உரையாடல் - 14 (ஏகாந்தி, Constantine, சேகர், த. ஜெயபாலன்)

தேசம் வலைத்தளத்தில் இடம்பெற்ற உரையாடல்

வன்னியில் யுத்தம் உக்கிரம். நியுயோர்க்கில் ஜனாதிபதி, சொல்ஹெய்ம் சந்திப்பு
- ஏகாந்தி

வடபகுதியில் யுத்த நிலை கடந்த இரு வாரங்களாக மிகவும் உக்கிரமமான நிலையில் இருப்பதாக வன்னியிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்றுமுன்தினம் (22) வடபகுதியில் ஐந்து இடங்களில் படையினருக்கும் புலிகளுக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இதேபோல நேற்று (23) மோதல்கள் தொடர்ந்துள்ளன.

இம்மோதல்களின் போது இரு தரப்புக்கும் பாரிய இழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இரு தரப்பினருக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்றுக்கொண்டிருந்த ஏக காலத்தில் இலங்கை விமான படைக்குச் சொந்தமான ஜெட் ரக தாக்குதல் விமானங்கள் புலிகளின் இலக்குகள் மீது குண்டுவீச்சு தாக்குதல்களையும் மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கிளிநொச்சி மாவட்டத்தின் அக்கராயன்குளம், கரம்பைக்குளம், மாங்குளம், கொக்காவில் கிழக்கு மற்றும் மேற்கு ஆகிய பகுதிகளிலேயே இந்த மோதல்கள் தற்போது தீவிரமடைந்துள்ளன.

நேற்று முன்தினம் மாலை ஆரம்பித்த இம்மோதல்கள் நேற்றும் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும் நேற்றுக் காலை வரை இடம்பெற்ற மோதல்களின் போது 41 விடுதலைப் புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டதாகவும் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.

மோதல்களை அடுத்து அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது விடுதலைப் புலி உறுப்பினர்களின் 10 சடலங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது. வவுனியா வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் 13 சடலங்களும் நேற்றுமுன்தினம் பிற்பகல் ஐ.சி.ஆர்.சி. யிடம் கையளிக்கப்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

வவுனியா வைத்தியசாலையில் இருந்து பொலிசாரின் ஊடாகப் பொறுப்பேற்ற ஐ.சி.ஆர். சி அதிகாரிகள் அவற்றை விடுதலைப் புலிகளிடம் ஒப்படைப்பதற்காக ஓமந்தை ஊடாக புளியங்குளம் பகுதிக்கு உடனடியாகவே கொண்டு சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், வவுனியா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் சடலங்களைப் பார்வையிட்ட வவுனியா மாவட்ட நீதிபதி அவற்றை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்துமாறு வவுனியா சட்ட வைத்திய அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளார் எனவும் தெரியவருகிறது.

உணவுப் பொருட்களைக் கொண்டு செல்வதில் நெருக்கடி.

வவுனியாவில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற மகாநாட்டில் வன்னிப் பிரதேசத்தில் உணவுப் பொருட்களுக்கான தட்டுப்பாடு இல்லையெனவும், வன்னியில் அரச கட்டுப்பாடற்ற பகுதிகளுக்கு அடுத்த வாரமளவில் 4,800 மெற்றிக் தொன் உணவுப் பொருட்களை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் திவாரட்ண தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் ஊடங்களுக்கு கூறியவை வருமாறு: வடக்கில் உள்ள அரச கட்டுப்பாடற்ற பகுதிகளில் உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகின்றது. அதில் எந்த உண்மையுமில்லை.
அப்பகுதிகளுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அனைத்தும் குறைவின்றி அனுப்பப்பட்டுக் கொண்டு வருகின்றன.
அப்பகுதியில் உள்ள அரச அதிபர்களின் ஊடாக இப்பொருட்கள் மக்களுக்கு உரிய முறையில் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
அரச அதிபர்களின் தகவலின்படி அங்கு உணவுப் பொருட்களுக்கான தட்டுப்பாடு கிடையவே கிடையாது. கடந்த வாரம் கூட நாம் கோதுமை மா, அரிசி, சீனி மற்றும் பருப்பு உள்ளிட்ட ஆயிரம் மெற்றிக் தொன் பொருட்களை வன்னிக்கு அனுப்பி வைத்தோம். அதேபோல் அடுத்த வாரம் 4 ஆயிரத்து 800 மெற்றிக் தொன் பொருட்களை அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உணவுத் தட்டுப்பாடுகள் ஏற்படாத வகையில் நாம் நடவடிக்கை எடுத்து வருகிறோம். வடக்கில் உள்ள அரச அதிபர்களுடன் இது தொடர்பாக நாம் தெளிவான தொடர்பாடலைப் பேணி வருகிறோம். அடுத்த வாரம் வன்னிக்கு அனுப்பப்படும் பொருட்களை கிளிநொச்சி அரச அதிபரின் ஊடாக மக்களுக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

Sri Lankan Forcesஅதேநேரம், இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மாவட்டத்திற்கு நேற்று செவ்வாய்க்கிழமை உணவுப் பொருட்கள் கொண்டு செல்லப்படுகின்ற முறை நாளாக இருந்த போதிலும், பொருட்களை ஏற்றிக்கொண்டு வவுனியாவிலிருந்து புறப்பட்டுச் சென்ற 20 ட்ரக் வண்டிகளுக்கு ஓமந்தை சோதனைச்சாவடி ஊடாகச் செல்வதற்குப் படையினர் அனுமதி வழங்கவில்லை என அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

இந்த ட்ரக் வண்டிகளை ஓமந்தையூடாகச் செல்ல அனுமதிப்பதற்கு உயர்மட்டப் படைத் தரப்பினரிடமிருந்து தங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை என படையினர் தெரிவித்ததையடுத்து பல மணித்தியாலங்கள் காவல் இருந்துவிட்டு, இந்த ட்ரக் வண்டிகள் ஓமந்தையிலிருந்து வவுனியா திரும்பியதாகவும் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.

கடந்த வாரம் இரண்டு தினங்கள் கிளிநொச்சி மாவட்டத்துக்கான பொருட்களைக் கொண்டு செல்வதற்கென ஏற்பாடுகள் இருந்த போதிலும் அந்த மாவட்டத்திற்கான பொருட்களை ஏற்றிச் சென்ற ட்ரக் வண்டிகளுக்கு ஓமந்தை சோதனைச்சாவடியில் படையினரால் அனுமதி வழங்கப்படவில்லை.

இதற்கிடையில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான அத்தியாவசிய பொருட்கள், உணவுப்பொருட்கள் என்பன தொடர்ந்து ஓமந்தை சோதனைச்சாவடி ஊடாக விநியோகிக்கப்பட்டு வருவதாக இராணுவ தலைமையகம் தெரிவித்திருக்கின்றது.

கடந்த 5 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரையிலான ஒரு வார காலப்பகுதியில் இந்த இரண்டு மாவட்டங்களுக்கும் 73 ட்ரக் வண்டிகளில் அரிசி, பருப்பு, கருவாடு உள்ளிட்ட உணவு மற்றும் கட்டிடப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் இராணுவ தலைமையகம் தெரிவித்திருக்கின்றது.

கிளிநொச்சி நகரப் பகுதி பாடசாலைகள் மீளவும் இயங்க ஆரம்பித்துள்ளன.

ஒரு புறத்தில் யுத்தத்தின் பாதிப்பும், மறுபுறத்தில் அகதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பும் வன்னிப் பிரதேசத்தில் பாரிய சிக்கலை உருவாக்கியுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம், திங்கட்கிழமை தொடக்கம் கிளிநொச்சி நகரப் பகுதி பாடசாலைகள் நேற்றிலிருந்து மீளவும் இயங்க ஆரம்பித்துள்ளன.

படையினரின் எறிகணை வீச்சுக்கள் காரணமாக கிளிநொச்சியிலிருந்து மக்கள் இடம்பெயரத் தொடங்கிய பின்னர் கடந்த சில தினங்களாக கிளிநொச்சி மேற்கு, தென்மேற்கு மற்றும் நகரப் பகுதிகளிலுள்ள பாடசாலைகள் இயங்கவில்லை. தற்போது கிளிநொச்சி நகரிலுள்ள பாடசாலைகளான கிளிநொச்சி மகாவித்தியாலயம், கிளிநொச்சி மத்தியகல்லூரி, புனித திரேசாள் மகளிர் கல்லூரி ஆகிய பாடசாலைகள் இயங்க ஆரம்பித்துள்ளன.

பல குடும்பங்கள் கிளிநொச்சியிலிருந்து இடம்பெயர்ந்து விட்ட நிலையில் குறைவான மாணவர்களே பாடசாலைகளுக்கு தற்போது வருகை தருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வன்னிப் பகுதிக்கான தபால் சேவை தடைப்பட்டுள்ளது.

மறுபுறமாக வன்னிப் பகுதிக்கான தபால் சேவை கடந்த 10 நாட்களாக தடைப்பட்டுள்ளன. இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் உத்தரவுக்கமையவே வவுனியா ஓமந்தையில் வன்னிக்கான தபால் சேவையை நிறுத்தியுள்ளதாக வவுனியா மாவட்ட தபால் திணைக்கள அதிகாரி தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கிடைத்ததும் வன்னிக்கான தபால்களை அனுப்ப முடியும் எனவும் அவர் தெரிவித்தார். 10 நாட்களாக இத்தபால் சேவைத் தடையினால் அவசரமான நேர்முகப்பரீட்சை, நியமனக் கடிதங்கள் போன்ற முக்கிய கடிதங்கள் கிடைக்கப் பெறாமல் மக்களுக்குப் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளத.

நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இடையில் பேச்சுவார்த்தை.

அதேநேரம், திங்கட்கிழமை நியுயோர்க் நகரில் நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இடையில் பேச்சுவார்த்தையொன்று நடைபெற்றுள்ளது. இதன்போது இடம்பெயர்ந்த மக்களுக்காக மனித நேயப் பணிகளை முன்னெடுப்பதில் தமக்கு எந்தவொரு ஆட்சேபனையும் இல்லை எனவும் உதவிகள் அனைத்து தமது அரசாங்கத்தின் தரப்பினர் ஊடாகவே கொண்டு செல்ல முடியும் எனவும் நோர்வேயின் சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்மிடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஐ.நா. கூட்டத் தொடரில் கலந்துகொள்வதற்காக நியூயோர்க் சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று முன்தினம் திங்கட்கிழமை நோர்வேயின் அமைச்சரும் இலங்கைக்கான நோர்வேயின் முன்னாள் சமாதான தூதுவருமான எரிக் சொல்ஹெய்ம், விசேட தூதுவர் ஜோன் ஹன்சன் பௌவியர் ஆகியோரை சந்தித்து பேச்சு நடத்தினார். சுமார் ஒரு மத்தியாலம் நீடித்த பேச்சில், வடக்கில் இடம்பெறும் போர் பற்றியும், மனிதநேய அமைப்புக்களின் வெளியேற்றம், போர் முன்னெடுப்புகளால் இடம்பெயர்ந்த மக்களுக்கான உதவிகளை வழங்குவது தொடர்பிலும் பேசப்பட்டுள்ளது.

இச்சந்திப்பில் அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, ரோஹித போகொல்லாகம, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, வெளிநாட்டமைச்சின் செயலாளர் பாலித கோஹன ஆகியோர் கலந்துகொண்டனர்.

இச்சந்திப்பில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கிழக்கு மாகாணத்தை புலிகளிடம் மீட்டெடுத்து அபிவிருத்திகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. நாடு பூராகவும் சமாதானம் மற்றும் ஜனநாயகத்தை ஏற்படுத்துவதையே ஒரே இலக்காகக் கொண்டு எமது அரசாங்கம் செயற்பட்டு வருகின்றது.

கிழக்கில் இடம்பெற்ற மாகாண சபை தேர்தலின் பெறுபேறுகள் மூலம் அரசின் கொள்கையை அம்மாகாண மக்கள் ஏற்றுக்கொண்டுள்ளமை புலனாகின்றது. பயங்கரவாதத்திற்கு மாறாக ஜனநாயகத்தின் மீது அந்த மக்கள் கரிசணை கொண்டுள்ளமை இதன் மூலம் நிரூபணமாகியுள்ளது.

தற்போது வடக்கில் நிலவும் பிரச்சினைகளுக்கு அரசாங்கம் தீர்வினை கண்டு வருகின்றது. படையினர் முன்னகர்ந்து வரும் பகுதிகளில் மக்களை, புலிகள் பலிகடாக்களாக பயன்படுத்தி வருகின்றனர். வன்னியில் வாழ்ந்து வரும் மக்களுக்கு அரசாங்கத்தின் ஊடாக மனிதாபிமான உதவிகளை நோர்வே வழங்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.

இச்சந்திப்பின்போது, சமாதானத்தின் அவசியம் குறித்து நோர்வே தரப்பினர் வலியுறுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

“ஐ.நா. சபை, சார்க் அமைப்பு, நாடுகளின் தலைவர்கள் சந்திக்கும் மாநாடுகளில் சமாதானம் பற்றிய பேச்சு, சம்பிரதாய பூர்வமானதொன்றாகிவிட்டது - ஓய்வுபெற்ற திருகோணமலை மேல்நீதிமன்ற நீதிபதி அன்ரன் பாலசிங்கம்

இதேநேரத்தில் திருகோணமலை மனித உரிமைகள் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு நிலையம் கடந்த சனிக்கிழமை நிலைய மண்டபத்தில் நடைபெற்ற உலக சமாதான நிகழ்வில் பிரதம அதிதியாக பங்குபற்றிப் பேசிய ஓய்வுபெற்ற திருகோணமலை மேல்நீதிமன்ற நீதிபதி அன்ரன் பாலசிங்கம் அவர்களால் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் சிந்தனைக்கு எடுத்துக் கொள்ளப்பட வேண்டியவையே.

அதாவது “ஐ.நா. சபை, சார்க் அமைப்பு, நாடுகளின் தலைவர்கள் சந்திக்கும் மாநாடுகளில் சமாதானம் பற்றிய பேச்சு, சம்பிரதாயபூர்வமான தொன்றாகிவிட்டது. இன்று மனிதம் மதிக்கப்படுவதில்லை. மனித விழுமியங்கள் பேணப்படுவதில்லை. சட்டம், சமயம், சம்பிரதாயங்கள் போற்றப்படுவதில்லை’ என்று தெரிவித்தநீதிபதி அன்ரன் பாலசிங்கம் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

“நான் என்ற அகங்காரம், நசுக்கி ஆளும் போக்கு, குரோத மனப்பான்மை ஆகியனவே இன, மத, நாடு ரீதியாக பிரிவினை, முரண்பாடு மற்றும் வேறுபாடுகள் தோன்றுவதற்கு காரணமாக அமைகிறது. சமாதானம் என்றால் என்ன? சமாதானம் ஏன் வேண்டும்? சமாதானம் எங்கே? என்று ஒவ்வொருவரும் தமக்குள் கேட்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு மனித சமுதாயம் தள்ளப்பட்டுள்ளது.

20 ஆம் நூற்றாண்டு விஞ்ஞான யுகம், ஆக்கத்திற்குச் செய்யவேண்டிய பங்களிப்பை அணு ஆயுத உற்பத்திக்குச் செலவு செய்து மனிதனை அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்கிறது. இன்று எமது சமூகம் உயர்வெனக் கருதுவது பொருளாதார உயர்வு, சமூக அந்தஸ்து உயர்வு, பதவி உயர்வு, புகழ் போன்றவற்றையே. இவையனைத்தும் பேறில்லா உயர்வுகளாகும். மனித மனங்களில் அன்பு மற்றும் அஹிம்சையினால் கட்டியெழுப்பப்படுகின்ற சாந்தி, சமாதானமே உரமும் உறுதியும் வாய்ந்த உயர்வானதாகும்.

மனித மனங்களிலே உயர்வான எண்ணங்கள் உருவாக வேண்டும். நல்லவற்றை சிந்திக்க வேண்டும் என்று திருவள்ளுவர் வலியுறுத்தியுள்ளார். ‘தனியொரு மனிதனுக்கு உணவில்லை எனில் இச்செகத்தினை அழித்திடுவோம்’ என்று மகாகவி பாரதியார் முழக்கமிட்டது மனிதத்தன்மையை தனிமனித உரிமையை நிலை நாட்டுவதற்கும் சமத்துவத்தை வளர்த்து சமாதானத்தை நிலைகொள்ளச் செய்வதற்குமேயாகும். அகங்காரம், மமகாரம் மனிதனிடத்தில் இருக்கும் வரை மனித குலத்தினால் சமூகத்திற்கோ, இனத்திற்கோ, நாட்டிற்கோ நன்மை ஏற்படப்போவதில்லை. இது வெறுமனே அச்சத்தையும் அழிவையுமே ஏற்படுத்தும்.

கொடிய யுத்தத்திற்கும் உயிர், உடமை நாசத்திற்கும் மூலகாரணமாக நவீன விஞ்ஞானம் காணப்படுகிறது. இருதரப்பினருக்குமிடையே ஏற்படும் போட்டி நிலையை முரண்பாடு எனலாம். முரண்பாடும் ஓர் உறவே. இந்த உறவு வேறுபட்டதாக இருக்கும். இந்த உறவு சரியான முறையில் கையாளப்படுமானால் ஒரு தீர்வைக் கொண்டுவர முடியும். மனித தேவைகள் நிறைவேறாமை காரணமாகவும் முரண்பாடு தோன்றுகின்றது. திருக்குறளில் கூறப்பட்டது போன்று காகங்கள் தங்களுக்கிடையே உணவைப் பகிர்ந்து கொள்வது போல நாமும் சமாதானத்தைப் பகிர்ந்துகொள்ள வேண்டும்” என்றார்.

இக்கருத்து சிந்திக்கப்படக் கூடியதே.

Constantine இனது பின்னூட்டம்.

Its bit worrying to note that lots of people have grate things to say when there is an article about SDLF or Braziers (On thesamnet). But no one seems to be commenting on these kinds of articles i.e. Human sufferings

I just concerned about THESAMnet readers priorities. Isn’t it worrying reflection????

Constantine


சேகர் இனது பின்னூட்டம்.

Constantine,
நீங்கள் கூறுவது போல் இப்படியான விடயங்களை யாரும் கவனத்தில் எடுக்க மாட்டார்கள். ஏனெனில் இது அவர்களது பிரச்சனை அல்ல. மேலும், அவர்களது ஆர்வத்திற்கு உட்பட்ட கதையாடல் பிரதேசமும் அல்ல.

விடுதலைப்புலிகள் முற்றுமுழுதாக அழிக்கப்பட்டால் மட்டும் நாட்டில் சமாதானம் வந்துவிடும் என்று நம்பும் சிலர் மட்டுமே இங்கே வந்து இன்றோ நாளையோ அரசாங்கத்தை பராட்டி சில வார்த்தைகள் கூறிவிட்டுப் போகக்கூடும்.

வன்னியில் சகோதரர்களையும் பெற்றோர்களையும் கொண்டுள்ளோரின் வலி யாருக்கும் புரிவதுமில்லை. எல்லோரும் தாங்கள் சரி என்பதை நிறுவுவதில் கொண்டுள்ள கரிசனையை வேறெதிலும் காட்டுவதில்லை.

இது, போராடப் புறப்பட்ட தலைமுறையின் குறைபாடா அல்லது போராட்டத்தின் விளைவுகளா தெரியவில்லை.

தேசம்நெட் ஐ ஆரம்பத்தில் நான் ஒரு ஊட்கமாக மட்டும் நினைக்கவில்லை. மாற்றுக்கருத்துள்ளோர் பலரைக் கொண்டுள்ள இயக்கமாக கருதியே அதில் ஆர்வம் காட்டத் தொடங்கினேன். சில உரையாடல்களின் முடிவில் சில செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படக் கூடும் என்ற வெகுளித்தனமான நம்பீக்கை எனக்கிருந்தது. அல்லது சில வகையான உரையாடல்கள் சில வகையான செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படுவதற்கு உதவக் கூடும் என்று அப்பாவித்தனமாக நம்பக் கூடியதாக இருந்தது.

எனது நம்பிகைகளுக்குச் சில காரணங்கள் இருந்தது. ஹேபர்மாசினது Public sphere என்ற கருத்தியலை சாதகமாக்கக் கூடிய சந்தர்ப்பத்தைக் கொண்டிருந்த ஒரே தளம் தேசம்நெட் மட்டுமே. மக்களுடன் ஊடாடக் கூடிய நவீன இணைய ஊடகவியலின் web 2.0 ஐ சாத்தியத்தையும் தேசம்நெட் கொண்டிருந்தது. ஆயினும் தேசம்நெட் அதனை பயன்படுத்திக் கொள்ளவில்லை. அதை இழந்துகொண்டிருக்கிறது.

extremely productive discussions of liberal democracy, civil society, public life, and social changes என்பதைச் சாத்தியமாக்கக் கூடிய தளம் சரிநிகருக்கு பின்னர் தேசநெட் கு மட்டுமே வாய்த்தது. இருவருமே அதனைப் பயன்படுத்த தவறிவிட்டீர்கள்.

-The claim that the Internet can lead to a greater democratization of society is founded on tenets of unlimited access to information and equal participation in cultural discourse. But will this inundation of texts and voices lead to anarchic, rather than democratic, forms of communication? To put it another way, does discourse on the Internet lead to a completely postmodern world in which multiple centers compete with one another in a debate which can only lead to complete divergence and fragmentation? -

இன்று கூட சில விடயங்களை நீங்கள் மறந்து உங்களின் ஊடகத்தை செயற்பாட்டுத் தளத்தை நோக்கி நகர்த்த முடியும். அல்லது காலப்போக்கில் வம்பளக்கும் தளமாக மட்டுமே மாறிப் போய்விடும்.

a theater in modern societies in which political participation is enacted through the medium of talk என்று நன்சி பிரேசர் கூறுவார்.

சிங்கள மக்களது ஊடாட்டம் இன்றி தமிழர்களுக்கு எவ்வாறு உரிமைகள் கிடைத்துவிடாதோ அவ்வாறே புலி ஆதரவாளர்கள் இல்லாமல் மாற்றுக் கருத்து வெற்றிபெற்றுவிடாது. புலி ஆதரவாளர்களை புலி எதிர்ப்பளர்களும், புலி எதிர்ப்பாளர்களை புலி ஆதரவாளர்களும் தீண்டத்தகாதவர்களாகக் கருதும் மனநிலையை கைவிட வேண்டும். அப்போது மட்டுமே சில வகையான மாற்றங்களை எதிர்பார்க்க முடியும். அறிவார்த்த ரீதியில் கட்டமைக்கப்பட்டிருக்கும் புதிய ‘சாதியம்’ ஒழிக்கப்பட வேண்டும்.

‘The Structural Transformation of the Public Sphere’ என்னும் நூலில் ஹேபர்மாஸ் கூறுவது போல் எமக்குச் சில வகை மாற்றம் வேண்டும். அதற்காக நாம் எல்லோரும் சில வகையான விட்டுக் கொடுப்புக்களைச் செய்தவாறு உரையாடத் தயாராக வேண்டும். உரையாடல்களை செயற்பாட்டுத்த்ளத்தில் நடைமுறப்படுத்தூவதற்கான கட்டுமானங்கள் வேண்டும்.

இப்படியே போனால், ஒரு கடத்தில் பின்னூட்டம் அளிப்பவர்களே தேசத்திற்கு கடிதம் எழுதிக் கேட்பார்கள். கன காலமாக பிரா கட்டுரை ஒண்டு வ்ரவில்லையே. ஒண்டு போடுங்கோ எண்டு.

2010 இல் உலகம் தகவல் பெருக்கத்தின் காரணமாக அதனைக் கடந்து ஆய்வுரீதியான முயற்சிகளை நோக்கி சென்றுவிடும் என எதிர்பார்க்கப்படுக்ன்றது.

தேசம்நெட் தனக்குள்ள வாய்ப்பைப் பயன்படுத்தி தமிழ்சூழலில் சில வகையான மாற்றங்களை ஏற்படுத்தலாம். இன்றும் காலம் கடந்துவிடவில்லை. தமிழர் அரசியலில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும். அதற்காக உரையாடல்களை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

எனது கருத்தை கவனத்தில் எடுப்பீர்கள் என நம்புகின்றேன். உங்களில் இருக்கும் மதிப்பின் காரணமாகவே இதனை எழுதத் தலைப்பட்டேன். பலரும் பல வகைகளில் பிழை செய்யக் கூடும்.

தேசம்நெட்டின் தீவிர வாசகன்,
-சேகர்


த. ஜெயபாலன் இனது பின்னூட்டம்.

நண்பர் சேகருக்கு

உங்களுடைய கருத்துக்கள் மிகவும் ஆரோக்கியமானவையாகவே கருதுகிறேன். நிச்சயம் கவனத்தில் எடுப்போம்.

//தேசம்நெட் தனக்குள்ள வாய்ப்பைப் பயன்படுத்தி தமிழ்சூழலில் சில வகையான மாற்றங்களை ஏற்படுத்தலாம். இன்றும் காலம் கடந்துவிடவில்லை. தமிழர் அரசியலில் மாற்றங்களை ஏற்படுத்த முடியும். அதற்காக உரையாடல்களை பயன்படுத்திக் கொள்ள முடியும்.//

தேசம்நெற் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்தே இந்நோக்கத்துடனேயே செயற்படுகிறோம். தேசம்நெற் மீதான குற்றச்சாட்டுகள் பெரும்பாலும் அதன் கருத்துப் பகிரும் பகுதி மீதே வைக்கப்படுகிறது. இப்பகுதியை நாம் திறந்த வெளியாகவே விட்டு உள்ளோம். அதில் தேசம்நெற் ஆசிரியர்கள் இறுக்கமான கட்டுப்பாட்டை கொண்டிருக்கவில்லை.

கட்டுரைகளைப் போன்று கருத்துப் பகுதியும் கட்டுப்படுத்த வேண்டும் என்ற குரல்கள் எமக்கு ஆரம்பத்தில் இருந்தே உள்ளது. நாம் தொடர்ந்தும் கருத்துக்களை இறுக்கமாக கட்டுப்படுத்துவது இல்லை என்ற நிலைப்பாட்டிலேயே உள்ளோம்.

தற்போது தேசம்நெற் இவ்வாறான வடிவில் இணையமாக ஆரம்பிக்கப்பட்டு 11 மாதங்கள் கடந்துவிட்டன. தேசம்நெற் ஒரு பல தடங்கல்களுக்கும் இடையில் தனது பயணத்தை தொடர்கிறது.

தேசம்நெற் இணையத்தின் வாசகன் என்ற வகையில் நீங்கள் தேசம்நெற் பற்றிய விமர்சனத்தை ஒரு கட்டுரையாக முன்வைத்தால் அதனையொட்டி ஒரு ஆரோக்கியமான விவாதத்தை தொடர முடியும். உங்கள் விமர்சனத்தல் கட்டுரைகளையும் செய்திகளையும் பின்னூட்டங்களையும் தனித்தனியாக விமர்சித்து பின்னர் முழுமையாகவும் விமர்சனத்தை முன் வைப்பது விவாதத்திற்கு ஆரோக்கியமாக அமையும்.

மேலும் நாங்கள் தேசம்நெற்றை ஒரு மக்கள் ஊடகமாகவே பார்ப்பதால் மக்களுடைய பொதுத் தளத்தில் இருந்து பங்குபற்றுதல் இல்லாமல் இருப்பது பலவீனமானதே.

தொடர்ந்தும் உங்கள் ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறோம்.

த ஜெயபாலன்.


சேகர் இனது பின்னூட்டம்.

ஜெயபாலன் அண்ணா,
பதிலுக்கு நன்றிகள்.

கருத்துப்பகுதிதான் இன்றைய ஊடகவியலின் முக்கியமான பகுதியாகக் கருதப்படுகின்றது. கருத்துப் பகுதியை முற்றுமுழுதாக திறந்துவிட்ட ஊடக்ங்களும் உண்டு. ஆயினும் தேசம் மட்டிறுத்தலைக் கொண்டுள்ளது. சிலவேளை முற்றுமுழுதாகக் திறந்துவிடுதல் உரையாடலை சாத்தியமாக்கமல் போவிடக்கூடும். ஆகையால் பின்னூட்ட மட்டிறுத்தல் சிலநேரங்களில் அவசியமானவை.

உரையாடல்களுக்கு அடுத்த கட்டமாக செயற்பாட்டுதளத்தில் அவ்விடயங்களை நடைமுறைபடுத்துவதற்கான கட்டமைப்புகளை நீங்கள் ஏற்படுத்த வேண்டும் என்பது எனது எதிர்பார்ப்பு. செயற்பாட்டினூடு அதன் குறைகளை அறிந்தவாறு அடுத்த உரையாடலைச் செம்மைப்படுத்தியவாறு நகர முடியும் என நினைக்கிறேன்.

ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட விடயம் ஒன்றை எடுத்து அதனைக் குறித்து உரையாடுதல் பயன் உள்ளது. அவ்வுரையாடலில் நீங்கள் இணையத் தொடர்பு இல்லாதவர்களையும் கூட பயன்படுத்த முடியும். தொலைபேசி மூலமாக உரையாடி அவற்றை எழுத்தாக்கம் செய்ய முடியும்.

ஒரு மாதத்திற்கிடையில் இது தொடர்பான எனது கட்டுரையை எழுதி அனுப்பிவைக்கிறேன்.

நன்றி.
-சேகர்

0 comments: