உரையாடல் - 13 (பொன் சிவகுமார், சேகர், த. ஜெயபாலன், ஜே. ஜென்னி, ஜெபன்)

தேசம் தளத்தில் இடம்பெற்ற உரையாடல்.

போலி ஜனநாயகத்தின் மீது எனது உள்ளக் குமுறல் : பொன் சிவகுமார்

யாருக்கும் எந்த ஜீவராசிக்கும் தீங்கும் இழைக்காத எனது பாசம் கொண்ட அண்ணனை ஈசியாக சிம்பிளாக கொன்றுவிட்டு இருக்கிறார்கள். ஒரு அண்ணனாக, ஒரு நண்பனாக, ஒரு ஆசாணாக, எல்லாவற்றுக்கும் மேலாக ஒரு கடவுளாக நானும் எனது குடும்பமும் மதித்தவரை கொன்றுவிட்டார்கள். எத்தனை குடும்பங்களில் இழப்புகள் ஏற்பட்டு உள்ளது. ஏன் இப்படிச் செய்கிறார்கள்? வெளியே இருந்து பார்க்கும் போது அரசியல்வாதி தலைவன். ஆனால் எனக்கு சகோதரன் ஒரு உறவின் இழப்பு அதன் வலியும் அதிகம். நாங்கள் இன்னமும் இதிலிருந்து மீள முடியவில்லை. எப்படி இந்த இழப்புகளில் இருந்து மீளப் போகின்றோம் என்பதும் தெரியவில்லை.

எனது அண்ணனின் 10வது ஆண்டு நினைவு நிகழ்வில் கலந்து கொண்டு என்னுடுன் துயரில் பகிர்ந்து கொண்டவர்களுக்கும், இவ்வாறான சம்பவங்கள் இழப்புகள் நடந்துவிடக் கூடாது அதற்கு அடையாள எதிர்ப்புத் தெரிவிக்க வேண்டும் என்ற அடிப்படையில் கலந்து கொண்டவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். நிற்க.

ஆனால் இந்நிகழ்வை தடுக்க சில முயற்சிகள் செய்யப்பட்டு இருக்கிறது. அவற்றை நண்பர்களாக இருந்தவர்களும் நான் மதிப்பளித்தவர்களுமே செய்தார்கள் என்பது மிகவும் வேதனையானது.

இணையத் தளங்களில் நாமும் எமது சோகமும் சிக்கித் தவிக்கிறது. எனது அண்ணனின் மறைவையொட்டி நினைவு நிகழ்வை ஒழுங்கு செய்து மனித உரிமைபற்றிப் பேசி எங்கள் உறவுகளுடன், எங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வது தவறா? ஜனநாயகத்தின் காவலர்கள் தாங்கள் என கங்கணம் கட்டி நிற்பவர்களே!!! நீங்கள் எனது சகோதரனின் நினைவு நிகழ்வில் சாக்கடை அரசியல் நடத்துவது நியாயமா? உங்களுக்கு உறவுகளை இழந்த துயர், வலி, வேதனை தெரியாதா? இழப்புகள் என்பது உங்களுக்குப் புதியதா? உங்களுக்கு ஓர் இழப்பு ஏற்படும் போதும் இவ்வாறா நடந்து கொள்வீர்கள்? உங்களுக்கு மட்டும் சோகம். எமக்கு சோதணையா? எனது அண்ணன் உங்களுக்கு செய்த கொடுமைதான் என்ன?

ஜனாநாயக அரசியலில் தன்னை ஈடுபடுத்தியவன். அந்த ஜனநாயக அரசியலுக்காக தன்னுயிரையும் இழந்த ஒருவனை நினைவுகொள்ளும் ஒரு மகத்தான நாளை செம்ரம்பர் 14 அன்று, நாம் ஒழுங்குபடுத்திக் கொண்டிருக்கையில் அதற்கு இருபத்தி நான்கு மணிநேரத்திற்கு முன் கையெழுத்து வேட்டை நடத்தி பெட்டிசம் அடித்த உங்கள் ஜனநாயகத்தை என்ன என்பது. நிகழ்ச்சியில் பேச இருந்தவர்களைத் தடுத்து, நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருந்தவர்களுக்கு போன் பண்ணி தடுத்து, என்னென்ன கீழ்த்தரமான முறைகளையெல்லாம் நீங்கள் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்தீர்கள். நீங்கள் எல்லாம் அரசியல் ஜனநாயக சக்திகள் என்று கூறுவது எவ்வளவு பொருத்தமானது என்பதை மக்கள் தீர்மானிக்கட்டும்.

விமர்சனங்களைப் பொறுத்துக் கொள்ள முடியாத நீங்கள் எப்படி மற்றவர்களைப் பற்றி விமர்சிக்க முடியும். இதுவரை காலமும் ஜனநாயகம் என்ற போர்வையில் உங்கள் கருத்துக்களைத் திணித்தீர்கள். உங்கள் செயல்கள் பற்றி கேள்விகள் எழுப்பப்பட்டதும் எப்படியாகி விட்டிர்கள் என்று எண்ணிப் பாருங்கள்.

ராகவன் அண்ணா! உங்கள் மேல் எனக்கு மிகுந்த மதிப்பும் மரியாதையும் இருந்தது. இந்நினைவு நிகழ்வில் நீங்கள் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். நீங்கள் எனக்கு வருவதற்கு விருப்பம் ஆனால் தேசம் நடத்துவதால் வரமாட்டேன் என்று சொன்னீர்கள். அதனை நான் மதிக்கிறேன். ஆனால் எனக்கு தெரிந்தவர்களையும் வரவிடாமல் தடுப்பேன் என்று நீங்கள் சொன்ன போது, அந்த நேர கோபத்தில் தான் அப்படிச் சொல்கிறீர்கள் என்று நினைத்தேன். ஆனால் நீங்களும் உங்களைச் சார்ந்தவர்களும் உண்மையாகவே தடுக்க முயற்சித்ததையும் தடுத்ததையும் அறிந்த போது உண்மையிலேயே வேதனைப்பட்டேன்.

மற்றையவர்களின் உறவுகள் படுகொலை செய்யப்பட்ட போது அதற்கு எதிராக உரக்கவே குரல் கொடுத்தோம். நினைவு நிகழ்வுகள் நடத்தப்பட்ட போதும் அதற்கும் முழு ஒத்துழைப்பையும் வழங்கினோம். அது கேதீஸ் லோகநாதனுடையதாக இருந்தாலென்ன, மகேஸ்வரி வேலாயுதமாக இருந்தாலென்ன, அதனை ராஜேஸ்பாலா நடத்தினாலென்ன எஸ்எல்டிஎப் நடத்தினாலென்ன. ஆனால் அந்த இழப்பு எனது குடும்பத்தில் நடந்த போது ஜனநாயக சக்திகள் என்று சொல்லிக் கொண்டவர்கள் நடந்து கொண்டதை என்னால் மறக்க முடியவில்லை. ஏன் உங்களால் பிரிவின் வலியை உணர முடியவில்லை. ஏனெனில் நீங்கள் எங்களில் மக்களில் இருந்து அந்நியமாகவே நிற்கிறீர்கள். அதனால் உங்களால் அவ்வலியை உணர முடியாது.

எனக்கு தெரிந்தவர்கள் பலர் கையொப்பமிட்டு ஒரு பெட்டிசம் வெளிவந்தது. அதனை நான் பிழையானது என்று சொல்வதற்கு முன்னால் இது திட்டமிட்டு எனது அண்ணனின் நினைவு நிகழ்வுக்கு முதல் நாள் வெளியிடப்பட்டு உள்ளது. இயன்ற அளவு யாரையும் நினைவு நிகழ்வுக்கு வராமல் தடுப்பதைத் தவிர அந்த நேரத்தில் அவ்வறிக்யை வெளியிடுவதற்கு வேறு எந்த நோக்கமும் இல்லை. தயவு செய்து, யார் அந்த அறிக்கையை அந்த நேரத்தில் வெளியிடுவதற்கு முடிவெடுத்தது என்பதனை அதில் கையெழுத்திட்டவர்கள் எனக்கு அடையாளம் காட்ட வேண்டும். ஏனென்றால் அவர்களிடம் எனக்கு ஒரு கேள்வி இருக்கிறது.

உங்களுக்கும் தேசம் நண்பர்களுக்கும் முரண்பாடுகள் இருக்கலாம் ஆனால் அதனைத் தீர்த்துக் கொள்வதற்கு எனது அண்ணனின் நினைவு தினத்தை எதற்காக ஆடுகளம் ஆக்கினீர்கள்.

இந்த நினைவு நிகழ்வை சென்ற ஆண்டு நடத்த முயற்சித்தேன். அப்போது நண்பன் ஜெயபாலன் ஆண்டு தோறும் நினைவு நிகழ்வு நடத்தப்படாததால் இது 9வது ஆண்டு என்பதாலும் 10வது ஆண்டு நினைவு தினத்தை சிறப்புற நடத்துவோம் என்று என்னிடம் கூறி இருந்தான். அதற்கு அமைய இவ்வாண்டு இந்நிகழ்வை நடத்த தீர்மானித்தோம். மேலும் ஜெயபாலனது சகோதரனும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் உயிர்த் தியாகம் செய்தவர். அதனால் எனது சகோதரனின் நினைவு நிகழ்வை அரசியலுக்கும் அப்பால் ஜெயபாலன் ஒழுங்கமைப்பதே பொருத்தமாயும் இருந்தது. இதிலென்ன தவறு கண்டிர்கள்?

அது ஜனநாயக விரோதப் படுகொலைகளின் நினைவு நிகழ்வாக இருந்தாலென்ன, மாவீரர் தின நிகழ்வாக இருந்தாலென்ன, அவற்றை சுயநல காரணங்களுகாக கொச்சைப்படுத்தாதீர்கள். இவ்வாறான சம்பவங்களுக்கு இதுவே ஒரு முற்றுப் புள்ளியாகட்டும்.

நாம் படித்த மேதாவிகள், புத்திஜீவிகள் எங்களுக்குத் தான் எல்லாம் தெரியும், நாங்கள் மட்டும்தான் எல்லாம் படைப்போம் என்றுதான் நீங்கள் இனியும் மார்தட்டிக் கொண்டு இருக்கப் போகிறீர்களா? ஒன்றை மட்டும் விளங்குவோம் இந்த நிகழ்வை தடுத்து நிறுத்திவிட்டு வீறு நடைபோட நினைத்த நீங்கள், எப்படி ஒரு அரசியலை நடாத்த முடியும்? இது உங்களுக்கு கேவலமாகத் தெரியவில்லையா?

எனது அண்ணனை அன்று புலிகள் சாகடித்தார்கள். அவன் நினைவு தினத்தன்று நீங்கள் அவரை இன்னுமொரு தடவை சாகடித்துவிட்டிர்கள். உண்மையில் உங்கள் ஜனநாயகம் நன்றாகத்தான் புலப்படுகிறது.

ஒருவேளை நீங்கள் தடுக்காவிட்டால் இவ்வளவு பேர் வந்திருப்பார்களோ எனக்குத் தெரியாது. இவ்வளவு சிக்கல்களுக்கு மத்தியிலும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைத்து உள்ளங்களுக்கும் எனது குடும்பத்தின் சார்பில் மீண்டும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் பெட்டிசங்களைக் கண்டு ஆடிப் போகாமல் இந்த நிகழ்வை ஒழுங்கமைத்த தேசம் நண்பர்களுக்கும், அதன் வாசக உள்ளங்களுக்கும் ஒரு சபாஸ்!! வாழ்க உனது ஜனநாயகப் பணி!!!

சேகர் இனது பின்னூட்டம்.

பகுதி - 1

பொன்.சிவகுமார் அவர்களே,
எனது 15 ஆவது வயதில் 98 ஆம் ஆண்டில் உங்களது அண்ணனின் மரணம் நடைபெற்றது. அந்நேரத்தில் நான் யாழ்ப்பாணத்தில் மாணவனாக இருந்தேன். கட்டமைக்கப்பட்ட மனநிலை காரணமாக அந்நேரத்தில் நாம் சந்தோசப்பட்டதாக ஞாபகம். ஆயினும் அன்று அச்செய்தியைப் பற்றி அப்பாவுடன் பேசும் போது, அப்பா அம்மரணத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. அப்பாவின் கூட்டணியுடனான மென்போக்கு அவர் இதனை ஏற்றுக்கொள்ளாமைக்கு காரணமாக இருந்திருக்கலாம் என்ற எண்ணம் அன்று என்மனதில் இருந்தது. ஆயினும் எனது வயது காரணமாக அப்பா எனக்கு விளக்கம் எதனையும் சொல்லவுமில்லை. அரசியல் பற்றிய உரையாடல்களை சூழல் நமக்கு அனுமதிக்கவும் இல்லை.

சில காலங்களின் பின்பு ‘கொலை’ களின் மோசமான முகம் எமக்கு பிடிபடத் தொடங்கிற்று. ஒரு உயிரைப் பறிக்க யாருக்கும் அதிகாரம் இல்லை என்பதை நாம் எவ்வளவு வன்மையாகக் ஆதரிக்க வேண்டும் என்பதான மனநிலையை பிரிவிகளும் கொலைகளும் எமக்கு அனுபவ பூர்வமாக உணர்த்தியது. சகலவிதமான கொலைகளுக்கும் அடக்குமுறைகளுக்கும் எதிராகவும் ஒருவன் தன்னை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்ற மனநிலையை, எமது சூழல் எம்மீது கட்டமைத்துக் கொண்டிருக்கும் வலைப்பின்னல்களை மீறி வளர்த்துக்கொள்ள வேண்டி இருக்கின்றது. கொலைகளைக் கொண்டாடும் சமூகத்தில் இருந்து- அதன் அங்கமாக இருந்தவாறு அதனை எதிர்ப்பதற்காக நாம் போராட வேண்டியிருக்கிறது. உங்களது தலைமுறை அல்ல நமது தலைமுறை. ‘கலவரத்தில்’ பிறந்து போராட்ட காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

கொலைகளுக்கு எதிரான மனநிலையை வளர்ப்பதற்கு நாம் அரசியல் எல்லைகளைத் தாண்ட வேண்டும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை எனக்கு இருக்கின்றது. இன்றைய இளைய சமூகச்சூழலை வைத்துச் சொல்கின்றேன். இச்சூழலில் அம்மனநிலையை வளர்த்துக் கொள்வதின் கடினம் உங்களில் யாருக்கும் புரிபடாதது. இது தோடர்பாக தமிழ்சமூகத்தின் மீது அக்கறை உள்ள அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்ற அவா எனக்குள்ளது.

பகுதி - 2

கொலைகளை அரசியல்மயப்படுத்தும் போதும் அவை அரசியல் வெளியில் வைத்துப் பார்க்கப்படும் போதும் அவற்றினிடையே கொலைக்கலாச்சாரம் தன்னை வளர்த்துக் கொள்கின்றது. தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினரின் கொலை, ஈ.பி.டி.பி உறுப்பினரின் கொலை மற்றும் விடுதலைப் புலி ஒருவரது கொலை என்பன எந்தவொரு காரணத்தாலும் நியாயப்படுத்தப்படக் கூடாதது. அதில் இருந்து எம்மை நாம் வெளியொதுக்கல் செய்யும் போது மட்டுமே நாம் உண்மையாக கொலைக்கலாச்சாரத்திற்கு எதிராக எம்மை உண்மையாகவே இயக்குகிறோம் என்று பொருள்படும். அவ்வாறல்லாது நாம் கட்சியுடன் இணைத்தவாறு அதனை நினைவு கூர்ந்தால் என்ன எதிர்த்தால் என்ன மறைமுகமாக பலர் அக்கொலையை ஆதரிக்க துணை போகின்றோம் என்றே கொள்ள வேண்டும்.

உங்களுக்கு உள்ளது போலவே பல புலி உறுப்பினர்களும், அவர்களது ‘ஞாபகங்களால்’ ஆய்க்கப்படக் கூடும் என்பதை நீங்கள் மறுத்துவிட முடியாது. ‘எனது சகோதரனை ஆமி சுட்டுப் போட்டான்’ என்றும் ‘எனது அப்பாவை ஈ.பி.டி.பி’ சுட்டது என்றதுமான ஞாபகப்பரத்தினால் இயங்கக் கூடிய புலி உறுப்பினர்கள் எவ்வளவோ பேர் இருக்கக் கூடும். இங்கே நாம் கொலைகளை இன்னார் செய்தது என்னாரைச் செய்தது என்னும் அடையாளப்பரப்பை மேவி அதனை ‘கொலை’ அல்லது ‘மரணம்’ என்ற பரப்பினுள் எப்போது அடைக்க முற்படாவிட்டால் 25 வருட தவறை எமது தலைமுறையும் தொடரும் என என்னால் உறுதியாகக் கூற முடியும்.

உதாரணமாக சாதாரண புலி உறுப்பினர்கள் இக்கொலையை வேறுவகையில் சிந்திக்க முடியும். அரச ஆக்கிரமிப்புக்கு எதிராகப் போரிடும் நாம், அதனை எவ்விதத்திலவது ஆதரிக்கும் அல்லது பேண முற்படும் எல்லா கட்டமைப்பையும் சீர்குலைக்க வேண்டுமென்பதாக. (இம்மனநிலையின் வழியிலேயே 15 வயசில் கொலைக்காகச் எம்மால் சந்தோசப்பட முடிந்தது.) ஆக, இங்கே நீங்கள் கொலைக் கலாச்சாரத்தை விமர்சிக்கும் போது அதனை உளப்பூர்வமாக விமர்சிக்க வேண்டும். சொந்த விருப்பு வெறுப்புக்களைத் தாண்டியதாக அது இருக்க வேண்டும். அப்போது மட்டுமே நாம் இனி நடைபெறும் கொலைகளை கொஞ்சமாவது நிறுத்த முடியும். அல்லது ‘நாம்’ ‘எதிர்ப்பதன்’ மூலம் ‘இன்னொருவர்’ ‘ஆதரிப்பதை’ நாமே களமைத்துக் கொடுத்தவாறிருப்போம்.

பகுதி - 3

தேசம் நெட் பலவகையான கொலகளையும் கண்டித்து வருவதும் கருத்துச் சுதந்திரத்திற்காக தனது நிலைப்பாட்டைத் தெரிவிப்பதும் பாராட்டக் கூடிய விடயம். இதனை தேசம் தொடர வேண்டும் என்ற விருப்பம் எனக்கிருக்கிறது. ஆயினும் இதனைக் கூட தேசம் சில எல்லைகளுக்குள் மட்டுப்படுத்தியிருப்பதான எண்ணமும் என்னைத் தொடர்கின்றது. இதனைத் தேசம் தவிர்க்க வேண்டும் என எதிர்பார்க்கின்றேன்.

ஈ.பி.டி.பி உறுப்பினரது கொலைகளைக் கண்டிக்கும் அதேநேரம் தமிழர் விடுதலைக் கூட்டணியினர்களது கொலைகளைக் கண்டிக்கும் அதே நேரம் இறுதிவரை தமிழீழம் என்ற எண்ணக்கருவை ஏற்றுக் கொள்ளாமல் சமஸ்டி என்ற தீர்வினடிப்படையில் நகர வேண்டும் என்ற ரவிராஜ் ஐயும் நினைவு கூருங்கள்.

சில கூட்டுக்களின் அதிகார வெறிக்கு எதிராக உங்க்ளது கருத்துச் சுதந்திரத்தை தெரிவிப்பதன் அதேநேரம் பலமாதங்களாக குடும்பத்துடன் சிறையின் வாடும் யசிதரனுக்காகவும், ஊடகம் ஒன்றைத் தொடங்கியமையை மட்டுமே குற்றமாகக் கொண்ட திசநாயகத்திற்காகவும் உங்களது குரலைப் பதிவு செய்யுங்கள். அரசியல் காய்நகர்த்தல்களுகாகச் சிறையில் வாடும் தேவதாசனை மறந்து நாம் கருத்துச் சுதந்திரத்தை பேசிவிட முடியாது நண்பர்களே. தனது கருத்து பிழையோ சரியோ தனியாக நின்று ஆர்ப்பாட்டம் செய்யக் கூடிய ஒரு மனிதனை மறந்து அல்லது வெளியொதுக்கல் செய்தவாறு நாம் நிகழ்காலத்தைக் கடந்து விட முடியாது. அவ்வாறு கடப்பதாக நாம் கருதினால் நாம் அச்சூழ்ல் தொடர்வதை விரும்பினோம் என்பதே கருத்து. ரவிராஜ் ஐ மறந்தவாறு நாம் சிவபாலனுக்கு கூட்டம் நடத்தும் போதும் திசநாயகத்தை மறந்து நாம் கருத்துச் சுதந்திரம் பற்றிப் பேசும்போதும் நாம் செய்யும் வெளியொதுக்கல்கள் இன்னுமொரு தரப்பை அவர்களது வழியில் ஊக்குவிக்கிறோம் என்பதை மறந்துவிடாதீர்கள்.

ரவிராஜ் ஐ புலிகள் நினைவு கூர முடியும். ஆனால் சிவபாலனை யாரும் நினைவு கூர்வதில்லையே என்ற உங்களது பக்க நியாயம் எமக்கு விளங்காமலில்லை. ஆயினும், சிவ்பாலனை நினைவு கூராத புலிகளுக்கும் ரவிராஜை நினைவு கூராத தேசத்திற்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும். நீங்கள் என்றைக்கு மாற்றுத்தளத்தில் நின்றவாறு ரவிராஜை நினைவு கூருகின்றீர்களோ அன்றைக்கு புலிகள் தமது தளத்தில் ஆட்டம் காணுவார்கள். இப்போது இருக்கும் வழியில் அவர்களால் போக முடியாது. அவர்கள் வேறு தளத்தைத் தேட வேண்டிய நிலை ஏற்படும். அவர்கள் தமது போராட்டத்திற்காக- தாம் நம்பும் போராட்டத்திற்காக- என்றைக்கு சிவபாலனை நினைவு கூருகின்றார்களோ அன்றைக்கு மட்டுமே இலங்கையில் உள்ள தமிழ் மக்கள் சரியான அரசியல் போராட்டத்தை ஆரம்பிக்க முடியும்.

புலிகளின் இன்றைய நிகழ்ச்சிக்கு மாற்றுக்கருத்தாளர்கள் என்று அறியப்பட்டவர்களும் முக்கிய காரணம் என்பதை மறந்துவிடாதீர்கள். இந்நச்சுச் சூழலில் இருந்து தமிழ் மக்களை மீட்பதற்கு அனைவரும் சில மனத்தடைகளைக் கடந்து முயற்சிக்க வேண்டும்.

பகுதி - 4

ராஜினி திரானகமே நான் மிகவும் மதிக்கும் ஒருவர். அவர் புலிகளால் கொல்லப்பட்டார். சிபலானும் புலிகளால் கொல்லப்பட்டார். ஆயினும் ராஜினியைக் கொண்டாடும் ஒரு குழு சிவபாலனது நினைவு முயற்சியைத் தடுக்க முயற்சி எடுத்துள்ளது என்பது மிகவும் வருத்தம் தரக் கூடீயது. ராகவனோ நிர்மலாவோ இதனை விளங்கிக் கொள்ளாமல் இவாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவது வருத்தம் தரக் கூடியது.. தேசத்திற்காக நாம் போராடினால் கூட அதன் சாதக அம்சங்கள் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்ற பற்றுதி எம்மிடம் இருக்க வேண்டும். சமூகத்தின் ஒவ்வொரு பாதகாமான கூறுகளுக்கு எதிராகவும் எம்மை எதிர்நிலைப்படுத்தும் தருணத்தில் அதனுடன் பிணைந்துள்ள சாதகமான விடயங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பது மிகவும் முக்கியமானது. எமது எதிர்நிலைப்பாடுகள் சாதகாம அம்சங்களை பதித்து விடக் கூடாது. ஜனநாயகத்தின் சாராம்சம் அதுதான். மாற்றங்கள் சடுதியானவை அல்ல. மாற்றங்கள் சடுதியானவை என்ற மனநிலையில் இருந்து நூற்றாண்டுகளைக் கடந்து விட்டோம்.

இது தொடர்பாக நாம் சில விடயங்களை மாற்றிக் கொண்டவாறு நகரவேண்டும். அதுதான் எமக்கு நல்லது. குழுவாதங்களை ஊக்குவித்தலும் இறுக்கப்படுத்தலும் எதனையும் சாதிக்க உதவப் போவதில்லை. இதில் இருந்து நாம் விடுபடும் போது மட்டுமே எமக்கு உண்மையான சமூக அக்கறை இருந்தது என நாம் எதிர்காலத்தில் நினைத்துக் கொள்ள முடியும். அல்லது நாமும் சில்வகையான கேவலங்களை செய்து தொலைத்தோம் என்று கவலைப்பட வேண்டியிருக்கும்.

பகுதி - 5

பொன். சிவகுமார் அவர்களுக்கு,
நான் சிறுவயதில் உங்களது அண்ணனது இறப்பில் சந்தோசப்பட்டேன் என்ற குற்றவுணர்வுடன் தான் இதை எழுதத் தொடங்கினேன். அதற்காக உங்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்கின்றேன். மன்னிப்பீர்கள் என நம்புகின்றேன்.

நன்றி.
-சேகர்

த. ஜெயபாலன் இனது பின்னூட்டம்

முகம் தெரியா நண்பர் சேகருக்கு

படுகொலைகளுக்கு எதிரான உங்களுடைய கருத்துக்கு வெளியே எனக்கு எந்தக் கருத்தும் இருப்பதாக தெரியவில்லை. அதனுடன் நான் முழுமையாகவே உடன்படுகிறேன். இதுவே என்னுடைய கருத்தாகவும் இருந்து வருகிறது.

பா உ ரவிராஜ் கொல்லப்படுவதற்கு ஓரிரு மாதங்களுக்கு முன் நானும் பொன் சிவகுமாரும் அவர் லண்டனில் தங்கி இருந்த இல்லத்தில் சந்தித்து தேசம் சஞ்சிகைக்காக ஒரு நேர்கதாணலையும் பெற்றிருந்தேன். மரணங்கள் மிகவும் துயரமானவை. எவ்வுயிராயினும் அது இயற்கையாக அல்லாமல் வன்முறையாகப் பறிக்கப்படுவது இன்னமும் வேதனையானது. ரவிராஜ்யை நான் சில மணிநேரங்கள் சந்தித்து அறிமுகமானது இன்னும் என் மனக் கண்முன் தோன்றுகிறது.

நிச்சயமாக யார் யாரை எதற்காக என்பதற்கு அப்பால் படுகொலைகள் கண்டிக்கப்பட வேண்டும். புலி ஆதரவு - புலி எதிர்ப்பு துருவ அரசியலைக் கடந்து படுகொலைகளை தமிழர்கள் என்று கண்டிக்கிறோமா அப்போது தான் இவற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும்.

உங்கள் மேலான கருத்துக்களை தேசம் நிச்சயம் உள்வாக்கும். உங்களைப் போன்றவர்கள் தொடர்ந்தும் தேசத்தை வளம்படுத்த வேண்டும்.

த ஜெயபாலன்.


சேகர் இனது பின்னூட்டம்.

நன்றி ஜெயபாலன் அண்ணா.
அதைத்தாண்டியும் சில செய்திகள் உள்ளன.

1.
நேற்று ராஜனி திராணகம (23.02.1954 - 21.09.1989) அவர்களது 19 ஆவது ஆண்டு நினைவு நாள். அதனை யாரும் நினைவு கூர்ந்ததாகத் தெரியவில்லை. ஒருவேளை தேசம் ராஜினிக்காக நினைவு நிகழ்வு நடாத்தியிருந்தால் ராகவன் என்ன செய்திருப்பார் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் நிச்சயமாக தடுத்திருக்க முடியாது. அரசியலையும் உறவுகளையும் தாண்டிய இச்செயலை தேசம் செய்திருந்தால் நான் மிகவும் சந்தோசப்பட்டிருப்பேன். குறைந்தபட்சம் ஒரு கட்டுரையையாவது பிரசுரித்திருக்கலாம். இதன் மூலம் தேசத்திற்கு எதிராகக் கையொப்பமிட்ட ஷெரிகா திராணகம விற்காவது சில விசயங்களைப் புரிய வைத்திருக்க முடியும்.

2.
என்றைக்கு பதமநாபாவிற்கும், உமாமகேஸ்வரனுக்கும், மகேஸ்வரி வேலாயுதத்திற்கும், சபாரத்தினத்திற்கும், திலீபனுக்கும், தமிழ்ச்செல்வனுக்கும் ஒரே குழுவால் நினைவு நிகழ்வு ஒரே மேடையில் நடாத்தப்படுகின்றதோ அன்றைக்குத்தான் தமிழ் மக்களது உரிமைக்கான அரசியல் போராட்டத்தின் தொடக்க நாளாகும். அதுவரை யார் என்னதான் சொன்னாலும் தமிழர்களின் காட்டுமிராண்டிக் காலமே.. அதனை யார் செய்யப் போகின்றார்கள் என்பது எமக்கு முன்னுள்ள மிகப்பெரிய கேள்வி. அப்போது மட்டுமே புலிகளிடம் மாற்றத்தை எதிர்பார்க்க முடியும். அல்லது புலிகளின் ‘மாறாநிலைக்கு’ நாமும் காரணமானோம் என்ற விடயம் உறுத்தாமலே வாழ்ந்து முடிப்போம்.

ஜெயபாலன் அண்ணா,
Bad memories என்பதைத்தாண்டி சிந்திக்கும் தலைமுறை என்றைக்கோ இதனைச் செய்யத்தான் போகின்றது. அதனை தேசம் ஆரம்பித்து வைக்க வேண்டும் என்பதே எனது கருத்தாகும்.

-சேகர்


j.jenney இனது பின்னூட்டம்.

தம்பி சிவகுமார்!
உங்களின் மிக ஆதங்கமான கட்டுரை எனது உள்ளத்தை மட்டுமல்ல மனிதநேயத்தை மதிக்கும் எந்த நபரையும் ஒரு நிமிடமாவது நின்று நிதானிக்க வைக்கும்.இதற்கு சாட்சி பகிர்வது போல் சேகாpன் பதிவுகள் உள்ளன.அதிலும் எதிர்காலத்தில் சமூகத்தை வழிநடத்தப் போகும் இளைஞர் சமூகத்தின் ஒரு பிரதிநிதி தானாக முன்வந்து சுயவிமர்சனம் செய்து தனது இரங்கலைத் தெரிவித்ததே எமது அண்ணருக்கு இந்த சமூகத்தால் கிடைக்கப்பெற்ற பெரும் அங்கீகாரம்.உங்களைப் போன்ற இளைஞர்கள் முன்வந்து ஆரோக்கியமான முறையில் இச்சமூகத்தைப் பார்த்து-மனதைத் தொட்டு -விட்டு போன கேள்விகளும் உண்மையில் எம்மவர்களின் வக்கிரத்தனமைகளையும்>எம்மக்களின் எதிர்காலத்தையும் பற்றி எமக்கிருந்த மனச்சோர்வை நீக்கியிருந்தது.மக்களுக்காகவே வாழ்ந்து மக்களோடு மக்களாக மடிந்த”மண்ணின் மைந்தரான”அமரர் பொன் சிவபாலன் அண்ணா அவர்களின் நினைவுகூறலையொட்டி புரையோடிப்போன மனிதர்கள் அடையாளப்படுத்தப்பட்டதும்-புதியதொரு சமூகம் தளிர்விடத்தொடங்கியதுமே அண்ணர் அவர்கள் மறைந்தும் எம் மக்களினுள்ளும் -எம் மனித மனங்களினுள்ளும் வாழ்ந்து சமுதாயச் சாக்கடைகளை அம்பலப்படுத்தி சரியான பாதையில் எமை வழிநடத்துகின்றார் என்பதை அறைகூவி நிற்கின்றது.


Jeban இனது பின்னூட்டம்.

என்றைக்கு பதமநாபாவிற்கும், உமாமகேஸ்வரனுக்கும், மகேஸ்வரி வேலாயுதத்திற்கும், சபாரத்தினத்திற்கும், திலீபனுக்கும், தமிழ்ச்செல்வனுக்கும் ஒரே குழுவால் நினைவு நிகழ்வு ஒரே மேடையில் நடாத்தப்படுகின்றதோ அன்றைக்குத்தான் தமிழ் மக்களது உரிமைக்கான அரசியல் போராட்டத்தின் தொடக்க நாளாகும். - சேகர்

Im 100 percent agree with this coments. Its important sentence for next Sri lankan related tamil generation.


சேகர் இனது பின்னூட்டம்.

/உங்களைப் போன்ற இளைஞர்கள் முன்வந்து ஆரோக்கியமான முறையில் இச்சமூகத்தைப் பார்த்து-மனதைத் தொட்டு -விட்டு போன கேள்விகளும் உண்மையில் எம்மவர்களின் வக்கிரத்தனமைகளையும்>எம்மக்களின் எதிர்காலத்தையும் பற்றி எமக்கிருந்த மனச்சோர்வை நீக்கியிருந்தது/ - j. jenney

ஜென்னி,
உங்களுக்கு எனது நன்றிகள். உங்களது கருத்தை நான் பெரிதும் மதிக்கின்றேன். பல காலங்களாக அரசியலில் செயற்பட்டு வரும் உங்களைப் போன்றவர்கள் இக்கருத்தில் இருந்து இன்னும் சிறிது நகர வேண்டும் என எதிர்பார்க்கின்றேன். அப்போது மட்டுமே நாம் அரசியல் ரீதியாக உரிமைகளைப் பெற்ற சமூகமாக தமிழ்சமூகத்தை மாற்ற முடியும்.

அதற்காக நீங்கள் சில விட்டுக் கொடுப்புக்களைச் செய்தாக வேண்டும். உங்கள் விட்டுக் கொடுப்புகளுக்குத் தகுந்த பலன் நிச்சயயமாக எம் தமிழ்ச்சமூகத்திற்குக் கிடைக்கும்.

தேசம்நெட் உடனான உரையாடலில் நாகர்ஜுனன் சொன்ன வாக்கியங்கள் எனக்கு தற்போது ஞாபகம் வருகின்றன.

/உங்கள் பிரச்னையில் எவ்வித அரசியல் தீர்வு வந்தாலும் சரி. உங்கள் சமுதாயமும் இலங்கையின் மற்ற சமுதாயங்களும் அனுபவித்த ரணங்கள், கசப்புணர்வு எல்லாம் ஆறுவதற்கு தனித்த காலம் தேவைப்படும்ன்னு நினைக்கறேன். இதற்குக்காரணம் உங்களுக்கெல்லாம் ஏற்பட்டிருக்கும் இழப்புகள் ரொம்ப அதிகம், தவிர இழப்புகளுக்கு நீதி கிட்டாத சூழ்நிலை, இந்த அநீதி தொடர்கிற சூழ்நிலை, அது உண்டாக்கியிருக்கற கோபம், வன்மம், எதிர்வன்மம்.. இதெல்லாம் போக ரொம்பக்காலம் ஆகலாம். ஆனா இதெல்லாம் போனால்தான் சமாதானம் நிலைக்கும்னு அடித்துச் சொல்ல முடியும். / - நாகர்ஜுனன்

சில கசப்புணர்வுகளில் இருந்து நாம் விடுபடும் போது மட்டுமே உண்மையான சமாதானம் தோன்ற வழிசமைத்துக் கொடுத்தவர்கள் ஆவோம். சின்ன பொடியன் சொல்கின்றான் என்று ஒதுக்கிவிட மாட்டீர்கள் என நம்புகின்றேன்.

நன்றி.
-சேகர்


j.jenney இனது பின்னூட்டம்.

“இருதரப்பும் உடனடியாக யுத்தத்தை நிறுத்தி சர்வதே அணுசரணையுடன் ஒரு அரசியல், தீர்வுக்கான நிலைப்பாட்டை முன்னெடுக்க வேண்டும். புலிப் போராளிகளையும் உள்வாங்கி அனைத்து தரப்பு தமிழ்பேசும் மக்களின் பிரதிநிதித்துவ கட்சிகளுடன் - குறிப்பிடத்தக்க ஜனநாயக முற்போக்கு சக்திகளையும் ஒன்றிணைத்து ஒரு பேச்சுவார்த்தையை மேற்கொள்ள வேண்டும். எனவே உடனடி போர் நிறுத்தத்தையும் இவ்வாறான தீர்வுதிட்டத்தையும் முன்னெடுப்பதற்காக புலம்பெயர் சூழலிலுள்ள நாம் அனைவரும் ஒன்றிணைந்து சர்வதேசங்களுக்கு அழுத்தம் கொடுக்கும் வெகுஜனப் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். “ஜெ.ஜென்னி

தம்பி சேகர்!
உங்களைப் போன்ற எதிர்கால நம்பிக்கை நட்சத்திரங்கள் வெளியே- மின்ன வழிவகுத்த இந்த தேசத்தின் இணையத்திற்கு நன்றி கூறிக்கொண்டு உங்களைப் போன்றோறின் புதுவரவையும் உற்சாகத்தையும் உங்களது அறீவுரைகளையையும் ஆரோக்கியத்துடன் வரவேற்கின்றோம். கண்டிப்பாக கடந்த கசப்பனுபவங்களை மறந்து குரோத மனப்பான்மையை கொன்றொழித்து பல விட்டுக்கொடுப்புக்களுடன் பல தரப்பினரும் அங்கு அடையாளமே அற்றுக்கொண்டிருக்கும் எம்மக்களுக்காகவும்-எம்மவர்களின் மண்ணுக்காகவும் அவர்களின் அடிப்படை உரிமைகளை மீட்டெடுக்க குறைந்த பட்ச வேலைத்திட்டத்திலாவது நாமனைவரும் ஒன்றிணைந்து அரசியல் தீர்வு திட்டத்தை முன்னகர்த்த வேண்டும். இவற்றை முன்னெடுக்க உங்களைப் போல் இளைஞர்கள் முன்னிற்க வேண்டும்;எனவே இதுபோன்றஆரோக்கியமான எழுத்துக்களும்- எண்ணங்களும்- கலந்துரையாடல்களும்- சந்திப்புக்களும்- விமர்சனங்களும்- வாசிப்புக்களும்- தேடல்களும் -ஆலோசனைகளும் எல்லா மட்டத்தினராலும் எல்லோருக்கும் தேவையானதே.எனவே உங்கள் இனிய வரவு இனிதே தொடரட்டும்
நன்றி


சேகரினது பின்னூட்டம்.

ஜென்னி அக்கா,
உங்களது பதிலுக்கு எனது நன்றிகள்.

உங்களது கட்டுரை படித்தேன். மாற்றுக்கருத்தாளர்கள் முன் இன்றைக்கு உள்ள பணியை கூறியிருக்கிறீர்கள். புலிகளின் அழிவில் தான் தமிழ் மக்கள் ஜனநாயகக் காற்று வீசும் எனக் கருதுபவர்களுக்கு நீங்கள் கூறியிருக்கும் விடயம் மிக முக்கியமானது. ஏற்படப் போகும் பெரும் அழிவுகளை தடுப்பது மாற்றுக் கருத்தாளர்களின் மிக முக்கியமான கடமை. அதற்கான வேலைத்திட்டங்கள் உடனடியாக முன்னெடுக்கப்படவேண்டும். உங்களுக்கு மீண்டும் எனது நன்றிகள்.

-சேகர்

0 comments: