உரையாடல்- 7 (வி. சிவலிங்கம், ரதன், சுதா)

தேசம்நெற் வலைத்தளத்தில் வி.சிவலிங்கம் எழுதிய பதிவிற்கு சுதா அளித்த பின்னூட்டங்களும் ரதனின் ஒரு பின்னூட்டமும்.

வடக்கு- கிழக்கை பிரிப்பதற்கான கோரிக்கை:
தமிழ்மக்களின் நலனுக்கு விரோதமானது.

-வி.சிவலிங்கம்-

எம் ஆர் ஸ்ராலினின் நேர்காணல், சபா நாவலனின் ‘பிரதேசவாதம்: முரண்பாடும் இணைவும்’ ஆகியவற்றின் தொடர்ச்சியாக ‘வடக்கு – கிழக்கை பிரிப்பதற்கான கோரிக்கை தமிழ் மக்களின் நலனுக்கு விரோதமானது’ என்ற இக்கட்டுரையுடன் வடக்கு – கிழக்கு இணைப்பு – பிரிப்பு பற்றிய இவ்விவாதம் மீண்டும் தொடர்கிறது.

கிழக்கு மாகாண மக்களின் நலன்களுக்காகவும் ஜனநாயக மாற்றங்களுக்காகவும் தான் புலிகளில் இருந்து பிரிந்ததாக கூறும் கருணாவும், அவரின் சகபாடிகளும், அவர்கள் உருவாக்கிய கட்சியும் எவ்வாறான அரசியலை எமக்குத் தந்திருக்கின்றன? எவ்வாறான ஜனநாயகத்தை நிலைநாட்ட முயற்சிக்கின்றார்கள்? கருணா புலிகளை நோக்கி எழுப்பிய கேள்விகள் கிழக்கு மாகாண மக்களின் நலன் சார்ந்தவை என அவர்களின் நடவடிக்கைகள் காட்டினவா?

கிழக்கைப் பிரிக்கும் படி கோருபவர்கள் தமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும். இன்றுள்ள பொருளாதாரக் கட்டுமானத்தில் பிரதேசங்களின் வளர்ச்சி முக்கியமானது. அது எந்த இன மக்கள் வாழ்ந்தாலும் பிரதேச வளர்ச்சி அவசியமானது. இந்த அடிப்படையில் பார்க்கும் போது கிழக்கு மாகாணத்திற்கான தனியான நிர்வாகம் தேவை. இவ்வாறான தனியான நிர்வாகத்தைக் கோருபவர்கள் முன்வைக்கும் நியாயங்கள் குழப்பமானவை. தமிழ்த் தேசிய வாதமே கிழக்கு மாகாண வளர்ச்சிக்குத் தடையாக இருந்ததாக கூறுவது அர்த்தமற்றது. இந்த வாதம் நியாயமானது எனில் வடக்கில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதா என்ற கேள்விக்குப் பதில் கூற வேண்டும்.
==+++++=====+++++=====+++++=====++
தேசம் நெற் இணையத்தளத்தில் பல காத்திரமான பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டு வருவது மிகவும் ஆரோக்கியமானது. சமீப காலமாக வடக்கு கிழக்கு பிரிப்பு அல்லது இணைப்பு, இடைக்கால நிர்வாகமா? அல்லது நிரந்தரத் தீர்வா?, நாடு முழுவதற்குமான ஜனநாயக மாற்றத்தில் இனப்பிரச்சனைக்கான தீர்வுக்கு முதலிடமா? அல்லது இனப்பிரச்சனைக்கான தீர்வு முதலில் பின்னர் நாடு தழுவிய ஜனநாயக மாற்றமா? இவ்வாறான பல முக்கியமான விவாதங்கள் பல்வேறு கருத்துக்களினூடாக வெளிவந்துள்ளதை அவதானிக்க முடிந்தது. புதிய ஆண்டிற்குள் நுழையும் இத்தருணத்தில் இப்பிரச்சனைகளே முக்கிய விவாதப் பொருளாக எதிர்வரும் ஆண்டில் இருக்கப் போகிறது என்பதால் சற்று ஆழமாகவும் விரிவாகவும் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வது அவசியமானது.

இதன் அடிப்படையில் சில கருத்துக்களை முன்வைத்து விவாதத்தை மேலும் ஆழப்படுத்தலாம் என நம்புகிறேன். குறிப்பாக வடக்கு கிழக்கு பிரச்சனை குறித்துப் பார்க்கும் போது இதுவரை தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் ஓர் குழப்ப நிலையைப் பிரதிபலிப்பதை அவதானிக்க முடிந்தது. குறிப்பாக வடக்கு கிழக்கு பிரிப்பினை எதிர்க்கும் கருத்துக்கள், யாழ் மைய வாதம், சைவ வேளாள கருத்தோட்டம் என்பவற்றில் இருந்தே பிறப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை ஆகும். யாழ் மையவாதம், சைவ வேளாள கருத்தியல் எனப்படும் கோட்பாடுகள் பற்றி அதிகம் விபரிக்கப்படாத நிலையிலேயே இச்சொற் பிரயோகம் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகின்றது. முதலில் யாழ்மைய வாதம் என்பதை எடுத்துக் கொண்டால் அது ஏதோ கூடாத வெறுக்கத்தக்க ஒன்று என்ற வகையிலேயே அவற்றின் விளக்கங்கள் அமைந்து வருகின்றன. இதற்கான பின்புலம் பற்றிய ஆழமான பார்வையற்ற கருத்துக்களாகவே இவை உள்ளன.

இலங்கை குடியேற்ற ஆட்சிக்கு உட்பட்டிருந்த காலத்தில் நாட்டின் நிர்வாக சேவையில் தமிழர்களே பயன்படுத்தப்பட்டார்கள். அதிலும் பெரும்பாலானவர்கள் யாழ்ப்பாணத் தமிழர்களே. யாழ்ப்பாணத் தமிழர்களின் ஒரு சாரார் நிலச் சுவாந்தர்கள் ஆகவும் ஆங்கிலக் கல்வியைப் பெறுவதற்கான பணவசதியும் பெற்றவர்களாக இருந்த காரணத்தால் கல்விக் கூடங்களும் மிக அதிக அளவில் யாழ்ப்பாணத்திலே அமைந்தன.

நிலம் மீதான ஆதிக்கம், குடியேற்ற ஆட்சியாளர்களின் அனுசரணை, கல்வி வசதி என்பன கிடைத்த காரணத்தால் சமூகக் கட்டுமானத்தில் அவர்கள் உயர்ந்த தரத்தைப் பெறவும் அதனால் அதிகாரம் மிக்கவர்களாகவும் மிளிர முடிந்தது.

சுதந்திரத்தின் பின்னர் இவை யாவும் படிப்படியாக இல்லாமல் போனதாலும் சிங்கள பேரினவாத எழுச்சி காரணமாகவும் இவர்களே முதலில் பாதிக்கப்பட்டார்கள். இவர்களே அதற்கு எதிராகவும் போராடினார்கள். யாழ்ப்பாண சமூகத்தின் ஒரு சாராரை இவை பாதித்திருந்த போதிலும் தமிழர் என்ற காரணத்தால் இவ் ஒடுக்குமுறை சகல தமிழர்களையும் நோக்கி நடைபெறுவதாக அவர்களின் பிரச்சாரங்கள் அமைந்தன. எனவே இன ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்கள் யாழ்ப்பாணத்தை மையமாக வைத்து எழுந்ததில் ஆச்சரியமில்லை. யாழ் சமூகத்தின் ஒரு சாராரின் கைகளில் காணப்பட்ட நில ஆதிக்கம், குடியேற்ற ஆட்சியாளரின் அனுசரணை, கல்விச்செருக்கு என்பவற்றுடன் பலர் சைவசமயத்தைப் பேணுபவர்களாகவும் காணப்பட்டார்கள். சைவசமயத்தில் காணப்பட்ட சாதிப்பாகுபாட்டினை அனுசரிப்பதற்கு அவர்கள் நிலத்தின் மீது கொண்டிருந்த ஆதிக்கம் பேருதவியாக இருந்தது. ஆகவே யாழ்ப்பாண அரசியலில் சைவ வேளாள ஆதிக்கம் பெருகியதில் ஆச்சரியம் எதுவுமில்லை.

யாழ் மையவாதம், சைவ வேளாள ஆதிக்கம் என்பதற்கு பிரதான காரணியாக நிலமே இருந்தது. நிலத்தின் மீதான கட்டுப்பாடு அரசியல் ஆதிக்கத்தை விஸ்தரிக்கவும் சாதிப்பாகுபாடுகளை பேணவும் வாய்ப்பை அளித்தது. இந்த வரலாற்றுப் பின்னணியில் இருந்தே யாழ் மையவாதம், சைவ வேளாளம் என்பவற்றின் போக்குகள் அணுகப்பட வேண்டும். இதன் அர்த்தம் இவ்வாறான போக்குகள் நியாயமானவை என்பதல்ல. பதிலாக இக்கருத்துக்கள் இன்றைய அரசியலில் எவ்வாறான ஆளுமையைச் செலுத்துகின்றன என்பது விவாதிக்கப்பட வேண்டும்.

இவ்வாறான கருத்தோட்டங்கள் செயலுருப்பெற வேண்டுமெனில் அதற்குரிய ஸ்தாபன வடிவங்கள் அமைந்திருத்தல் வேண்டும். இவை வெளிப்படையாக இல்லாவிடில் குறைந்தபட்சம் மறைமுகமாக எவ்வாறு செயற்படுகிறது என்பதையாவது குறிப்பிடுதல் வேண்டும். ஏனெனில் இவை தான் பிரச்சனை எனில் இவற்றிற்கெதிரான போராட்டத்திற்கான அணுகுமுறையை உருவாக்குவதற்கு சரியான விதத்தில் அடையாளம் காணுவது அவசியமாகிறது.

இவற்றை ஒரு பொதுவான கருத்தோட்டமாக கருதி சகல யாழ்ப்பாணத்தவர் மீதும் இக்குற்றச்சாட்டை சுமத்துவது ஓர் அரசியல் நோக்கமாக அமையலாமே தவிர பிரச்சனைக்கான பரிகாரம் தேடும் முயற்சியாக அமையமாட்டாது. சமீப காலமாக வெளிவரும் வாதங்கள் பிரச்சார நோக்கில் அமைவதே அதன் பலவீனம் ஆகும். உதாரணமாக சாதிப் பிரச்சனையில் இடதுசாரிகள் தீவிரமாகச் செயற்பட்டதை இன்று கொச்சைத் தனமாக விபரிக்கும் போக்கு இவ்விவாதங்களினூடாக வெளிவருவதும், மார்க்சிய விரோதக் கருத்துக்கள் இப்பிரச்சனைகளினூடாக பிரச்சாரப்படுத்துவதும் ஒருவகைத் தந்திரோபாயங்களாக அமைவதையும் அடையாளம் காணக்கூடியதாக உள்ளது.

நாடு சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளை எட்டியுள்ளது. நாட்டின் பொருளாதாரம் விவசாயக் கட்டமைப்பில் இருந்து வெகுதூரம் விலகிச் சென்றுள்ளது. யாழ்ப்பாண மக்களின் பொருளாதாரம் தற்போது விவசாயத்தில் தங்கியிருக்கவில்லை. 25 வருட காலத்திற்கு மேலான ஆயுத வன்முறை நிலத்தின் மீதான ஆதிக்கத்தையும் பலவீனப்படுத்தியுள்ளது. நிலத்தை மையமாக கொண்ட சாதிய ஒடுக்குமுறை வெறும் கருத்தியல் நிலமைக்குச் சென்றுள்ளது. இந்நிலமையில் யாழ் மையவாதம், சைவ வேளாள ஆதிக்கம் என்ற கருத்தோட்டங்கள் இன்றைய அரசியல் சூழலுக்கு பொருத்தமானவையா? யாழ் மைய வாதத்தின் ஆதிக்கக்கருவான நிலத்தின் மீதான கட்டுப்பாடு தளர்ந்துவிட்ட நிலையில் யாழ் மைய வாதம் என்பது பலமான, உயிரோட்டமான, ஆதிக்கமுள்ள சக்தியைப் பெற்றுள்ளதா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

வடக்கு கிழக்கு பிரிவினையை எதிர்க்கும் சக்திகள் அல்லது வடக்கை மையமாக கொண்டு இயங்கும் அரசியல் சக்திகள் அதாவது யாழ் மைய வாத சக்திகள் தமிழ்த் தேசியவாதம் என்ற போலி முகத்திரையை போர்த்தியிருப்பதாகவும் வர்ணிக்கப்படுகிறது.

இங்கு யாழ் மையவாதம் என்பதனை தமிழ்த் தேசிய வாதத்துடன் இணைத்துப் பார்க்கும் நிலை காணப்படுகிறது. யாழ் மையவாதம் என்பது தீண்டத் தகாதது எனக் கூறமுற்பட்டு தற்போது தமிழ்த் தேசிய வாதமும் தீண்டத் தகாதது என்ற நிலமைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியவாதம் என்பது சிங்களப் பேரினவாதத்திற்கு எதிராக எழுந்த ஒன்று தமிழ்த் தேசியவாதம் என்பது தமிழ் மொழியைப் பேசுகின்ற சகலராலும் உணரப்பட்டுள்ளது. இதனை முஸ்லீம் மக்களும் உணர்ந்துள்ளார்கள். இதனால் தான் அவர்களும் சிங்கள பேரின வாதத்திற்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர். வடக்கு கிழக்கு பிரிவினைக்கு ஆதரவு கொடுப்பவர்கள் யாழ் மைய வாதத்தினையும் சைவ வேளாள கருத்தியலையுமே சாடுகின்றனர்.

ஆனால் யாழ் மைய வாதமும் சைவ வேளாள கருத்தியலும் முழு யாழ்ப்பாணத்தவரிடமும் காணப்படுவதாக முறையிடுகின்றனர். இவர்களால் யாழ் சமூகத்தில் காணப்படும் சமூகப் பிரிவுகளை இனம்கண்டு கொள்ள முடிவதில்லை. யாழ் சமூகம் கடந்த 60 ஆண்டுகளில் பெற்றிருக்கும் மாற்றங்களை குறிப்பாக கடந்த 25 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள சமூக மாற்றங்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை. கடந்த 25 வருடங்களாக நாட்டில் இடம்பெற்று வரும் ஆயுத வன்முறை மட்டுமல்ல, திறந்த பொருளாதாரம், வெளிநாடுகளுக்கான இடப்பெயர்வு என்பன அதன் அடித்தளத்தையே ஈடாடச் செய்துள்ளன.

தமிழ்த் தேசிய வாதத்தின் அடிப்படை நோக்கங்கள் தவறான சக்திகளின் கைகளுக்குச் சென்றுள்ளன. அதாவது நிலத்தின் மீது ஆதிக்கம் செலுத்திய சக்திகள் தற்போது வர்த்தகர்களாக, சிறு வியாபாரிகளாக திறந்த பொருளாதாரத்தின் துவாரங்களைப் பயன்படுதி பணம் சம்பாதிப்போர் மற்றும் தவறான சக்திகளின் கைகளுக்குச் சென்றுள்ளது.

இலங்கையில் இனவாதம் வளர்ந்த வரலாறு பலரும் அறிந்ததே. நாட்டின் ஜனநாயக கட்டுமானங்களின் ஊடாக சிங்கள பேரினவாதம் தனது ஆதிக்கத்தை வெளிப்படுத்தியதால் சிறுபாண்மை இனங்கள் அதற்கு எதிராக போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டன. பேரினவாதத்துக்கு எதிராக சிறுபாண்மை இனங்கள் போராடுவதை அல்லது மொத்தத் தமிழ்பேசும் மக்களும் எதிர்த்துச் செயற்படுவதை எவ்வாறு இனவாதமாக கருத முடியும். இலங்கையில் இனவாதத்தை வளத்தெடுப்பதில் சரிசமமான பங்கு அல்லது அதனிலும் கூடிய பங்கு தமிழ்த் தலைமைகளுக்கு உண்டு என வாதிடுவது அரசியல் வரலாற்றின் மீதான பார்வையின் கோளாறாகவே கருத முடியும்.

சிங்கள பேரினவாதத்தின் கொடுமையான முகங்கள் தற்போது படிப்படியாக வெளிவரத் தொடங்கியுள்ளன. இதற்கு காரணம் ஆரம்பம் முதலே இலங்கையில் காணப்படும் முதலாளித்துவ முரண்பாடுகள் ஆகும். சுதந்திரத்துக்குப் பின்னர் தமிழ் முதலாளித்துவம் அரச அதிகாரத்தின் மிதிருந்த செல்வாக்கை இழந்துவிட்டது. இழந்த செல்வாக்கை மீளப்பெறுவதற்கு அது பேரம் பேசும் அரசியலைத் தேர்ந்தெடுத்தது. முதலாளித்துவ கட்டுமானங்களைப் பாதிக்காத வகையிலான போராட்ட அரசியலை நடத்தியது. கடந்த 25 வருட திறந்த பொருளாதார கட்டமைப்பிலும் தமிழ் முதலாளித்துவம் தனக்கே உரித்தான முரண்பாடுகளோடு பேரம் பேசும் அரசியலையும் தொடர்கிறது.

இந்த அரசியல் பின்னணியில் இருந்தே வடக்கு கிழக்கு பிரிப்பா இணைப்பா என்ற விவாதத்தைப் பார்க்க வேண்டும். வடக்கு கிழக்கு இணைப்பினை ஆதரிப்பது யாழ் மையவாதம் என்ற பழைய பல்லவிக்கு ஒருவேளை பொருத்தமாக இருக்கலாம். ஆனால் இன்று நிலமை வேறு. நாட்டின் பொருளாதாரக் கட்டுமானம் மிகவும் மாற்றமடைந்துள்ளது. திறந்த பொருளாதாரக் கட்டமைப்பு சிறுபாண்மை இனங்களுக்கும் அதில் ஈடுபட வாய்ப்பைக் கொடுத்துள்ளது. சிறுபான்மை இனத்தைச் சார்ந்த வர்த்தகர்கள், தரகர்கள் உயர்ந்த நிலைக்குச் சென்றுள்ளனர்.

சிறுபாண்மை இனத்தவரின் வளர்ச்சியை பழைய பாணியில் அதாவது பழைய முறையிலான அரசியல் கட்டமைப்பின் மூலம் கட்டுப்படுத்த முடியவில்லை. பேரினவாதம் புதிய பாணியில் கட்டுப்படுத்த விழைகிறது. அன்று தமிழர்களே அரசியல் கட்டுமானங்களில் இருந்தார்கள். அதனால் தமிழர்களின் மீதான ஒடுக்குமுறையைப் பிரயோகித்தார்கள். தற்போது சகல சிறுபாண்மை இனங்களும் பொருளாதார ரீதியாக முன்நோக்கிச் செல்கின்றன. இதன் காரணமாக அரசியல் அதிகாரத்திலும் பங்கு கேட்கின்றனர். எனவே சகல சிறுபாண்மை இனங்களையும் ஒட்டு மொத்தமாக ஒடுக்க முனைகிறது.

கிழக்கைப் பிரிக்கும் படி கோருபவர்கள் தமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும். இன்றுள்ள பொருளாதாரக் கட்டுமானத்தில் பிரதேசங்களின் வளர்ச்சி முக்கியமானது. அது எந்த இன மக்கள் வாழ்ந்தாலும் பிரதேச வளர்ச்சி அவசியமானது. இந்த அடிப்படையில் பார்க்கும் போது கிழக்கு மாகாணத்திற்கான தனியான நிர்வாகம் தேவை. இவ்வாறான தனியான நிர்வாகத்தைக் கோருபவர்கள் முன்வைக்கும் நியாயங்கள் குழப்பமானவை. தமிழ்த் தேசிய வாதமே கிழக்கு மாகாண வளர்ச்சிக்குத் தடையாக இருந்ததாக கூறுவது அர்த்தமற்றது. இந்த வாதம் நியாயமானது எனில் வடக்கில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளதா என்ற கேள்விக்குப் பதில் கூற வேண்டும்.

கிழக்கு மாகாணத்திற்கான தனி நிர்வாகம் என்ற போர்வையில் மிக மோசமான அரசியல் நடத்தப்படுகின்றது. தமிழ்த் தேசிய வாதத்தினை சிங்களப் பேரின வாதத்துடன் சமப்படுத்தும் முயற்சி நடந்தேறுகின்றது. இதுவரை காலமும் சிங்களப் பேரினவாதம் மேற்கொண்ட திட்டமிட்ட குடியேற்றம், கல்வி, பொருளாதாரம், தொழில் வாய்ப்பு என்பவற்றில் ஏற்படுத்திய பாரபட்சம் என்பவற்றை நியாயப்படுத்தும் போக்கு காணப்படுகிறது. பல்லாயிரக்கணக்கான மக்களின் தியாகங்கள் கொச்சைப்படுத்தப்படுகின்றன. வடக்கு கிழக்கு இணைந்திருப்பதற்கான காரணங்கள் பின்வருமாறு.

இன்றுள்ள சூழலில் சிறுபான்மை இனங்களின் அரசியல் உரிமைகள் பறிக்கப்படும் அல்லது மறுக்கப்படும் அபாயங்கள் அதிகம் காணப்படுகின்றன. திட்டமிட்ட குடியேற்றங்கள் காரணமாக சிறுபாண்மை இனங்களின் அரசியல் பலம் பலவீனப்படுத்தப்படுகிறது. அரசியல் கட்சிகள் மத்தியில் திட்டமிடப்பட்ட வகையில் பிளவுகள் ஏற்படுத்தப்படுகின்றது. குறிப்பாக சிறுபாண்மை இனங்கள் செறிந்து வாழும் வடக்கு கிழக்கு பிரதேசங்கள் இணைந்து செயற்படுவதன் மூலம் நாட்டின் பொருளாதார அபிவிருத்திப் பங்கீட்டில் கணிசமான பங்கைப் போராடிப் பெற வாய்ப்பு ஏற்படும். கலாச்சாரம், கல்வி, சமூக வளர்ச்சி போக்குவரத்துத் துறையை இணைந்து செயற்படுவதன் மூலமே வளர்க்க முடியும். நாட்டின் மூலவளங்கள் போதாமல் உள்ள சூழலில் தமக்கான கணிசமான பங்கைப் பெறவேண்டுமெனில் இணைந்து செயற்படுவதன் மூலமே சாத்தியமாக்கலாம். நாட்டின் ஏனைய 7 மாகாணங்களில் சிங்கள மக்கள் பெரும்பாண்மையாக உள்ள சூழலில் வடக்கு கிழக்கு இணைந்து இருப்பதன் மூலமே ஓரளவு சமநிலையைப் பேண முடியும்.

யாழ்ப்பாணம், மட்டக்களப்பு என்ற பிரதேச வேறுபாடுகளும் பேசப்படுகின்றது. இப்பிரதேச வேறுபாடுகள் கிராமிய மட்டத்திலும் காணப்படும் போது இவை காணப்படுவதில் ஆச்சரியமில்லை.
ஆனால் இப்பிரதேச வேறுபாடுகளை நியாயப்படுத்த எடுக்கப்பட்ட முயற்சிகள் கேலிக்குரியன. உதாரணமாக கருணாவின் பிளவு குறித்த பிரச்சனைகள் இவ்வேறுபாடுகளை நியாயப்படுத்த பயன்படுத்தப்பட்டுள்ளன.

விடுதலைப் புலிகள் அமைப்பின் 32 துறைச் செயலாளர் நியமனங்களையும் வடபகுதிக்குள் சுருட்டிக் கொண்டதாக கூறி அது ஒரு பிரதேச வேறுபாட்டின் அடையாளம் எனக் குறிப்பிடப்படுகிறது. விடுதலைப் புலிகள் என்ற அமைப்பிற்கு ஜனநாயக முலாம் பூசும் முயற்சியே இது. இந்த இயக்கம் தனது செயல்களுக்கான முடிவுகளை வடக்கின் பிரதிநிதிகளை வைத்தே முடிவுசெய்தது. இது கிழக்கு மாகாண மக்களுக்கு கிடைத்த ஜனநாயக வெற்றி என்றே குறிப்பிட வேண்டும். நாட்டின் அரசியலை வடக்கு மட்டுமே தீர்மானித்தது என்பதை மிகவும் திட்டவட்டமாக விவாதிக்க வேண்டிய நிலையில் இவ்வன்முறை, பயங்கரவாதத்திற்கான பங்கில் கிழக்கு மாகாணத்திற்கு உரிய பங்கு தரப்படவில்லை என முறையீடு செய்வது போலவே இது காணப்படுகிறது.

கிழக்கிற்கான தனி அரசியல் முன்னெடுப்பாக தோற்றமளிக்கும் இவ்விவாதங்கள் பொருத்தமற்ற அடித்தளங்களில் இருந்து கட்டப்படுவதனால் தான் அதனால் மேல் எழும்ப முடியாத நிலை காணப்படுகின்றது. கிழக்கிற்கான அபிவிருத்தி குன்றியதற்கும் காரணம் தமிழ்த் தலைமை என்றால் கிழக்கு மாகாணத்தில் ஐ.தே.கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சார்ந்த மந்திரிகள் குறிப்பாக ராஜன் செல்வநாயகம், தேவநாயகம் போன்றோர் செயற்பட்டார்களே, பல முஸ்லீம் தலைவர்கள் இந்த பிரதான கட்சிகளில் இருந்தார்களே இவர்களால் அவை ஏன் சாத்தியப்படவில்லை. எந்தவிதமான அரசியல் செல்வாக்கையும் அரசின் முடிவுகளில் ஏற்படுத்த முடியாத தமிழ்த் தலைமைகளைக் குற்றம் சாட்டுவதில் அர்த்தமில்லை.

கிழக்கிலங்கை அரசியல் குறைபாடுகளுக்கு தமிழ் அரசியல் தலைமைகளை மட்டும் குறை காணும் போக்கிற்கு ஓர் அரசியல் தேவை இருக்கிறது. தமிழ் அரசியல் தலைமைகளைக் குற்றம் சாட்டுவதன் மூலம் கிழக்கு மாகாணத்திற்கான தனியான அரசியலைக் கட்டும் நோக்கத்தையே இவை கொண்டிருக்கின்றன. நாட்டில் வாழும் சிறுபாண்மை இனங்களின் ஜனநாயக உரிமைகள் தொடர்பான தெளிவான அரசியல் நெறி இல்லாமல் கிழக்கிற்கென தனி அரசியல் பேசப்படுமானால், தமிழ்த் தலைமைகளைக் குற்றம்சாட்டி ஓர் அரசியல் பேசப்படுமானால் அது படிப்படியாக ஓர் பிரதேச வாதத்தை நோக்கியே இழுத்துச் செல்லப்படும். திட்டமிட்ட குடியேற்றங்கள் என்ற கோட்பாடு இருப்பதை மூடிமறைக்கும் வாதங்களும் பெருமளவு நிலக்கட்டுப்பாட்டைக் கொண்டிருந்த கிழக்கிலங்கை மக்கள் குடியேற்றக் காணிகளில் குடியேற வேண்டிய அவசியம் இல்லாமல் போனதால் அக்காணிகளில் சிங்களவர் குடியேறினார்கள் எனக் கூறும் வாதங்களும் சிங்கள பேரினவாத கோட்பாடுகளை மறைமுகமாக ஆதரிப்பதாகவே உள்ளன. தமிழ்த் தலைமைகளை நோக்கியும் தமிழ்த் தேசியவாதத்தை நோக்கியும் மட்டுமே கிழக்குப் பிரிப்பை ஆதரிக்கும் போக்கு தவிர்க்க முடியாமல் இவ்வாறான சகதிக்குள்ளேயே எடுத்துச் செல்லும்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான அல்லது புலிப்பாசிசத்திற்கு எதிரான போராட்டங்களால் மட்டும் ஜனநாயகத்தை நிலை நிறுத்தி விட முடியாது. கடந்த 25 வருடங்களாக இடம்பெற்று வரும் அரசியல் புலியிசம் என்ற ஜனநாயக விரோத அரசியலை மக்கள் மனதிலே ஆழ விதைத்திருக்கிறது. கிழக்கு மாகாண மக்களின் நலன்களுக்காகவும் ஜனநாயக மாற்றங்களுக்காகவும் தான் பிரிந்ததாக கூறும் கருணாவும், அவரின் சகபாடிகளும், அவர்கள் உருவாக்கிய கட்சியும் எவ்வாறான அரசியலை எமக்குத் தந்திருக்கின்றன? எவ்வாறான ஜனநாயகத்தை நிலைநாட்ட முயற்சிக்கின்றார்கள்? கருணா புலிகளை நோக்கி எழுப்பிய கேள்விகள் கிழக்கு மாகாண மக்களின் நலன் சார்ந்தவை என அவர்களின் நடவடிக்கைகள் காட்டினவா?

எதிர்வரும் ஆண்டு ஜனநாயகத்திற்கான குரலாக மாற்றப்பட வேண்டும். கொலை, போர் போன்ற அணுகுமுறைகள் அற்ற அரசியலுக்காக போராட வேண்டும். ஜனநாயகம் தழைப்பதற்கான புறச்சூழலை உருவாக்கி மக்களைப் பேச வைக்க வேண்டும். அப்போது தான் கிழக்கு மாகாணத்தின் சுதந்திரக் குரலுக்கு அர்த்தமிருக்கும்.

சுதாவின் பின்னூட்டம்- 1

இலங்கையின் தென்பகுதியை பொறுத்தவரை ஒன்றிணைந்த வடக்கு கிழக்கும், வடக்கு கிழக்கை பொறுத்த வரை வெவ்வேறான கட்டமைப்பு முறைகளும் உசிதமானவை.

ரதன் மற்றும் அரவிந்தன் அண்ணாக்களுக்கு,
அஷ்ரப் அலி போன்ற லொள்ளாக்கள் புழுகித் தள்ளுற இடத்தில நீங்கள் போய் நிண்டு சண்டை புடிச்சு ஒண்டும் ஆக போறதில்லை. நீங்கள் சண்டை புடிக்கிறதாலை தேசத்துக்கு வேணுமெண்டா நன்மை இருக்கலாம். ஆனா உங்களுக்கோ இஞ்ச இலங்கையில கஸ்டப்படுறவனுகளுக்கோ எந்த பிரயோசனமும் இல்லை. மற்றது அஷ்ரப் அலி ஆக்களுக்கு உது தொழில். உங்களுக்கு இதால என்ன கிடைக்க போகுது. பேசாம போய் வேற வேலைகளைப் பாருங்கோ. நீங்கள் கதைக்கிறதால தான் ஏனோ ரெண்டு பேரும் கதைக்கிறாங்கள். ஏதாவது நல்லது நடக்கும் நினைக்கிறாங்கள்.

ஆனால், அஷ்ரப் அலி ஆரெண்டு தெரிஞ்சா பிறகு நீங்கள் கதைக்கிறதில வேலை இல்லை. இஞ்ச நடக்கிறது ஒண்டு. உவை சொல்லுறது வேறை. மனோ கணேசன் வியாபாரம் செய்ததை கண்டுபுடிச்சு சொல்லுறார். அது எங்களுக்கு தெரியும் ஆனா எங்கடை கம்பஸ் பொடியள புடிக்கேக்கை உவர்ட தாடி தோழரோ வந்து எடுத்து விடுறது? ஆனந்த சங்கரி ஏதாவது செய்வாரா? மகேஸ்வரன் நடுச்சாமம் 12 மணிக்கும் பொலிஸ் ஸ்ரேசனுக்கு வரும் மனுசன். தாடி தோழர் ஏதாவது செய்வாரா? எங்களுக்கு தெரிஞ்சு ஒண்டும் செய்ய போறதில்லை. எங்களுக்கு தெரிஞ்சு புடிச்சு வச்ச பொடியனை தனக்கு வேலை செய்யுறியா எண்டு கேட்டவர். அதுதான் தெரியும். அவன் மாட்டன் எண்டு சொன்ன உடன அவன வெளியில விடேல்லை. கனக்க உள் காயங்களோடை கன காலத்துக்கு பிறகு வெளியில வந்தவன். அப்பிடி உவேடை ஜனநாயகமும் தமிழ் போராட்டமும் எங்களுக்கு தெரியும்.

அண்ணை 85 ஆம் ஆண்டு நான் பிறக்கேக்கை கன பேர் போராட்டம் முடிஞ்சு வெளியில போட்டீங்கள். நாங்கள் புலிக்குள்ளை புலியிடை கட்டுப்பாட்டுக்குள்ளை வளர்ந்தனாங்கள். எங்களுக்கு மற்ற இயக்கத்தை பற்றி தெரிஞ்சதெல்லாம் ராணுவத்துக்கு ஆதரவாயும் தான். எவ்வளவோ ஆமியோட பழகியிருக்கிறம். அவங்கள் தனிப்பட எவ்வளவோ நல்லவங்கள். அவங்கட மேலாதிக்க அரசியல் எண்டு வகைக்குள்ள வரேக்கை வேறையா இருந்தாலும். ஆனா மாஜி போராட்ட வீரர்கள் கொழும்பின் பாருகளுக்கை இருந்து ஒவ்வொரு நாளும் போராடுற போராட்டம் புல்லரிக்க வைக்கும்.

அஷ்ரப் அலி வேணுமெண்டு சில விசயம் செய்யுறார். அதுக்கு பிறகு அவருக்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டாம். தாடி தோழரின் பிரமச்சாரியம் பற்றி எங்களுக்கு தெரியும். அஷ்ரப் அலி மற்றவனை மோடயன் எண்டி நினைக்கிறார் போல இருக்கு. அவர் யாருக்கு சொத்து சேர்க்கிறார் எண்டு கேள்வி கேக்கிறார். இப்ப யாழ்ப்பாணத்துக்கு ஓடுற கப்பல் யாருடையது எண்டு யாருக்காவது தெரியுமா? சும்மா அஷ்ரப் அலிக்கு பதில் சொல்லிக் கொண்டு இருக்கிறீங்கள்.

கொழும்பில வசிக்கும் மாற்றூடக பத்திரிகையாளர் ஒருவரிடம் சொல்லி புலம்பியிருக்கிறார் தாடி தோழர். சந்திரிக்கா எண்டா பரவாயில்லை சொன்னதை ஆறுதலா கேப்பா. இப்ப சொன்னா தம்பியவை கோல் பண்ணி பாதுகாப்பை குறைக்கவா எண்டு கேக்குறாங்கள் எண்டு. தாடி தோழரின் மத்தியில துண்டு மாநிலத்தில கோவணம் எண்டது கிழிஞ்சதுக்கு பிறகு, இப்ப மாகாண சபையில தோசைக்கடை போட நிக்குறார்.

வடக்கும் கிழக்கும் வேறு விதமானவை தான். இலங்கையின் தென்பகுதியை பொறுத்தவரை ஒன்றிணைந்த வடக்கு கிழக்கும், வடக்கு கிழக்கை பொறுத்த வரை வெவ்வேறான கட்டமைப்பு முறைகளும் உசிதமானவை. அதை விட்டு போட்டு தட்டையாக வடக்கும் கிழக்கும் ஒண்டாய் இருக்க வேணுமா பிரிஞ்சு இருக்க வேணுமா எண்டு கேட்டா என்ன பண்ணுறது?.

கருணா மிக ஆரம்பத்தில் கேட்டது இதைத் தான். ஒன்றிணைந்த வடக்கு கிழக்குக்குள் கிழக்குக்கானா தனி நிர்வாக, நிதி, அலகுகள் என்பது. ஆனால் அதை அவர் கேட்ட நேரம் மிகவும் பிழையானது. ஏன் கேட்டார் என்பதும் கேள்விக்குரியது. பெரும்பாலான விடயங்களில் அவர் அவ்வாறு தான் இருந்தார். கிழக்குக்கு ரயில் போன விடயம், மட்டகளப்பு ஜீஏ கு நடந்த விடயம் மற்றும் கிழக்கின் பத்திரிகை ஒன்றைக் கைப்பற்றிய போது வன்னி காசு கொடுத்த விடயம். ஆதிக்க பெரும் கட்டமைப்புகள்களின் நெருக்குதலுக்குள் நசியும் கூறுகள் ஒத்த புள்ளியில் இணவதென்பது மிகவும் முக்கியமானது. அல்லது அதை எதிர் கொள்ள முடியாது. அந்த உடைவையே ஆதிக்க சக்திகள் விரும்புகின்றன. நீங்கள் எதற்காக வாதிடுகிறீர்கள் என்பது கொஞ்சமும் புரியாத விடயமாகவே உள்ளது.

அத்துடன் இனறைக்கு சிங்கள பேரினவாத சக்திகளைப் பொறுத்த வரை மகிந்த மிகவும் முக்கியமானவர். தனது வேலைத்திட்டத்தை மிகவும் லாவகமாக நகர்த்திச் செல்கிறார். புலிகள் தாம் நசுங்கும் நிலையில் உள்ளது போல் காட்டிக் கொள்ளும் நேரத்தில், இயல்பாகவே தாடி தோழர் முக்கியமான பிகர் ஆக அவர் வரக்கூடும் என்பது அவருக்கு தெரியும். இதை அவர் எதிர்கொள்ளும் முறையை பாருங்கள். பிள்ளையானை வளர்த்து விட்டு கிழக்கில் மற்றையவர்களின் கை ஓங்காமல் பார்த்து கொள்கிறார். பிள்ளையான அரசியல் பிகர் ஆக எபோதும் வர முடியாதவர். அவரை வைத்து எப்போதும் காய் நகர்த்தலாம் என்பது அவருக்கு தெரியும். அவ்வாறே பிள்ளையானை வைத்தே முஸ்லிம் மக்களையும் தமிழ் மக்களையும் என்றைக்கும் ஒன்று சேராத நிலைமைக்கு கொண்டு செல்கிறார்.

ஆக சிறுபான்மை இனங்கள் இலங்கையில் நசிவுக்கு உள்ளான நிலையை அடையும். முஸ்லிம்களின் தாயகம் சவூதி அரேபியா என்கின்றனர் ஹெல உறுமயவினர். உண்மையில் மகிந்தவின் கருத்தும் அதுதான். அஷ்ரப் அலியின் தாயகம் எது? எப்பிடி அதில் வாழபோகின்றார் அஷ்ரப் அலி. அஷ்ரப் அலியின் தேவை என்ன என்பது எல்லாருக்கும் தெரிந்தால் கூட இக்கேள்வி தவிர்க்க முடியாததே. கிழக்கு தேர்தலில் என்ன நடக்க போகினறது என இருந்து பாருங்கள். பிள்ளையான் எல்லருக்கும் வைக்க போற ஆப்பை பாருங்கள்.

வடக்கு மாகாண சபையில ரொட்டி சுட்டு விப்பார் தோழர், அஷ்ரப் அலி வாங்கித் தின்னட்டும். சும்மா போங்கையா. இதய வீணை எங்களுக்கு வடிவேலு வின்ட ஜோக் மாதிரி தான். அதுக்கு மிஞ்சி சீரியஸாக எடுக்க தேவை இல்லை. போராடி களைச்சு போய் புலியை திட்டிக் கொண்டு இருக்கிற போராளிகளுக்கு சொல்ல விரும்புவதெல்லாம். நீங்கள் பாத்த புலி இல்லை இப்ப இருக்கிறது. நாங்கள் ஒரு அரசாங்கத்துக்குள்ளை வாழுற மாதிரி தான் உணர்ந்தம். சில லொள்ளுகள் இருந்தும் கூட எங்களுக்கு அது பிரச்சனை இல்லாம தான் இருந்துது. வன்னில படிச்சு தான் கம்பசுக்கு வந்தம். இஞ்ச இருக்கிறது எங்களுக்கு கஸ்டம். அஷ்ரப் அலிக்கு நான் இப்பிடி சொல்லுறது புடிக்காது.

அங்கை பங்கருக்குள்ளயோ இருந்தனீங்கள் எண்டு கேப்பார். அவருக்கு கொழும்பில இருக்கிறது தான் வசதியா இருக்கும் எண்டது எங்களுக்கு விளங்குது. அஷ்ரப் அலியும் தன்னை ஒரு விடுதலையின் குரல் எண்டு நினைக்கிறாரோ தெரியாது. ஊளைக்கும் மற்றதுகளுக்கும் எங்களுக்கு வித்தியாசம் விளங்குமடாப்பா. சின்ன பொடியள் கதைக்கிறாங்கள் எண்டு பெரும் எடுப்பில வருவார். ரதன் மற்றும் அரவிந்தன் அண்ணை நீங்கள் அஷ்ரப் அலியை தவிர்த்து உரையாடினால் ஆரோக்கியமான விடயத்துக்கு நகர்ந்து செல்லலாம். நாமும் உங்களை பின் தொடர்வோம்.

எங்கள் பல்கலைக்கழகத்துக்குள் தேசத்தை பற்றி கதைத்து கொள்கிறோம். விதண்டாவாதங்கள் தவிர்த்து உங்கள் சக்தியை செலவளியுங்கள். எல்லா விதத்திலயும் நொந்து போயிருக்கிற எங்கட சமூகத்துக்கு நல்லது நடக்கும். அஷ்ரப் அலிக்கு பதில் சொல்லிக் கொண்டு இருந்தீங்கள் எண்டா எல்லாமே வேஸ்ட் அண்ணை.

தலித் போராளிகளுக்கு,
மொரட்டுவ கம்பசுக்குள்ளை ரெண்டு பிரிவு இருக்கண்ணை.
1. வடக்கு கிழக்கு (நாங்கள்)
2. கொழும்பு
ஏனண்ணை எங்களுக்காகவும் உங்கட போராட்டத்தை விரிவு படுத்த கூடாது?

கொழும்பை சேர்ந்த ஆதிக்க சக்திகளாலை நாங்கள் ஒடுக்கபடுறம். எங்களயும் ஒரு விடயா இருந்து நீங்கள் ஏன் போராட்ட கூடாது.? நாங்கள் (வடக்கு-கிழக்கு குரூப்) குள்ளை பெரும்பாலும் எல்லா சாதியளும் இருக்கிறம். ஆனா கொழும்பு பொடியள் பெரும்பாலும் வெள்ளாளர் தான். நீங்கள் போராடினா எங்களுக்கு ஏதாவது உரிமை வந்தாலும் வரும் உங்களுக்கு கிடைச்சா கூரியரில அனுப்பி விடுங்கோ. சரியே?


சுதாவின் பின்னூட்டம்.-2

அண்ணைமாருக்கு வணக்கம்.
நான் சொன்ன வடக்கு- கிழக்கு பற்றிய கருத்தை தடித்த எழுத்தில் பிரசுரித்த தேசத்திற்கு நன்றி. அது பற்றிய உரையாடல் மேலும் தொடர வேண்டும். உடன்பாடு காணும் புள்ளியில் இருந்து தேசம் அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டும் என்பதே எமது விருப்பு. அக்கருத்தை நடைமுறைப்படுத்தும் இயங்கு தளத்தை தேசம் வடிவமைக்க வேண்டும். அப்போது தான் இவ்வகை உரையாடல்கள் முழுமை பெறும்.

ஒட்டுமொத்த இலங்கைத் தேசிய கதையாடலின் கூரிய வன்முறையை, கருத்தியல் ரீதியாக எதிர்கொள்வதின்பால் காணப்படும் பிரச்சனைகளையும் பேச வேண்டும். சமஷ்டிக்கு ஆதரவான சிங்கள நேச சக்திகளை ஒருங்கிணைப்பது இதில் முக்கியமானது. அதன்மூலமே எக்காலத்துக்குமான நிரந்தர தீர்வைப் பெற்றுக் கொள்ள முடியும். ஒன்றிணைந்த இலங்கை என்னும் கருத்தியல் தகவமைக்க முயலும் வன்முறையை நாம் இனங்கண்டு அதனை எதிர்க்க வேண்டும். புலி தவிர்ந்த மாற்று இயக்கங்கள் எக்காலத்திலும் இவ்விடயத்தில் இருந்து தளராத நிலமையை உருவாக்க வேண்டும். அப்போது உண்மையான தமிழர் நலனுக்கு எதிரான சக்திகளை இனங்கண்டு கொள்ள முடியும்.

அடுத்து, யாழ் மையவாதம் என்ற விடயத்துக்கு வருவோமேயானால், யாழ் மையவாதம் தனியே யாழ்ப்பாணம் என்ற நிலப்பரப்பை மையப்படுத்தியது என்ற அர்த்தத்தில் எடுத்துக் கொள்ள முடியாதது. யாழ் மையவாதம் என்பது யாழ்ப்பாண, வெள்ளாள, இந்து, ஆண் வர்க்க நலன்களுடன் பொருத்திப் பார்க்க வேண்டியது. யாழ் சமூகப் பெண் சில வேளை இக்கருத்தின் மையத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்ட விளிம்பாக இருக்க முடியும். இதே நேரம் இந்நல நோக்கில் மட்டக்களப்பை சேர்ந்த ஒருவர் இருக்கவும் முடியும்.

அத்துடன் இவ்வன்முறை எவ்வாறு வெளிப்படும் எனில், யாழ், வெள்ளாள, இந்து, ஆண் என்ற வகை மாதிரிக்குள் வகைப்படுத்த முடியாத ஒருவர் தனது அடையாளங்களை துறந்து மேற்சொன்ன வகை மாதிரியை நோக்கி நகர்தல் என்ற சமூக ஓட்டத்துக்குள் உள்வாங்கப்படும் போது மேற்கூறிய அதிகாரம் இயக்கம் பெற்றுள்ளது எனலாம். இவையே வன்முறையின் உச்ச வடிவங்களாக சமூகத்தில் மதிப்பிடப்பட்டன. சாதி ரீதியாக ‘மேல்நிலையாக்கம்’ என்ற விடயமே இவ்வன்முறையின் சமூக இயக்கமாகும்.

உதாரணமாக தாழ்த்தப்பட்ட சாதியை சேர்ந்த ஒருவர் தான் உயர் சாதியை சேர்ந்த ஒருவரைப் போல இருக்க வேண்டும் என விரும்புதல் என்பதின் உளவியல் அவர் மீது சாதிய ஒடுக்குமுறை பிரயோக்கிக்கப்பட்டுள்ளது என்பதின் வெளிப்பாடாகும். தனது அடையாளங்களை மறைக்க விரும்புதல் என்பது. ஒருவர் தனது அடையாளங்களையும் சுயத்தையும் பேணுவதற்கான விருப்பு எவ்வகையிலும் தடுக்கப்பட்டு விடக்கூடாதது. அதை இன்று சிலர் மிகவும் தவறாக அடையாளத்தை வலியுறுத்துதல் என்பதை தமது அரசியலாக உயர்த்திப் பிடிக்கின்றனர். அடையாளத்தை இறுக்கமாக வலியுறுத்தல் என்பது இன்னொரு வகையில் அடிப்படைவாத மனநிலைக்குள் ஒருவரைக் குறுக்குவதாக அமைந்து விடவும் வாய்ப்புள்ளது. அதன் முடிவும் வன்முறையே.

தேசியவாதம் என்பதையும் இவ்வகையில் நோக்கலாம். ராகவன் போன்றோர் தேசியவாதம் என்பதை முற்று முழுதாக நிராகரிப்பதின் பின்னாலுள்ள காரணம் புரிந்து கொள்ளக்கூடியதே. அதன் நியாயம் என்பது எது வரையில் செல்லுபடியாலும் என்பது ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியது. தேசியவாதத்தை ஒட்டு மொத்தப்படுத்தல் என்பதன் பின்னால், மையத்தில் இருந்து அப்பாலான விளிம்பின் குரல்கள் நசுக்கப்படுகின்றன என்பது உண்மைதான். ஆயினும், ஒரேயடியாக தேசியவாதத்தை நிராகரித்தல் என்பதன் பின்னால் உள்ள தீமைகளைப் பேசவேண்டும். சிறுபானமையாக உள்ள தமிழ்ச் சமூகம் தன்னை உடைத்தல் என்பதும் தவறானதே. இரண்டுமாக இருத்தல் என்பதே இங்கு முக்கியமானது.

இன்னும் தெளிவாகச் சொன்னால், இலங்கை என்ற தேசியக் கதைவெளியில் வடக்கு-கிழக்கு தாயகம் என்பது இறுக்கமான வடிவமாகவும் வடக்கு-கிழக்கு தனக்குள், கிழக்கு என்ற தனியான தனித்துவமான அலகாக இருத்தல் என்பதே எமது நிலமைக்கு சரியானது. இங்கே கிழக்கின் தனித்துவம் என்றைக்கும் காக்கப்ப்டும் அதேவேளை தமிழர் தாயகம் என்பதும் ஒடுக்குமுறையை எதிர்க்கும் ஏதுவாக அமைந்திருக்கும். இக்கருத்தே யாழ்மையவாதம் மற்றும் சைவ வேளாள மைய கருத்தியலில் இருந்து விளிம்புகளை காப்பாற்றும்.

சிவராம் இவ்வகைக் கருத்தியலையே கொண்டிருந்தார். ஆயினும் போராட்டம் நடைபெறும் சூழ்நிலையில், அவ்வகையான உரையாடலை ஆரம்பித்தல் என்பது சிங்கள பேரினவாதம் தமிழர்களை கூறுபோட்டு தனது அதிகாரத்தை நிறுவி விடும் என்று ஐயம் கொண்டிருந்தார். கருணாவுடன் இவைபற்றி நிச்சயமாக அவர் உரையாடி இருப்பார். கருணா அதைப் பூரணமாக விளங்கிக் கொள்ளாமல் சொதப்பி போட்டார். சிவராம வடக்கில் இருந்தான கிழக்கின் வேறுபாட்டை நன்கு உணர்ந்திருந்தார். போராட்ட சூழ்நிலையில் ஒன்றிணைந்த வடக்கு-கிழக்கு என்ற கருத்தியலை விட்டு மற்றவை எல்லாம் தமிழ் நலனுக்கு பாதகமானவையே.

அத்துடன் சிவராம் ஒருமுறை எழுதி இருந்ததாக நினைவு, தமிழர்களுக்குள் இயல்பாகவே உள்ள முரண்பாட்டு குணவியல்புகளை சிங்கள பேரினவாதம் உன்னிப்பாக அவதானித்து வருவதாக. அது மிகவும் உண்மையானது. ஆரம்பத்தில் புளட்டுடன் நல்லுறவை பேணிய நளின் டி சில்வா போன்றோர் இன்று எடுத்திருக்கும் நிலைப்பாடு அப்பட்டமாக தமிழருக்கு விரோதமானதே.

இங்கு மீண்டும் நான் சொல்வது என்னவென்றால் எவ்வகையிலும் எம்மை அடையாளப்படுத்துவதில் எமக்கு உரிமை உண்டு. ஆனால் அடையாளங்களை இறுக்கும் போது அடிப்படைவாதத்தை நோக்கி நகருகின்றோம் என்ற உண்மையை நாம் விளங்காமல், மீண்டும் வன்முறைச் சமூகத்தை உற்பத்தி செய்து கொண்டிருக்கிறோம். இது ராகவன் அண்ணாச்சிக்கும் பொருந்தும். தல்த் போராளிகளுக்கும் பொருந்தும்.

தமிழ் மக்களுக்கு நன்மை செய்ய விரும்பும் எல்லோருக்கும் இருக்கும் வழி என்னவென்றால், சிங்கள பேரினவாத்த்தை எதிர்த்து கொண்டு புலிகளை ஜனநாயப்படுத்துவது தான். இது தான் எல்லோருக்கும் உள்ள குறைந்தபட்ச தீர்வு. பேரினவாதத்தையும் எதிர்த்து புலியையும் எதிர்க்கிறோம் என்பது எல்லாம் சுத்த பம்மாத்து எண்டு 22 வயசு பொடியளுக்கே விளங்குது. இங்களுக்கு விளங்காட்டி என்ன செய்யுறது.

அடுத்தது, கிழக்கின் தற்போதைய நிலையை யாரும் புரிந்து கொண்டதாக தெரியவில்லை. அங்க டக்ளசிற்கோ ஆனந்தசங்கரிக்கோ ஈ.என்.டி.எல்.எஃப் கோ பிள்ளையான் வழிவிடமாட்டார். கிழக்கு பிள்ளையான் இடம் தான் இருக்கும், பிள்ளையான் மகிந்தவிடம் இருப்பார். கிழக்கின் விடிவெள்ளிகள் வெளிநாட்டில இருப்பினம். இருந்து பாருங்கோவன். இங்கு மகிந்தவின் ராஜ தந்திரம் சூப்பர். டக்ளசோடை சேர்ந்து கருணாவுக்கு ஆப்பு. கருணா போனால் பிள்ளையானை இணைத்து டக்ளஸ் ராஜ்யம் அமைக்கலாம் எண்டு ஆசை காட்டிப் போட்டு, கருணா போன உடன டக்ளசையும் பிள்ளையானையும் கொழுவி விட்டார். இப்ப கிழக்கு மகிந்தவின் கையுக்குள்ளை. (கவனிக்க. இராணுவ ரீதியாக மட்டுமில்லை அரசியல் ரீதியாகவும்.)

அடுத்தது இசட் ஸ்கோருக்கும் வடக்கு-கிழக்கு இணைவிற்கும் சம்பந்தமே இல்லை. இசட் ஸ்கோர் மாவட்ட ரீதியாகவே கணிக்கப்படுகின்றது. அதற்கும் மாகாணம், வடக்கு-கிழக்கு என்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ரதன், அரவிந்தன் அண்ணைமார் உங்களுக்கு இசட் ஸ்கோர் தெரியாதெண்டு, சும்மா புழுகிறார் காதில பூ அலி. போராட்டத்தின் ஒரு காரணமாக சொல்லப்படுகின்ற பல்கலைக் கழக வெட்டுப்புள்ளி முறைமை பழைய மாதிரி இலங்கை பூராவுக்குமாக வரபோகுதாம். இதனால தமிழ் மாணவர்களே பாதிக்கப்பட போகின்றார்கள். தமிழரின் கல்வி எந்த நிலைமைக்கு வந்துட்டு எண்டு பாத்தியளே.

மற்றது ரதன் அண்ணை சொன்ன விசயம் கோவில் திருவிழா சம்பந்தமானது. உண்மையானது. அயினும் அச்சணடையின் தொடக்கத்தில் புலிகள் தாழ்த்தப்பட்ட சமூகத்துக்கு தான் சப்போர்ட் பண்ணினவை. புலிகளின் முக்கிய உறுப்பினர் ஒருவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர். அவர் தாழ்த்தப்பட்ட சமூகத்திற்கு சார்பாகவே நின்றார். கடசியில் சமாதானமா முடிஞ்சுது. அதே மாதிரி ஒரு ஐஸ்கிறீம் சண்டை வந்தது. அந்த சண்டையில பங்குபற்றின சில பேரை வன்னிக்கு கொண்டு போயிட்டினம். பிறகு விட்டுட்டினம். அந்த சண்டையில தாழ்த்தபட்ட சமூகத்த்யைச் சேர்ந்தவர்களுடன் உயர் சாதியை சேர்ந்த சிலரும் சேர்ந்தே சண்டை போட்டவினமாம்.

ஒரு உயர் சாதி பெண்மணியின் வாக்கு மூலத்துடன் முடிக்கிறன்.
“உவங்கள் போராட வெளிக்கிட்டு எங்களுக்கு சமூகத்தில ஒரு மதிப்பும் இல்லமா போட்டுது.”

சுதா

ரதனின் பின்னூட்டம்

தம்பி சுதா உங்கள் ஆக்கபுர்வமான கருத்துக்களிற்கு பாரட்டுக்களும் நன்றியும் தெரிவித்து கொள்கிறேன். உண்மையில் இப்போவுள்ள சற் புள்ளி வழங்கும் முறைபற்றிய தெளிவுஎனக்கில்லை.

நீங்கள் சொன்னமாதிரி அமரர் சிவராமிற்க்கு இருந்த ஐயம்தான் பலதமிழருக்கு இருக்கிறது. தமிழரிடையே காணப்படும் சாதீய சமய பிரதேச முரண்பாடுகளை இன்றைய காலகட்டத்தில் தர்கிக்க முனைந்தால் ஈழதமிழரை பிரித்தாள விரும்பும் சக்திகள் தமது வேலையை சுலபமாக்கிகொள்ள பாவிப்பார்கள். அதிலும் குறிப்பாக ஐரோப்பா மண்ணில் சாதீய பிரதேச முரண்பாடுகளை இன்றைய இக்கட்டான காலகட்டத்தில் தர்க்கிக்க விளைபவர்களில் பெரும்பாலானோர் துணைக்குழு அரசியல் பின்னனி கொன்டவர்கள். புலியை எதிர்க்க வேணுமென்ற வெறியில் ஈழதமிழருக்கு ஏற்படபோகும் பாதிப்பை கணக்கில் எடுக்காது புலியெதிர்ப்பை உளவு நிறுவனங்களின் துணையுடன் முன்னெடுப்பவர்கள். இவர்கள் பற்றி நீங்கள் அறியும் சந்தர்ப்பம் குறைவு. அவர்களில் சிலர் இதே கருத்துகளத்தில் கருத்தாடலாளர்களாக இருக்கிறார்கள்.

புலிகள் 90 களின் இறுதிகளில் தமிழீழத்தின் அடிபடை கட்டுமானங்கள் என்ற கையேட்டை வெளியிட்டிருந்தார்கள் அதில் தமிழீழத்தின் தலைநகர் திருகோனமலை வடதமிழீழ நிர்வாக தலைநகர் மாங்குளம். தமிழீழத்தில் 32 மாவட்டங்கள் (எண்ணிக்கையில் தவறு இருக்கலாம் தெரிந்தவர்கள் சரியானதகவலை தரலாம்) இப்படி பல தகவல்களை தெரிவித்தார்கள். சிறிய நிலபரப்பை கொன்ட தமிழர் தாயகத்தை 32 மாவட்டங்களாக பிரித்து பிரதேச அபிவிருத்தி. பிரதேசங்களின் தனித்தன்மை பேணல் பிரதேச மட்டத்தில் அரசியல் அதிகாரங்கள் பரவலாக்கபடல். போன்ற முற்போக்கு சிந்தனையை வெளிபடுத்தினர். அவர்கள் சர்வதேச அழுத்தங்கள் போர் அழுத்தங்களில் உள்ள நிலையில்; சந்தர்பத்தை பாவித்து தமிழரை பிளவுபடுத்தும் முயற்சியே பெரும்பாலான புலியெதிர்பாளர்களின் நடவடிக்கை.

பொருளாதார முன்னேற்றம் ஏற்படும்போது இயல்பாகவே அணைத்து பிற்போக்குதனங்களும் அடிபட்டு போகும் நடைமுறை உதாரணம் சிங்புர் தமிழர். ஆனால் சமூகமாற்றத்தை விரும்பாதவுர்கள் கலாசாரம் அழிவதாக கெடுவதாக ஒலமிடுவார்கள். எனவே ஒன்று மட்டம் உண்மை சிலபேருக்க பொழுது போக்க. சமுதாயத்தில் தமதுபெயரை தக்க வைக்க புதுப்புது பிரசினைகளை கிளப்புவார்கள். இவர்களால் சமுதாயதிற்க்கு எந்த நன்மையும் கிட்டாது.

0 comments: