தேசம் வலைத்தளத்தில் இடம்பெற்ற உரையாடல். வேறொரு இடத்திலான சில பதில்களும்..
வன்னி யுத்தகளத்தில் புதிய திருப்பம். புலிகள் இயக்கம் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்துகின்றதா? - ஏகாந்தி
கடந்த செவ்வாய்க்கிழமை வன்னிப் பகுதியிலிருந்து தொண்டர் நிறுவனங்கள் பெருமளவில் வெளியேறிவிட்டன. தொண்டர் நிறுவனங்களில் பாதுகாப்பு கருதியே வெளியேறச் சொன்னோம் என்று அரசு பல சந்தர்ப்பங்களில் அறிவித்திருந்தது. தற்போது உத்தியோகபூர்வமாக ‘சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம்’ மாத்திரமே யுத்தப் பகுதியில் செயலாற்றுகின்றது.
அதேநேரம், வன்னிப் பகுதியில் யுத்தநிலை வரவர உக்கிரமத்தன்மையை அடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்றுக்(17) காலை வட்டக்கச்சிப் பிரதேசத்தில் கபீர் விமானங்களும், எப்-7 ரக விமானங்களும் பாரிய தாக்குதல்களை நடத்தியதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இன்றையதினம் இலங்கையில் வெளியாகியுள்ள சகல சிங்கள, ஆங்கிலப் பத்திரிகைகளிலும் போல வட்டக்கச்சித் தாக்குதல் பற்றியே பிரதான செய்திகள் வெளியாகியிருந்தன. அத்தாக்குதலில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் முக்கிய தலைவர்கள் ஒன்றுகூடும் வீட்டுத் தொடரொன்று அழிக்கப்பட்டதாக ஊடகங்கள் கூறுகின்றன. தாக்குதலுக்குட்பட்ட வீட்டுத் தொடரில் பாதுகாப்பு பங்கர்கள் அமைக்கப்பட்டிருந்ததாகவும் சொகுசுமிக்கதாக அமைந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றன.
அதேநேரம், கிளிநொச்சி அக்கராயன்குளம் பகுதியில் இடம்பெற்ற இரு தரப்பு மோதல்களின் போது விடுதலைப் புலிகளால் மூச்சுத் திணறல் ஏற்படக்கூடிய விஷவாயுவைக் கக்கும் கிரனைட் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.
இவ்வாறு புலிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலினால் 6 இராணுவ வீரர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்ட நிலையில் அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் இராணுவ பேச்சாளர் மேலும் கூறியதாவது
மோதல்கள் இடம்பெறும் தருணத்தில் எதிர்த்தரப்பினரை பலவீனப்படுத்தும் வகையில் பல்வேறு நடைமுறைகள் கையாளப்படக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளன. அந்த வகையிலேயே படையினரின் உற்சாகத்தையும், பலத்தையும் முறியடிக்கும் வகையில் விடுதலைப் புலிகள் புதியதொரு நடைமுறையைக் கையாண்டுள்ளனர்.
கடந்த சில தினங்களாக கிளிநொச்சி அக்கராயன்குளம், வன்னிவிளாங்குளம் மற்றும் மேற்கு மாங்குளம் ஆகிய பகுதிகளில் இடம்பெற்ற இரு தரப்பு மோதல்களின் போது விடுதலைப் புலிகளால் மூச்சுத் திணறல் ஏற்படக்கூடிய விஷ வாயுவைக் கக்கும் கிரனைட் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்தாக்குதலில் 6 படையினர் மூச்சுத் திணறல் ஏற்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கண்ணீர்ப் புகைக்குண்டுகளை ஒத்ததான இந்த குண்டுத் தாக்குதலினால் எவ்வித உயிர்ச் சேதங்களும் ஏற்படவில்லை.
எதிர்காலத்திலும் விடுதலைப் புலிகளால் இவ்வாறான தாக்குதல்கள் மேற்கொள்ளப்படலாம் என சந்தேகம் எழுந்துள்ளதால் அதனை முறியடிக்கும் வகையில் படையினரும், சுகாதாரத் துறையினரும் நடவடிக்கை எடுத்துள்ளனர் என்றார்.
யுத்தம் உக்கிரமமடையும் நிலையில் விடுதலைப் புலிகள் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தலாம் என ஏற்கனவே செய்திகள் வெளிவந்தன. இந்நிலையில் தற்போது அக்கராயன்குளம் பகுதியில் இடம்பெற்றதாக சந்தேகிக்கப்படும் மூச்சுத் திணறல் ஏற்படக்கூடிய விஷவாயுவைக் கக்கும் கிரனைட் குண்டுத் தாக்குதல் இரசாயன ஆயுதத்தாக்குதலில் முதல் கட்டமா? என யுத்த ஆய்வாளர்கள் மத்தியில் சந்தேகங்களைக் கிளப்பியுள்ளது.
கொழும்பிலிருந்து வெளிவரும் “டெய்லி மிரர்” பத்திரிகை, கிளிநொச்சி மாவட்டம் அக்கராயன் மற்றும் வன்னிவிளாங்குளம் ஆகிய பகுதிகளில் நடைபெற்ற மோதல்களில் புலிகள் ஒரு வகையான “வாயு”வைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தினர். இதனால் படையினருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்த்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அக்கராயன்குளத்தில் 57 ஆவது படையணியினர் மீதும் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது எனப்பட்டிருந்தது. கண்ணீர்ப்புகைக் குண்டுகளை ஒத்ததான ஒரு வகை “வாயு”வைப் பயன்படுத்தி தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தி வருவதாக இலங்கை இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
அதேநேரம், எத்தகைய தாக்குதல்களுக்கும் முகங்கொடுக்க படையினர் தயார் நிலையில் உள்ளதாக இராணுவப் பேச்சாளர் தெரிவித்திருந்தார். மேலும், யுத்தகளத்திலுள்ள படைவீரர்களுக்கு விசவாயு தாக்காதிருக்கக்கூடிய முகமூடிகள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றன.
இத்தகைய நிலையில் மோதல்களில் ஈடுபட்டு வரும் படையினருக்கு அவசியமான அனைத்து சுகாதார வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார். அதற்காக மருந்துவப் பொருட்களை அனுப்பிவைப்பதுடன் மருத்துவர்கள் மற்றும் தாதியர்களையும் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த அடிப்படையில் குறித்த விஷ வாயுத் தாக்குதல்களை எதிர்கொள்ளக்கூடிய வகையிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றன.
புலிகள் இரசாயனத் தாக்குதல் நடத்தும் பட்சத்தில் முன்னேற்பாடு - வவுனியா அநுராதபுரம் வைத்தியசாலைகளை தயார்படுத்தும் நடவடிக்கையில் அரசாங்கம்.
புலிகள் இயக்கத்தினர் இரசாயனத் தாக்குதல் நடாத்தும் பட்சத்தில் அதற்கு முகம் கொடுப்பதற்கு ஏற்ற வகையில் வவுனியா மற்றும் அனுராதபுரம் பொது வைத்தியசாலைகளைத் தயார்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
புலிகள் இயக்கத்தினர் இரசாயனத் தாக்குதல் நடாத்தும் பட்சத்தில் பாதிக்கப்படும் பாதுகாப்பு படையினருக்கு உடனுக்குடன் உரிய சிகிச்சைகளை அளிப்பதற்கு ஏற்ற, ஏற்கனவே ஒரு தொகுதியினருக்குரிய பயிற்சிகள் நிறைவு பெற்றுள்ளதென சங்கக் கிளைத் தலைவர் டாக்டர் பி. சத்தியலிங்கம் தெரிவித்தார்.
யுனிசெப் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் அனுசரணையுடன் இலங்கை செஞ்சிலுவைச் சங்க வவுனியா கிளையினர் பயிற்சி நெறிகளை நடத்திவருகின்றனர்.
முதலுதவி சிகிச்சைகளை எவ்வாறு வழங்குவது என்பது தொடர்பாகவும் பயிற்சிகள் இடம்பெற்றுவருகின்றன.
சுதாவின் பின்னூட்டம்.
CS gas ஐ உபயோகிப்பது இரசாயன ஆயுதம் உபயோகிப்பது போல் எனக் கருதினால், இலங்கையில் நடைபறும் அனைத்து வகையான ஆர்ப்பாட்ட வகையிலான போராட்டங்களும் கூட இரசாயான ஆயுதத்திற்கு எதிரான போராட்டமாகவே பார்க்கப்பட வேண்டும். ஏனெனில் O-CHLORO- BENZYLMALONONITRILE எனப்படும் இராசாயனப் பெயரை கொண்ட CS gas ஐ, அப்பாவிகளைக் கைது செய்தலையே தொழிலாகக் கொண்ட இலங்கை காவல்துறை நூற்றுக்கணக்கான முறை பல்கலைக்க்ழக மாணவர்கள் மீது நடத்தியிருக்கிறது. சகல பத்திரிகைகளாலும் பிக்ஞையின்றி பயன்படுத்தப்படும் சொல் ‘கண்ணீர்ப்புகைக் குண்டு’ என்பது உண்மையில் CS gas என்பதே.
CS gas ஆயிரக்கணகான தொன்கள் வியட்னாம் யுத்ததில் அமெரிக்க அரசு பயன்படுத்தியது. ஒரு சில செக்கன்களில் தமது வேலையைக் காட்டத்தொடங்கும் CS gas ஐ இரசாயன ஆயுதம் எனக் கூறுவது எவ்வகையில் பொருத்தப்பாடான விடயம் என்பது புரியவில்லை. சாதாரணமாக இராணுவப் பயிற்சி பெறும் போது CS gas ஐ எதிர்கொள்ளும் நோக்கில் கவசம் அணிந்து பயிற்சி மேற்கொள்வது பெரும்பாலான இராணுவங்களின் நடைமுறையாகும்.
எதிரில் உள்ளவரை உடனடியாக செய்லற்றதாக மாற்றக்கூடிய CS gas ஐ பயன்படுத்தி இராணுவத்தினரைக் கைதுசெய்ய மட்டுமே முடியும். அதற்கு அப்பால் வேறெந்த விடயத்தையும் செய்ய முடியாது. சில வேளைகளில் புலிகள் இராணுவத்தினரை ஆயிரக்கணக்கில் கைது செய்வதற்கான பரிசோதனை முயற்சியாக இதனைக் கொள்ள முடியும்.
நரம்புகளைப் பாதிக்கக் கூடிய வகையில் அமைந்ததும் உடனடியாக இரத்தத்தை வரவழைக்கக் கூடியதுமான இரசாயன ஆயுதங்கள் உலகத்தில் வல்லரசு நாடுகளால் பரவலாகக் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. Hydrogen Cyanide போன்ற ஆளைக் கொல்லக்கூடிய இரசாயன ஆயுதங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் CS gas ஐ இரசாயன ஆயுதம் எனக்கூறவே முடியாது.
ஆயினும் cyanide மீதான பிரக்ஞை உள்ள புலிகள் CS gas உடன் cyanide சேர்த்து உபயோகிப்பார்களேயானால் விளைவு மோசமாகக் கூடும். Hydrogen Cyanide ஐ வன்னியில் பாவிப்பது ஒப்பீட்டளவில் குளிர் நாடுகளில் பாவிப்பதை விட சுலபமானது. ஏனெனில் அவர்களது தயாரிப்புக் கூடத்திலேயே வாயு நிலையில் அதனைத தயாரித்து பாதுகாத்து வைக்க முடியும். குளிர்நாடுகளில் அது சில வேளைகளில் திரவமாகும் வாய்ப்புக்கள் உண்டு. ஆகையால் எவ்விதமான நிலையில் பயன்படுத்தப் போகின்றார்கள் என்ற சிக்கல் எழ முடியும். அதற்கு ஏற்றபடி பயன்படுத்த வேண்டி வரும். ஆயினும் வன்னியில் வாயு நிலையில் தயாரிப்பு மேற்கொண்டு வாயு நிலையில் பயன்படுத்த முடியும். பயன்படுத்தத்தான் போகின்றோம் என முடிவெடுத்தால் எதிர்காலத்தில் புலிகள் நிச்சயமாக Hydrogen Cyanide ஐ பயன்படுத்துவார்கள் எனக் கூறமுடியும்.
கருணா அண்மையில் தெரிவித்த கருத்தின் பிரகாரம் Ammonium nitrate ஏ புலிகளால் பெருமளவில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. அவ்வேளையில் புலிகள் Ammonium nitrate பயன்படுத்தப் போகின்றார்கள் என்ற கதை பரவலாக அடிபட்டது. ஆயினும் Ammonium nitrate ஐப் பயன்படுத்தி பெரியவெடிப்புக்களை ஏற்படுத்த முடியுமே தவிர பெரும் இழப்புக்களை ஏற்படுத்த முடியாது. ஆயினும் புலிகள் வழமையைப் போல சைக்கிள் போள்ஸ் கலந்து மாதிரியான வெடிபொருட்களை உற்பத்தி செய்வார்களேயானால் அதன் விளைவு பெரிதாகும் எனக் கூறமுடியும்.
ஆயினும், Ammonium nitrate ஐ புலிகள் பெருமளவில் தருவித்தது வேறிவகையான ஆயுதங்களைச் செய்வதற்காகவே இருக்குமே தவிர அதனை நிச்சயமாக நேரடியாகப் பயன்படுத்த மாட்டார்கள். ஏனெனில் நேரடியாகப் புலிகள் பயன்படுத்தும் எவ்வகை ஆயுதங்களுக்கும் மாற்றாக வெளிநாடுகள் உடனடியாக இலங்கை அரசாங்கத்திற்கு கொடுக்கும் என்பதை அவர்கள் மிகநிச்சயமாக உணர்ந்து வைத்திருப்பார்கள். சிறுவகையான ஆயுதங்களையே தமக்கு ஏற்றபடி மாற்றத்திற்கு உட்படுத்தும் புலிகள் இவ்வகையான ஆயுதங்களை எவ்வாறாயினும் மாற்றத்திற்கு உட்படுத்தியிருப்பார்கள். அதில் யாருக்கும் சந்தேகம் வரக் கூடாது.
Hydrogen Cyanide ஐ கூட அவர்களது உருவாக்கத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாக மாற்றி அமைப்பது கடினம். ஒவ்வொருமுறையும் விமானத் தாக்குதலின் போதும் சில குண்டுகள் வெடிக்காத நிலையில் புலிகளுக்கு Hydrogen Cyanide இதனை வெற்றிகரமாகப் பயன்படுத்த முடிந்தால் அது ஆச்சரியமானதே.
ஆயினும் கார்பன், குளோரின் பிணைப்புக்களை மையமாக வைத்து இவறை விடப் பெரியளவிலான பாதிப்பையும் Biological effects ஐயும் ஏற்படுத்தக் கூடிய பொருட்களை இலகுவாக உற்பத்தி செய்ய முடியும். சிறிது காலத்தின் பின்னரே புலிகள் அவற்றை பயன்படுத்துவார்களா என்பதை அறிந்து கொள்ள முடியும்.
இலங்கை இராணுவம் மரபுவழிப்படையணி அல்ல என டி.சிவராம் சொல்லுவார். அதுவே இன்று இலங்கை இராணுவத்திற்கு வசதியாகப் போய்விட்டது. மரபுவழிப்படையணியாக மாறியிருந்தால் அடிக்கடி போர் நுட்பங்களை மாற்றியவாறு தாக்குதலை நடாத்தும் புலிகளை அவர்களால் எதிர்கொள்ள முடியாமல் போயிருக்கும். அதற்கு தகவமைத்துக் கொள்வது மரபுவழிப்படையணியாகப் பயிற்சி பெறவர்களுக்கு மிகக்கடினமான ஒரு செயல். தற்போது இலங்கை இராணுவம் கொரில்லா அமைப்பு முறைக்கு ஏற்ற மாதிரியாகத் தன்னை தகவமைத்துக் கொள்வதென்பது அவர்களுக்கு வலுச் சேர்ர்க்கும் ஒரு காரணியாகும்.
இதனை விட இராணுவ கட்டளைப் பீடத்தை அவர்கள் யாழ்ப்பாணத்தில் de-centrlaize (அய்.. பினவீனத்துவம்.. !) செய்திருக்கிறார்கள். இது இலங்கை இராணுவம் மிக பக்காவான திட்டமிடலுடன் களமிறங்கியோருப்பதைக் காட்டுகின்றது. centrlaize செய்யப்பட்ட இராணுவ அமைப்பை புலிகள் இலகுவாக நிர்மூலமாக்குவார்கள். ஏனெனில் புலிகள் அடுத்த கட்ட ஈழஒப்போருக்கு தம்மைத் தயார் செய்த போது மையத்தை அழித்தொழிக்கும் முறையில் அமைந்த இராணுவ நகர்வுகளை தமது முக்கியமன விடயமாகக் கொண்டிருந்தார்கள். ஆயினும் பலாலியை விட காரைநகரில் விமானத்தளத்தை அமைத்தது மட்டுமல்லாது கட்டளைப் பீடங்களை பரவலாக்கல் செய்து சுதந்திர முடிவுகளுக்குத் தயார் செய்ததன் மூலம் நவீன பல்தேசியக் கம்பனிகள் தமது வியாபரப் பெருக்கத்திற்கென பல்வேறு கண்டங்களிலும் கொண்ட்ருக்கும் கட்டமைப்பை இராணுவக் கட்டமைப்பில் பின்பற்றுகின்றனர். அது மட்டுமல்லாது ஆட்லறி தளங்களை யாருமே எதிர்பார்க்காத வகையில் பரவலாக்கம் செய்திருக்கின்றனர். இக்கட்டமைப்பை புலிகள் உடைப்பது இலேசுப்பட்ட காரியம் அல்ல.
அதுமட்டுமல்லாது, புலிகளின் அரசியல் ரீதியான பலவீனங்களைக் கொண்டு சிங்கள் மக்கள் மத்தியில் கட்டமைக்கப்பட்டிருக்கும் தேசிய வெறி புலிகளைப் பொறுத்தவரை எதிர்பார்க்காத ஒன்று. இன்றிருக்கும் நிலையில் சிங்க மக்கள் மத்தியில் இருந்து தற்கொலைக் கொண்டுதாரிகளை உற்பத்தி செய்துவிடக் கூடியதான மனநிலைக்கு சிங்கள மக்களை அரசாங்கம் கொண்டு சென்று கொண்டிருக்கின்றது. இலங்கை அரசாங்கத்தின் பொருளாதாரத்தை ஆட்டம் காண வைப்பதன் மூலம் அவர்களை தள்ளாடச் செய்ய முடியும் என்ற புலிகளின் சமன்பாடு இவ்விடத்தில் தோற்றுப் போய்க்கொண்டிருக்கிறது.
இதன் அரசியல் பற்றிப் பார்ப்போமேயானால், திடீரென அரசாங்கம் இவ்வாறு அறிவித்ததில் கூட சில உள்நோக்கங்கள் இருக்கக் கூடும் என எதிர்பார்க்க வேண்டியுள்ளது. இதுவே அரசாங்கம் பயன்படுத்தப் போகும் இரசாயன ஆயுதங்களை நியாயப்படுத்த வேண்டி அரசாங்கத்தால் சோடிக்கப்பட்ட கதையாக இருக்கக் கூடும். குறுகிய நிலப்பரப்பினுள் அடைபெற்றவாறு இராணுவத்தை வன்னிக் காட்டுக்குள் உள்ளிளுக்கும் புலிகள் ஒரு கட்டத்தில் மூர்க்கமாக வெளிப்படுவார்கள். அது அரசாங்கத்திற்கு நன்றாகவே தெரியும். அதனை எதிர்கொள்வதற்கு மகிந்த தயாராயிருக்கிறார் போலுள்ளது. மென்போக்குள்ள அரசியல் தலமையால் புலிகள் அடுத்து வெளிப்படுத்த இருக்கும் மூர்க்கத்தனத்தை எதிர்கொள்ள முடியாது. மேற்கு சார்புடைய அரசியல் தலமையாலும் அதனை எதிர்கொள்ள முடியாது.
ஆயினும் சீனா, ஈரான், பாகிஸ்தான் கோட்டில் தன்னை அடையாளப்படுத்த எத்தனிக்கும் அரசியல் தலமையான மகிந்த இதனை எதிர்கொள்ளத் தயாரியிருப்பார் எனவே எண்ண வேண்டியுள்ளது. (இரு தரப்பு மக்களாலும் இக்கட்டத்தை எதிர்கொள்ளவே முடியாது என்பது பயங்கரத் துயரமானது. மகிந்தவாலும் புலிகளாலும் சில வகையான மாற்றுக்கருத்தாளர்களும் மட்டுமே இதனை ஜீரணித்துக் கொள்வார்கள். புலிகள், மகிந்த கூட தமது ‘தாய்நாடு’ என்ற தேசியக் கருத்தியல் ஊடாக இதனை உள்வாங்கிக் கொள்ள முடிந்தாலும் மாற்றுக்கருத்தாளர்களும் ஜனநாயகக் காவலர்களும் இதனை எதிர்கொள்ளும் விதம் மிகக் கேவலமானதாகவே இருக்கும். புலிகளுக்கு மக்களுக்கும் அவர்களில் மிகுந்த வெறுப்பை ஏற்படுத்தும்.)
பொருளாதார சிக்கல் மட்டுமல்ல இழப்புகளாலும் வாழ்வியல் நெருக்கடிகளாலும் பீடிக்கப்படும் இச்சிறுதீவு மக்கள் தமது உளநெருக்கடியை இன்னும் 20, 30 வருடங்களுக்கு மேலாக எதிர்கொள்ள வேண்டி வரலாம். பல்வேறு துறைகளிலும் துறைப்பிரிப்புக்களுடன் வேகமாக வளர்ந்து வரும் உலக மாந்தர்களை எம்மக்களால் எக்கட்டத்திலும் எட்டிப் பிடிக்க முடியாமலும் போகலாம். ஒரு வேளை யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்பான காலப்பகுதியில் தமிழ் மக்களால் வெளிநாட்டு உதவிகளால் பொருளாதார முன்னேற்றம் அடைய முடிந்தாலும் உளச்சிக்கல்களால் அவர்களால் இன்னும் 20, 30 வருடங்களுக்கு வெளிய வரவே முடியாது.
மக்களின் பிணங்களில் இருந்து அரசியல் செய்வதை நிறுத்துங்கள். மாற்றுக் கருத்து என்பது இன்று கொச்சையான வார்த்தையாகிக் கொண்டிருகிறது. ‘இலங்கை அரசே போரை நிறுத்து’ என்று 74 பேர் கையெழுத்து வைத்து அறிக்கை வெளியிட்டால் எம்மால் சந்தோசப்பட முடிந்திருக்கும்.
நண்பர்களே,
உங்களது பிரச்சனை வேறு. எமது பிரச்சனை வேறு.
-சுதா
சந்திரன்.ராஜா வினது பின்னூட்டம்.
அரசே!புலிகளுக்கான போரை தொடர்ந்து நடத்து!!
புலிகளின் அழிவில்லிருந்து தான் இலங்கைத்தீவின் மக்களுடைய ஜனநாயகஉரிமைகளையும் பேரினவாதத்தின் கொடுமைகளையும் வெல்லுவதற்கான புதிய- போராட்ட பணியையும் அமைத்துக் கொடுக்கும்.
சுதாவின் பதில்.
“அரசே!புலிகளுக்கான போரை தொடர்ந்து நடத்து!!” - chandran.raja
chandran.raja சொல்வது போல் புலிகள் முற்றாக அழிக்கப்பட்டால் அந்நேரத்தில் இலங்கையின் சனத்தொகையில் 200,000 வரை வீழ்ச்சி ஏற்படும். அதில் இருந்து தான் உங்களுக்கு தீர்வு வேண்டுமென்றால் அது உங்களது உண்மையான முகத்தை காட்டுகிறதாகவே அர்த்தப்படுத்த வேண்டும். ஏனெனில் உங்களது பல பின்னூட்டங்களை நான் நீங்கள் எழுத்தத் தொடங்கிய காலத்தில் இருந்து அவதானித்து வருகின்றேன். புலிகள் மீதுள்ள காழ்ப்புணர்வால் நீங்கள் ஜனநாயக முகமூடி அணிந்து கூறும் சற்றும் மனித உணர்வில்லாத பின்னூட்டங்கள் பல தடவைகள் எனக்கு எரிச்சலையும் கோபத்தையும் உண்டாக்கியிருக்கிறது. அஷ்ரப் அலி என்னும் ஒரு நபர் நீங்கள் செய்யும் அதே வேலையை தேசத்தில் பல மாதங்களுக்கு முன்னர் செய்து கொண்டிருந்தார். அந்நேரத்தில் ரகு, ரதன் மற்றும் நிர்மலன் போன்றோர்கள் அதற்கு பதிலளித்தார்கள். உங்களது கருத்துக்களுக்கு பதிலளிக்க யாரும் இல்லாத காரணத்தால் நீங்கள் தனித்தவில் வாசிக்கிறீர்கள்.
நான் யுத்தத்தை நிறுத்துமாறு கோரியிருப்பதற்கு உங்களது பதில் “அரசே!புலிகளுக்கான போரை தொடர்ந்து நடத்து” என்பதே அதன் விளைவுகளை கொஞ்சம் கூட யோசிக்காமல் நீங்கள் பதில் எழுதியிருக்கிறீர்கள். உங்களது குடும்பமோ உறவினர்களோ வன்னியில் இல்லை என்பதால் உங்களால் இவ்வாறு பேச முடிகின்றது.
உலகின் வேறு நாடுகளில் வேலை பார்ப்பதற்கான ஆய்ப்புக்கள் இருந்தும் அதனைத் தட்டிக் கழித்துவிட்டு அண்மைக் காலம் வரையும் யாழ்ப்பாணத்தில் தொழில் புரிந்த பேராசிரியர் தயா சோமசுந்தரம் இவை பற்றி தெளிவாக கூறியுள்ளார். Psychiatic cost of war என்பது பற்றிய ஆய்வுகள் இன்னும் வடக்கில் கொஞ்சம் கூடச் செய்யப்படவில்லை. எதிர்காலத்தில் அதற்கு எமது சமூகம் படப்போகும் கஸ்டம் பற்றிய எவ்வித புரிதலுமற்றுத்தான் உங்களைப் போன்றவர்கள் கதைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
PTSD எனப்படும் மனவடு நோய், மனச்சோர்வு நோய் மற்றும் பலரில் கணப்படும் malignant PTSD எனப்படும் மிகை மனவடு நோய்கள் போன்றவற்றால் இன்றைய நிலையிலேயே எமது சமூக தனது ஆரோக்கியமான வளர்ச்சியை இன்னும் 20 வருடங்களுக்கு நினைத்துப் பார்க்க முடியாது. தற்போது பிறக்கும் பிள்ளைகள் எச்சமாக இன்னும் 50 வருடங்களுக்கு தமது மன அழுத்தததிக் காவித்திரிவார்கள். உங்களது பிள்ளை சிக்கன் பேர்கர் ஊட்டிவிட்டுக் கொண்டு ஜனநாயக முகமூடி அணிந்து கொண்டு நீங்கள் எழுதும் கருத்துக்களுக்காக சில தலைமுறைகள் தமது வாழ்வைத் தொலைக்க வேண்டும் என்பது முறையல்ல chandran.raja
கணிதம், விஞ்ஞானம் போன்ற பாடங்களை இன்றிருக்கும் வடக்கு மாணவர்களால் இலகுவாகச் செய்ய முடியாதிருப்பதாக ஒரு இடத்தில் தயா சோமசுந்தரம் குறிப்பிட்டிருக்கிறார். அவ்வாறு செய்தால் கூட மற்றைய துறைகளுடன் அவர்களால் அதனை தொடர்புபடுத்த முடிவதில்லை என்பது மேலதிகமான கருத்து. இன்றைய உலகம் பிளவுபட்ட துறைகள் பல்வேறு வகைகளிலும் இடைவெட்டும் புள்ளிகளை புதிய துறையாக்கி முன்னேறுகின்றது. அதுவே எதிர்காலத்தின் கல்வி முறையாகவும் வளர்ச்சி பெறப்போகின்றது. பிறக்கும் போதே இக்குறைபாட்டுடன் பிறக்கும் பிள்ளைகள் எவ்வாறு தமது எதிர்காலத்தை ஆரோக்கியமாக கொண்டு செல்லப் போகின்றார்கள் என்பதைப் பற்றிய எதுவித புரிதலுமற்று உங்களது பின்னூட்டங்கள் இருக்கின்றது. போரைத் தொடர்ந்து செல் எனக் கூறக் கூடியதாக உங்களது ஜனநாயகச் சூழல் இருக்கின்றது என்றால் உங்களைப் பற்றிப் பேசுவதில் பிரயோசனம் இல்லை.
யுத்தம் முடிவுக்கு வந்த பின்னால் ஜனநாயகச் சக்திகள் மக்களைப் படுத்தப்போகும்பாடுகளை நினைத்தால் இன்னும் பயமக இருக்கிறது. ‘சமூக வடு’ மனநோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்களை சமநிலை அடைய விட்ட பின்னரே ‘சமூக மாற்றம்’ பற்றி யோசிக்கவே முடியும். அதற்கு மத வழிபாடுகள், சடங்குகள் அத்தியாவசியமானவை. அதன் வழி மட்டுமே சமநிலையை அடையமுடியும். அதன் பின்னரே சமூக மாற்றத்தைச் சிந்திக்க முடியும். ஆயினும் யுத்தம் முடிவுக்கு வந்தாலும் உடனடியாக தொடங்க இருக்கும் ஜனநாயக சக்திகளின் ‘சாதிப்போராட்டம்’ மக்களின் உளவியல் ரீதியாக நோய்க்கூறுகள் மிகுந்த ஒரு சமூகமாக எப்போதும் பேணுவது உறுதி. இதல்லாம் அவர்களுக்கு பிரச்சனையே அல்லவென்பது எமக்கொன்றும் புதிதும் அல்ல.
‘Communities tended to be more dependent, passive, silent, without leadership, mistrustful, and suspicious. Additional adverse effects included the breakdown in traditional structures, institutions and familiar ways of life, and deterioration in social norms and ethics. A variety of community level interventions were tried.’
நான் சாதிக்கட்டமைப்பிற்கு ஆதரவானவன் அல்ல. மிகவும் எதிரானவன். ஆயினும், சில வகையான அடிப்படைக் கட்டுமானங்களை மாற்றும் போது எமக்கு அவதானமும் கொஞ்சமாவது சமூக அக்கறையும் இருக்க வேண்டும். அதுதான் தமிழீழப் போராட்டத்திலும் நடந்தது. இனியும் நடக்கப் போகிறது.
சந்திரன் ராஜா உங்களைப் போன்றவர்களுடன் உரையாட நான் விரும்புவதில்லை. வேலைக்குப் போய்விட்டு வந்து பொழுது போகாத நேரங்களில் பின்னூட்டம் இட்டு நீங்கள் விளையாடுவது எமக்குப் புரிகிறது. ஆயினும் சில விடயங்கள் சொல்லப்பட வேண்டியவை நண்பரே..
மேலதிக வாசிப்பிற்கு சில தொடுப்புக்கள்.
1.
Collective trauma in northern Sri Lanka: a qualitative psychosocial-ecological study- Daya Somasundaram (2007)
–International Journal of Mental Health Systems
http://www.ijmhs.com/content/pdf/1752-4458-1-5.pdf
2.
தொடர் நெருக்கீடுகளினால் உளப்பிறள்வுற்று செல்கிறது சமூகம். - தயா சோமசுந்தரம்.
–மூன்றாவது மனிதன்- 15 (2002)
http://noolaham.net/wiki/index.php?title=மூன்றாவது_மனிதன்_15
3.
யாழ்ப்பாணத்தில் இந்திய ராணிவ நடவடிக்கையின் உளவியல் தாக்கங்கள் (1987ம் ஆண்டின் இறுதி.)- தயா சோமசுந்தரம்.
–முறிந்தபனை (1987)
http://noolaham.net/wiki/index.php?title=முறிந்த_பனை
–சுதா
சந்திரன் ராஜாவின் பதில்.
சுதா நீங்கள் கொண்டிருப்பது தமிழ் மக்கள் மேல் கொண்ட கருசரனை அல்ல.மாறாக..சுலநலம் அறியாமை …….
தமிழ்-மூஸ்லிம் மக்கள் அனுபவித்த துன்பங்கள் இழப்புகள் பின்னடைவுகள் சிங்களஅரசால் அனுபவித்ததைவிட பலமடங்கு கொடுமைகள் புலியால் அனுபவித்தவை.
உயிர்வாழ்வதற்கே! போராட்டம் செத்து மடிந்து போவதற்கல்ல!
உரியகல்வி அறிவு இல்லாதவன் நீதிபதியாகமாறி கோழிக்கள்ளனுக்கும் விபசாரிகளுக்கும் போராசியர்களும் அறிவாளிகளுக்கும் கப்பம்
கொடுக்க மறுத்தவர்களுக்கும் துரோகிப்பட்டம் கொடுத்து மரண தண்டனை கொடுக்கப்பட்டதின் விளைவே இன்றைய விளைவு.
Rapheal a.k.a Vincent Paul இனது பின்னூட்டம்.
புலிகள் இரசாயன ஆயுதம் பயன்படுத்துவது பற்றி அதிகம் - விகிதாச்சார அடிப்படையில் - செய்தி வெளியிடுவது நீங்களாகத்தான் -தேசம்- உள்ளது. இலங்கை அரசு செய்தி ஊடகங்களைவிட இது அதிகமாகவும் வேடிக்கையாகவும் உள்ளது.
புலிகளின்மேல் காழ்ப்புணர்வு உள்ளவர்கள் இவ்வாறு கூறலாம். நடுநிலை(:. )யில் இருப்பவர்களும் இப்படி எழுதுவத வாடிக்கை என்பது வெடிக்கை.
சுதா என்பவரின் கட்டுரை ஒன்று பின்னூட்டமாக இடப்பட்டிருக்கிறது
புலிகளின் மீது முன்னர் குழந்தைப் போராளிகள் குறித்த குற்றச்சாட்டு எழுப்ப்பபட்டதுபோல இலங்கை அரசு இரசாயன ஆயுதம் பற்றி ஓர் குற்றச்சாட்டை புலிகளின் மீது முன்வைக்க முற்படுகிறது என்ற ஐயத்தையே இது எழுப்புகிறது.
சந்திரன் ரயா என்பவருக்கு - தேசத்தில் பின்னூட்டமிடுபவருக்கு - இது முன்கூட்டியே தெரிந்திருக்கிறது? …கொன்ஸ்பிரசி தியரி?
ஒப்பீட்டளவில் -செய்திகள் என்ற வகையில் தேசத்தில்- இலங்கை அரசின் மற்றும் இலங்கை அரசு சார்புச் செய்திகள் வருகின்றதன் காரணணம் என்ன?
என்னைப் பொறுத்தவரை - இங்கே எனது பெயரை முழுமையாகக் குறிப்பிட்டிருக்கிறேன்- போர் உடனடியாக நிற்கவேண்டும். மனிதர்கள் இறப்பது-கொல்லப்படுவது இருதரப்பிலும் நிறுத்த்பபடவேண்டும் என்பதே உடனடியாகத் தேவை.
புலிகளின் தீவிர ஆதரவாளர் போல் போர் வெறியராகவோ அல்லது தேசத்துக்குப் பின்னூட்டமிடும் சிலர் சொல்வது போல்
// இலங்கை அரசை ஆதரிப்போம். போர் தொடரட்டும். புலிகள் ஒழியட்டும்// என்றோ … யாரும் கருத்து கூற முடியாது.
நன்றி
உரையாடல்- 12 (சுதா, சந்திரன் ராஜா, Rapheal a.k.a Vincent Paul)
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment