ஜனநாயகம் என்னும் தளத்தில் சிறீரங்கன் எழுதிய பதிவும் அதனூடாக திவாகருடனான உரையாடலும்..
தமிழ்ச்செல்வனுக்குக் கருணாநிதி என்கிற...
கனிவுமில்லைக் கருணையுமில்லை!
"கனிவுமில்லைக் கருணையுமில்லை" என்ற தலைப்பின் கீழ் பேராசிரியர் கலாநிதி.சி.சிவசேகரம் அவர்கள் காலஞ்சென்ற தோழர் விஸ்வானந்ததேவனுக்கான நினைவுப் பேருரையொன்றை 1989ஆம் ஆண்டு செய்தார்.அதை, இலண்டனில் சிறு பதிப்பாகவும் அவரது நண்பர்கள் வெளியிட்டார்கள்.தென்னாசியப் பிராந்திய அரசியலில் இந்தியாவின் பங்கு-மேலாதிக்கம் பற்றிய மிக எளிமையான பார்வையை அதுள் முன்வைத்தார் திரு.சி.சிவசேகரம் அவர்கள்.இன்று, கிட்டத்தட்ட பதினெட்டாண்டுகளுக்குப் பின்பு, நமது தேசிய விடுதலைப் போராட்டத்தினதும்,அது சார்ந்தியங்குவதாகப் புலிகளால் முன் தள்ளப்பட்ட"தமிழர் தேசியக் கூட்டமைப்பு" மற்றும் மலையக மக்களின் இன்னல்களில் குளிர்காயும் அவர்களின் அரசியல் தலைவர்களும் இந்தியாவின் மூலமாகத் தமிழ் பேசும் மக்களின் இன்னல்களை இலங்கையில் தீர்த்துவிடலாமென்கிறார்கள்.இத்தகைய கூற்றை-பேட்டிகளை,கருத்துக்களை புலிகளின் ஊடகங்களோ விழுந்தடித்துச் செய்தியாகத் தலையங்கம் தீட்டி, எம்மக்கள் முன் தள்ளுவதில் முன்னணியில் நிற்பவர்கள்.
இது ஒரு சாபக்கேடான சூழல் இல்லை!
இங்குதாம் நாம் வர்க்கம் சார்ந்து சிந்திக்க- இயங்கக் கோருகிறோம்.வர்க்கச் சமுதாயத்தில் வர்க்க அரசியலே அடிப்படை என்பது விஞ்ஞானத்தின் வழி உண்மையானதாகும்.ஒவ்வொருவரும் தாம் எந்தெந்த வர்க்கத்தின் உணர்வுகளைக் காவித்திரிவதென்பதை முதலில் கண்டடையவேண்டும்.தொழிலாளியாக இருந்தபடி முதலாளியாகக் கனவுகாண வைக்கிறது இன்றைய ஆதிக்க வர்க்கத்தின் ஊடகங்கள்-பண்பாட்டுப்படையெடுப்புகள்.
நாம் நமது வாழ்வைத் தொலைத்தபடி எவரெவருக்காகவோ எமது உயிரை விட்டுவிடுகிறோம்.இது தப்பானது.நமது பெற்றோர்கள் பட்டுணிகிடக்கும்போது நாம் நமது வாழ்வையே ஆளும் வர்க்கத்துக்குத் தாரை வார்த்துவிடுகிறோம்.இதை இலகுவாக விளங்கிக்கொள்ள,கட்சித் தலைவனுக்காகத் தீக்குளித்து உயிரைவிடும் தொண்டனை எண்ணிக்கொண்டோமானால் உலகம் புரியும்.
"தொண்டனின் பிணத்தைவைத்தே
அரசியல் நடத்தி முடிப்பவர்கள்
ஓட்டுக்கட்சி-பாராளுமன்ற அரசியல் சாக்கடைகள்!"
இந்த நிலையில்,இலங்கையில்(இலங்கையிலென்ன உலகம் பூராகவும்தாம்)தமிழ் பேசும் மக்களில் பெரும்பான்மையானவர்கள் அன்றாடம் உழைத்துண்ணும் கூலித் தொழிலாளர்களும்,விவசாயிகளும்,கைவினைத் தொழிலாளர்களுமே.இத்தகைய மக்கள் சமுதாயத்தில் நிலவுகின்ற அரசியலானது இந்த மக்களை அடக்கும்-ஒடுக்கும் அரசியலாகவே இருக்கிறது.இதை முன்னெடுப்பவர்கள் தமிழ் பேசும் மக்கள் சமுதாயத்துள் சிறு தொகையான உடமையாளர்களும்,அவர்களுக்குக் கூஜாத் தூக்கும் அரசாங்க ஊழியர்கள்-அதிகாரிகளுமே!இவர்களின் நலனுக்கான அரசியலாகவும்-அபிலாசையாகவும்"தமிழீழம்"கோசமாகியது.இதைப் பற்பல சந்தர்ப்பத்தில் நாம் கட்டுரைகளுடாகச் சொன்னோம்.எமது மக்களின் அனைத்து முன்னெடுப்புகளும் முடக்கப்பட்டுள்ளது.அன்றாடச் சமூகச் சீவியம் சிதறடிக்கப்பட்டு,வாழ்விடங்களிலிருந்தே முற்றாகத் துரத்தப்பட்டு,அவர்கள் அநாதைகளாக்கப்பட்டுள்ளார்கள்.அவர்களின் குழந்தைகளான நாமோ நமது வீடுவாசல்கள் அனைத்தையும் சிங்கள இராணுவத்திடம் பறி கொடுத்து, அகதியாகி ஐரோப்பிய மண்ணில் கூலித் தொழிலாளிகளாகி,ஐரோப்பியத் தெருக்களைச் சுத்தஞ் செய்கிறோம்.எமது வாழ்வு நிர்மூலமாகப்பட்டபின் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டார்கள்-கொல்லப்பட்டு வருகிறார்கள்.
இந்த நிலையிலும் நமது அரசியல்தலைமையிடம் கபடம் நிறைந்து, இந்தியாவோடு,ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களோடு,அமெரிக்க அழிவுவாதிகளோடு கைகுலுக்கியபடி நம்மை ஏமாற்றி வருகிறார்கள்.இது கண்டிக்கத்தக்கது மட்டுமல்ல,இந்தக் கபோதித்தனமான ஈனமிக்க அரசியல்-இயக்க வாதிகளை மக்கள் முன் நிறுத்தித் தண்டிக்கவேண்டும்.ஏனெனில்,நாம் இலட்சம் உயிர்களை இவர்களின் ஈனத்தனத்துக்காகப் பறிகொடுத்துள்ளோம்!
பேராசிரியர் சி.சிவசேகரம் பதினெட்டாண்டுகளுக்குமுன் சொன்ன அதே கருத்தை மீளவும் இக்கட்டுரையில் வலியுறுத்துகிறார்.
தற்போது, உலக மூலதனமானது தென்னாசியப் பிராந்தியமெங்கும் பாய்ந்து,கணிசமானளவு தென்னாசிய அரசியலைக் கட்டுப்படுத்தி வருகின்றபோதும்,இந்தியாவின் மேலாதிக்க அரசியல் வியூகம் காலாவதியாகிவிடவில்லை.இந்தியாவின் மிகக் கெடுதியான அரசியல் நலன் நமது மக்களின் கணிசமானவர்களைக் கொலை செய்து,இந்திய ஆளும் வர்க்கத்தின் கனவை இலங்கையில் நிலைப்படுத்தி வருகிறது.மிகக் கேணைத்தனமாக இந்தியக் கோமாளிகள்-தமிழ்நாட்டு விரோதிகள் இராஜீவ் என்ற பாசிஸ்ட்டின் கொலைக்கு வக்காலத்து வேண்டுகின்ற இன்றைய சூழலில்கூட நமது மக்களை வகை தொகையின்றிக் கொன்று குவிக்கும் இந்தியத் துரோகத்தை நமது அரசியல்வாதிகள் கேள்விக்குட்படுத்தவில்லை.புலிகளின் மிகக் கெடுதியான அரசியல் கூட்டுக்கள் இந்தியாவிடம்-உலக ஏகாதிபத்தியங்களிடம் தமது நாணயக் கயிற்றை வழங்கியபின்,அந்த எஜமானர்களின் இழுப்புக்கேற்றபடி "போராட்டம்"செய்கிறார்கள்!மக்களோ இத்தகைய கொடிய யுத்தங்களால்,அரசியல் ஏமாற்றால் தமது பொன்னான உயிர்களைப் பறிகொடுத்தும்,வாழ்விடங்களை இழந்தும் வதைபடுகிறார்கள்.இதைத் தட்டிக் கேட்க எவருமேயில்லை!புலிகளை எதிர்ப்பதாக நாடகமாடும் புலி எதிர்ப்புக் குழுக்களோ இந்தியாவின் இன்னொரு வடிவிலான கைக்கூலிகள்.இவர்களை இனம் காட்டும் பேராசிரியர் சி.சிவசேகரம் மிக இலாவகமாக இந்திய-தமிழ்நாட்டு அரசியல் சூழ்ச்சிக்காரர்களையும்,அவர்களது துரோகத்தையும் இனம் காட்டுகிறார்.
கடைந்தெடுத்த துரோகிகளானவர்கள் இந்தியக் கைக்கூலி ஆனந்தசங்கரி,டக்ளஸ்,கருணா-பிள்ளையான்,தமிழ் தேசிய கூட்டமைப்பு,புலிகளின் தலைமைமட்டுமல்ல தமிழ்நாட்டின் வளங்களைச் சுருட்டி ஏப்பமிட்ட வடிகட்டிய துரோகி கருணாநிதியும்தாம் என்பதை நாம் விளங்கிக் கொள்ளவேண்டும்.இதையும், சிவசேகரம் அவர்கள் குறித்துரைக்கிறார்.
வடிகட்டிய துரோகி கருணாநிதியின் போலிக்கண்ணீர் ஒப்பாரியைப் பாட்டாக்கிய கண்ணனின் இசையைக் கேட்டபோது,இந்த முயற்சியில் கண்ணனின் திறமை வெளிப்பட்டபோது,சயந்தனின் பதிவில் கண்ணனைப் பாராட்டியபடி கருணாநிதியின் ஓலத்தை அம்பலப்படுத்தியிருந்தேன்.அதை அனானியாகச் சொன்னேன்.பேராசிரியரோ அக் கவிதையையும் விடாமற் சாடியிருக்கிறார்.
இவையெல்லாம் எதற்காகச் சொல்கிறோம்?
நமது பிரச்சனையைத் தத்தமது இலாபத்துக்காக அரசியலாக்கி மக்களை அழித்துவரும் கொடிய சக்திகளை இனம் காட்டவே நாம் இதுவரை எழுதித் தள்ளுகிறோம்.நாமும், நமது பெருங் கல்வியாளர்கள்போல் வாய்மூடி மெளனித்திருக்க முடியும்.இப்படியிருந்தால் எமது மக்களின் அழிவை எங்ஙனம் தடுத்து நிறுத்துவது நண்பர்களே?
எல்லோரும் தத்தமது குடும்பம்,பதவி,பட்டம் என்றிருந்தால் அப்பாவி மக்களின் வாழ்வோடு விளையாடும் அந்நிய-உள்நாட்டு யுத்தப் பேய்களை எங்ஙனம் அம்பலப்படுத்துவது-மக்களை அவர்களிடம் பலியாக்காது தடுப்பது?
இதுவோ பெரும் வரலாற்றுக்கடமை நண்பர்களே!
நாம் புரட்சி செய்கிறோமோ இல்லையோ நமது மக்களின் உரிமைகளை அந்நியர்களிடம் அடைவு வைத்துத் தமது வாழ்வையும்,வளத்தையும் பெருக்கும் கயமைமிக்க அரசியல்-இயக்கவாதிகளை நாம் மக்களுக்கு இனம் காட்டியாகவேண்டும்!இதுவரை எமது மக்களின் உயிரோடு விளையாடிய இந்தப் போராட்ட முறைமை நம் இனத்தின் அனைத்து வளங்களையும் அந்நியர்களோடு பங்குபோட்டு அநுபவித்துவருகிறது.அதைத் தொடர்ந்து நிலைப்படுத்தவும்,மக்களைச் சட்ட ரீதியாக ஒடுக்கும் உரிமைக்குமாக இவர்கள் போடும் கூச்சல் யுத்தம்-ஜனநாயகம் என்றபடி.நமது மக்களின் எதிர்காலம் இருண்டுபோய்க் கிடக்கிறது.இந்த நிலையிலும் நாம் மெளனித்திருக்க முடியுமா?
தமிழ்த் தேசிய மாயையில் கட்டுண்டு கிடந்தபடி இயக்கவாத மாயைக்குள் மெளனித்திருந்தோ அல்லது வக்காலத்து வாங்கியோ எம்மை நாம் ஏமாற்றமுடியாது!நாம் இழந்திருப்பது வரலாற்றால் மீளக்கட்டியமைக்க முடியாத உயிர்கள்.அந்த உயிர்களின் தியாகத்தைப் பிழைப்புக்காகப் பயன்படுத்தும் கட்சி-இயக்க அரசியல் தலைமைகள் தத்தம் பதவிகளுக்கும்-இருப்புக்குமாக நம்மை இன்னும் படுகுழியில் தள்ளுவதை அநுமதிக்க முடியாது.
தமிழ்நாட்டுச் சினிமாக்கூட்டமும்,பொறுக்கி அரசியல்வாதிகளும் தமிழ்ச் செல்வனின் கொலைக்கு நீலிக்கண்ணீர் வடித்தவுடன் ஈழத்துத் தமிழனுக்கு உச்சி குளிர்கிறது.ஆனால்,அந்தக் கூட்டம் இதுவரை எமக்கு என்ன செய்தார்கள்,எமது மக்களின் அழிவுக்கு காரணமானவர்களை எதிர்க்கக்கூட முடியாத-முனையாத கழிசடைகளின் ஒப்பாரிகள், நமது மக்களின் குருதியை-கண்ணீரை நிறுத்திவிடாது.மாறாகத் தமிழகத்தின் அப்பாவிக் குடிகளின் பெரும் குரலே எமது மக்களின் கண்ணீருக்கு முடிவுகட்ட ஒத்திசைவாகும்.
தமிழகத்தின் ஓட்டுக்கட்சிகளும்,சினிமாக் கூத்தாடிகளும் தமிழகத்து அப்பாவி மக்களின் குரல்வளைகளைத் திருகியே தமது அதிகாரத்தை,ஆதிக்கத்தை,செல்வத்தைக் குவித்து வைத்திருக்கிறார்கள்.தமது சொந்த குடிகளையே அடியோடு மொட்டையடிக்கும் இந்தக் கூட்டத்தின் குரலா எமது மக்களின் துயர் துடைக்கும்?-இலங்கையில் இந்தியாவினது பங்கு என்ன?புலிகள் ஏன் இந்தியாவுக்குத் தூதுவிடுகிறார்கள்,எப்படி இந்தியாவால் ஆட்டுவிக்கப்படுகிறார்கள்?மிக இலகுவான கேள்விகள்.தொடர்ந்து தேடும்போது விடைகள் மிக இலகுவாகக் கிடைத்துவிடும்.
சிந்தியுங்கள்!
நாம் அவசியம் நமது நண்பர்களை-எதிரிகளை இனம் கண்டாக வேண்டும்.
அதற்குப் பேராசிரியரின் இக்கட்டுரை பலகோணத்தில் பார்வைகளைத் திறந்துவிடுகிறது.
"படிப்போம்,
பாருக்குள் நமது எதிரிகளை
நேரிய-சீரிய,செம்மையான போராட்டத்துடன்
எதிர்கொள்வோம்.அங்கே, நாம் வணங்கும்
இன்றைய தெய்வங்கள்கூட
எதிரிகள் என்பதை வரலாறு புகட்டும்."
அதுவரையும் விவாதிப்போம்-விழிப்படைவோம்!
நட்புடன்;
ப.வி.ஸ்ரீரங்கன்
19.11.2007
மறுபக்கம் :
"தமிழ்ச்செல்வனுக்குக் கருணாநிதி என்கிற நம்பிக்கைத் துரோகி இரங்கற் கவிதை எழுதினால் அது எட்டுப்பத்தி அகலச் செய்தியாகவும் வரலாம்."
இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை பற்றிய இந்திய நிலைப்பாடென்ன என்றும் அதுபற்றிய இலங்கைவாழ் தமிழ்த் தலைமைகளின் மதிப்பீடென்ன என்றும் யாருங் கேட்டால், முதலாவது கேள்விக்கு விடை கூறுவது எளிது. மற்றக் கேள்விக்கான பதிலைத் தலைவர்களாற் கூடத் தெளிவாகக் கூற இயலுமா என்பது நிச்சயமற்றது.
அக்டோபர் பிற்பகுதில் ஒரு தமிழ் நாளேட்டின் முதலாவது பக்கத்தில் ஒரு கட்டமிடப்பட்ட செய்தி இருந்தது. அதற்குக் கீழாகக் கொட்டையெழுத்துத் தலைப்புடனான ஒரு செய்தி இருந்தது. முதலாவது செய்தி இந்திய அரசாங்கம் இலங்கைக்கு ஆயுதங்கள் வழங்கி வருவதை உறுதிப்படுத்துவது. மற்றது இந்தியா இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையின் தீர்விற்குப் பங்களிக்க வேண்டும் என்று தமிழ்த் தலைவர்கள் கேட்டுக் கொண்டது பற்றியது.
இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை பற்றியும் சமகால நிலைமைகள் பற்றியும் இந்திய ஆட்சியாளர்கள் சரிவர அறியமாட்டார்கள் என்று நம்புகிறவர்கள் இருக்கிறார்கள். இலங்கைத் தமிழ்த் தேசிய இனத்தின் பாதுகாப்பையும் இருப்பையும் அடையாளத்தையும் உறுதிப்படுத்துகிற தீர்வு பற்றி இந்தியாவுக்கு அக்கறை இருக்கிறது என்று நினைக்கிறவர்கள் இருக்கிறார்கள். தமிழக அரசியல் தலைவர்கள் மத்திய அரசில் தமது செல்வாக்கைப் பயன்படுத்தி மத்திய அரசின் நிலைப்பாட்டை இலங்கைத் தமிழருக்குச் சாதகமான திசையிற் திருப்ப வல்லவர்கள் என்று நினைக்கிறவர்கள் இருக்கிறார்கள். தமிழக அரசியல் தலைவர்களுக்கு அந்தவிதமான அக்கறை உண்டு என்று நினைக்கிறவர்கள் இருக்கிறார்கள். இதில் ஒரு பகுதியை நம்புவதற்குக் கால் நூற்றாண்டுக் காலம் முன்பு பலருக்கு ஒரு நியாயம் இருந்தது. இருபது ஆண்டுகள் முன்பு வரை அந்த நியாயம் தொடர்ந்தது. அதற்குப் பிறகும் தமிழகத் தலைமைகள் பற்றிய ஒரு நம்பிக்கை இன்னொரு ஐந்து வருடங்கள் தொடர ஏதோ நியாயம் இருந்தது.
ஆனாலும், இந்த நம்பிக்கைகள் தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் அமையவில்லை என்றும் இந்திய மேலாதிக்கத்தின் நோக்கங்கள் பற்றியும் கவனமாயிருக்குமாறும் எச்சரித்து வந்தவர்கள் இருந்தார்கள். பங்களாதேஷின் உருவாக்கத்தில் இந்தியாவின் பங்கு பற்றி எதிர்மாறான இரு மதிப்பீடுகள் இருந்தன. ஒன்று தமிழீழ விடுதலைக்கு இந்தியா கைகொடுக்கும் என்று சொன்னது. மற்றது தமிழர் பிரச்சினையைத் தனது மேலாதிக்க எண்ணங்கட்காக அல்லாமல் வேறெதற்கும் இந்தியா பயன்படுத்தாது என்றது. எல்லாத் தமிழ் தேசியவாதிகளும் ஏதோ வகையில் இந்தியாவை நம்பியவர்கள் தாம். அவர்கள் மட்டுமன்றிக் குழம்பிப்போன சில தமிழ் இடதுசாரிகளும் இந்தியாவை நம்பினார்கள். சிலரது நம்பிக்கைகள் ஏமாற்றத்துக்கு இட்டுச் சென்றன.
வேறு சிலர் இந்தியாவின் துரோகத்தைத் தெரிந்து கொண்டே அதன் பங்காளிகளானார்கள். இவையெல்லாம் வரலாறு கூறும் உண்மைகள். எளிதில் மறக்கும் அளவுக்கு அவை அற்ப விடயங்களுமல்ல, எப்போதோ ஒரு யுகத்தில் நடந்துமுடிந்தவையுமல்ல.
கடந்த பன்னிரண்டு மாதங்கட்குள்ளேயே தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்திய ஆட்சியாளர்களாலும் அவர்களது பிரசார முகவர்களாலும் எவ்வளவு கேவலமாக நடத்தப்பட்டார்கள் என்பதுகூடப் பலருக்கு நினைவில் இல்லை என்றால் அவர்கள் பாராளுமன்ற அரசியலால் முற்றாகவே சுரணை கெட்டுப் போனவர்கள் என்று தான் சொல்ல முடியும். இந்தியாவை வளைத்துப் போடச் சீனாவையும் பாகிஸ்தானையும் காட்டினவர்கள் கண்டதெல்லாம் எதிர்பார்த்ததற்கு நேரெதிரான விளைவுகள் தாம். இந்திய அமெரிக்கப் போட்டியை வைத்துப் போட்ட கணக்கும் பொய்யாகிவிட்டது "கொக்குப் பிடிக்கிறதற்கு வழி, அதிகாலையில் கொக்கின் தலையில் வெண்ணெய்யை வைத்து விட்டால், வெய்யில் ஏறும்போது வெண்ணெய் உருகிக் கொக்கின் கண்கள் தெரியாமற் போகும்; அப்போது பார்த்துக் கொக்கைப் பிடிக்கலாம்" என்று ஆலோசனை சொன்னவனுக்குக் கூட இந்த அரசியல் ஞானிகளை விட விவேகம் அதிகம் என்று நினைக்கிறேன்.
நான் இப்போது கேள்விக்கு உட்படுத்துவது அறியாமையாற் செய்கிற பிழைகளையல்ல. முழு அரசியல் அயோக்கியத் தனத்தையே கேள்விக்குட்படுத்துகிறேன்.
இந்திய அரசாங்கம் இலங்கை அரசாங்கத்திற்கு ஆயுதங்கள் விற்பதைப் பற்றி அரசியல்வசதி கருதியேனும் தமிழ்நாட்டிலிருந்து எதிர்ப்புக் குரல் எழுப்புகிற சிலர் இருக்கிறார்கள். நமது நாளேடுகளில் இந்திய அரசாங்கத்தைக் கண்டித்து அவர்கள் விடுகிற அறிக்கைகள் வெளிவருகின்றன. பலவாறான செய்திகள் வெளிவருகின்றன. ஆனால், இந்தியாவின் வஞ்சகத்தைக் கண்டித்து இங்கே எந்தத் தமிழ்த் தேசியவாதத் தலைமையும் வாயே திறப்பதில்லை. செய்யாதீர்கள் என்று கெஞ்சுகிறவர்கள் இருக்கிறார்கள் செய்ததைக் கண்டிக்கவோ எவரும் இல்லை.
வரதராஜப் பெருமாள் முதலாக ஆனந்த சங்கரி வரையிலானவர்கள் வேண்டுகிற இந்தியக் குறுக்கீடு பற்றி அவர்களுக்குப் பூரணமான தெரிவுண்டு. இந்தியா தனது மேலாதிக்க நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ளுவதற்கு என்ன செய்தாலும் அதை அவர்கள் முழு மனதுடன் ஏற்பார்கள். இதில் அவர்களுக்கு தெரிவு, மாற்றுக் கருத்து என்ற விதமாக எதற்கும் இடமில்லை. எனவே தான் இந்தியா அவர்களைத் தமிழர் தலைவர்களாகக் கருதுகிறது.
ஆனால், வெளிவெளியாகவே யூ.என்.பி.யிடம் தமிழ் மக்களைச் சரணடையச் செய்ய முன்னிற்கின்ற மனோ கணேசன் போன்றவர்கள் முதல் திக்குத் தெரியாமல் தடுமாறுகிற தமிழர் தேசியக் கூட்டணித் தலைவர்கள் வரையிலானோர் எவ்வகையில் இந்தியா குறுக்கிட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்? அவர்கள் எதிர்பார்ப்பதில் இந்தியாவால் எவ்வளவை நிறைவேற்ற இயலும் என்று எதிர்பார்க்கிறார்கள்?
வெறுமனே இந்தியா குறுக்கிட வேண்டும் என்று சொல்வதற்குப் பதிலாகக் குறிப்பாக எவ்வெவ் வகையிற் குறுக்கிட வேண்டும் என்று பட்டியலிடுவார்களா? அக் குறுக்கீட்டின் இலக்கு எவ்வகையில் அமைய வேண்டும் என்று தெளிவுபடுத்துவார்களா? இந்தியாவின் போக்கு இன்று வரை எவ்வாறு இருந்துள்ளது என்றும் அதில் அவர்கட்கு உடன்பாடான பகுதி எது உடன்பாடற்றது எது என்று சொல்வார்களா? இந்தியா தனது போக்கை எந்த விடயங்களை எவ்வாறு மாற்ற வேண்டும் என்று விளக்குவார்களா?
அவை பற்றி இந்திய ஆட்சியாளர்களின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தும்படி கேட்பார்களா?
இந்தியக் குறுக்கீடு பற்றி ஆழச் சிந்தித்தவர்கட்கு இந்தியக் குறுக்கீடு வேண்டிய ஒன்றாக இருக்கும் என நான் நினைக்கவில்லை. எனினும், திரும்பத் திரும்பக் கீறல் விழுந்த கிராமபோன் தட்டுமாதிரி இந்தியா குறுக்கிட வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறவர்கள் தங்கள் மனதில் உள்ளது என்ன என்று சொல்ல வேண்டும். சொல்ல மாட்டார்கள் என்று எனக்குத் தெரியும், உங்களுக்குத் தெரியும், செய்தியை அனுப்புகிற நிருபருக்குத் தெரியும், அதைக் கொட்டை எழுத்தில் தலைப்பிட்டு வெளியிடுகிற பத்திரிகை ஆசிரியருக்கும் தெரியும்.
அந்தப் புலுடாவுக்கு வழங்கப்படுகிற முக்கியத்தை ஏன் அதை அவிழ்த்து விடுவதற்கு தாம் வழங்க மறுக்கிறோம்? எங்களுக்கு என்ன நடக்கிறது? ஏன் எங்களால் உண்மைகளையும் பொய்களையும் பிரித்துப் பார்க்க இயலவில்லை?
தமிழ்ச்செல்வனுக்குக் கருணாநிதி என்கிற நம்பிக்கைத் துரோகி இரங்கற் கவிதை எழுதினால் அது எட்டுப்பத்தி அகலச் செய்தியாகவும் வரலாம். அதை ஜெயலலிதா கண்டித்ததில் எனக்கு உடன்பாடுண்டு. ஆனால், எனது காரணங்கள் வேறு. முதலாவதாக அது நேர்மையற்றது. இரண்டாவதாக அது மிகவும் மட்டரகமான கவிதை சொல்லப்போனால் அது கவிதையே அல்ல. தி.மு.க. சினிமா பாணியிலான சுத்தமான பேத்தல்; கருணாநிதி அரசியலின் பம்மாத்து.
தமிழகத்தையும் இலங்கையையும், குறிப்பாக வட, வடமேற்கு இலங்கையைப் பல்வேறு கெடுதல்கட்குள்ளாக்கி மீனவர்களது வயிற்றில் அடிக்கப்போகிற சேது சமுத்திரத் திட்டத்தைப் பற்றிக் கூட வாய் திறக்க வக்கில்லாத தமிழ்த் தலைவர்கள் தான் நமக்கு வாய்த்திருக்கிறார்கள்.
இந்தியா இலங்கைக்குக் குழி பறிக்கிறது. இலங்கையின் பொருளாதாரம், பாதுகாப்பு, தேசிய இனங்களிடையில் புரிந்துணர்வு, தேசிய இனப்பிரச்சினைக்கான நியாயமான தீர்வு, அமைதியான எதிர்காலம் ஆகிய எல்லாவற்றுக்குமே இந்தியா குழிபறித்து வந்துள்ளது.
இந்தியக் குறுக்கீட்டைப் பேரினவாத வெறியர்கள் விரும்புகிறார்கள் என்றால், அமெரிக்கா மறைமுகமாக ஏற்கிறது என்றால், அதை தமிழர் விடுதலைக்கு ஆதரவான எவரும் ஆதரித்துப் பேசுகிற போது அவருடைய அரசியல் ஞானத்தைவிட அதிகம் ஐயத்துக்குரியது. அடிப்படையான நேர்மைதான்.
-பேராசிரியர் சி.சிவசேகரம்.
சுனாமியின் பின்னூட்டம்.
சிறீரங்கன்,
கொஞ்சம் கேள்வி...
1. சிவசேகரம் இப்பத்தியை கோகர்ணன் எனும் பெயரில் தினக்குரல் பத்திரிகையில் எழுதி வருகின்றார். அதை இதுவரையிலும் வெளிப்படுத்தியதில்லை. நீங்கள் அவரிடம் அனுமதி பெற்றீர்களா என்பதை வெளிப்படுத்துவீர்களா?
2. பேராசிரியர் சிவசேகரம் எந்தவிதமான தனது துறைசாராத கட்டுரைகளிலும் தன்னை டாக்டர் என்றோ பேராசிரியர் என்றோ விளிப்பதில்லை. அதை தான் விரும்புவதில்லை என்று கூட ஒரு முறை சொன்னதாக வாசித்ததாக ஞாபகம். அதுக்கு அவர் சொன்ன காரணம், தனது துறை சாராத விடயங்கள் எழுதும் போது அது தேவை இல்லை என்பதே. நீங்கள் அவர் விரும்பாததை செய்கின்றீர்க்ள் என நினைக்கின்றேன். அது அவருக்கும் உங்களுக்கும் அழகல்ல. நீங்கள் அவரது பெயரையும் பட்டத்தையும் முன்னிறுத்துவதென்பது அவருக்கு பிடிக்காததே. (ஏற்கனவே வேறொருவர் நீண்ட பட்டங்களை போட்டு கருணா பரமு என்னும் பெயரில் எழுதி வருகிறார். அது கூட 'படித்தவன் சொன்னால் சரி' எனும் வாதத்தை நிலைநுறுத்துவதாக அமைந்துவிடும். அவ்வாதம் எவ்வளவு பிழையானது என்பதை நீங்கள் அறிவீர்கள்.) அப்படியெனில் பெயரிலியையும் டாக்டர்.பெயரிலி என்றே அழையுங்கள். பெயரிலியும் பொறியியல் துறையில் டாக்டர் பட்டம் பெற்றவரே.
3. சிவசேகரத்தின் பெயரையும் தனிப்பட்ட சில நேர்மையான அம்சங்களையும் வைத்து சிலர் தங்களது கருத்தியல் வண்டியை ஓட்டுவது எனபதின் பின்னால் வெறும் பெயருக்கான ஆதங்கம் என்பது கவலையளிக்க கூடியதே. நீங்கள் இத்தவறைச் செய்ய மாட்டீர்கள் என நினைக்கின்றேன். இதுவும் சிவசேகரத்திற்கு ஏற்புடையதன்று என நினைக்கின்றேன்.
4. இன்னுமொரு விடயம், சிவசேகரம் சார்ந்து இருக்கும் கட்சி தொடர்பானது. அவர்கள் புதிய ஜனநாயகக் கட்சி என்ற பெயரில் இயங்கி வருகிறார்கள். தமிழ்ச் சூழலில் அரசியல் மாற்றம் தொடர்பாக எடுத்துவரும் நடவடிக்கைகள் எல்லோருக்கும் சிரிப்பை வரவழைக்க கூடியதே. தேவராஜா என்னும் சட்டதரணி ஒருவரே இவர்களின் 'தேசிய கலை இலக்கிய பேரவை' கு பொறுப்பானவராக இருக்கின்றார். இவர்கள் சிங்கள மக்களுக்கு ஒரு முகத்தையும் தமிழ் மக்களுக்கு வேறொரு முகத்தையும் காட்டி நிப்பவர்கள். அவரது கட்சி சார்ந்து சிவசேகரம் கடுமையான நிலைப்பாடிகளை எடுப்பவரல்ல. நிங்கள் சொன்ன கட்டுரையிலான சிவசேகரத்தின் குரல் அவரது கட்சி சார்ந்து மிகவும் மென்மையானது. மார்க்சியம் பற்றி ஆரம்ப புரிதல்கள் கூட இல்லாதவர்களால் இவர்கள் கட்சி அலங்கரிக்கப்பட்டுள்ளது. எனக்கு அக்கட்சியையும் உறுப்பினர்களையும் பார்க்கும் போது ஏனோ புலிகள் மீது உயர்வான அபிப்பிராயம் ஒன்று எட்டிப் பார்ர்க்கும். அவ்வளவு கேவலமானது அவர்களில் செயற்பாடுகள். 'தேசிய கலை இலக்கிய பேரவை' என்பதில் உள்ள தேசியம் என்பதற்கு சிங்கள மக்களுக்கு ஒரு விளக்கமும் தமிழ் மக்களுக்கு இன்னொரு விளக்கமும் கொடுப்பவர்களை எவ்வாறு நம்ப முடியும். (இவ்விடயத்தை சிவசேகரம் கட்டமைப்பதில்லை. அவர் அவ்விடத்தில் மௌனமாக இருப்பதேன் என்பது தான் எம் முன் உள்ள கேள்வி.) இவர்களது சம்பவங்களுக்கு அண்மையில் நடைபெற்ற இரு உதாரணங்களை சொல்ல முடியும்.
அ) பின்னவீனத்தும் மாயகளை கட்டவிழ்ப்போம் என்பது தொடர்பாக நடைபெற்ற விழா தொடர்பானது. இவ்விழாவை நேரில் பார்த்தீர்கள் எனில் விழுந்து விழுந்து சிரிப்பீர்கள். அவ்வளவு காமடியானது. இவ்விழாவிற்கு தலைமை தாங்கியது சரிநிகர் சிவகுமார். புத்தகம் தொடர்பாக விமர்சனம் செய்தவர்களில் ஒருவர் தான் வரும்போது கழிப்பறையில் இருந்து தான் புத்தகத்தை படித்ததாக சொன்னார். முழுமையாக படிக்கவில்லை என்றும் சொன்னார். அதற்கு முதலில் கார்ல் மார்க்ஸ் ஐ நாவில் இருத்தி பேசதொடங்குவதாக சொன்னார்ர். (சிவசேகரம் மௌனமாகவே இருந்தார்.)
பின்னவீனத்துவம் ஒரு பீ என்ற மாதிரி அங்கு இருந்த எல்லோரும் தூற்றினார்கள். (கமப்ன் கழக விழாக்களைவிட மோசம்.) ஆக்கபூர்வமான விமர்சனங்கள் இருக்கவே இல்லை. சிவ்சேகரம் கடசியாக பேச ஆரம்பித்தார். அவ்வுரை மட்டும் தான் கொஞ்சம் பரவாயில்லை. மற்ற் எல்லோரும் அடிப்படைவாத உணர்வுகளுடனேயே உரை நிகழ்த்தினர். மிகவும் கேவலமாக இருந்தது.
ஆ) அண்மையில் புறக்கோட்டையில் நடாத்திய வைபவம். ஒரே அரசியல்வாதிகள் மயம். கேவலமான ஓட்டு பொறுக்கி அரசியல்வாதிகள். அவர்கள் உருவாக்கி வைத்திருக்கும் வால்கள் அங்கும் இங்கும் ஓடி திரிந்தனர். கல்யாணவீட்டில் ஓடி திரிவது மாதிரி.
எனது கேள்வி என்னவெனில் சிவசேகரம் இவற்றை ஏன் தாங்கிகொள்கிறார்?
வெறும் கட்சியை என்பதற்காக மட்டும் தானா?
5. சிவசேகரம் பொறியியல் துறையில் பட்டம் பெற்றவர். எளிமையானவர். வர்க்கம் தொடர்பாக கருத்தியல் ரீதியாக ஆரோக்கியமான பார்வை கொண்டவர். அவரது பல்கலைக்கழகத்தில் இயந்திர பொறொயியல் துறையில் முக்கியமான பொறுப்புடன் இருக்கிறவர். மற்றைய பொறுக்கி விரிவுரையாளர்கள் போல் படம் காட்டாதவர். தமிழ் மாணவர்களுடன் தமிழில் உரையாடக் கூடியவர். தமிழ் மாணவர்களது பிரச்சனைகளை காது கொடுத்து கேட்க கூடியவர். ஆயினும் இவரது மாணவர்களில் ஒருவருக்கும் இவரது சமூகப் பார்வை தெரியாது. (ஒருவர் சொன்னார் என்னடா சிவத்தார் நல்லா கவிதை எழுதுவராமே..!!) இவ்விடத்தில் சோம்ஸ்கி பலகலைக்கழகங்களில் காலையில் விரிவுரையும் மாலையில் அரசியல் விழிப்புணர்வூட்டிய சந்தர்ப்பங்களை நினைத்து பாருங்கள். இத்துடன் சிவசேகரம் நன்றாக சிங்கள மொழி தெரிந்தவர். அவரால் பிரபாகரனின் பிறந்தநாளுக்கு வெடி கொளுத்தும் மாணவர்களை நல்ல திசையில் நகர்த்த முடியும். அவர் ஏன் அதை செய்வதில்லை?
6. கட்சி தொடர்பாக இவ்வளவு விட்டுகொடுப்புகளுடன் இருக்கும் சிவசேகரம் எழுத்தில் அதை எப்போதும் காட்டுவதில்லை. ஏன்? இந்திய ஏகாதிபத்தியம் தமிழ் மக்களுக்கு எதிரானது என்பது புலிகளுக்கு நன்றாகவே தெரியும். அவர்கள் இந்தியாவை நம்புவது போல பாவ்லா காட்டுகிறார்கள். அது இந்தியாவிற்கு இன்னும் நன்றாகப் புரியும். ஆயினும் இந்திய மக்கள் பேரிந்திய தேசியத்துக்குள் சிக்கியிருப்பவர்கள். அதை விட்டு வெளியேற விரும்பாதவர்கள். அவர்களது ஆதரவு புலிகளுக்கு தேவை என நினைக்கின்றனர். அடைபட்டு போயுள்ள ஆயுத மார்க்கத்தை ஏதோவொரு விதத்தில் ஏற்படுத்திவிட முடியும் என்பது அவர்கள் எண்ணம். அது மட்டும் அல்ல. அமரிக்காவின் பார்வையை இந்திய நிழல் தடுத்துவிடும் என்பது அவர்கள் கனவு???. வெறும் கனவுதான். மறையது சிறீரங்கன் போலயும் என்னை போலயும் உள்ளவர்கள் வாழும் சமூகத்தில் போரட்டத்தை நடத்திச் செல்வதில் உள்ள சவாலகள் முக்கியமானவை. (போராட்ட அணுகுமுறை தொடர்பாக எவ்வித மாற்றமும் அவர்களில் இல்லை.) வெறும் அடிப்படைவாத மனநிலையின் ஊடாக மட்டுமே போராட்டத்தை நகர்த்திச் செல்லலாம் என நினைக்கின்றனர். அதன் தவறு எப்போது விளங்குமோ தெரியவில்லை. அவ்வாறே சிவசேகரத்தின் கட்சியும் சில மூடிமறைப்புகளுடன் தம்மைக் கொண்டு செல்கின்றனர். (இதை எழுதும் போது தம்பையா போன்றோரின் பங்களிப்பு மறைக்கப்பட்டுவுமோ என கவலையாகவும் இருக்கிறது.) ஆக இவர்களாலும் கட்சியை மிகத்தெளிவான வழியில் நடத்திச் செல்ல முடியவில்லை. (ஒரு நல்ல விடயம் பிணங்களின் மேல் அரசியல் நடாத்துவதில்லை.) இதில் இந்தியாவின் பாவம். ஏனெனில் புலிகள் இந்தியாவை விற்று தமிழீழம் பெற்றுவிடுவார்கள் என்பது புலிகளுக்கும் இந்தியாவிற்கும் மட்டுமே உள்ள தெரியும் உண்மை.
7. கருணாநிதியின் கவிதை மட்டமானது என்னும் கருத்தை இங்குவிட்டுவிடுவோம். அவருக்கு அப்படிதான் கவிதை எழுத வரும். என்ன செய்வார் அவர்? பின்னவீனக் கவிதையா எழுதுவார் அவர்?
அதை பற்றி சிவசேகரம் சொன்னதில் எனக்கு அவ்வளவு உடன்பாடு இல்லை. ஏனெனில் அதை அவர் சொல்லும் போது அவரது கட்சியினரின் சொற்சிலம்புகள் நினைவுக்கு வருகின்றன. அவரது மௌனம் நினைவுக்கு வருகின்றது.
8. இந்தியா பற்றிய புலிகளின் பார்வை சிவசேகரத்துக்கு விழங்கவில்லை என்றால், அவர் ஒரு அரசியல் சூனியமே. மன்மோகன்சிங் ஐ கொன்றால் தமிழீழம் வருமென்றால் அவருக்கும் சங்குதான். அது சிவசேகரத்துக்கு விளங்காதது ஆச்சரியமே.
//..மனோ கணேசன் போன்றவர்கள் முதல் திக்குத் தெரியாமல் தடுமாறுகிற தமிழர் தேசியக் கூட்டணித் தலைவர்கள் வரையிலானோர் எவ்வகையில் இந்தியா குறுக்கிட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்? ..//
புலிகள் சொல்கிறார்கள் அவர்கள் செய்கிறார்கள். நாங்கள் உங்களோடை நேசம். நீங்களும் நாங்களும் ஒன்று தானே என சிங்கள பேரினவாதி சொன்னால் யாராலும் நம்புவார்களா? மகிந்த ராஜபக்ச தமிழர்களை மீட்பதற்கு தான் போர் எனச் சொல்கின்றார். யாராவது நம்புகின்றீர்களா? நம்பி ஓடி போய் அவரது கோவணத்துகுள் ஒழிய ஒரு எலியும் இல்லை.
9. சீனாவிடம் இருந்து சிவசேகரத்தின் கட்சியினர் காசுவாங்குவது ஊர் அறிந்த உண்மை. (அண்மையில் ஒரு வயசானவர்- சீன சார்பு பழைய கம்யூனிச கட்சியின் முக்கிய உறுப்பினர்- ஒரு கூட்டத்தில் எழும்பி சொன்னார் இந்த நாட்டின் முதலாவது என்.ஜீ.ஓ கள் கம்யூனிச கட்சிகளே. நான் காசு எடுத்து கொடுத்து இருக்கிறேன். சிவசேகரம் அக்கூட்டத்தி இருந்தார் என்பது முக்கியமான விடயம். தேவராஜா மேடையில் இருந்து அசடு வழிந்தார்.) அதுவும் அவரது கட்சியின் பண வருகைக்கு சிவசேகரமே காரணம். சீனா தமிழ் மக்களை அழிக்க ஆயுதங்களை கோடிக்கணக்காக அள்ளி வழங்குகிறது. சிவசேகரத்துக்கு அதை பற்றி கோபம் வராது. ஒரு வார்த்தை எழுத மாட்டார். அவரது கட்சி உறுப்பினர்களை ஆதரிப்பது போல கமுக்கமாக இருப்பார்.
10. கடைசிக்கு முதல் கேள்வி.
அப்போ இந்தியா காசு கொடுத்தால் சிவசேகரம் இந்தியாவை பற்றி எழுத மாட்டாரா?
அல்லது
ஆறுமுகம் தொண்டமானின் இந்தியா தொடர்பான நிலைப்பாட்டுக்கும் சிவசேகரத்தின் சீனா தொடர்பான நிலைப்பாட்டிற்கும் ஆறு வித்தியாசம் சொல்லுகளேன்?
எனக்கு தெரிந்து ஒரே வித்தியாசம் சிவசேகரம் கட்சிக்கு காசு எடுக்கிறார். ஆறுமுகம் தொண்டைமான் ரம்யா கிருஷ்ண்னையும் நமீதாவையும் காய்ப்பதற்கும் பிச்சைக் காசுக்கும் அலைகிறார்.
11. கடைசி கேள்வி.
சிவசேகரத்தின் தற்போதைய வேலைத்திட்டம் என்ன?
ஒன்றைப் பற்றி பேசும் போது இன்னொன்றை பற்றி பேஎசுவதாக உள்ளது.
சுனாமி
சிறீரங்கனின் பின்னூட்டம்.
சுனாமி,தங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
திரு.சிவசேகரத்தின் அரசியலை,மற்றும் அவர் புலிகள்மீது காட்டும் சகிப்புத்தன்மை மற்றும் புதியஜனநாயகக்கட்சி குறித்த அவரது நிலைப்பாடுகள் குறித்து எம்மிடம் நிறைய விமர்சனமுண்டு.ஆனால்,தமிழ் தேசியத்தால் நிகழும்-நிகழ்ந்த அழிவுகளுக்கான காரணத்தையும் அதன் வாயிலாக இன்று நமது அரசியல் முன்னெடுப்பாளர்கள் வந்தடைந்திருக்கும் நிலையையும் கருத்தியல் ரீதியாகச் சிவசேகரம் தீவிரமாக விமர்சிக்கிறார்.இங்கேயும் அவர் புலிகள் குறித்து அடக்கியே வாசிக்கின்றார்.என்றபோதும், நாம் அவரது கட்டுரையின் மீதான விமர்சனத்துடன் அதை மீளப் பதிவிடுகிறோம்.இது விவாதத்தை ஆரம்பிப்பதற்கான ஒரு வழி.அத்தகைய விவாதத்தைத் தூண்டும்போது கருத்துகளிலிருந்து நமது பிரச்சனைகளையும் அதுசார்ந்தெழுந்த போராட்டத்தையும் சரியான திசைவழி நோக்கிச் சிந்திக்க வகையேற்படலாம்.அங்ஙனம் நமது போராட்டத்தில் பிரதானப் பாத்திரம் எடுத்த புலிகளின் இருப்பும் அதன் வர்க்க நலனும் அந்த நலனின் பொருட்டு அணிச்சேரும் உட்புற மற்றும் வெளிப்புறச் சக்திகளையும் தெளிவாகப் புரிந்து கொள்வதற்கான ஒரு செயற்பாடே இந்த மீள்பதிவின் நோக்கம்.
இங்கே,சிவசேகரம் என்பவரின் பெயரை எவரும் ஏலம்போடவில்லை!அவரது படிப்புப் பட்டம்,பெயர் என்பதெல்லாம் இரண்டாம் பட்சமானவையே.அதை வைத்து வண்டியோட்ட நாம் கருத்தியல் மற்றும் சமுகவியற்றளத்தில் வரட்சியுடையவர்களாக இருக்கவேண்டும்.எமது போராட்டம் குறித்து பலநூறு கட்டுரைகளை நாம் கால் நூற்றாண்டாக எழுதி வருகிறோம்.சிவசேகரம் தொடாத பகுதிகளையெல்லாம் நாம் தொட்டே எழுதுகிறோம்.இங்கே சிவசேகரத்தின் சிறப்பு அவர் இலங்கையிலிருக்கிறார் என்பது மட்டுமே.மற்றும்படி அவரது கல்வித் தகமையோ அன்றிப் பல்கலைக்கழகப் பதவியோ நமக்கு முக்கியமல்ல.அடுத்து,தமிழ்ச் சமூகத்தில் கோகர்ணன் என்பவர் யாரென்பது எல்லோருக்கும் தெரிந்ததே.அதைச் சிவசேகரம் என்று போட்டுப் பிரசுரிப்பதற்கான காரணி எவரும் மொட்டாக்கோடு கருத்திடத் தேவையில்லை என்பதற்கே.அவர் உண்மையாக மக்களின்மீது அக்கறையுடையவராக இருந்தால் முகம்காட்டி வரும்படியான செய்கையே அது.
தமிழ்ச் சமுதாயத்தில் தொடரும் அராஜகத்துக்காக முகமிழந்து அநாமதேயமாகக் கருத்திடும் நிலையை அவர் இதுவரை செய்யவில்லை.எனவே,அவரது அநுமதி இக்கட்டுரைக்கு அவசியமற்றது.பட்டங்களிடவேண்டுமென்றால் பெயரிலியும் பொறியற்றுறையில் டாக்டர் பட்டம் பெற்றவர் அவரையும் டாக்டர் இரமணிதரன் என அழைக்கலாம்.தாரளாமாக!நோர்த் ஈஸ்ரன் பல்கலைக்கழக வெப்பில் அப்படித்தானே கிடக்கிறது.தாடியோடு டாக்டர் கந்தையா இரமணிதரன் வீற்றிருப்பதை நாமும் அறிவோம்.
சுனாமி தங்களின் 6ஆவது கருத்துக்கள் மட்டுமே எனக்கு முக்கியமானது.இதுள் புலிகளுக்கும் இந்தியாவுக்குமான உறவு குறித்த பார்வை.இதற்காக நான் தொடர் கட்டுரை எழுதி வருகிறேன். அதுள் புலிகளையும் சிங்கள அரசையும் மதிப்பிடுவதிலிருந்து இந்திய மற்றும் மேற்குலகத்தையும் அதனூடான புலிகளின் உறவுகளையும் பார்தேயிருக்கிறேன்.உங்களது ஆறாவது கருத்தில் எனக்கு உடன்பாடில்லை.இந்திய ஆளும் வர்க்கத்தின் தயவிலேயேதான் புலிகள் என்றவொரு அமைப்பின் இருத்தலே சாத்தியமானது.
சிவசேகரத்தின் வேலைத் திட்டம் என்ன என்பதற்கு அவர்தாம் பதில் தரணும்.எனினும்,அதற்கு நம்மாலும் பதில்தரமுடியும்.எந்தவொரு தனிநபரும் புரட்சிகரமாகவிருந்து எந்த மண்ணும் நிகழாது.இதை நன்றாகப் புரிந்தவர்கள் உலக அரசுகள், ஒடுக்குமுறையாளர்கள்-புலிகள் எல்லோருமே.அப்படியொரு அமைப்பை இன்று உதிரிகளாக இருக்கும் நாம் கட்டினால்,உடனடியாக நம்மைப் போட்டுத்தள்ள முன் நிற்பவர்கள் புலிகள்.இதைக் கடந்தகால வரலாற்றிலிருந்து நாம் நன்றாக அறியமுடியும்.
எனவே,வேலைத் திட்டங்களை ஒரு அமைப்பே முன்தள்ளுவது.அதுள் அவ்வேலைத்திட்டம் மக்களின் நலன்சார்ந்ததா அல்லது நிலவும் அமைக்குச் சார்ந்ததாவென்று தீர்மானிப்பது அமைப்பின் வர்க்கச் சார்ப்பு நிலையே.இங்கே,தனிநபர்களிடம் நிலவும் அதிகாரத்துக்கெதிரான-அவர்களது மக்கள்விரோத அரசியல்,ஒடுக்குமுறைக்களுக்கெதிரான கருத்துக்களே-கூக்குரல்களே நிலவுகிறது.அந்த வகையில் சிவசேகரம் மட்டுமல்ல இரயாகரன்,ஸ்ரீரங்கன் போன்றவர்களும் தனிநபர்கள்.
நிலவும் ஒடுக்குமுறைகளுக்கெதிராகக் குரல்கொடுப்பதும்,மக்கள் மத்தியில ;கட்டவிழ்த்துவிடப்படும் ஒடுக்கு முறைகளுக்குப் பின்னாலுள்ள நலன்களை விஞ்ஞான முறையில் புரிந்து அவற்றை அம்பலப்படுத்தி மக்களிடம் செல்வதே எமது(என்) நோக்கு.இயக்கவாத மாயையானது எப்பவும் நமது மக்களைப் பலியிடுவதற்கானவொரு உளவியலைத் தக்கவைக்கிறது தமிழ்ச் சமுதாயத்துள்.அதை இனம்காட்டி நமது மக்களின் தியாகமானது எவரது நலனுக்காகப் பயன்படுத்தப்படுகிதென்பதையும் இனம்காட்டி,மக்களின் இதுவரையான இன்னல்களுக்கு நேரிய முறையில் போராடாதுபோனால் நாம் அந்நியர்களின் நலனுக்காக நமது சுதந்தரத்தை-விடுதலையைச் சாகடிப்போம் என்பதை, இனம் காட்டி இலங்கையிலுள்ள உழைக்கும் மக்கள் ஓரணிக்குள் இணையும் கட்டத்தில் இனவாத அரசுகளைத் தூக்கியெறிந்து புரட்சிகரமான சமூக அமைப்பை நிறுவுதல் நோக்கு.
அது சாத்தியமாகிவிடப்படாதென்பதற்காகவே இந்தியா புலிகளை இதுவரைவிட்டு வைத்திருக்கிறது.நாமும் அவர்களால் தேசிய விடுதலை கிடைத்துவிடும் என்றும் நம்பும்படி இந்திய அரசியல்வாதிகளாலேயே நம்ப வைக்கப்படுகிறோம்.இத்தகைய முடிச்சுக்களை நாம் அவிழ்த்துவருகிறோம்.அதன் தொடர் நிகழ்வில் சிவசேகரத்தின் பார்வையையும்,எமது பார்வையோடு இணைக்கிறோம்.அவ்வளவுதாம்.
திவாகரின் பின்னூட்டம்.
சிறிரங்கன்,
கருணாநிதி சிவசேகரத்தின் நம்பிக்கைக்கு ஏதோவிதத்தில் துரோகம் செய்துவிட்டார். அதனால்தான் ‘நம்பிக்கைக்குத் துரோகி கருணாநிதி’ என சிவசேகரம் விழித்துள்ளார். சிவசேகரத்திற்கு கருணாநிதி அப்படியென்ன நம்பிக்கைக்குத் துரோகம் செய்திருப்பார்? எம்.ஜி.ஆர். போல் புலிகளுக்கு கருணாநிதி அள்ளி வாரி வழங்கவில்லை என்பதாகத்தான் இருக்கமுடியும். அதாவது கருணாநிதி முதலமைச்சராக வந்தால் புலிகளுக்கு சுபீட்சம் கிடைக்குமென நம்பியிருந்தவர்களுக்கு கருணாநிதி துரோகம் செய்துவிட்டார்.
சிறிரங்கன், சிவசேகரத்தை உங்களுக்கு மிகவும் அண்மைக்காலமாகத்தான் பரீட்சயம்போல் தெரிகின்றது. ஏறத்தாள கடந்த 40 வருடங்களாக சிவசேகரம் அடித்துவரும் குத்துக்கரணங்கள் உங்களுக்குத் தெரியுமா?
சிவசேகரம் 1970களுக்கு முன்னர்; தடிச்ச தமிழரசுக்கட்சிக்காரன். 1970களின் பின்னர் இலங்கை சீனசார்பு கம்யூனிஸ்ட்கட்சி, சிறிலங்கா சுதந்திரக்கட்சி என அங்குமிங்குமாக ஓடித்திரிந்தார். 1977 தேர்தலில் சிறிலங்கா சுதந்திரக்கட்சிக்கு தேர்தற்பிரச்சாரம் செய்தவர். பின்னர் சிறிலங்கா சுதந்திரக்கட்சி படுதோல்வியுற்றதை எண்ணியெண்ணி பேராதனைப் பல்கலைக்கழகத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட வீரசூரியாவின் மரணமே காரணமென நீண்டகாலமாக பிதற்றித்திரிந்தவர் என்பது சிவசேகரத்தை அறிந்தவர்கள் அனைவரும் அறிவர்.
1983 யூலைக்கலவரம்வரை தமிழ் பேசும் மக்கள் தாங்கள் ஒரு தேசிய இனம் என்ற வகையில் பிரிந்துபோவதுடன் கூடிய சுயநிர்ணய உரிமையை மிகக்கடுமையாக எதிர்த்தவர்.(படிகள் சஞசிகையில் வெளிவந்து பின்னர் இலண்டனிலிருந்து வெளிவந்த பனிமலரில் மறுபிரசுரம் செய்யப்பட்ட சிவசேகரத்தின் கட்டுரையை படித்து பார்க்கவும்) 1989களின் பின்னர் இலண்டனில் பனிமலர் பத்திரிகையிலும் ஐரோப்பிய இலக்கியச்சந்திப்பு காலத்திலும் சிவசேகரம் என்ன கூற வருகின்றார் என்பது யாருக்கும் புரியவில்லை. இப்போதும் இலங்கை தமிழ் பேசும் மக்களின் தேசிய இனப்பிரச்சனை தொடர்பான திட்டவட்டமான, உருப்படியான அவரது கருத்தை யாராலும் அறிய முடியாது.
தினக்குரலின் மறுபக்கத்தில் தன்னையொரு நேர்மையான தமிழ்மக்களின் இன்னல் துடைக்கும், புலிகளை குசிப்படுத்தும் பத்தியாளனாகக் காட்டிக்கொண்டு, பேராதனைப் பல்கலைக்கழகத்தில் தனக்கு பிடிக்காத தமிழ் விரிவுரையாளர்களை, தமிழத்தேசியவாதிகள் அல்லது புலிசார்பினரென மலினப்படுத்தி, சிங்கள ஆசிரியர்களிடையே தான் ஒரு தலைசிறந்த இடதுசாரியாகவும் தன்னைக் காட்டிக்கொண்டு வருகின்றார். இதுதான் அவரது மறுபக்கம்.
சிவசேகரம் சார்ந்திருக்கும் புதிய ஜனநாயகக்கட்சி பாராளுமன்றவாத இடதுசாரிக்கட்சியா அல்லது புரட்சிகர மார்க்சிச லெனினிச இடதுசாரிக்கட்சியா? தமிழர்களிலிருந்து சிங்கள முஸ்லீம்கள்வரை எல்லாவித மாற்றுக்கருத்துகாரர்களையும் புலிகள் மலை மலையாக கொன்று குதித்தார்கள். ஆனால் சிவசேகரமோ அல்லது புதிய ஜனநாயகக்கட்சிக்காரரோ புலிகளின் எதுவித அச்சுறுத்தலுமின்றி இன்னமும் இயங்கிவருகின்றனர் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. இவ்வாறு எப்படி இயங்க முடிகின்றது என்பதைப்பற்றி யோசிப்பதற்கு உங்களுக்கு அதிகநேரம் தேவைப்படாதென நம்புகின்றேன். தமிழரசுக்கட்சியில் தொடங்கினால் தமிழ்ப்பாசிச புலிகளில்தான் சங்கமம் அடைவார்கள் என்பது இயங்கியல்.
-திவாகர்-
20-11-2007
உரையாடல்-6 (சிறீரங்கன், சுனாமி, திவாகர்- சிவசேகரம்)
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment