அலைஞனின் அலைகள் தளத்தில் ரயாகரன் பற்றிய பதிவொன்றில் நடந்த உரையாடல்.
அமீபாவின் பின்னூட்டம்-1
பெயரிலி,
இரயாகரனின் "தமிழ்மணத்தில் உள்ள மக்களின் எதிரிகள் யார்?" போட்ட பதிவு, இராயகரன் மேலும் தனது வரட்டு பார்வையில் இறுக்கமடைய போவதையே காட்டுகின்றது. இராயகரன் தனது தளத்திலும் தனக்கான பார்வையிலும் நின்று மக்களை நேசிக்கும் முறை மிகத்தீவிரமானது. அவ்வகையான நேசிப்புக்கள் தங்கள் விடாப்பிடியான கொள்கைகளில் மேலும் மேலும் இறுக்கமடைதல் யாருக்கும் எதுவிதமான பயன்களையும் தரப்போவதில்லை. இறுக்கத்தை தளர்த்துவதற்கு உங்களால் ஏதாவது செய்ய முடிந்தால் அதுவே பெரிய விடயம். அவர்கள் எப்போதும் மக்களின் எதிரியாக இருக்கப்போவதில்லை. யாருக்கும் விலை போய் தங்களைத் தாழ்த்திக் கொள்ள போவதில்லை. எம்முன் இருக்கும் ஒரே தெரிவு அவர்களின் பார்வையை தளர செய்வது தான். அதைத்தான் ரயாகரன் நேசிக்கும் மக்கள் விரும்புவார்கள்.
*புலிகள் விட்ட/விட்டு கொண்டிருக்கும் தவறுகள்.
புலிகள் மாற்று கருத்து கொண்டோருக்கான தளத்தை அவர்களுக்கு வழங்கியிருக்க வேண்டும். ரயாகரன் போன்ற மக்கள் நேச சக்திகளை மக்களிடம் இருந்து அந்நியப்படுத்தியதே அவர்கள் செய்த மாபெரும் தவறு. மாற்று கருத்து எனும் பெயரில் மககள் நலனை விற்பவர்களையும் உண்மையில் ரயாகரன் போன்ற மக்கள் நேச சக்திகளையும் வேறுபிரித்து அறியும் தெரிவை மக்களிடம் விட்டிருக்க வேண்டும். மக்களை அவ்வாறான தளத்துக்கு இட்டுச் சென்றிருக்க வேண்டும். அப்படியான நிலைமை ஒன்று சாத்தியப்பட்டிருந்தால் போராட்டம் வித்தியாசமான பரிமாணம் ஒன்றை எடுத்திருக்கும். ரயாகரனும் இப்படி இறுகிப் போயிருக்க மாட்டார். சமூக யதார்த்தமும் யுத்தமும் வலியும் அவரை தனது மக்களை விட்டு பிரித்திருக்காது. அவரும் பிரிந்திருக்க போவதில்லை.
புலிகளின் பார்வையில் இருந்து பார்த்தால், மக்கள் மாற்றுக் கருத்துக்களை விளங்கிக் கொள்ள முடியாதவர்கள். எனவே அதற்கான தளத்தை தாங்கள் வழங்கும் போது அதை பிழையான வழியில் பயன்படுத்திக் கொள்பவர்களால், தங்களது போரட்டத்திற்குப் பின்னடைவு வரும் என்று கருதியிருக்கலாம். அந்த நேரத்தில் அப்பிடி கருதியிருந்தால் கூட பரவாயில்லை. எப்பவுமே அப்படி கருதிக்கொண்டிருப்பது தான் பிழை. மக்களை அவ்விடயமாகத் தயார்படுத்தியிருக்க வேண்டும். அவர்கள் அதையும் செய்யவில்லை. சமாதான காலத்தில் கூட அதற்கான தயார்படுத்தல்களை செய்திருக்கலாம். யாழ் பலகலைக்கழக மாணவர்களை இராணுவத்திற்குக் கல்லெறியவும் தேர்தல் வரும் போது அதற்கான ஆயத்தங்கள் செய்யவும் பயன்படுத்தினார்களே தவிர மக்கள் நலன் சார்ந்த நடவடிக்கைகளுக்காகவோ அல்லது போராட்டம் ஏன் செய்யப்படுகின்றது என்பது ரீதியான கருத்தியல் தளம் ஒன்றை மக்கள் மீது கட்டியமைக்கவோ பயன்படுதத்வில்லை (அதற்கான வாய்ப்புக்கள் இருந்தும் கூட) என்பது தான் வேதனையானது.
* ரயாகரன் விடும் தவறுகள்.
மக்களிடமிருந்து அந்நியப்பட்ட நிலையில், தனக்கொரு கருத்தியலை கட்டமைத்து அதன் சாதக பாதக நிலைமைகளை பரீட்சித்துப் பார்க்காமல் அதன் 'உண்மையை' திரும்ப திரும்ப ஒரே தொனியில் சொல்லிக் கொண்டிருப்பதென்பது எவ்வகையிலும் அவர் நேசிக்கும் மக்களை வாழ வைக்க போவதில்லை. அதை அவரும் விளங்கிக் கொள்ளப் போவதில்லை என அவரை நிராகரிக்கவும் முடியாது. ஏனெனில் அவர் மக்கள் நேசசக்தி. அவர் சளைக்காமல் எங்களுக்கு புரியவைக்க முயற்சிப்பது போல நாமும் அவருக்கு எங்களுக்கு தெரிந்ததை சொல்லிக்கொண்டுதான் இருப்போம். மற்றும், அவரது புலியெதிர்ப்புவாதத்தின்படி பார்த்தால் அவர் பக்கம் நிக்க போவது அவர் விரும்பும் மக்கள் அல்ல.அவர் பக்கம் நிக்கும் சக்திகள் கருணா, இனவாதம் பேசுவோர் மற்றும் அவர் வெறுக்கும் ஏகாதிபத்தியம் சார்ந்தவர்களே. இவர்களுடன் எப்போதுமே அவர் ஒன்றுபட முடியாதவர். அப்படியாயின் அவருடன் நிப்பவர்கள் யார்? அவர் கட்டமைக்கும் விரோதம் மோசமானது. மீண்டும் புஷ் சொன்னது தான் ஞாபகம் வருகிறது.
ரயாகரன்.
நீங்கள் சுட்டிக்காட்டும் எதிரிகள் பெரும்பாலானோர் உங்கள் மக்களே. நீங்கள் நேசிக்கும் மக்களே. அவர்களை உங்கள் எதிரி என நீங்கள் கட்டமைப்பது எவ்வளவு மோசமானது. ரயாகரன், இன்று இளஞர்களாக இருப்பவர்களுக்கு ஒரே ஒரு இயக்கத்தை மட்டுமே தெரியும். அது தான் புலிகள். அவர்கள் புலிகள் மீதான விமர்சனக்கருத்தைக் கொண்டிருந்தாலும் புலிகளால் மட்டுமே ஏதோவொரு தீர்வைத் தர முடியும் என நம்புகிறார்கள். உங்களது கடைசிப் பதிவு மிகவும் மோசமானது. உங்களை நீங்களே ஒருவிதமான பாசிச மனநிலைக்கு கொண்டு செல்கின்றீர்கள். கருத்தியல் மீதான அதீத பற்று அடிப்படவாத மனநிலையை வளர்த்துச் செல்லும். அதனால் வன்முறையை மட்டுமே சாத்தியமாக்க முடியும். விடுதலையை அல்ல. உலகம் எப்போதுமே அடிப்படைவாத மனநிலைகளுக்குள்ளேயே தன்னைத் திணித்து பல கோடிப்பேர்களைக் கொன்றொழித்துவிட்டது. இயங்கியல் வழி சிந்திப்பவர்களால் எப்போதுமே அடிப்படைவாத மனநிலையில் இருந்து சிந்திக்க முடியாது. சிந்திக்க கூடாது. அது எவகையிலும் ஆரோக்கியமான சமுதாயம் ஒன்றை உருவாக்கிவிட போவதில்லை. எல்லோரையும் இருவிதமான வகைமாதிரிக்குள் அடக்க பார்க்கின்றீர்கள். அது எவ்வளவு கொடுமை தெரியுமா ரயாகரன்?
//..மனித குலத்தை அழிக்கின்ற, தமிழ் மணத்தில் இயங்குகின்ற ஏகாதிபத்தியம், பார்ப்பனியம், புலியிசத்துக்கு, எமது எதிர்ப்பு சக்தி மீது சுதந்திரம் வழங்கினால் நாம் அழிக்கப்பட்டு விடுவோம்...//
நீங்கள் நிராகரிக்கும் புலிகளது பார்வைக்கும் உங்களது பார்வைக்கும் என்ன வித்தியாசம் என்று சொல்லுங்கள்? இவ்வகையான பார்வைகளின் காலம் முடிந்துவிட்டது ரயா..
சீறீ ரங்கனுக்கு நான் பெயரிலியின் பதிவிலே கடைசியாக எழுதிய பின்னூட்டத்தை பாருங்கள். சிறீ அண்ணன் அதற்கு பதிலளிக்கவில்லை. பொப்பெர் பற்றிய விவாதத்தில் கூட அவர் என்னை உடனடியாக பொப்பெரின் விசுவாசியாக, மார்க்சீயத்தின் எதிரியாக முத்திரை குத்த பார்க்கின்றார். அது தவறென அவர் விளங்கிக்கொள்ளவில்லை. அவரின் நிராகரிப்பு பொப்பெரின் சாதக அம்சங்களை எழுதவைத்தது. முன்முடிவுகளுடன் அணுகும் அவரது தன்மை ஒருவித கருத்தியல் மறுப்பு சார்ந்தது தான். அதுகூட பாசிசம் தான். அது அவருக்கு விளங்கினாலும் அவர் ஒத்துக்கொள்ள மாட்டார் என எனக்கு புரிகின்றது. ஏனெனில் நிராகரிப்பின் தளம் தான் அவரது இருப்பு. அவர் தனது இருப்பை இழக்கவிரும்ப போவதில்லை. அம்மனநிலையில் இருந்து தான் பாசிசம் பிறக்கின்றது. பாசிசம் வன்முறையினூடு மட்டுமே தன்னை தகவமைத்துக்கொள்கின்றது.
பெயரிலியின் பின்னூட்டம்
அமீபா,
நீங்கள் சொல்லியிருக்கும் பெரும்பாலான புலி-இரயாகரன் கருத்துகளோடு் ஒத்துக்கொள்ளமுடிகிறது. தெளிவாகவும் சொல்லியிருக்கிறீர்கள். ஆனால், இரயாகரனைப் புலியெதிர்ப்புக்கும்பலிலே ஒருவர் எனத் தட்டையாகச் சொல்லமுடியாது. நீங்கள் சொல்லியபடி அவர் அவருடைய உண்மையை, நடைமுறைக்குச் சரிவராத வகையிலே பேசிக்கொண்டிருப்பதன் ஒரு பகுதியே அவரின் புலிகள் மீதான எதிர்ப்பு. அதே வேகத்திலேயே புலியெதிர்ப்புக்கும்பலையும் சாடுவார். வரட்டுத்தனமான - ஆனால், அதே நேரத்தில், எப்பக்கத்துக்கும் வளைந்தாடாத - ஆளாகத்தான் அவரை வாசிக்கும் எவருக்கும் புரியும். அதனால், அவரை வெறுமனே புலியெதிர்ப்பாளராக மட்டும் நிறுத்தமுடியாது.
அவருடைய கருத்தின் காலம், களம் உணராத்தன்மையைப் பார்த்துத் திகைத்துபோனது, 'உயிர்நிழல்' கலைச்செல்வன் இறந்தபோது, இரயாகரன் எழுதிய கட்டுரையைப் பார்த்து. ஒரு விதத்திலே பார்க்கையிலே அவருக்குத் தன் தத்துவம், கருத்துதான் முக்கியமென்றுபட்டாலும், மறுபக்கத்திலே மனிதத்தன்மையே அற்றதாகத் தோன்றியது.
பிகு:
"இரயாகரன் ஜெஜெ (ஜெயலலிதா அல்ல; ஜெமினி-ஜெயதேவன்) கும்பலைச் சேர்ந்தவர் அல்ல" என்று எந்த அநாநியையும் இரட்டைக்கிள/ழவிப்பின்னூட்டம் போடவேண்டாமென்றும் இத்தாலே கேட்டுக்கொள்கிறேன் ;-)
அமீபாவின் பின்னூட்டம்-2
அவசர அனானிக்கு,
//..."அவரது புலியெதிர்ப்புவாதத்தின்படி பார்த்தால் அவர் பக்கம் நிக்க போவது அவர் விரும்பும் மக்கள் அல்ல.அவர் பக்கம் நிக்கும் சக்திகள் கருணா, இனவாதம் பேசுவோர் மற்றும் அவர் வெறுக்கும் ஏகாதிபத்தியம் சார்ந்தவர்களே."...//
அமீபா.. இரயாகரன்..பக்கம் அவர்கள் எப்படி நிற்பார்கள்???உங்களது புரிதல் அவ்வளவுதானா??அவரது இணயத்தளம் சென்று அவரது முன்னய கட்டுரைகளை வாசியுங்கள். தயவு செய்து விளக்கம் தந்து விவாதத்தை நல்லமுறையில் தொடரவும்..//
அவசர அனானி,
எனது பதிவை முழுமையாகப் படியுங்கள். நீங்கள் மேற்கோள் காட்டியிருக்கும் வசனத்துக்கு கீழே உள்ள வசனத்தை படித்து பாருங்கள்.
//அவரது புலியெதிர்ப்புவாதத்தின்படி பார்த்தால் அவர் பக்கம் நிக்க போவது அவர் விரும்பும் மக்கள் அல்ல.அவர் பக்கம் நிக்கும் சக்திகள் கருணா, இனவாதம் பேசுவோர் மற்றும் அவர் வெறுக்கும் ஏகாதிபத்தியம் சார்ந்தவர்களே. இவர்களுடன் எப்போதுமே அவர் ஒன்றுபட முடியாதவர். அப்படியாயின் அவருடன் நிப்பவர்கள் யார்?//
அவருடன் நிக்க போவது அவர் மட்டுமே என சொல்ல வந்தேன். ஒடுக்கப்படும் சக்திகளை ஒன்றுபடக் கோரும் அவரால், எவருடனும் தன்னை அடையளப்படுத்த முடியாது. திரட்சியைச் சாத்தியமாகிவிட முடியாது. அவர் தன் கொள்கைக்கு, தனக்கே முரணாக இருந்துவருகிறார். அதுதான் முரண்நகை. அதற்காக, அவரது மக்கள் மீதான நேசத்தை நிராகரிக்க முடியாது. புரியவைக்க தான் முடியும். சாதாரண வழ்வில் இருந்தே இதற்கான உதாரணங்களைக் காட்ட முடியும். இன்னொருவர் தம்மீது காட்டும் அதீத நேசத்தால் தமது சுயத்தை, சுதந்திரத்தை இழந்து வாழும் பலரைக் கண்டிருக்கிறேன். உண்மையான நேசம் என்பது இன்னொருவரது சுயத்தை, சுதந்திரத்தை அனுமதிப்பது. அதற்கு அப்பாலான அதீதநேசங்கள் ஒருவிதமான அடக்குமுறையை பிரயோகிப்பவையாகவே கண்டு கொள்ளப்படும். அந்நிலை புரிந்து கொள்ளப்படாதவிடத்து அது அடக்குமுறையாகவே அடையாளப்படுத்தப்படும்.
இரண்டாவது அனானிக்கு,
// ரயாகரன் விடும் தவறுகள். மக்களிடமிருந்து அந்நியப்பட்ட நிலையில், தனக்கொரு கருத்தியலை கட்டமைத்து அதன் சாதக பாதக நிலைமைகளை பரீட்சித்துப் பார்க்காமல் அதன் 'உண்மையை' திரும்ப திரும்ப ஒரே தொனியில் சொல்லிக் கொண்டிருப்பதென்பது எவ்வகையிலும் அவர் நேசிக்கும் மக்களை வாழ வைக்க போவதில்லை//
இதை இன்னமும்தெளிவாக சொல்வதென்றால், அவர் தனக்கான செயற்பாட்டு தளத்தில் இருந்து தனது கருத்தியலை மீளாய்வுக்கு உட்படுத்த வேண்டும். அவரது செயற்பாடு அற்ற கருத்தியலே அவரை மக்களிடம் இருந்து தூரத்தே இழுத்து செல்கின்றது.
பெயரிலி,
//...இரயாகரனைப் புலியெதிர்ப்புக்கும்பலிலே ஒருவர் எனத் தட்டையாகச் சொல்லமுடியாது. நீங்கள் சொல்லியபடி அவர் அவருடைய உண்மையை, நடைமுறைக்குச் சரிவராத வகையிலே பேசிக்கொண்டிருப்பதன் ஒரு பகுதியே அவரின் புலிகள் மீதான எதிர்ப்பு. அதே வேகத்திலேயே புலியெதிர்ப்புக்கும்பலையும் சாடுவார். வரட்டுத்தனமான - ஆனால், அதே நேரத்தில், எப்பக்கத்துக்கும் வளைந்தாடாத - ஆளாகத்தான் அவரை வாசிக்கும் எவருக்கும் புரியும். அதனால், அவரை வெறுமனே புலியெதிர்ப்பாளராக மட்டும் நிறுத்தமுடியாது...//
இராயகரனது சமன்பாடு அவரை புலியை எதிர்க்கும்படி சொல்கின்றது. அதன்படியே அதை அவர் எதிர்க்கின்றார். அவ்வாறே அவரது சமன்பாடு புலியெதிர்ப்புகும்பலை எதிர்க்கும்படி சொல்கின்றது. அதன்படியே அதையும் எதிர்க்கின்றார். இதில் பிரச்சனை என்னவென்றால் அவரது சமன்பாடும் அவர் அச்சமன்பாட்டை நம்பும் விதமும் தான். அச்சமன்பாடு மட்டுமே மக்களை காக்கும் என நம்புகின்றார். ஒருசமன்பாடே வெவ்வேறு சூழ்நிலைகளுக்குள் வாழும் வெவ்வேறு கலாச்சார மக்களுக்கெல்லாம் எல்லா காலங்களிலும் ஒரேவிதமான தீர்வை தரும் என்று 'உண்மையாகவே' நம்புகின்றார். அங்கேதான் பிழை விடுகின்றார். எவ்வாறு இஸ்லாமிய அடிப்படைவாதிகள் அல்லாவுக்கும் குர்ரானுக்கும் தங்கள் விசுவாசத்தை காடுகின்றார்களோ, இந்து அடிப்படைவாதிகள் மததுக்காக, அப்பாவி இஸ்லாமியர்களை உயிரோடு கொளுத்துகிறார்களோ, ஹிட்லர் எதற்காக யூதர்களை கொன்று குவித்தாரோ, அவ்வாறே வேறொரு தளத்தில் அதற்கு சமாந்தரமான மனவுணர்வுடன் தனது சமன்பாட்டை பூஜிக்கின்றார். செயற்பாட்டு தளம் சமன்பாடுகளை தனது முன்னோக்கிய நகர்வுக்கு மட்டுமே பயன்படுத்தும். சமன்பாட்டுடன் தேங்கிப்போகாது. இரசாயனவியல்படி சொல்வதென்றால் ரயாகரன் ஒரு இலட்சியவாயு.
உரையாடல்.-3 (பெயரிலி, அமீபா)
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment