என்பதில் இருந்தான அதன் ஆரம்பம், சில நடத்தைகளை மீள் அனுமதிக்கிறது. திரும்ப திரும்ப நிகழும் செயற்பாடுகள் சில 'தேங்கிப் போன' செயற்பாடுகளை உருவாக்கும். அவை சில நடத்தைச் செயற்பாடுகள் மீது வெளியொதுக்கலை நிகழ்த்தும். அங்கேயும் இதற்குச் சமாந்தரமான அறிவும் அதனூடான அதிகாரமும் கட்டமைகப்படுகின்றதென்கிறேன். இவை ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தவை. ஒன்றை விட்டும் ஒன்றை பேசமுடியாது என்பதே எனது கருத்தாக இருக்கிறது. நாகர்ஜுனன் அவர்களது எழுத்தில் நான் நேசிக்கும் விடயங்கள் என்னவென்றால் இவ்விரண்டு பார்வைகளையும் சேர்ந்தவாறான ஒருவித hybrid பார்வை. (அதுவும் சரளமான பார்வை. அவரது அடிப்படைப் பார்வைக் கோணம் மிகவும் வேறுபட்டது என்பது எனது கருத்து.)

மற்றையது உங்களது அடையாளம், அதிகாரம் மற்றும் அரசியம் பற்றிய விடயத்தை நாம் பெரியளவில் அலசவேண்டும் என எதிர்பார்க்கின்றேன். அடையாளமற்ற வெளி அல்லது அடையாளங்களைக் களைதல் என்னும் போது நாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பல. களைவின் நிலவுகையில் பேணப்பட்ட அதிகாரக் கட்டமைப்பின் உச்சியில் அமைந்த கூறுகள் மாத்திரமே நிலைக்கும். களைதல் என்பது இன்னுமொன்றின் பேணுகைக்கும் வித்திடக் கூடும். அதே மாதிரி, 'வேர்களைத் தேடுதல்' என்னும் அடையாள அரசியல் என்பது சிலவகையான தன்னிலை இறுக்கங்களுடன் வெளியொதுக்கல்களை நிகழ்த்தி வன்முறையின் தோற்றுவாயாக மாறிவிடும் அபாயம் உள்ளது. ஆக எம்முன் உள்ள தெரிவுதான் என்ன?

அடையாள அரசியல் நிராகரிப்பிற்கு உள்ளாகும் போதெல்லாம் அது இன்னுமொரு தளத்தில் வலுப்பெறும் என்பதே எனது கருத்து. என்னைப் பொறுத்தவரை இதற்கு தீர்வாக 2 விடயங்களைக் குறுவேன்.

1. அடையாள அரசியலை அதன் வழியில் நின்றவாறு விரைவுபடுத்தல். விரைவுபடுத்தலினூடு அங்கீகாரங்களையும் பரஸ்பர நம்பிக்கைகளைம் வளர்த்தல். அடையாள அரசியலின் தோற்றுவாயும் நோக்கமும் ஒடுக்குமுறைக்கு எதிராக அடையாள முன்னிறுத்தல்களுடன் கூடிய எதிர்ப்புணர்வே. அங்கே அங்கீகரிப்புகளை வேகமாக்குவத்ன் மூலம் 'பிளவுறும் தன்னிலைகள்' வரை அது நீளும். அதன் பின்பு நிகழும் வெறுமையின் பின்பு தேக்கமுறாத 'பொது அடையாளம்' மீண்டும் நிகழும். இறுக்கமான அடையாளங்கள் என்பது அடிப்படைவாதத்துடன் நெருக்கமானது. தமிழ்நாட்டில் 'நிகழ்த்தப்படும்' அடையாள அரசியல் என்பதும் ஈழத்தில் நிகழ்த்தப்படும் அடையாள அரசியல் என்பதும் அடிப்படைவாதங்களுக்கு அண்மையானது. அங்கே வன்முறையும் அமைதியின்மையும் மட்டுமே தீர்வாகும். 'தேசியம்' என்பது அடிப்படைவாதக் கூறாக நிராகரிப்பிற்கு உள்ளான கருத்துருவாக்கம் அதன் மீது கூடவே கவியக் காத்திருக்கும் பாசிசத்தை அடிப்படையாகக் கொண்டதே. ஆனால், தேசியம் = பாசிசம் என்ற வாய்ப்பாட்டை இலகுவாக மனப்பாடம் பண்ணிக் கொண்டு தலித்தியத்தை பாசிசமாக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். இதுதான் எமது அடையாள அரசியல் கேவலம். தேசியம் தனக்கூடாக அனுமதி மறுக்கப்பட்ட வெளிகளைக் கொண்டிருக்கும் என்பதன் அதே உண்மையின் கீழ் தலித்தியமும் உள்ளது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அடிப்படைவாத அடையாள அரசியலை நிகழ்த்த எத்தனிக்கும் ஒவ்வொருவருக்கும் அதனைச் சுட்டிக்காட்டுவது அவசியமானது. எந்தவொரு அடையாள அரசியலின் பின்னும் அடிப்படைவாத மனநிலை ஒழிந்திருப்பதென்பது நாம் மறுத்துவிட முடியாது. ஆயினும், அடையாள அரசியலின் அவ் அடிப்படைவாத மனநிலை தேக்கமுறுவதை தடுப்பதொன்றே எம்முன் உள்ள தெரிவு. அதனை மறுத்தல் என்பது கூட அவர்கள் 'மாற்றம்' அடைவதை தடுப்பதற்கான காரணியாகப் போய்விடும் அபாயம் உள்ளது. அதீத அங்கீகரிப்பின் பின் கூட 'நிரந்தர பொதுநிலை' என்பதை இயன்றவாறு மறுத்தடியிருத்தல் முக்கியமானது. நிரந்தர பொதுநிலை என்பது கூட சிலவகையான இறுக்கங்களை மீண்டும் மேற்கொள்ளத் தொடங்குதல் என்பது மீண்டும் பிழையான விடயமாகக் கூடும்.

இங்கே Deleuze இனது பிளவுறும் தன்னிலை என்பது கூட அடையாள அரசியலின் தொடர்ச்சியே. (வியப்படைய வேண்டாம்.) இறுக்கமாகக் கட்ட்மைக்கப்பட்ட தன்னிலை என்பது சில பாசிச ஒழுகிற்குள் ஆட்பட்டிருக்கும். அதன் பிளவு அதன் பாசிசத்தைச் சிதைக்கக் கூடியது. பிளவு என்பது dynamic ஆக வேண்டும். அங்கே தேக்கமுறாத சூழல் உருவாகும். அடையாளங்கள் இருந்தால் கூட அவற்றிற்கு 'வேலை' இருக்காது. ஒருவித பிரபஞ்சத்தன்மையின் தோற்றமே அதுவாகும். பிளவுறும் தன்னிலைகள் என்பது கூட சில மறுப்புகளை வேண்டி நிற்கும் செயற்பாடே. வலிமையாகக் கட்டமைக்கப்பட தன்னிலைகளுக்கு எதிரான போரில் பிளவுறும் தன்னிலைகள் தோன்றுகின்றன. கட்டமைக்கப்பட்ட தன்னிலையின் இறுக்கம் அதனை நொருக்கி பிளக்கின்றது. தனித்த தனிலையின் இருப்பு என்பது கூட அடிப்படைவாதமாகக் கருதப்பட முடியும். இத்தன்னிலையின் இருப்பு என்பது எமது சூழலால் கட்டமைக்க்ப்படுகின்றது. சூழல் என்னும் போது கருத்துக்கள், நம்பிக்கைகள், சடங்குகள், ஆசைகள் போன்றனவற்றைக் குற முடியும். ஆக, தன்னிலை என்பது கூட ஒருவித அடிப்படைவாத அம்சமே. அக்கட்டில் இருந்து விடுபடும் நோக்கிலேயே தன்னிலைகள் பிளவுற ஆரம்பிக்கின்ற்ன.

2. 'அடையாள'(ஒருமை) அரசியலில் இருந்து அடையாளங்களை (பன்மை) நோக்கிய நகர்வு. இங்கே ஒரு அடையாளத்தினுள் தேங்கிப் போகாமல் இருக்கும் போது அடிப்படைவாத மனநிலையைத் தாண்ட முடியும். ஒவ்வொரு அடையாளமும் ஒன்றையொன்று cross பண்ணியவாறிருக்கும். நிரந்தரப்படுத்தப்படும் போதே பாசிசம் தோன்றுகின்றதென்பேன். எவ்வடையாளங்களும் இறுக எத்தனிக்கும் போது அது தனக்குக் கீழே அனுமதிகப்படாத வெளிகளை வரைகின்றது. அவ்வெளிகள் நசுக்கப்படுகின்றன. எவ்வடையாள ரீதியாலோ இறுக்கமடையாத சூழ்நிலையை உருவாக்க வேண்டியதே அறிவுஜீவிகளின் பொறுப்பே தவிர மாறாக அதனை இறுக்குவது அல்ல.

இவற்றை விட,
தேசிய அடையாளங்கள் என்பது பிற்போக்கானது அல்ல. ஆனால், அவை இலகுவாக பிற்போக்கு பாத்திரத்தை எடுக்கக் கூடியவை என்பது தான் எனது கருத்து. ஆரோக்கியமன தேசிய அடையாளங்களை நாம் நிராகரிக்கவும் முடியாது. தமக்குள் அங்கீகரிப்புக்களைக் கொண்ட தேசிய அடையாளங்களை நாம் எப்போதும் நிராகரிக்க முடியாது. அதன் தேவையை மறுக்கவும் முடியாது. ஈழத்தில் புலிகளால் கட்டமைக்கப்பட்ட தேசியம் பிற்போக்கானது. அடிப்படைவாத மனநிலை கொண்டது. ஆயினும், ஈழத்தில் தமிழ்த்தேசியத்தில் தேவையை பேரினவாதம் நிகழ்த்திக் கொண்டேயிருக்கிறது.
( 'தேசிய' மாதாவுக்கு அ. மார்க்ஸ் உரிஞ்ச சீலையில் வன்னி மக்களின் சீலைகளும் சேர்ந்தே உரிகின்றன. :( ).

ஓரளவு அங்கீகரிப்பிற்கு உள்ளாகிய ஐரோப்பிய நாடுகள் சேர்ந்து இறுதியில் con-federal மூலம் கட்டமைப்பை ஏற்படுத்த எத்தனிக்கவில்லையா? இங்கே தான் நான் சொல்லும் அடையாள அரசியலை விரைவுபடுத்தலும் அங்கீகரிப்புகளை நிகழ்த்துதலும் என்பதும் முக்கியம் பெறுகின்றன. சென்ற நூற்றாண்டின் சம்ஸ்டி எண்ணக்க்கரு இந்த நூற்றாண்டுவரைக்கும் முக்கியமானது. மையநீக்கம் என்பது இறுதியில் கொண்டுவர எத்தனிக்கும் பிரபஞ்ச பார்வை அல்லது சர்வதேசியப்பார்வை என்பதை முக்கியமானதாகவே கருதுகின்றேன். அதீத சுதந்திரத்தில் நிகழும் இணைவு வித்தியானமானது. அதிக அங்கீகரிப்பை கொடுப்பது. வித்தியான அங்கீகரிப்பை நிலைநிறுத்துவது. தம்மளவில் கலப்பதற்கான ஏதுவாய்களைக் கொண்டவை.

இறுதியாக,
'சிறுபான்மை' மற்றும் 'அடையாளம்' போன்றவற்றை நாம் எப்ப்போது 'நிரந்தரமான தளத்தில்' வைத்து அணுக முடியாது. அவற்றை மேம்போக்காக 'நிலைப்படுத்தகூடாது'. அசையும் தன்மையானவை. நெகிழ்ச்சியானவை. அவற்றிற்கு எல்லைகளை வகுக்கும் போதோ அல்லது கோடு கீறும் போதோ நாம் அவற்றிற்கான தேவையை அவ்விடத்தில் இழந்து விடுவது மாத்திரமன்றி அவை பிற்போக்கான பாத்திரத்தை எடுக்கக் காரணமாகிவிடுகின்றோம்.

ஜமாலன்,
c-Theory பற்றிய தகவலுக்கு நன்றிகள்.

-அந்நியன்

நாகர்ஜுனனது பின்னூட்டம்.

முதலில் இங்கு நடக்கும் விவாதத்தை தனிப்பதிவில் நடத்த வேண்டும். அதற்காக எழுத முன்முயற்சி எடுக்க வேண்டும்! கொஞ்சம் ஆபத்தான காரியம்தான்.

சமூக-அடையாளங்கள் உருவாகி இறுகும்போது சமூகவியல்-உயிரியல் என்ற பிளவு ஏற்பட்டு அதனால் சிக்கல் வருகிறது. இயற்கை என்பதைப் புறத்தே கொண்டுபோய்த்தான் இது சாத்தியமாகிறது. இதை அறிந்தும் உணர்ந்தும் இந்தப்பிரச்னைக்கு முகம்கொடுப்போர்தாம் கலைஞர்கள், இலக்கியவாதிகள்.

எடுத்துக்காட்டாக, இந்திய தேசியம் உருவாகும்போது அரவிந்தர், தாகூர் போன்றோர் அதிலிருந்து விலகிநிற்கும் பிரபஞ்சப்புள்ளிக்கு இயல்பாகவே செல்கிறார்கள். பாரதி வசனகவிதையை முன்வைக்கிறார். புதுமைப்பித்தன் சிறுகதையை நவீனமாக்குகிறார். கறாரான இந்திய தேசியவாதியான சி.சு. செல்லப்பா, நவீன இலக்கியத்தை முன்வைக்கும் எழுத்து பத்திரிகை நடத்திய முன்னோடியாக இருப்பதைத் தமிழவன் சுட்டிக்காட்டுகிறார். இப்படித்தான் மொழி என்ற களத்தின் ஊடாக இந்தியப்பரப்பில் தேசிய-அடையாளத்தைத் தாண்டிய பிரபஞ்ச வெளிகள் தக்கவைக்கப்பட்டன. அதேபோல, திராவிடச்சிந்தனை என்பது தமிழ்த்தேசியம் பேசாத திருக்குறளின் பொது-அறத்தை ஏற்கிறது. அதன் வழிவந்த பாரதிதாசன் "தமிழால் தோன்றுவது உலகம்" என்று கூறுவது empirical தமிழ் அல்ல என்று பார்த்தால், அதை மொழியால் தோன்றுவது உலகம் என்ற பிரபஞ்சப்பார்வையோடு இணைக்கலாம். இதையும் தமிழவன் சுட்டிக்காட்டியிருக்கிறார். இதனால்தான் பாரதிதாசன் வழிவந்த பலர் புதுக்கவிதைப்பரப்புக்குள் வந்து அதை மாற்றியமைத்தது தமிழில் நடந்தது. எண்பதுகளில் தமிழ் விமர்சன மரபில் ஸ்ட்ரக்சுரலிஸம் பரவியதற்கும் சங்க இலக்கியத்தை ஏற்கிற புதுக்கவிதை இன்று உருவாவதற்கும் அதை வாசித்து இன்புறும் தன்னிலைகள் உருவாவதற்கும் இதுதான் காரணம். அதுபோல கிறித்தவ, இஸ்லாமிய மரபுகளும் தமக்கான தமிழிலக்கியத்தைக் கண்டடைவதன் மூலம் பிரபஞ்சப்பார்வைகளைத் தக்கவைக்கின்றன. அயோத்திதாசர் பௌத்த அறத்தை முன்னிறுத்தும் பிரபஞ்சப்பார்வையைக் கொண்டிருக்கிறார். இது தலித் இயக்கம் இறுகாமல் போவதற்கான அடிப்படையை இட்டிருக்கிறது. மொழியைப் பொறுத்தவரை உள்ள இது மற்ற கலை-அறிவியல் பரப்புக்களிலும் சாத்தியம்தானே..

எந்த அளவு இதை ஒவ்வொருவரும் தொடர்கிறோம் அல்லது கருவறுக்கிறோம் என்பதில் அடையாளங்கள் இறுகுவதும் இறுகாமலிருப்பதும் நடக்கின்றன. சமூக-அரசியல் பரப்புக்கள் அடையாளங்களை இறுக்கத்துடிக்கின்றன. கலை-இலக்கியவாதிகள்-விமர்சகர்கள் இந்த இறுக்கங்களை ஏற்கும் நிலையில் இவற்றுக்கு நாமும் பலியாகிறோம்..

நாகார்ஜுனன்

இதற்கான அந்நியனினது பதிலை பதிலை நாகர்ஜுனன் தனிப்பதிவாகவே இட்டார். அது அவரது பெருந்தன்மையைக் காட்டுகின்றது. என்னை நெகிழ்ச்சிக்குள்ளாக்கியது.


அந்நியனினது பின்னூட்டம்.

"தமிழில் தட்டெழுதிக்கொண்டிருக்கும் காரணம் நான் கைதாகலாம்..."

இலங்கையிலிருந்து - கொழும்பிலிருந்து என்று நினைக்கிறேன் - வந்திருக்கும் கடிதத்தை அப்படியே தருகிறேன். அருகில் கொழும்பில் இன்றைய நிலை பற்றிய ஒரு படம்.. இந்தக்கடிதத்தில் உள்ளவற்றுக்கு நேரடியான பதிலை யார்தாம் எழுத முடியும்... - நாகார்ஜுனன்.
-----------------------------------------------------------------------------------

நாகார்ஜுனன் அவர்களுக்கு

உங்கள் எழுத்துக்களை தவறாமல் படிக்கிறேன். என் கல்வித்துறை கணிதம், பௌதீகம், கணனி விஞ்ஞானம் ஆகியவற்றை உள்ளடக்கியது. அறிவியல் மற்றும் தத்துவம் போன்றவற்றின் இணைவு தொடர்பாக எனக்குள் அதீத விருப்பம் ஏற்கனவே இருந்தது. தமிழில் இந்த இணைவு தொடர்பாக ஆங்காங்கே சிலவிதமான கருத்தாடல்கள் இடம்பெற்றிருந்தாலும் அவற்றிலிருந்து உங்கள் எழுத்துக்கள் பலமாக வேறுபடுகின்றன என்பதான உணர்வு இருந்துகொண்டேயிருந்தது. ஒன்று, அறிவியலுக்குள் இருந்தவாறு தத்துவம் தொடர்பான பார்வையாக இருந்தது அல்லது தத்துவத்தில் இருந்தவாறு அறிவியல் தொடர்பான பார்வையாக இருந்தது. ஆனால், உங்களது எழுத்துக்கள் அவ்வேறுபாடுகளை கடந்து 'இயல்பான' இணைவுநிலையைத் தோற்றுவிக்கின்றன. உங்களது அணுகுமுறையே அடிப்படையில் வித்தியாசமானது என நினைக்கிறேன். உங்களது எழுத்துக்களைப் படிக்கும் போது எனக்குள் ஏதோ புதுவிதமான பாதையைத் திறந்திருப்பது போன்றதான உணர்வு.

மற்றும், நீங்கள் கூறிய "தன்-அடையாள அரசியலின் எல்லைகளும் 'மனித குலத்தை', 'இயற்கையை' நெருக்குகினறன" என்ற கருத்தில் எனக்கு உடன்பாடு இருக்கின்றது. ஆயினும் அவற்றின் 'விரைவுத்தன்மையிலும்' 'பிளவிலும்' இறுதியில் மனிதகுலத்தை - இயற்கையை நெருக்குதலில் இருந்து விடுவிக்கும் நிலையைத் தோற்றுவிக்க முடியும் என நம்புகிறேன். ஏனெனில் அடையாள அரசியலின் நியாயப்பாடுகளையும் அரசியல்வாதிகளின் நகர்வுகளையும் அடிப்படைவாத மற்றும் ஒடுக்குமுறைக்கட்டமைப்பு சார்ந்தவர்களால் எதிர்கொள்ளவே முடியாது என்பது எனது கருத்து.

இன்றைய ஈழத்து நிலவரம் உங்களுக்கு இவற்றை உணர்த்தும் என நினைக்கிறேன். தமிழில் தட்டெழுதிக் கொண்டிருக்கும் காரணமாக நான் கைதுசெய்யப்படலாம். யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகம் இல்லையா? என் இங்கு வந்திருக்கிறாய்? என அனைத்து தரப்பாலும் கேட்கப்படுகின்றேன். வங்கிவைப்பு புத்தகத்தில் ஒவ்வொரு ரூபாய்க்கும் இராணுவத்திற்கு கணக்குக் காட்ட வேண்டியிருக்கிறது. இங்கே, எமது சமாதானத்திற்கு முன்பு அடையாள அரசியல் நின்றது. அதன் நியாயப்பாடுகளை எவராலும் எதிர்கொள்ள முடியவில்லை. இறுக்கமான கட்டமைப்பைக் கொண்ட சமூகங்க்ளுக்கு அது அவசியப்படுகின்றதோ என்று தோன்றுகிறது. அதனை விரைவுபடுத்தல் சில அங்கீகரிப்புக்கள் நிகழ அனுமதிக்கக்கூடும். அங்கீகரிப்புகள் ஊடாக மட்டுமே அடையாள அரசியலை நீர்த்துப்போகச் செய்ய முடியும் என்பது எனது நிலைப்பாடு. ஏனெனில் அதுமட்டுமே அவர்களின் முற்போக்கான அம்சமாயிருக்கிறது. சில வேளை விரக்தியின் உச்சத்திலான எனது கருத்தாகவும் இருக்கக் கூடும். எம் 'அறிவுஜீவிகள்', இந்நாடு சிங்களவர்களுக்கானதே எனக் கூறும் ராணுவத்தளபதியை கேள்வி கேட்க திராணியற்ற தமிழ்க்கட்சிகளின் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கின்றனர். மக்களின் அழிவுக்குப் பின்பான அரசியலை செயல்படுத்த வெளிநாடுகளில் கூட்டம் போடுகின்றனர். இவ்விடத்திலேயே நான் அடையாள அரசியலை வெறுக்கவும் முடியாமல் ஏற்கவும் முடியாமல் திண்டாடுகின்றேன்.

நீங்கள் உங்கள் தேசம்நெற் பேட்டியில் கூறியது ஞாபகம் வந்துகொண்டேயிருக்கிறது:

"உங்கள் பிரச்னையில் எவ்வித அரசியல் தீர்வு வந்தாலும் சரி. உங்கள் சமுதாயமும் இலங்கையின் மற்ற சமுதாயங்களும் அனுபவித்த ரணங்கள், கசப்புணர்வு எல்லாம் ஆறுவதற்கு தனித்த காலம் தேவைப்படும்ன்னு நினைக்கறேன். இதற்குக்காரணம் உங்களுக்கெல்லாம் ஏற்பட்டிருக்கும் இழப்புகள் ரொம்ப அதிகம், தவிர இழப்புகளுக்கு நீதி கிட்டாத சூழ்நிலை, இந்த அநீதி தொடர்கிற சூழ்நிலை, அது உண்டாக்கியிருக்கற கோபம், வன்மம், எதிர்வன்மம்.. இதெல்லாம் போக ரொம்பக்காலம் ஆகலாம். ஆனா இதெல்லாம் போனால்தான் சமாதானம் நிலைக்கும்னு அடித்துச்சொல்ல முடியும்."

இதற்காக உழைப்பது எமது அறிவுஜீவிகளின் முதன்மைப்பணி என்பேன். அதற்கு எதிர்மாறாகவே எமது சூழலில் 'அறிவுஜீவி' என அறியப்பட்டவர்களின் வேலையாயிருப்பது அதற்கு நேர்மாறானது என்பது மிகவும் துயரமானது.

எனது சுய புலம்பல்களை இத்துடன் நிறுத்துகிறேன். சம்பந்தமில்லாத உரையாடலாக இருப்பின் இப்பின்னூட்டத்தை நீங்கள் நீக்கிக்கொள்ளுங்கள்.

ஏற்கனவே கூறியபடி உங்கள் எழுத்து எனக்குள் திறந்துவிட்ட உலகு உவப்பானதாயிருக்கிறது. அதனை ஏற்றுக்கொள்ளவும் முடிகிறது. ஆயினும் சில யதார்த்தங்கள் முரண்படவும் வைக்கின்றன. உங்களைத் தொடர்கிறேன்.

நன்றி

அந்நியன்.


அந்நியனினது பின்னூட்டம்.

நாகார்ஜுனன் அவர்களுக்கு,

நன்றி. பின்னூட்டத்தைத் தனிப்பதிவாக இடுவீர்கள் என எதிர்பார்க்கவே இல்லை.

அடையாள-அரசியல் தொடர்பாக மேலும் சில விடயங்களைக் கூறியிருக்க முடியும். உங்கள் பதிவைப் பார்த்த பின்பு நண்பர் ஒருவர் என்னைத் தொடர்புகொண்டார். கொழும்பில் லட்சக்கணக்கான மக்கள் வசிக்கவில்லையா, கொழும்பில் தமிழ் டைப்பிஸ்ட்கள் இல்லையா, லட்சக்கணக்கில் பணத்தைத் தமிழர்கள் வங்கியில் வைத்திருக்கவில்லையா என்றவாறாக அவர் கேள்விகள் அமைந்திருந்தன. கேள்விகள் நியாயமானவையே. அவ்வாறு நினைப்பதிலும் தவறில்லை.

இதற்கு நான் அவருக்கு சில சம்பவங்களை நிலைநிறுத்தி விளக்கம் கொடுக்க வேண்டியதாய் இருந்தது. சில மாதங்கள் முன் நியூயோர்க் ரைம்ஸ் பத்திரிகையின் செய்திசேகரிப்புக்காக Sowmini Sengupta என்ற பெண்மணி வந்திருந்தார். அவருடன் கூடவே நாகாலாந்து பிரச்னை தொடர்பான பலமான அனுபவம் உள்ள Pablo Bartholomew என்ற புகைப்பட ஊடகவியலாளர் ஒருவரும் கூடவே வந்திருந்தார். அவர்கள் களப்பணிக்கு ஒத்தாசையாக நண்பர் ஒருவர் அழைத்தன் பேரில் போயிருந்தேன். கொழும்பில் பலவிதமானவர்களைச் சந்தித்து நிலைமையை விசாரித்தனர். அப்போது ஒவ்வொருவர் பதிலும் வித்தியாசமாக அமைந்தது. கொழும்பில் 18 வருடங்களுக்கு மேல் தங்கியிருந்து சிங்களம் நன்கு பேசத்தெரிந்த சிலர் தாம் தமிழர் என்ற காரணத்தால் படும் கஷ்டங்களைச் சொன்னபோது வியப்பாகவும் இருந்தது. அதே கொழும்பு வந்து சில வருடங்களே ஆனவர்கள் தமக்கு இவ்வாழ்வில் கடினம் எதுவுமில்லை எனக் கூறியது அதைவிட வியப்பாக இருந்தது. அதே நேரத்தில், கொழும்பில் பிறந்து வளர்ந்த, வடக்கு-கிழக்கை அறியாத இந்தியா வம்சவழியானவர்கள் தாம் தமிழர்களாக இருப்பதில் எதிர்நோக்கும் பிரச்னைகளை பட்டியலிட்டதும் மலையகத்தைச் சார்ந்த நாடாளுமன்ற உறுபினர் ஒருவருடைய மகன் தாம் காரிலேயே திரிவதாகவும் சிங்கள நண்பர்களுடன் தாம் எப்போதும் நல்-உறவாக இருப்பதையும் சொன்ன போது ஒரு கட்டத்தில் வியப்பேற்படுவது நின்றுபோயிற்று.

இங்கே, கடினமான வாழ்வு என்பதும் ஒடுக்குமுறை என்பதும் பல்வேறு காரணிகளால் தீர்மானிக்கப்படுவதாக உணர முடிந்தது. அவற்றில் முக்கியமாக இரு காரணிகள் -
முதலாவது தமிழர் என்ற அடையாளம் தொடர்பானது. இந்த நிபந்தனை பூர்த்தியாகும் பட்சத்தில் சமூக அந்தஸ்து, செல்வாக்கு மற்றும் பொருளாதார நிலைமை செல்வாக்குச் செலுத்துகின்றன. அடையாளம் என்று வரும் போது 'அடையாளப் பேணுகை எத்தனிப்பு' என்பதும் முக்கிய செல்வாக்குச் செலுத்துகின்றது என்பேன்.

உதாரணமாக ஒன்று. அன்டன் பாலசிங்கத்தின் The Will to Freedom என்ற ஆங்கில நூலை வைத்திருப்பதிலும் பார்க்க முறிந்தபனையின் தமிழ்ப்பதிப்பு மோசமான தாக்கத்தைச் செலுத்தக்கூடியது. இது என்னிடம் இருந்த தமிழ்ப்புத்தகங்களை நூலகத்தில் கொண்டு சென்று ஒப்படைக்கும் அளவுக்கு எனக்குப் பிரச்னையாக இருந்தது. நான் இருக்கும் இடத்துக்கு அண்மையில் வெளிநாடு செல்வதற்காக இளைஞர்கள் பலர் உள்ளனர். அவர்கள் படும் வேதனைகளைச் சொல்லவே முடியாது. வங்கியில் இருந்து எடுத்த 5,000 ரூபா பணத்திற்கு காவல்துறை கேட்ட போது பதில்சொல்லாமல் இருந்த காரணத்திற்காக சிறைசென்றவர் ஒருவரோ இருவரோ அல்ல. சோதனையிடச் செல்பவர்கள் வங்கிப்புத்தகத்தைப் பார்வையிட முடியாது என்று உயர்நீதிமன்றம்
உத்தரவிட்ட அடுத்த நாள் என் வங்கிப்புத்தகத்தைக் காட்டியிருக்கிறேன்.

அந்நியன்.


றஞ்சனியினது பின்னூட்டம்.

அடையாளங்கள் எம்மீது கட்டாயமாகத் திணிக்கப்படுபவை,
நான் பெண்ணென்ற அடையாளமில்லாமல் ஒரு மனித உயிராகத்தான் இருக்க விரும்புகிறேன். ஆனால் முடியவில்லை. So, நான் பெண் என்ற அடையாளத்தை முன்நிறுத்திப் போராட வேண்டியுள்ளது , அதுபோல்த்தான் தமிழ்-சிங்களமென்ற இன அடையாளங்களில்லாமல் அந்தச்சிறிய நாட்டில் எம்மால் மனிதர்களாக வாழமுடியவில்லை.. அடையாளங்களைக் காப்பாற்றுமாறு
பலவந்தமாகத் திணிக்கப்படுகிறோம். என்னைப்பொறுத்தவரை எந்த அடையாளமும் இல்லாமல், மனித உயிராக, உலகம் முழுக்க போய்வரத்தான் விரும்புகிறேன்,
ஆனால் முடியவில்லை. இங்கு ஐரோப்பாவில் நிறவாதத்தால் நாம் கறுப்பர்கள் என்ற அடையாளத்தை ஏற்குமாறு திணிக்கப்படுகிறோம். மனிதர்களாக எங்கும் இருக்க முடியவில்லை. இப்படி எங்கும் மதம் இனம் மொழி என்ற அடையாளங்களை விரும்பாமல் சுமக்குமாறு திணிக்கப்படுகிரோம் என்றுதான் நினைக்கிறேன். அப்படித் திணிக்கப்படும்போது நாம் அதற்க்காக போராடத்தான் வேண்டியுள்ளது, சுதந்திரமாகச் செயல்படமுடியவில்லை.

அந்நியனின் கடிதம்போல யாழ் பல்கலைக்கழக நண்பன் ஒருவனின் கடிதங்களில் கடைசியாக வந்த கடிதமொன்றைத் தரலாம் என்று நினைக்கிறேன்:

"அன்புள்ள றஞ்சினி.

மிக்க நன்றி.

நான் வெளியில் போவதில்லை நெட் பார்க்க. பல்கலைக்கழக நெட்டில்தான் வேலைசெய்வதுண்டு. எனது மற்றும் இங்கு நிலைமைகள் உங்களுக்குச் சரியாக தெரிகின்றன. தெரு பற்றி எனக்கு நிறைய ஆசை இருக்கிறது. பறிகொடுத்துவிட்டதை உணருகிறேன். பல்கலைக்கழகத்திற்கும் விடுதிக்கம் இடையில் அன்று மாட்டி ராணுவத்தின் கடும் விசாரணைகளுக்குப் பிறகு தாமதமாக விடுதி வந்தேன்.

இவைகள்தாம் எங்கள் அடிமைத்தனத்தை
ஞாபகப்படுத்தியபடி இருக்கிறார்கள்.
எல்லாம் தாண்டி பிணமாகத் தீரும் விதி எங்களுடையது.

உங்களுடன்தான் மனம்திறந்து இப்பொழுது பேசி வருகிறறேன்.
நிறையத்தொடர்புகள் (வன்னி)அறுந்துவிட்டன..."

இந்த வரிகள் என்னை மிகவும் துன்பப்படுத்தியவை - "தெரு பற்றி எனக்கு நிறை ஆசை இருக்கிறது
பறிகொடுத்துவிட்டதை உணருகிறேன்..."

0 comments: